மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கோயம்பேடு வணிக வளாகம் – தமிழர்கள் அறியா உண்மைகள் (கட்டுரை)

ஆச்சாரி

Jun 15, 2013

கோயம்பேடு வணிக வளாகம் கோடிகளில் காசு புரளும் கூடாரம். நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய முதலாளிகள் நடத்தும் காய்கறிக் கடைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் கடைகளும் இந்த வணிக வளாகத்திற்குள் உள்ளன. நள்ளிரவு 2 மணிக்கு தமிழ் நாட்டிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் லாரிகளில் கோயம்பேடு வணிக வளாகத்திற்குள் அணிவகுத்து வருகின்றன. இவைகளிலிருந்து வரும் காய்கறிகளை இறக்குவதற்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் விறுவிறுப்புடன் செயல்படுகின்றனர். மூட்டைத் தூக்கும் போது வலி தெரியாமல் இருக்க போதைப் பொருட்களை உட்கொண்டு பணியாற்றும் தொழிலாளர்களும் உண்டு.

விடிவதற்குள் அத்தனை வேலைகளும் முடித்து விடுகின்றன. சென்னைக்குள் இருக்கும் காய்கறிக்கடை நடத்தும் வியாபாரிகள்  அதிகாலை முதல் மதியம் வரை பரபரப்புடன் செயல்பட்டு தங்களுக்குத் தேவையான காய்கறிகளை மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்லும் நிலையைக் காணலாம். இந்த வணிக வளாகத்திற்குள் ஒரு புறம் சிற்றுண்டிக்  கடைகள் , ஒரு புறம் மோர் வியாபாரம், ஒரு புறம் மாவோ(போதைப் பாக்கு) கசக்கித் துப்புகின்றனர். ஒரு புறம் காலை 7 மணிக்கே மூட்டை தூக்குபவர்கள் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு நடுவே குட்டியானை, இருசக்கர வாகனம், மகிழ்வுந்து எனப் பல வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக  நகர்கின்றன. இந்தப் பரபரப்புக்கும் நடுவே அவிழ்த்துவிடப்பட்ட காளைகளும், மாடுகளும் நடைபாதை தோறும் காய்கறிக் கழிவுகளைச் சாப்பிடுவதோடு கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வெள்ளரிக்காய், கீரைக்கொத்து, வாழை இலை, அவரை எனக் கண்ணில்பட்ட காய்கறிகளைக் கவ்விக்கொண்டு செல்கிறது. ஒருபுறம் காய்கறிக்கடைக்காரர் காய்கறிக் கழிவுகளை சாலையில் நடைபாதையில் கொட்டிவிட்டுச் செல்ல, அதிலிருக்கும் நல்ல காய்கறிகளைப் பொறுக்க பல பெண்கள் மோதுகின்றனர். புழுதியும், சேறும், சகதியும், குப்பைகளும் நிறைந்து கிடக்கும் இப்பாதைகளில் நானும் பயணித்தேன் அவர்களோடு ஒருவனாக.

இந்தக் கோயம்பேடு வணிக வளாகத்திற்குள், வணிகத்தொழிலில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வரும் நாடார் சமுதாய மக்களே, இக்காய்கறித் தொழிலில் இங்கு கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இதில் தமிழ் பேசும் நாடார்களும், தெலுங்கு பேசும் நாடார்களும் அடக்கம். இங்கே பெரும் தொழிலதிபர்களாக இருப்பவர்கள் இவர்கள் மட்டுமே.

சென்னை பெருநகர குழு வாரியத்தின் (CMDA) கட்டுப்பாட்டில் இது இயங்கி வருகிறது. இங்குள்ள கடைகள் 150, 300, 650, 1500 சதுர அடி அளவு கொண்ட கடைகள் ஏராளமாக உள்ளது. தவிர நடைபாதைக் கடைகளும் உண்டு. இதில் பெரும் தொழிலதிபர்களாக விளங்கும் நாடார் சமுதாய மக்கள் இங்குள்ள பெருவாரியான கடைகளை எடுத்து தாங்களே நடத்துவதோடு, பிறருக்கு வாடகைக்கு விட்டும் வருமானம் பார்க்கின்றனர். 150 சதுர அடி உள்ள கடைக்கு குறைந்த 12 ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கின்றனர். இதற்கு முன் பணமாக 1 லட்சம் வசூலிக்கப்படுகிறது.இவர்கள் மட்டுமல்லாது பிற தொழில் செய்பவர்களும் இவ்வாறு கடையை தானே எடுத்து பிறருக்கு வாடகைக்கு விட்டு வருகின்றனர்.

இவ்வாறு அங்கும் இங்கும் பல தகவல்களைத் தேடி அலைந்த நான் இறுதியாக வேல்முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற கடைக்காரரிடம் எனக்குள் எழுந்த சில கேள்விகளைக் கேட்க முயன்றேன். வேல்முருகன் எம்.ஏ., எம்.பில் தமிழ் இலக்கியம் படித்த பட்டதாரி. இங்கே சிறிய காய்கறிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இதோ அவரிடம் எனது கேள்வியும் அவரது பதிலும். . . . .

கேள்வி: காய்கறி விலை ஏற்றத்திற்கான காரணம் என்ன?

பதில்: சுற்றுச்சூழல் பாதிப்பே இதற்கு முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன். நம் நாட்டு மண் வளம் குறைந்து விட்டது. நீர் மாசுபட்டு, இருக்கும் நிலத்தடி நீரும் வற்றி விட்டது. பருவகாலத்தில் பெய்ய வேண்டிய மழையும் சரியாகப் பெய்யவில்லை. சரி இருக்கும் நீர் நிலையைப் பயன்படுத்தி விவசாயம் பார்க்கலாம் என விவசாயி நினைத்தாலும் அதற்கு உரவிலை உயர்வு, எளிமையான முறையில் கிடைக்காத அரசு மானியம் எதிரிகளாக உள்ளன. தவிர இருக்கின்ற கிணற்று நீரை, மோட்டார் ஓட்டி வயலுக்கு நீர் பாய்ச்சலாம் என நினைத்தாலும் போதிய நேரத்தில்  மின்சாரம் இல்லை.

இது ஒருபுறமிருக்க,  தற்போது தமிழ்க் கலாச்சாரம் மாற்றம் பெற்று  வருவதும் ஒரு காரணம். கிராமத்தில் இருப்பவர்கள் விவசாயம் செய்ய முற்படுவதில்லை. படித்தவர்களும், படிக்காதவர்களும் நிலத்தை விற்றுவிட்டு நகரம் நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதனால் விவசாயம் பார்க்கப் போதிய கூலி ஆட்களும், விவசாய நிலங்களும் இல்லை. விவசாயக் கூலிகளுக்குக் கொடுக்கும் கூலித்தொகை பெருகிவிட்டது. ஆதலால் போதிய காய்கறிகளைப் பயிரிட்டு அறுவடை செய்ய முடியாத நிலையில், குறைவான அளவுள்ள காய்கறிகளை மட்டுமே தமிழகத்தில் விளைவிக்கின்ற மோசமான சூழல் உருவாகி உள்ளது.

மிச்சம் மீதி இருக்கும் விளை நிலங்களை எல்லாம் தரிசு நிலமாக மாற்றப்பட்டு வீட்டு மனைகளாக விற்கப்படும் சூழல் நிலவுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், அனைத்தும் இன்று போட்டி போட்டுக் கொண்டு விவசாயத்தை பின்னுக்குத் தள்ளப்பார்க்கிறது. ஒரு நாட்டிற்கு அவசியமானது உணவு உற்பத்தியே. ஆனால் அது இல்லாமல் வேறு எந்த வளர்ச்சி இருந்தும், எந்தப் பயனும் இல்லை.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 3 கோடியே 25 லட்சம் ஏக்கர். இதில் 1 கோடியே 27 லட்சம் ஏக்கர் நிலங்கள், பாசன வசதி கொண்ட விவசாய விளை நிலங்களாகவும், மானாவாரி நிலங்களாகவும் உள்ளன. அன்று விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது நமது தமிழ்நாடு. ஆனால் இன்றைய விளை நிலங்களோ கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் 15 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தற்போது விளைநிலங்களாக இல்லை. 1980லிருந்து இன்று வரை ஆண்டுக்கு 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களானது இப்படி வேளாண்மைப் பாதையிலிருந்து விலகிச்சென்று கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்டச் சூழலில் மக்கள் தொகைப் பெருக்கம் கொண்ட நம் மாநிலத்திற்கு, தேவையான காய்கறிகளை விளைய வைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதால் நமக்குத் தேவையான காய்கறிகளை பிற மாநிலங்களிலிருந்து நாம் அதிக விலைக்கு வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விளையக்கூடிய காய்கறிகள்.

கேரட், பீட்ரூட், சேனைக் கிழங்கு, முருங்கைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், கோவக்காய், காராமணி, வாழைக்காய், மல்லி, புதினா, வெள்ளரி, பாகற்காய், அவரை, பீன்ஸ், தேங்காய், கீரை, (குண்டு) பச்சைமிளகாய் மட்டுமே இங்கே குறைவான அளவு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தக் காய்கறிகளின் விளைச்சல் இங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இல்லை.

பிற மாநிலத்திலிருந்து இறக்குமதியாகும் காய்கறிகள்:

ஆந்திர மாநிலம்:

பெரிய வெங்காயம் , சின்ன வெங்காயம், கோவக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், மஞ்சள், எலுமிச்சை, கத்தரிக்காய், வெண்டைக்காய், இஞ்சி, பட்டாணி, வெள்ளரி, பீர்க்கங்காய், சோளம், மாங்காய், தேங்காய், முட்டைக்கோஸ், காலி பிளவர், (நீட்ட) மிளகாய்.

கர்நாடகம்:

கேரட், பீட்ரூட், முள்ளங்கி, தக்காளி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், எலுமிச்சை, பீர்க்கங்காய், புடலங்காய், அவரைக்காய், பீன்ஸ், மாங்காய், கீரைகள், குடை மிளகாய், பட்டாணி, நூக்கல், சௌ சௌ, காலி பிளவர், முட்டை கோஸ், ஸ்வீட் கார்ன்,

உத்திரப்பிரதேசம், டெல்லி, ஆக்ரா, மகாராஷ்டிரா, கொல்கத்தா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலிருந்து:

உருளைக்கிழங்கு, பெல்லாரி வெங்காயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, முருங்கைக்காய், சின்ன வெங்காயம், பட்டாணி, பேபி உருளை,

எனப் பல காய்கறிகள் இங்கே பல லாரிகளில் வந்திறங்குகின்றன.

விமானத்தில் வரும் காய்கறிகள்:

மும்பை, டெல்லி யிலிருந்து பட்டாணி, காளான், பிராக்கோலி(Brocoli) , செல்லரி, சிவப்புநிற முட்டைகோஸ், சிவப்புற நிற குடைமிளகாய்.

தமிழ் நாட்டில் விளைச்சல் குறைவான அல்லது விளைவிக்காத காய்கறிகள், பிற மாநிலங்களிலிருந்து வருகின்றன. இவை சரக்கு லாரிகளிலும், பேருந்துகளிலும், தொடர் வண்டிகளிலும் தமிழ் நாட்டிற்கு வருகின்றன. இதில் லாரி, பேருந்து போன்ற வாகனங்களில் வரும் போது 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இவ்வாகனத்திற்கு சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. டீசல் விலை உயர்ந்திருப்பதால் இந்தச் செலவும் வரும் காய்கறிகளின் மேல் ஏற்றப்படுகிறது. இவ்வாறு பல செலவுகள் செய்து தமிழ் நாட்டிற்குள் வரும் காய்கறிகளின் விலையோ, வழக்கமாக இங்கு விளைவிக்கும் காய்கறிகளின் விலையை விட சற்று உயர்த்தியே விற்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் வேறு வழியில்லாமல் விலையேறிய காய்கறிகளையே வாங்கக் கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

கேரளத்தில் உள்ளது போல் விளைநிலத்தை, குடியிருப்புப்பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தக், கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தப்பட வேண்டும். கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த குறுந்தொழிலில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு வங்கிக்கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.

இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும், அது சார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும். இவ்வாறு மேம்படும்போது காய்கறிகள் மீதான விலையேற்றம் மட்டுமல்லாது உணவுப்பொருட்கள் மீதான விலைவாசி உயர்வையே தடுக்கலாம்.

கேள்வி: மூட்டை தூக்கும் தொழிலார்கள் பற்றி?

பதில்: கோயம்பேடு வணிக வளாகம் இரவில் ஒரு பகல் போல் செயல்படுகிறது. இங்கே தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 75% பேர் என்றால், மீதி 25% பேர் மற்ற மாநிலத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர் மட்டுமல்லாது, 25% பிற மாநில முதலாளிகளும் (கேரளா, ஆந்திரா, பெங்களூர்) உள்ளனர்.

இங்கு சுமைதூக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்து இங்கு வந்துள்ளனர். குறிப்பாக அரியலூர், செந்துறை, விருத்தாச்சலம், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் போன்ற இடங்களிலிருந்து அதிகமான சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் இங்கு உள்ளனர். இவர்கள் அரசாங்கப் பணியாளர்களுக்கு இணையாகச் சம்பாதிக்கும் அளவிற்கு சுமை தூக்குபவர்கள் உள்ளனர். இவர்களுக்கு இதுதான் சம்பளம் என எவரும் நிர்ணயிக்க முடியாது. அனுபவப்பட்டவர்களுக்கு அதிக சம்பளம் உண்டு. ஒரு நாளைக்கு குறைந்தது 1000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். ஒரு மூட்டைத் தூக்கிச் செல்ல 30 ரூபாய் இவர்களின் சம்பளமாகும்.

இவ்வாறு சம்பாதிக்கும் இவர்களுக்குப் பல செலவுகளும் உண்டு. குளிக்க, கழிப்பறை செல்ல மட்டும் ஒரு நாளைக்கு 25 ரூபாய் ஆகிறது. ஒரு நாள் சாப்பாடு 150 செலவாகும் நடைபாதையோரம் படுத்துக்கொள்கிறார்கள். போதிய கல்வியறிவின்மையால் மது, கஞ்சா, ஹெராயின் போன்ற பழக்கங்களுக்கு, 25 வயதிற்கு உட்பட்ட சுமைத்தூக்கும் இளைஞர்கள் சீரழிகின்றனர். இதிலும், போதைக்கு அடிமையாகாத இளைஞர்களும் உண்டு. தவிர சைக்கிள் ஒட்டப்  பயன்படும் கோந்துவான (Tube Solution) –ஐ துணியில் தேய்த்து, கசக்கி, முகர்ந்து போதை கொள்கின்றனர். இப்படிச் சம்பாதிக்கும் இவர்கள் குடிப்பதற்கே பாதியைச் செலவு செய்கின்றனர். இருக்கும் 100% பேர்களில் 50% பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்.

சிலர் தன் குடும்பத்தைக் கூட கவனிப்பது இல்லை. தன சொந்த ஊருக்குச் செல்லாமல் இங்கேயே சம்பாதித்து, இங்கேயே குடித்து, இறந்து போகிறவர்களும் உண்டு. இருந்தாலும், மிகச்சிலரே தன் குடும்பத்தை, குழந்தைகளை கவனிக்கின்றனர். இங்கே சுமைதூக்கி நன்கு வாழ்பவர்கள் மிகச்சிலரே.

இந்தக் கோயம்பேடு வணிக வளாகத்தை நம்பி பல குடும்பங்கள் வாழ்கிறது. சுமைத்தூக்கும் தொழிலாளர்களுக்கென்று காமராசர் சுமைத்தூக்குவோர் சங்கம், நேரு சுமைத்தூக்குவோர் சங்கம், அம்பேத்கார் சீர்திருத்த சமுதாயச் சங்கம், காந்தி சுமைத்தூக்குவோர் தொழிலாளர் சங்கம் என நான்கு சங்கங்கள் இவர்களுக்காக இங்கு உள்ளன.

வெளியிலிருந்து கோயம்பேட்டிற்குள்  வரும் காய்கறிச் சரக்குகளை இச்சங்கங்களில் உறுப்பினராக உள்ள சுமைத்தூக்குபவர்களே ஏற்றுமதி, இறக்குமதி செய்கின்றனர். இதில் நேரடியாகக் கோள்முதல் செய்யும் முதலாளிகளுக்கு கீழும், சில்லறை வியாபாரிகளுக்கு கீழும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கே இவர்களுக்கு உள்ள நிறை, குறைகளை இச்சங்கத்தின் மூலம் தீர்த்துக் கொள்வர். எந்த நிலையானாலும் இங்கு தொழிலாளர்களின் சுதந்திரத்தில் முதலாளிகள் தலையிடுவதில்லை. இங்கு தொழிலாளிகளுக்கு இணங்கித்தான் முதலாளித்துவம் உள்ளது என்றால் அது மிகையாகாது. காரணம் முதலாளிகளுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் அவர்களுக்கு உறுதுணையாக நிற்பவர்கள்  இத்தொழிலாளர்களே.

கேள்வி: இங்குள்ள காய்கறிக் கழிவுகள் எவ்வாறு அப்புறப்படுத்தப்படுகிறது?

பதில்: இங்குள்ள காய்கறிக் குப்பைகளை வைத்து அரசு மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்தது. தற்போது அந்த முயற்சி அரசால் கைவிடப்பட்டுள்ளது. இந்தக் குப்பைகளை அரசு, தனியார் நிறுவனத்திடம் குப்பை அள்ளும் பொறுப்பை ஏலம் விட்டது. அதில் தனியார் நிறுவனங்கள் சிலர் இக்குப்பை அள்ளும் பொறுப்பைச் செய்து வருகின்றனர். இக்குப்பை அள்ளும் பணியில் பெரும்பாலும் பெண்களே உள்ளனர். இக்குப்பைகள் பாஃப்கட், பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்படுகிறது.

கேள்வி: இங்கு பணப்பரிவர்த்தனை எப்படி?

பதில்: எப்படித் தங்கம், வைரம் விலை மதிப்பற்றதாக உள்ளதோ, அது போல இங்கு காய்கறி, பழ வியாபாரமும் அதற்கு இணையான விற்பனையில் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வணிக வளாகம் இது. பங்குச் சந்தையின் புள்ளி வீழ்ச்சியானால் அது இவ்வணிக வளாகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் இங்கே கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை பாதிப்புக்குள்ளாகிறது. இவ்வாறு இங்கு கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடக்கிறது. வருமான வரித்துறையினர் இங்கு வந்து சோதனை செய்யும் அளவிற்கு பணப்பரிவர்த்தனை  நடக்கிறது.

4 ஆயிரம் கடைகளுக்கு மேல் உள்ள இந்த வணிக வளாகத்தில், சாதாரண சில்லறை வியாபாரி ஒரு நாளைக்கு குறைந்தது 40 ஆயிரமும், பெரிய கடை முதலாளிகள் ஒரு நாளைக்கு 60 லட்சம் வியாபாரமும் பார்க்கின்றனர்.

முதலாளிகள், தொழிலாளிகளுக்கு வட்டிக்கு விடும் கூத்தும் இங்கு நடக்கிறது. இதில் தீபாவளி, பொங்கல், பண்டுச்சீட்டு நடத்துபவர்களும் உண்டு. நல்லவேளையாக  மார்வாடிகளின் ஆதிக்கம் இங்கு இல்லை. ரவுடிகள் தொல்லை இங்கு ஏதுமில்லை. இங்கு உட்பூசல் ஏதுமில்லை.

கேள்வி: காய்கறி வியாபாரிகளுக்கென்று ரகசிய மொழி ஏதும் உண்டா?

பதில்: உண்டு. இங்கே தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், மலையாளம் போன்ற பல மொழிகள் பேசுபவர்கள் அதிகம் உள்ளனர். இதில் அதிகமாகத் தமிழ் பேசுபவர்களும்,  இரண்டாது இடத்தில் ஆங்கிலம் பேசுபவர்களும், மூன்றாவது இடத்தில் தெலுங்கு மொழி பேசுபவர்களும் இருக்கின்றனர். இங்கே வியாபாரிகளுக்குள் பேசப்படும் வியாபார மொழி  என்பது…

எ.கா :

தமிழ்மொழி –  வியாபாரமொழி

2ரூபாய்             –  தோண்ட

3ரூபாய்             –   திருவுண்ட

4ரூபாய்             –   பார்த்தண்ட

5ரூபாய்             –   பிச்சிண்ட

6ரூபாய்             –    கிராச்

7ரூபாய்             –   செவண்ட

0                             –   புள்ளி

20ரூபாய்             –  தோண்ட புள்ளி

(2 தோண்ட &  0 புள்ளி  - தோண்ட புள்ளி )

100ரூபாய்            –   சரணம்

1000ரூபாய்           –  கட்ட

இவ்வாறு லட்சம், கோடி வரை வணிக மொழி பேசி வியாபாரம் நடத்துகின்றனர். இவ்வாறு கோயம்பேடு வணிக வளாகத்திற்குள் நடக்கும் சுவராசியமான நிகழ்வுகள் ஏராளம்.

காய்கறிகள்

(1 கிலோவிற்கு)

மொத்தமாக வாங்குபவர்

சில்லறை வியாபாரி

கடைக்காரர்

கேரட் ரூ.50/- ரூ.55/- ரூ.60/-
பீட்ரூட் ரூ.20/- ரூ.25/- ரூ.30/-
குடை மிளகாய் ரூ.45/- ரூ.50/- ரூ.55/-
சின்னவெங்காயம் ரூ.85/- ரூ.90/- ரூ.95/-
பச்சைமிளகாய் ரூ.55/- ரூ.60/- ரூ.65/-
முட்டைகோஸ் ரூ.12/- ரூ.18/- ரூ.22/-
வெள்ளரி ரூ.10/- ரூ.15/- ரூ.20/-
இஞ்சி ரூ.185/- ரூ.190/- ரூ.195/-
பூண்டு ரூ.40/- ரூ.45/- ரூ.50/-
பெரியவெங்காயம் ரூ.15/- ரூ.20/- ரூ.25/-
உருளைக்கிழங்கு ரூ.15/- ரூ.20/- ரூ.25/-
சுரைக்காய் ரூ. 15/- ரூ. 20/- ரூ.25/-
மாங்காய் ரூ.10/- ரூ.15/- ரூ.20/-
பீர்க்கங்காய் ரூ.25/- ரூ.30/- ரூ.35/-
காளிபிளவர் ரூ.25/- ரூ.30/- ரூ.35/-
சௌ சௌ ரூ.35/- ரூ.40/- ரூ.45/-
கருணை கிழங்கு ரூ.23/- ரூ.28/- ரூ.32/-
மக்காச்சோளம் ரூ.25/- ரூ.30/- ரூ.35/-
முருங்கைக்காய் ரூ.45/- ரூ.50/- ரூ.55/-
புடலங்காய் ரூ.30/- ரூ.35/- ரூ.40/-
வாழைக்காய் 1காய் ரூ 3/- 1காய் ரூ 4/- 1காய் ரூ 5/-
அவரைக்காய் ரூ.55/- ரூ.60/- ரூ.65/-
கத்தரிக்காய் ரூ.25/- ரூ.30/- ரூ.35/-
பூசணிக்காய் ரூ.5/- ரூ.10/- ரூ.15/-
பீன்ஸ் ரூ.195/- ரூ.100/- ரூ.105/-
எலுமிச்சை ரூ.75/- ரூ.80/- ரூ.85/-
வெண்டைக்காய் ரூ.30/- ரூ.35/- ரூ.40/-
சீனி அவரைக்காய் ரூ.55/- ரூ.60/- ரூ.65/-
தேங்காய் 1 க்கு ரூ.10/- 1 க்கு ரூ.12/- 1 க்கு ரூ.14/-
பாகற்காய் ரூ.30/- ரூ.35/- ரூ.40/-
முள்ளங்கி ரூ.20/- ரூ.25/- ரூ.30/-
ஸ்வீட் கார்ன் (இனிப்பு சோளம்) ரூ.20/- ரூ.25/- ரூ.30/-
பேபி கார்ன் ரூ. ரூ. ரூ.
புருக்கொலி ரூ.155/- ரூ.160/- ரூ.165/-
செல்லரி ரூ.195/- ரூ.200/- ரூ.205/-
காளான் 1 பாக்கெட்   (100 கிராம்) ரூ.20/- 1 பாக்கெட் (100 கிராம்) ரூ.25/- 1 பாக்கெட் (100 கிராம்) ரூ.30/-
பேபி உருளை  1 பாக்கெட்    ரூ. 11/-  1 பாக்கெட் ரூ. 16/-  1 பாக்கெட் ரூ. 21/-
மலபார் ரூ.15/- ரூ.20/- ரூ.25/-
தோசக்காய் ரூ.15/- ரூ.20/- ரூ.25/-
கோவக்காய் ரூ.15/- ரூ.20/- ரூ.25/-
காராமணி ரூ.35/- ரூ.40/- ரூ.45/-
மல்லி ரூ.6/-(கட்டு) ரூ.8/-(கட்டு) ரூ.10/-(கட்டு)
புதினா ரூ.2/- (கட்டு) ரூ.3/- (கட்டு) ரூ.4/- (கட்டு)
கறிவேப்பிலை ரூ.25/-                    (1கிலோ)- கட்டு ரூ.30/-(1 கிலோ)-கட்டு ரூ.35/-(1 கிலோ)கட்டு
பிடிக்கருணை கிழங்கு ரூ.35/- ரூ.40/- ரூ.45/-
சக்கரவல்லிக் கிழங்கு ரூ.30/- ரூ.35/- ரூ.40/-
மரவள்ளிக் கிழங்கு ரூ.30/- ரூ.35/- ரூ.40/-
சிறு கிழங்கு ரூ.55/- ரூ.60/- ரூ.65/-
சுண்டக்காய் ரூ.75/- ரூ.80/- ரூ.85/-
தக்காளி ரூ.45/- ரூ.50/- ரூ.55/-
பட்டாணி ரூ.115/- ரூ.120/- ரூ.125/-

How does note taking facilitate the study of the different factors that play a http://writemypaper4me.org role in the understanding and learning of knowledge

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

5 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கோயம்பேடு வணிக வளாகம் – தமிழர்கள் அறியா உண்மைகள் (கட்டுரை)”
  1. Manigandan S.A says:

    வணக்கம் ,எனக்கு காளான் தகவல் தேவை படுகிரது…

    எனவே , விரிவான தகவல் அனுபுமரு கெட்டு கொல்கிரேன்.

    நன்றி

  2. b.kannan says:

    sir
    nan nagercovilil irukiren yenaku kalan valarka asapadukiren yenavey yenaku kalan vithu thevaipadukirathu so,kalan vithu yengu kidaikum?

  3. Prakash says:

    Hi Thomas,
    I am Prakash an agricultural background Software Engineer would like to form Mushroom cultivation in my home and meet you to get more ideas regading this . This is my mal ID: prakashgowinji@gmail.com, Mobile No. 08892361927 anticipating to hear from you to get you back.

    Regards,
    Prakash.

  4. முத்துக்குமார் says:

    நல்ல தகவல்கள். மேலும் சில படங்களை இனைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    சில கேள்விகள்:
    1. பூக்கள் மற்றும் பழங்களும் இங்குதான் கொணர்ந்து விற்கப்படுகிறதா?

    2. வீண் காய்கரிகள் தனியாரால் சுத்தப்படுத்தப்படுகிறது, சரி… தனியார் நிறுவனம் எடுத்துச் ஷென்று அவற்றை என்ன செய்கிறார்கள்?

    3. வளாகம் நாற்றம் ஏதும் இன்றி சுத்தமாக இருக்கிறதா?

    4. இரவில் வியாபாரம் நடக்கிறதென்றால், பகலில் வளாகம் மூடப்பட்டிருக்கிறதா?

    5. புதிதாக வளாகத்தில் தொழில் செய்ய அல்லது மூட்டை தூக்க அல்லது கடை போட ஆசைப்படுவோர் என்ன செய்ய/யாரை அனுக வேண்டும்?

    நன்றி…

  5. கார்த்திக் says:

    சிறந்த கட்டுரை மற்றும் பேட்டி. நன்றி சிறகு.

அதிகம் படித்தது