மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சங்கப் பாடல்களை அறிவோம் – குறுந்தொகை (2 ஆம் பாடல்)

ஆச்சாரி

Nov 1, 2013

ஆசிரியர் குறிப்பு:

பேரா. ருக்மணி ராமச்சந்திரன் அவர்கள் சென்னை ராணிமேரி கல்லூரியில், தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். சங்க இலக்கிய நூல்களுக்கு எளிய தமிழில் உரை எழுதியுள்ளார். சங்க இலக்கியத்தையும், நாட்டுப்புற இலக்கியத்தையும் தன் இரு கண்களாக நினைப்பவர்.

குறுந்தொகைச் சிறப்பு:

எட்டுத்தொகை நூல்களுள் “நல்ல குறுந்தொகை” என்று சிறப்பிக்கப் பெரும் பெருமையினைப் பெற்ற நூலே குறுந்தொகை. குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களைக் கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப்படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப்பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலினால் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது. குறுகிய அடிகளுக்குள் ஆழமான பொருள் பொதிவு நிறைந்து, படிப்பவர்களை வியப்படையச் செய்யும் பாடலே நாம் இனிக் காணப்போகும் இப்பாடல் ஆகும். இப்பாடல் நமக்கு நன்கு தெரிந்த பாடலும் கூட. இப்பாடலை எழுதியவர் இறையனார். தலைவனும் தலைவியும் யாருமறியாமல் சந்தித்து கூடி மகிழ்கின்றனர். இம்மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை போலும் தலைவனுக்கு! மலை நிலம். பூக்கள் மலர்ந்து கிடக்கின்றன. அம்மலர்களில் தேனை உண்ண வண்டொன்று வருகிறது. அது மலர் விட்டு மலர் தாவி ஆராய்ந்து தேனெடுக்கும் அழகைக் கண்டான் தலைவன். கண்டவன், அதனிடமே கேட்கின்றான், ”வண்டே! நீ ஆராய்ந்து தேனெடுக்கும் அறிவைப் பெற்றிருப்பதால் உன்னிடமே கேட்கின்றேன். என் தலைவியின் கூந்தலில் வீசும் மணத்தினைப் போல நீ தேனெடுக்கும் மலர்களிலே மணம் வீசும் மலர்களும் இருக்கின்றனவா? என்கிறான். இதோ பாடல்!

குறுந்தொகை 2, பாடியவர் – இறையனார், குறிஞ்சித் திணை

கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின், மயில் இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?

இந்தப் பாடலானது இயற்கைப் புணர்ச்சியின் போது, தலைவியின் நலம் பாராட்டி தலைவன் தன்னுடைய அன்பு தோன்றக் கூறியது.

கருத்துரை:

பூக்களிலே இருக்கின்ற தேனினை ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கையைப் பெற்ற அழகிய சிறகினைப் பெற்ற வண்டே! நான் இன்புற வேண்டும் என்பதற்காகச் சொல்லாமல், நீ உண்மையாகவே அறிந்து கண்டதைக் கூறுவாயாக. என்றும் என்னோடு பொருந்திய, உரிமை நட்பினைக் கொண்டவள் என் தலைவி. மயில் போன்ற மென்மையும் வரிசையான பற்களும் கொண்ட அவளின் கூந்தலிலே வீசுகின்ற மணத்தைப் போல, நீ அறிந்த மலர்களிலே மணமுடைய மலர்களும் உள்ளனவா?”

சொற்பொருள் விளக்கம்:

கொங்கு - தேன், தேர் - ஆராய்தல், வாழ்க்கை - வாழ்க்கை, அம் சிறை – அழகிய சிறகு, காமம் - இன்பம், செப்பாது- சொல்லாது, கண்டது - கண்டதை, மொழிமோ - கூறுவாயா?, பயிலியது - என்னோடு முன்பே பொருந்திய, பயின்ற, பழகிய, கெழீஇய – உரிமையான, நட்பின் - நட்புடைய, மயில் இயல் – மயில் போன்ற சாயல், மென்மை, நடை, செறி - வரிசையான, எயிற்று - பற்களுடைய, அரிவை - பெண், கூந்தலின்- கூந்தலினும், நறியவும் - மணமுடையவும், உளவோ- உள்ளனவா? நீ அறியும் - நீ அறிந்த, பூவே - பூவிலே.

தலைவியோடு தான் கொண்ட நட்பு “பயிலியது கெழிஇய நட்பு” என்கிறான் தலைவன். “உள்ளம் பொருந்திய உரிமையான நட்பு” என்று தனக்கும் தலைவிக்குமான உறவின் மேன்மையினை நாகரிகமான சொற்களால், நயமாக உணர்த்துகின்றான் தலைவன். பயிலாதவர்களிடம் பயிர்ப்பினை (கூச்சம்) உடையவள் தலைவி; ஆனால், தானும் அவளும் முன்பே பழகிய நட்பினை உடையவர்கள் என்பதையும் பழக்கமில்லாதவர்களிடம் பழகாத இயல்புடையவள் என் தலைவி என்பதையும் ஒருசேர உணர்த்துகின்றான் தலைவன்.

தலைவனும் தலைவியும் சந்தித்திருக்கும் இடம் மலைப்பகுதி என்பதால் மயில்கள் உலவுகின்றன. (இதனால்தான் முருகனுக்கும் மயிலை வாகனமாக வைத்தனர்.) மயிலைப் பார்க்கும்போதுகூட தான் தழுவிய தலைவியின் இயல்புதான் தலைவனின் நினைவுக்கு வருகிறது. அதனால் தான் தலைவியின் இயல்பினை, “மயில் இயல்“ என்கின்றான். தலைவியைத் தான் சந்தித்தபோது தலைவியின் முகத்தில் தெரிந்த முறுவலும், தழுவிய போது உணர்ந்த அவள் உடலின் மென்மையும் கூந்தலில் நுகர்ந்த மணமும் இயற்கைச் சூழலில் தலைவனின் இயல்பான மன உணர்வினைக் காட்டும் இனிய படைப்பானது; குறுந்தொகை பாடலானது.

தலைவிக்கும் தனக்கும் உள்ள உறவினை ”நட்பு” என்று குறிக்கும் பண்டைத் தமிழரின் பண்பட்ட நிலையினைக் காணும் போதெல்லாம் நாம் அடைகின்ற மகிழ்ச்சிக்கும் அளவுண்டோ?

குறுந்தொகையில் காணப்படும் இந்தப்பாடலைத் திருவிளையாடல் புராணம், “சிவபெருமான் மதுரையில், ஒரு புலவனாகச் சங்கமேறித், தருமி என்ற அந்தணனுக்காக பாடிய பாடல்” என்று கூறுகிறது.

மீண்டும் அடுத்த பாடலில் சந்திப்போம்.

Released in 2012, it’s a mashup of traditional online besttrackingapps.com dating, gps targeting, and instant messaging

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்கப் பாடல்களை அறிவோம் – குறுந்தொகை (2 ஆம் பாடல்)”

அதிகம் படித்தது