மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

“சக்கம்பட்டி சரிகைச் சேலை” – மறைக்கப்பட்ட வரலாறும், நெசவுத்தொழிலார்களின் இன்றைய நிலையும்.

ஆச்சாரி

Sep 1, 2013

ஆரம்ப காலகட்டத்தில் மனிதன் தென்னை ஓலை, பனையோலை,   பனையகணி, மரல்நார், நறைநார் முதலியவற்றைக் கொண்டு பெட்டி, கடகம், பேழை, பிழா, வட்டி, வலை முதலியவற்றை செய்யத் தெரிந்து கொண்டிருந்தான். பின்னர் பருத்தியில் இருந்து பஞ்செடுக்கவும், நூல் நூற்கவும், ஆடை நெய்யவும் தெரிந்து கொண்டிருந்தான். அவ்வாறு நூல் நூற்கவும், ஆடை நெய்யவும் மனிதன் தெரிந்து கொண்ட காலம் எது ? என்பது யாருக்கும் தெரியாது. அது நிகழ்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கலாம். சங்க காலத்தில் பருத்தி நெசவுத் தொழில் பெற்றிருந்த வளர்ச்சியைச் சங்க நூல்கள் நமக்கு காட்டுகின்றன.

கோடிப் பருத்தி வீடுநிறைபெய்த மூடைப்பண்டம்” – புறநானூறு-  393

-முல்லை நிலத்தில் ஊரைச்சூழ இருந்த நிலங்களில் பருத்தி விளைந்தது. பருத்திச் செடியில் விளைந்து முற்றி வெடித்துக்கிடந்த பருத்தியைச் சேகரித்து மூடைகளில் திணித்து அடைத்து வீடுகளுக்குக் கொண்டு வந்தனர். என இப்பாடலடிகள் மூலம் தெரியலாம்.

“பருத்திக்காய் முற்றி வெடித்ததனாற் கிடைக்கும் பஞ்சை வில்லால் அடித்துச் சுத்தம் செய்தனர்”  

-என்று நற்றிணை (299) கூறுகிறது. பருத்தியில் இருந்து கொட்டை நீக்கிப் பஞ்செடுத்து வில்லால் அடித்துச் சுத்தம் செய்தல், நூல்நூற்றல் முதலிய வேலைகளைப் பெண்களே பகலில் மட்டுமல்லாது, இரவு நேரங்களிலும் விளக்கு வைத்துக்கொண்டு நெடுநேரம் வரை இதனைச் செய்தனர்.

இவ்வாறு சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தமிழர்களின் பழமை வாய்ந்த இத்தொழிலை அன்றைய அரச காலத்திலேயே மதுரை, உசிலம்பட்டியை அடுத்த ஆண்டிபட்டி என்ற ஊரில் உள்ள சிறு கிராமமான சக்கம்பட்டியில் உள்ள பலர் இந்நெசவுத் தொழிலை செய்து வந்தனர்.

இயக்குனர் பாரதிராஜா அவர்கள் எடுத்த முதல் மரியாதை என்ற திரைப்படத்தில்  . . .

“அந்த நெலாவத்தான் நான் கையில புடுச்சேன்

என் ராசாவுக்காக…

——————————————————————————-

——————————————————————————-

பெண்: மல்லு வேட்டி கட்டியிருக்கு – அதுமேல

மஞ்ச ஒண்ணு ஒட்டியிருக்கு

ஆண்: முத்தழகி கட்டிப்புடுச்சு முத்தங்கொடுத்து

மஞ்ச வந்து ஒட்டிக்கிருச்சு

பெண்: மார்கழி மாசம் ஆச்சு மாருல குளிராச்சு

ஆண்: ஏதுடா வம்பாப்போச்சு லவுக்கையும் கெடயாது

பெண்: சக்கம்பட்டி சேலகட்டி பூத்திருக்கு பூஞ்சோல”

-    என வரும் இப்பாடலில் சக்கம்பட்டியில் நெய்யப்படும் சரிகைச் சேலையின் அருமை பெருமைகளைப் பாடலாக வடித்தனர் என்றால் இதன் பெருமை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இப்பேர்ப்பட்ட பெருமைகளைப் பெற்ற சக்கம்பட்டியின் பூர்வீக நெசவு வரலாற்றையும், தற்போதைய நெசவாளர்களின் நிலையை இனிக் காண்போம்.

காஞ்சிபுரத்தில் கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை பல்லவர்கள் ஆண்ட பொழுது ‘செட்டி’ என அழைக்கப்படும் நெசவாளர்கள் வாழ்ந்தார்கள். பல்லவ மன்னர்களுக்கு ஆடை நெய்து கொடுப்பதே செட்டிகளின் முக்கியப் பணியாக இருந்தது. ஆடை நெய்து கொடுப்பதில் நெசவாளர்களுக்கும், பல்லவ மன்னனுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தம் என்னவென்றால் “உங்கள் இனம் அழியும் வரை நீங்கள் உற்பத்தி செய்யும் ஆடை அனைத்தையும் மன்னர் குடும்பத்திற்கே நெய்து கொடுக்க வேண்டும். இதற்குப் பதிலாக நெசவாளர்களுக்கு இருக்க இடமும், உண்ண உணவும் வழங்கப்படும் என்றான்.

காலச்சூழலில் நெசவாளர்களின் குழந்தைகள் புது ஆடை உடுத்துவதற்கும், உண்பதற்கும், மற்ற இதரத் தேவைகளுக்கும் பணம் தேவைப்பட்டது. இதனால் இந்நெசவாளர்கள் தம் வறுமையைப் போக்கத் தான் நெய்யும் ஆடைகளில் ஒரு பகுதியை அரசுக்கும், மற்றொரு பகுதியை வெளிச்சந்தையில் விற்பதற்கும் தொடங்கினர்.

இது பல்லவ மன்னனுக்குத் தெரிந்து விட்டது. கொடுங்கோபமுற்ற பல்லவ மன்னன் கூறினான் “என் முன்னாள் கைகட்டி நிற்கும் சாமானிய மக்கள் பட்டு ஆடைகளை உடுத்துவதா? அப்படி என்றால் பட்டை உடுத்தும் நாங்களும், சாமானியர்களும் ஒன்றா? என கர்ஜித்தான். பின்பு தம் வாக்கை மீறிய இந்நேசவாளர்கள் அனைவரும் ஒரு மாத காலம் வீட்டை விட்டு வெளியே வராமல், உணவில்லாமல் அவரவர் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி உத்தரவிட்டார்.

அது எப்படி இருக்க முடியும்? தன் பிள்ளைகளைக் காப்பாற்ற நெசவாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி நவதானியங்களை வாங்கி வந்து பிள்ளைகளுக்குக் கொடுத்தனர். இந்தச் செய்தி பல்லவ மன்னனின் காதிற்கு எட்ட, கோபமுற்ற கொற்றவன் கூறினார். இந்தச் செட்டி இனத்தவர் அனைவரையும் கொன்று விடுங்கள்” என்றார். இதனால் படை வீரர்களுக்கும், நெசவாளர்களுக்கும் சண்டை வலுத்தது. இச்சண்டையில் உயிர் பிழைத்த நெசவாளர்கள் மிகக் குறைவே. அதிக நெசவாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் தப்பிப் பிழைத்தவர்கள் பல ஊர்களுக்குப் பிழைக்க வந்தனர்.

இதிலிருந்து தப்பிய ஒரு குழுவினர் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனிடம் தஞ்சம் புகுந்தனர். இதற்கான ஆதாரம் இன்றும் கூட மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தில் இந்தச் செய்திகள் அடங்கிய செம்புப் பட்டயம் உள்ளது.

காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள இந்தப் பட்டயத்தில் சுத்தத் தமிழில் இச்செய்திக் குறிப்பு இருப்பதால், அருங்காட்சியகத்தில் பணியாற்றிய ஒருவர் அதைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். மொழி பெயர்த்த பின் இச்செய்தியை, அப்போது மதுரைக்கு நெசவு செய்து பிழைக்க வந்து இன்று சக்கம்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன் கோவில், புத்தூர், புனல்வேலி, அருப்புக்கோட்டை ஆகிய 7  ஊர்களில் பிரிந்து வாழும் ஒரே இனத்தைச் சேர்ந்த நெசவுத்தொழிலாளர்களுக்கு இந்தப் பட்டயம் தமிழாக்கம் செய்து இவரால் கொடுக்கப்பட்டது. காரணம், இன்று வாழும் நெசவுத்தொழிலாளர்களின் முன்னோர்கள் எங்கிருந்து வந்தனர் என்ற வரலாற்றை இவர்கள் அனைவரும் தெரிய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அனைத்து நெசவுத்தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

சரி மீண்டும் கதைக்கு வருவோம். பாண்டிய மன்னனிடம் தஞ்சம் புகுந்து பஞ்சம் பிழைக்க வந்த நெசவுத்தொழில் செய்த செட்டி இனத்தவரைக்கண்டு பாண்டிய மன்னன் நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று விசாரித்தார். இவர்களோ, நாங்கள் செட்டி இனத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் குலத்தொழில் மானம் காக்கும் ஆடை நெய்யும் தொழில். தற்சமயம் பல்லவன் ஆட்சியின் கீழ் காஞ்சிபுரத்தில் இருந்து வருகிறோம்.

நாங்கள் நெசவு செய்யும் ஆடைகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு வீட்டில் 4 பேர் இருந்தால் அதில் ஒருவருக்குத்தான் உணவு என்றார் பல்லவ மன்னன். 8 நபர்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால் அதில் 3 பேருக்குத்தான் உணவு என்கிறார். இரண்டு பேருள்ள ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் உணவு அளிக்கப்படும் என்கிறார். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து பழக்கப்பட்ட எங்களில்  ஒருவருக்கு உணவளித்து மற்றவரைப் பட்டினி போடும் கொடுமை ஒரு புறம், உணவு உண்ணாமல் நெசவு செய்வதால் எங்களின் உழைக்கும் திறனும் குறைந்து விட்டது.

இதனால் பல்லவ மன்னனுக்கு குறித்த நேரத்தில் ஆடை உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை.

முதல் முறையாக ‘சுரண்டல் முறை’ என்ற வார்த்தை இந்தப் பட்டயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தி செய்யும் ஆடைகளை வாங்கிக் கொண்டு உண்ண உணவு கொடுக்காமல் பல பேர் உயிரிழக்க நேரிட்டது. அப்போது பல்லவ மன்னனிடம் ஆடைக்குக் கூலியும், வயிற்றுக்கு உணவும் கேட்டோம். அப்போதுதான் அரசருக்கும், எங்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பல்லவமன்னன் கோபமடைந்து தனது படை வீரர்களைக் கொண்டு எங்களை அடித்து நாட்டை விட்டே வெளியேற்றி விட்டர். நாங்களும் வேறு வழியின்றி பிழைப்புத் தேடி உங்களிடம் வந்துள்ளோம் என்றனர்.

(இயற்கையாகவே பாண்டிய மன்னனுக்கும், பல்லவ மன்னனுக்கும் கருத்து வேறுபாடு, பகை இருந்தது.)

இவ்வாறு தம் குறைகளைக் கூறி நின்ற மக்களைக் காப்பாற்றப் பாண்டிய மன்னன் நினைத்தார். உங்கள் இனத்தின் பெயர் என்ன? எனப் பாண்டிய மன்னன் கேட்க “செட்டி இனம்” என்கின்றனர். இந்தப் பெயரை உங்களுக்கு யார் வைத்தது? இது புனைப் பெயரா? என்றார் மன்னர். செட்டி என்ற இந்தப் பெயரை பல்லவ மன்னன் சூட்டினார் எனக்கூற, பாண்டிய மன்னன் கோபமாகி இனி அந்தப் பெயர் உங்களுக்கு வேண்டாம். சாதி வேறுபாடு பார்க்காமல், மத வேறுபாடு பார்க்காமல் மானம் மறைக்கும் ஆடை நெய்வதால் இன்று முதல் நீங்கள் “சாலிய மூப்பர்” என்றே அழைக்கபடுவீர்கள். இது ஒரு ரிஷியின் பெயராகும் என்றார் மன்னன்.

பெயர் சூட்டியப் பின் பாண்டிய மன்னன் கூறினார். “எனது நாட்டு எல்லைக்கு உட்பட்டு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று உங்கள் நெசவுத் தொழில் செய்து கொள்ளலாம்” என்று உத்தரவு பிறப்பித்தார் இதில் ஒரு பிரிவினர் இன்றும் மதுரையில் உள்ள செல்லூர் மீனாட்சிபுரத்தில் ஆடை நெசவு செய்தும், மருத்துவமனைக்குத் தேவையான கட்டுத்துணி செய்தும் வாழ்ந்து வருகின்றனர்.

மதுரையிலிருந்து ஒரு குழுவினர் அருப்புக் கோட்டைக்கும், ஒரு குழுவினர் ராஜபாளையத்திற்கும், ஒரு குழுவினர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் நான்கு குழுக்களாகப் பிரிந்து சென்று பாண்டிய மன்னரின் ஆணைப்படி வாழ்ந்து வந்தனர். இதில் ராஜபாளையத்திற்குப் பிழைக்கச் சென்ற போது அங்கே கடும் பஞ்சம் நிலவியதால் இங்கிருந்து ஒரு குழுவினர் பிழைப்புத் தேடி தற்போது தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் என்ற பகுதிக்கு வந்தனர்.

அப்போது பெரியகுளம் பகுதியை ஜமீன் ஒருவர் ஆண்டு கொண்டிருந்தார். ஜமீனை இம்மக்கள் பார்க்கச் சென்ற போது “அவர் வெளியூரில் இருக்கிறார் வருவதற்கு கொஞ்ச நாட்களாகும்” என ஜமீன் குடும்பத்தினர் தெரிவிக்க, ஜமீன் வரும் வரை ஒரு மாத காலம் வரை வீடு வீடாகச் சென்று உணவுப் பிச்சை எடுத்து உயிர் வாழ்ந்தனர் வந்த நெசவுத் தொழிலாளர்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு ஜமீன் பெரியகுளம் வந்ததை அறிந்த இம்மக்கள் அவரிடம் தாம் பட்ட துன்பங்களைக் கூறி வாழ வழிவகை செய்யுமாறு கேட்கின்றனர்.

இவர்களின் துன்பக்கதையைக் கேட்ட ஜமீன்  இங்கு மொத்தம் 30 குழுவினர் வந்திருக்கிறீர்கள். உங்கள் தலைமையேற்று வந்த மகாலிங்கம் என்பதை மனதில் வைத்துக் கொண்டும், இங்கு மண்சட்டியில் பிச்சை எடுத்து உண்டதாலும் இந்த குழுவிற்கு நான் “சட்டி மகாலிங்கம் வகையறா” எனப் பெயர் சூட்டுகிறேன் என்றார்.

நீங்கள் தொழில் செய்து பிழைக்க எனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியான  வடகரை, தென்கரையில் நீங்கள் இருந்து, உங்கள் பணிகளைச் செய்து பிழைக்கலாம் என்றார். (பெரியகுளத்தின்  பழைய பேருந்து நிலையம் அருகில் இன்றும் வடகரை, தென்கரை என்ற கிராமங்கள் இருக்கிறது) இந்த வடகரை, தென்கரையைப் பிரிப்பது கும்பக்கரை நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் ஆறாகும்.

ஜமீன் கூறிய பின் இம்மக்கள் வடகரை தென்கரையில் குடியேறுகின்றனர். அந்தக்காலக்கட்டத்தில் “குழித்தறி” செய்தே பிழைத்தனர். குழித்தறி என்பது 4 அடி ஆழம் மண் தோண்டி, அந்தக் குழிக்குள் நின்று கொண்டே நெசவு செய்வர். (இன்று குழித்தறி முறை என்பது எங்குமே இன்று கிடையாது) இவ்வாறு குழித்தறி செய்ய ஆற்றங்கரைப் பகுதியான வடகரை, தென்கரையில் எங்கு தோண்டினாலும் நீர் ஊற்றி ஊறி வந்தது. இதனால் இந்த இடமானது இவர்கள் தொழில் செய்ய உகந்த இடமாக இல்லை என்பதை உணர்ந்தனர்.

இதனால் தொழில் செய்ய முடியாமல் பிச்சை எடுத்துப் பிழைத்தனர். இவ்வாறு பிச்சை எடுக்கும் போது ஒரு நாள் “சந்தை மேய்ப்பான்“ என்ற புனைப்பெயருடைய ஆடுமேய்க்கும் ஒருவரைச் சந்திக்கின்றனர். இந்தச் சந்தை மேய்ப்பான், இவர்களின் ஏழ்மை நிலையைக் கண்டு மனம் வருந்தி “நான் மேய்க்கும் இந்த ஆடுகளை எல்லாம் ஆண்டியப்பன் ஊர்ச் சந்தைக்கு ஓட்டி வாருங்கள் உங்கள் எல்லோருக்கும் ஒரு வேளை உணவு தருகிறேன்” என்று கூறுகிறான்.

இவர்களும், உணவும் கிடைக்கிறது, வேறு ஊருக்குச் சென்று பிழைக்க வழியும் கிடைக்கிறது என்று எண்ணி இருந்த அனைத்து ஆடுகளையும் பெரியகுளத்தில் இருந்து ஆண்டியப்பன் ஊருக்கு ஓட்டி வருகின்றனர். (அன்று ஆண்டியப்பன் என்ற பெயரில் இருந்த இந்த ஊர்தான் இன்று ஆண்டிபட்டி என்ற ஊராகப் பெயர் பெற்றுள்ளது)

ஆண்டியப்ப ஜமீன் என்பவனே இந்தப் பகுதியை ஆண்டு வந்ததால் இப்பகுதிக்கு ஆண்டியப்பன் என்ற பெயர் வந்தது. இப்பகுதியில் இருக்கும் வருசநாட்டைத் தலைமை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த இவனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றே ஆண்டியப்பன் என்ற ஊராகும். ஆண்டியப்பன், சக்கம்மாள் (ஆண்டியப்பனின் தங்கை) கொண்டையப்பன் இம்மூவரும் இணைந்தே இன்றைய தேனியில் இருந்து ஆண்டிபட்டி மலைக்கணவாய் வரை ஆண்டு வந்தனர்.

சரி கதைக்கு வருவோம், நெசவாளர்கள் சந்தை மேய்ப்பானோடு இணைந்து ஆட்டை ஒட்டிக்கொண்டு சந்தைக்கு வந்ததும், இதைக்கண்டு ஆண்டியப்ப கேட்டார் “ஆடு மொத்தம் பத்து இதை ஓட்டிக்கொண்டு வருவதற்கு முப்பது நபர்களா?”.

இவ்வாறு கேட்டதும் தாங்கள் பட்ட துயரங்களை, துன்பங்களை இவரிடம் கூறி அழுகின்றனர். பிச்சை எடுப்பது எங்கள் தொழில் அல்ல, ஏழ்மை ஏற்பட்ட சூழலால் இவ்வாறு செய்தோம், நாங்கள் உழைத்துச் சாப்பிடவும், தங்கவும் எங்களுக்கு ஒரு இடம் தாருங்கள் என ஆண்டியப்பனிடம் முறையிடும் போது இவரின் தங்கை சக்கம்மாள் வருகிறாள்.

சக்கமாளின் உடை வெளுத்துப் போயிருந்ததைக் கண்ட, கூட்டத்தில் இருந்த நெசவுப் பெண் ஒருத்தி கூறினாள் “நாட்டை ஆளத்தெரிந்த உங்களுக்கு, நல்ல ஆடை உடுத்தத் தெரியவில்லையே” எங்களுக்கு மட்டும் இங்கு இருக்க இடம் கொடுத்தால் நீங்கள் உடுத்த விதவிதமான ஆடைகளை நெய்து கொடுப்போம் என்றாள். இதைக்கேட்டு மகிழ்வுற்ற சக்கம்மாள் “நீங்கள் இங்கு, எங்கு வேண்டுமானாலும் குடியேறிக்கொள்ளலாம். உங்கள் தொழிலைச் சிறப்பாகச் செய்யுங்கள். கூடவே நாங்கள் உடுத்த நல்ல ஆடைகளை நெய்து தாருங்கள் என்று கூறியதோடு, நீங்கள் ஒரு மாத காலம் உண்பதற்குக் கேழ்வரகும், சோளமும் தருகிறேன் என்றாள் சக்கம்மாள்.

சக்கம்மாள் கொடுத்த உணவுப் பொருட்களை 30 குழுக்களும் மகிழ்வுடன் வாங்கிக்கொண்டு இங்கு தொழில் செய்ய தற்போதைய ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, கொண்டம  பட்டியைச் சுற்றி வந்து நீர் பிடிப்பு இல்லாத ஒரு பகுதியை தேர்வு செய்கின்றனர். இந்த மூன்று ஊர்களில் நீர் பிடிப்பு இல்லாத பகுதியாக சக்கம்பட்டியே இருந்தது. (முன்பு சக்கம்மாள் இங்கு வாழ்ந்ததால் அவளின் பெயரை நினைவுபடுத்தும் வகையில் இப்பகுதி இன்று சக்கம்பட்டி என்ற பெயரில் அழிக்கப்படுகிறது.)

சக்கம்பட்டியில் குடியேறிய நெசவாளர்கள் சக்கம்மாளுக்குத் தேவையான ஆடைகளை சிறப்பான முறையில் நெய்து கொடுத்தார்கள். நெசவுத் தொழிலும் நல்ல முறையில் நடைபெற்றது. ஜமீன் குடும்பத்தினருக்கு நெய்து கொடுத்து மீதி உள்ள ஆடைகளை ஆண்டிபட்டியில் வாரா வாரம் நடக்கும் சந்தையில் விற்பனை செய்தனர். நல்ல தரமான முறையில் நெய்யப்பட்ட இந்த ஆடைகளை வாங்குவதற்கேன்றே ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள நலிஓடை, பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, கனியபிள்ளைப்பட்டி, ஆகிய ஊர்களில் இருந்து இந்த ஆடைகளை வாங்கிச் செல்வார்கள். இவர்கள் நெய்த ஆடைகள் பட்டுப் பருத்தி, கற்றாழை நார் என்ற மூன்று மூலப்பொருட்களைக் கொண்டு வேட்டி, சேலைகள் நெய்து விற்பனை செய்யப்பட்டதால் இவர்களின் வியாபாரம் மதுரை, கேரளா வரை புகழ்பெற்று விளங்கியது.

சக்கம்பட்டிச் சேலையின் சிறப்பு:

நூறு சதவீதம் பருத்தியினால் செய்த சேலை, பட்டுச்சேலை, ரேயான் சேலை, பாப்ளின் சேலை எனப்பலவிதத்தில் இன்று சேலை நெய்கின்றனர். இங்கு இவர்கள் நெய்யும் சுங்குடிச் சேலை மிகப்பிரபலம் ஆகும். சுங்குடிச் சேலையில் உள்ள சிறப்பு என்னவென்றால் மற்ற சேலைகள் கட்டும்போது மடிப்பு, கொசுவம் வைக்கச் சிரமப்படுகின்றனர். ஆனால் இங்கு நெய்யும் சுங்குடிச் சேலையை 8  மடக்கு மடக்கி கட்டினால் கூட அந்த மடிப்பு மடங்காமல் நிற்கும். அதை இடுப்பில் செருகவும் வசதியாக இருக்கும்.

இங்கும் நெய்யும் சேலையின் (பார்டர்) விளிம்பில் உள்ள பட்டை போன்ற பகுதியை எப்படிக் கசக்கினாலும் மடிப்புக் குலையாமல் இருக்கும்.

பருத்திக்காயைப் பிடுங்கி அதைக் காய வைத்து, இதில் வரும் பஞ்சுகளை எடுத்துச் சேலையோ, வேட்டியோ செய்யும் பொழுது அத்துணி ஒழுங்காக அமையாது. ஆனால் இயற்கையாக பருத்தி வெடித்து வரும் பஞ்சுகளில் நெய்யப்படும் சேலை, வேட்டிகள் சிறப்பான துணியாக இருக்கும்.

நம் உடலில் வண்டுகடி இருக்கும் போது, வெடித்த பருத்தியினால் நெய்த துணியை உடுத்தினால் உடலில் இருக்கும் அந்த நச்சுத்தன்மை, விசத்தன்மையை உறிஞ்சி எடுத்துவிடும். பருத்திக்காயைப் பயன்படுத்தாமல் இயற்கையாக  வெடித்த பருத்தியைப் பயன்படுத்தி இங்கு ஆடை நெய்வதால் இங்கு நெய்யப்படும் ஆடைகளுக்கென்று மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உள்ளது.

தற்போது இங்கு நெய்யப்படும் ஆடைகள் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. தவிர இந்தியாவெங்கும் இந்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், பரமக்குடி ஆகிய ஊர்களுக்கு சக்கம்பட்டிச் சேலைகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தானே வெடித்து வரும் பஞ்சிலிருந்து ஆடை நெய்யும் இடங்கள் தமிழ்நாட்டிலேயே இரண்டு பகுதிதான். ஒன்று சக்கம்பட்டி (தேனி மாவட்டம்) மற்றொன்று சின்னாளபட்டி (திண்டுக்கல் மாவட்டம்). இன்று தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அணியும் வெள்ளை வேட்டி சட்டையானது சக்கம்பட்டியிலிருந்து பஞ்சை சின்னாளபட்டிக்கு ஏற்றுமதி செய்து, சின்னாளபட்டியிலேயே  அரசியல் வாதிகள் அணியும் பிரத்யேக ஆடைகள் நெய்யப்படுகிறது.

சக்கம்பட்டி நெசவாளர்களின் தற்போதைய நிலை: 

தமிழக அரசு கொடுக்கின்ற இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் இந்தச் சக்கம்பட்டியிலேயே நெய்து அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தச் சேலையை ‘சனதா சேலை’ என்று இப்பகுதியில் அழைக்கின்றனர். இந்த வேட்டி, சேலைகள் முழுக்க பருத்தியால் நெய்பவை அல்ல. பருத்தியும், பாலியஸ்டர் நூல்களால் நெய்பவையாகும்.

 இந்த இலவச சேலை நெய்ய ஒரு சேலைக்கு 40 ரூபாயும், ஒரு வெட்டி நெய்ய 30 ரூபாயும் சம்பளமாக அரசால் விதிக்கப்பட்டது. ஆனால் இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அரசின் இந்த விலை நெசவாளர்களுக்குக் கட்டுபடியாகவில்லை. அரசின் நியாய விலைக் கடைகளில் இலவசமாக அரிசி கொடுத்தாலும், குழம்பு வைப்பதற்கான மூலப்பொருட்களைக் கூட இன்று இப்பகுதி நெசவாளர்களால் வாங்கக்கூட வழி இல்லாத சூழ்நிலையில் உள்ளனர்.

இதனால் அரசு வேட்டி, சேலைகள் நெய்யும் நெசவுக் கூலியை உயர்த்துமாறு உரிய அரசிடம் கோரியுள்ளனர். நவநாகரீக உடைகளை அணிந்து கொண்டு, வாழும் உயர்குடி மக்களுக்காய், ஆண்டாண்டு காலமாய் இவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நெசவுத்தொழில் செய்யும் இவர்களின் குழந்தைகள் இன்னும் அம்மணமாகத்தான் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தவிர இன்று தமிழர்களிடையே தமிழ்நாட்டில் நெய்யப்படும் பருத்தி ஆடைகளை அணியும் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் இவர்களின் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் நெசவு செய்யும் நெசவாளர்களே தாங்கள் துணி நெய்யத் தேவையான மூலப்பொருட்களான பருத்திப் பஞ்சு, சாய்ப்பொடி, பசை உள்ளிட்ட பொருள்களை இடைத்தரகர் இன்றி நேரடியாகச் சென்று கொள்முதல் செய்தனர். இதனால் இவர்களுக்கு ஓரளவு லாபமும் இருந்தது. ஆனால் தற்போது பணம் படைத்த இடைத்தரகர்கள் அந்தப் பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு ஒன்றுக்கு நான்கு மடங்கு லாபத்திற்கு நெசவாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

இன்று பெரும் பிரபலங்கள் உடுத்தும் “சாரதி ரக” வேட்டிகளை உற்பத்தி செய்ய உற்பத்திச்செலவு ஒரு வேட்டிக்கு  115 ரூபாய் செலவு ஆகிறது. ஆனால் இதைச் சந்தையில் விற்பனை செய்யும் பொழுது 60 ரூபாய்க்கு மேல் எவரும் இவ்வேட்டியைக் கேட்பதில்லை.

இப்படியான சூழல் இங்கு நிலவுவதால் வெளிமாநிலங்களுக்கு இந்த வேட்டியை விற்பனை செய்ய நெசவாளர்களே நேரடியாகக் கொண்டு செல்கின்றனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இந்த ரக வேட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது இங்கு நெய்யப்படும் வேட்டி, சேலைகளை இங்குள்ள பணம் படைத்த முதலாளிகள் அடிமாட்டு விலைக்குக் கேட்கின்றனர். ஒரு சேலையை 50 ரூபாயிலிருந்து 65 ரூபாய் வரை அவர்களே விலை நிர்ணயம் செய்து எடுத்துக்கொள்கின்றனர். இதனால் நெசவாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதோடு பெரும் இழப்பு ஏற்பட்டு திரும்பவும் இத்தொழிலை தொடர முடியாத சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்பண முதலாளிகள் இவர்களிடமிருந்து நூறு சதவீதம் பருத்தியினால் செய்த சாரதி வேட்டியை 65 ரூபாய்க்கு (ஒரு வேட்டி) வாங்கி பிற மாநிலங்களில் 250  ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்கள் விரும்புவது எல்லாம் “இவர்கள் உற்பத்தி செய்த துணிகளுக்கு இவர்களே விலை நிர்ணயம்” செய்யும் உரிமை. ஆனால் இந்த உரிமை இன்று வரை இவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. வரும் முதலாளிகள் எந்த விலைக்குக் கேட்கிறார்களோ அந்த விலைக்கே விற்க வேண்டிய சூழலுக்கு இம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். காரணம் இவர்களின் வறுமையே.
“வீட்டில் வைத்துப் பார்ப்பதை விட விற்றுப்பார்” என இவர்களின் முன்னோர்கள் கூறிய கூற்றுக்கிணங்கவே இவர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

இன்று கைத்தறியில் நாங்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என அரசு இவர்களை நிர்பந்திக்கிறது. 1 வேட்டி பார்டர் போட அரசு ரூ 32.50 பைசா  கூலியாகக் கொடுக்கிறது. இப்படி இரண்டு நாள் வேலை செய்தால் தான் இவர்கள் 60 ரூபாய் பார்க்க முடியும். இதே ஒரு சேலைக்கு சரிகை போட 30 ரூபாய். இவைகள் கைத்தறி மூலம் செய்ய அரசு கொடுக்கும் கூலி. ஆனால் இன்று மின்சாரத்தினால் இயங்கும் நெசவு இயந்திரம் வந்துவிட்டது. இந்த இயந்திரத்தில் இவர்கள் நெசவு செய்தால் ஒரு நாளையில் 10 வேட்டி செய்து விடுவர். அப்படி என்றால் இவர்களின் ஒரு நாள் கூலி 300 ரூபாய் கிடைக்கும். ஆனால் இப்படி நெசவு இயந்திரத்தில் இலவசமாகக் கொடுக்கும் வேட்டி சேலைகளை நெய்யக் கூடாது என்று அரசு இவர்களை நிர்பந்திப்பது, மேலும் இவர்களை முன்னேற விடாமல் தடுக்கும் முயற்சியாகவே தெரிகிறது.

அரசு நிர்பந்திக்கும் இந்தப் போதாத சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு எவ்வாறு இவர்கள் வாழ்க்கையை ஓட்ட முடியும்? அதனால் தான் இன்று இப்பகுதியில் வாழும் பெருவாரியான நெசவுத் தொழிலாளர்கள் தங்களின் தொழிலை விட்டு விட்டு ஓட்டலில் பரிமாறுபவராகவும், தேநீர்கடையில் தேநீர் பரிமாறுபவராகவும், தேனீர்கடையில் கோப்பைகளையும், பால்சட்டிகளையும் கழுவும் பணியிலும், தேனீர்கடைக்கும், உணவகங்களுக்கும் தண்ணீர் எடுத்து ஊற்றும் பணியிலும் வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.

தேநீர்கடையில் ஒரு நாளைக்கு 150 ரூபாய் சம்பளம் பெறுகின்றார்கள். உணவகத்தில் ஒரு நாள் வேலைக்கு 200 ரூபாயும், ஜவுளிக் கடைகளில் ஒரு நாளைக்கு 200 ரூபாயும் சம்பளமாகப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு இதுவரை சோறு போட்ட குலத்தொழிலைத் தொடர முடியாமல், அதற்கு இதுவே மேலென்று கூறி வேலை செய்து வருகின்றனர்.

இன்று தமிழகத்தில் இப்படித்தான் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தத் தொழிலை மறந்து, ஏன் தமிழ்நாட்டின் அடையாளம் எனக் கூறப்படுகின்ற பல்வித தொழில்கள் அழிக்கப்பட்டும், அழிந்தும் வருகின்றன. நமது பாரம்பரிய தொழில்களை அழியாமல் பாதுகாக்க முடிந்தவரை நாம், இங்கு தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்துவோம்.

Project collegewritingservice.org background since , the department of languages and translation studies has been delivering fl courses with an integrated online component

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- ““சக்கம்பட்டி சரிகைச் சேலை” – மறைக்கப்பட்ட வரலாறும், நெசவுத்தொழிலார்களின் இன்றைய நிலையும்.”

அதிகம் படித்தது