மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சச்சினின் திடீர் ஓய்வு

ஆச்சாரி

Jan 1, 2013

194 டெஸ்டுகள், 463 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி என மொத்தம் 657 போட்டிகளில் இதுவரை சச்சின் எடுத்த ரன்கள் 34000  க்கும் மேல். சர்வதேசத் தொழில்முறை கிரிக்கெட்டில் அவர் தொட்ட சாதனைச் சிகரங்கள் மற்றவர்களால் எளிதில் அணுக முடியாதவை. கடுமையான உழைப்பு, கிரிக்கெட் மீதான தணியாத ஆர்வம், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியத்தை பேணிக் காத்தல் போன்ற பல விஷயங்களில் சச்சினின் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு மட்டுமே இத்தனை சாதனைக்கு சொந்தக்காரராக அவரை உருவாக்கி யிருக்கிறது.

அண்டை மாநிலங்களோடு எவ்வளவோ சண்டைச் சச்சரவுகள் இருந்தாலும் கிரிக்கெட் என்று வரும்போதுதான் இந்தியா – இந்தியன் என்ற தேசிய ஒருமைப்பாடு எல்லோருக்கும் ஞாபகம் வரும். அதிலும் சச்சினுக்கு அனைவரும் தரும் ஆதரவு மாநில எல்லைகளை கடந்தது. இந்தியக் கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்கள் அவரை பூஜிக்கின்றனர். இப்படிப்பட்ட சாதனைகளுக்கு சொந்தகாரரை, அவரது ஓய்வு விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய விதம் சரியா?

கடந்த ஜனவரி 2011 லிருந்து அவர் செஞ்சுரி ஏதும் அடிக்கவில்லை. கடந்த 28 இன்னிங்க்ஸ்களில் ஆறு அரை சதங்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது சராசரி 32.22  ரன்கள் மட்டுமே. அவருக்கு வயது 39 ஆகிறது. மனம் நினைப்பதை உடல் செய்யக்கூடிய வயது இது அல்ல. தன்னம்பிக்கையோடு அதிரடியாக அவரது பிரத்யேகமான ஷாட்களை அடித்து ஆட அவரது மனம் விரும்புகிறது. ஆனால், அவரது உடல்திறனோ, அவரை ஏமாற்றி, அவரது ரசிகர்களையும் ஏமாற்றுகிறது. கடந்த இரண்டு வருடங்களில் அவர் 40 சதவீதம் வரை போல்டாகியும், 25 சதவீதம் எல்.பி.டபிள்யூ. முறையிலும் ஆட்டம் இழந்து இருக்கிறார். அவரது துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாமைக்கு வயது காரணமாக இருப்பதைக் இந்த இரண்டு முறைகளில் அவர் ஆட்டம் இழப்பது காட்டுகிறது.

சச்சின் ஓய்வு பெறவேண்டிய தருணம் வந்துவிட்டது என்பது அவருக்கும் தெரியும். முன்பு ஒருமுறை, ஓய்வு பற்றிய ஒரு நேர்காணலில் சச்சின் சொன்னது, “காலையில் எழும்போது எப்போது நான் சோர்வாகவும், கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்ததாகவும் கருதுகிறேனோ அப்போதே அந்த நாளிலேயே எனது ஓய்வை அறிவித்து விடுவேன்” என்றார். ஆனால், இப்போது அவர் மின் அஞ்சல் மூலமாக அறிவித்த ஓய்வு முடிவு, முழு மனதோடு அவர் எடுத்த முடிவாக கருத முடிய வில்லை.

இந்த மாதத்தில் துவங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில்  ஆடுவதில் சச்சின் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அவரது தொடர்ந்த மோசமான ஆட்டத்தால், தேர்வுக்குழுவில் சலசலப்பு இருந்ததையும் தெரிந்திருந்தார். கடந்த 23 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக அணியில் இருந்து நீக்கப்படும் வாய்ப்பு இருந்தது அவரை துயரம் கொள்ள வைத்திருக்கிறது. அவ்வாறு நிகழ்வதற்கு முன்பே விலகிவிடுவது நல்லது என்றுதான் இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

சச்சினுக்கு ஏற்பட்ட இந்த நெருக்கடி தவிர்க்கப்பட்டு இருக்கலாம். கிரிக்கெட் வாரியத்தின் தவறான அணுகுமுறையால் வி.வி.எஸ்.லெட்சுமன் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே ஓய்வு அறிவிப்பு வெளியிட்டார். இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, வாரியம் மூத்த வீரர்களின் ஓய்வு மீதான முடிவுகளை எடுப்பதில் திறமையாக செயல்படவில்லை.

ஓய்வு பற்றி சச்சினிடம் கலந்து ஆலோசித்து, பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடரே எனது கடைசி ஒரு நாள் தொடர் என அறிவிக்கச் செய்து, அவரை இந்திய மண்ணில் ஆட வாய்ப்பு கொடுத்து பெருமைப் படுத்தி ஓய்வு பெறச் செய்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இது மன மகிழ்ச்சியை அளித்திருக்கும். ஆனால், சச்சினை போன்ற உலகப்புகழ் பெற்ற ஒருவர், மின் அஞ்சல் மூலமாக, ஊடகங்களை சந்திக்காமல், பின்பக்கக் கதவு வழியாக ஓய்வு அறிவிப்பு வெளியிடுவது மிகவும் கடினமானது. சச்சினுக்கு இது உண்மையிலேயே மிகுந்த துயரத்தை அளித்திருக்கும்.

எனினும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடப் போவதாக சச்சின் அறிவித்து இருக்கிறார். டெஸ்ட் அணியிலும் அவர் இன்னும் மிகக் குறுகிய காலமே விளையாட முடியும். இந்த கிடைப்பதற்க்கரிய வீரர், டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறும்போதாவது, மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்படவேண்டும். இதுவே சச்சினின் 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வுக்கு அர்த்தம் அளிக்கக்கூடியது.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சச்சினின் திடீர் ஓய்வு”

அதிகம் படித்தது