மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சன்ரைசர்சும் இலங்கை கிரிக்கெட் வீரர்களும் (கட்டுரை)

ஆச்சாரி

Apr 15, 2013

இலங்கைப் பிரச்சினையில் தமிழ்நாடே இப்பொழுது கொந்தளிப்பில் இருக்கிறது. அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது இளைஞர் சமுதாயம், பள்ளி மாணவர்கள் என அனைத்துத் தரப்பும் போராட்டக் களத்தில் குதித்திருக்கின்றனர். இறுதிக்கட்டப் போரின் கடைசி நூறு நாட்களில் நடந்த இனப்படுகொலைகள் குறித்து இலங்கை அரசைப் போர் குற்றவாளியாக அறிவிக்க நடக்கும் விதவிதமான போராட்டங்களால், தமிழகமே அடிக்கடி ஸ்தம்பித்துப் போகிறது. இந்நிலையில், தமிழக அரசும் பல வழிகளில் இலங்கை அரசை, மூர்க்கமாக எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதில் ஒன்று, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கெடுத்துக் கொள்வதை ஏற்க முடியாது என்பது.

ஒரு மாநிலத்தின் தலைமையே இப்படிச் சொல்வதால், வேறு வழியின்றி ஐ.பி.எல். நிர்வாகம் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடுவதைத் தவிர்க்கும்படி, அணி உரிமையாளர்களிடம் தெரிவித்துவிட்டது. இப்படியாக, விடுதலைப்புலிகள் பிரச்சினையில் பாராமுகமாக இருந்த அ.தி.மு.க -வே தானாக முன்வந்து இலங்கை மீது இது போன்ற தடைகளை விதிக்கும்போது, ஈழத் தமிழர்களுக்காக உயிரை பல முறை “ஈந்த” தி.மு.க தலைவர் கலைஞர். கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சியான சன் குழுமம், விலைக்கு வாங்கி, ஏற்று நடத்தும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐ.பி.எல். அணியின் தலைவர் யார் தெரியுமா? இலங்கையைச் சேர்ந்த குமார் சங்கக்காரா. சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு இவரை சன் குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. திசிரா பெரைரா என்ற இன்னொரு சிங்கள வீரரும் சன் குழும ஒப்பந்தத்தில் அடக்கம். இதை எவ்வாறு தமிழக மக்கள் எடுத்துக் கொள்ளலாம்?

அவர்கள் தொழில்முறை ஆட்டக்காரர்கள். அவர்களைத் தடுக்கக் கூடாது என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படிப் பார்த்தால் நமது மீனவர்கள் தொழில்முறை மீனவர்கள் தானே? கடலில் ஏதோ வேளிச்சுவர் (காம்பௌன்ட்) கட்டி கம்பி வேலி போட்டுள்ளது போல், எல்லை தாண்டி வந்துவிட்டார்கள் என்று ஒவ்வொரு நாளும் துப்பாக்கிக் குண்டுக்கும், கொடும் சிறைவாசத்துக்கும் ஆட்படுகிறார்களே நமது தமிழர்கள்? அவர்களை என்னவென்று சொல்வது? சரி, அது போகட்டும், உலக அளவில் சங்கக்காரா  அல்லது முகமே தெரியாத திசிரா பெரைராவை விட்டால் வேறு ஆட்டக்காரர்களே இல்லையா? இதிலும் ஒரு தொழில் நேர்த்தி கலாநிதி மாறனிடம் இருக்கிறது. நல்ல அடிமாட்டு விலைக்கு அவர்கள் திசிராவை வாங்கி இருப்பார்கள். அவருக்கு தமிழ் ஈழம் வேறு. தனது கிரிகெட் அணி வேறு. இந்த இரண்டையும் வைத்து அவர்கள் குழப்பிக் கொள்ளமாட்டார்கள். நாம் தான் உட்கார்ந்து இதைப்பற்றி அங்கலாய்த்துக்கொண்டு இருப்போம்.

கலைஞரிடம் இதைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வார்? தொழில் வேறு. அரசியல் வேறு என்று சொல்வார். அல்லது சன் டிவிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் சொல்வார். தொழில் வேறு, அரசியல் வேறு என்றால், தமிழ் நாட்டில் தற்போது பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு  எழுதும் மாணவர்கள் கூடத் தேர்வைப் புறக்கணித்து தெருவில் நின்று போராடி இருக்கிறார்களே? அவர்களை என்னவென்று சொல்வது? அவர்களுக்கு படிப்பு வேறு, இன உணர்வு வேறு என்று இருக்கத் தெரியவில்லையே? அவர்களைச் சுத்த மடையர்கள் என்று சொல்லலாமா?

நமது இந்த அப்பாவித்தனமான கேள்விக்கு கலைஞர் இப்படிக் கூட பதில் சொல்வார். சன் டிவியில் இருந்த எனக்கான பங்குகளை நான் முன்பே விற்றுத் தின்றுவிட்டேன். அதனால் இப்போது எனக்கும் சன் டி.விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று.

கலைஞர் கருணாநிதி தற்போதைக்கு மத்திய அரசில் இருந்து விலகி, அவர்களுக்கு ஆதரவு இல்லை என்ற நிலையை எடுத்து இருக்கிறார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற பழமொழி தான் நமக்கு ஞாபகம் வருகிறது. இறுதிக் கட்ட போரின் போது நீலிக் கண்ணீர் வடித்து, நாடகம் நடத்தி, இலங்கைத் தமிழர்களை மண்ணோடு மண்ணாக போட்டுப் புதைத்துவிட்டு, இப்போது ஆதரவு வாபஸ் என்கிறார்கள். இது போதாதென்று, தி.மு.கவின் கதவுகள் இப்போதும் திறந்தே இருக்கின்றன என்றும் கலைஞர் கூறுகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? மனம் விரும்பியோ அல்லது மனம் வெதும்பியோ அவர் இந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை. வேறுவழி இல்லாமல் எடுத்து இருக்கிறார். தன்னுடைய ஈழப் போராளிப் பட்டம் வேறு யாருக்காவது போய்விடுமோ என்ற பயம் இப்போது அவருக்கு அதிகரித்திருக்கிறது. நம்மால் உறுதியாக சொல்ல முடியும், வரும் நாடாளுமன்ற தேர்தலின் போதோ அல்லது இப்போதே கூட மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க கூட்டணி வைத்துக்கொள்ள நூறு சதவிகிதம் வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்படியாக திமுக தலைமை தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அவரது குடும்ப வாரிசு கலாநிதி மாறன் வெளிப்படையாக இலங்கை வீரர்களை தனது கிரிக்கெட் அணியில் சேர்த்து, எங்களில் யாருக்கும் கொள்கை பற்றியோ அல்லது மனசாட்சியின் குரல் பற்றியோ அக்கறை இல்லை என்பதை ஐயம் திரிபற எல்லோருக்கும் எடுத்துக் காட்டியுள்ளார். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் ஜாலம் அரசியல் வா(வியா)திகளுக்கு கை வந்த கலை தான் என்றாலும், உணர்ச்சிப்பூர்வமான இலங்கைப் பிரச்சினையில் கூடவா இப்படிப்  படுகேவலமாக நடந்து கொள்வார்கள்?

வட மாநிலங்களில் தமிழ்நாடு பற்றிய ஒரு உயரிய மதிப்பீடு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது. பால் தாக்கரே கூட அதை அடிக்கடி சுட்டிக் காட்டுவார். தமிழருக்கு இன உணர்வும் அவர்களுக்குள் ஒற்றுமை உணர்வும் அதிகம் என்று. இதை நினைத்துப் பார்த்தால் இப்போது நகைச்சுவையாக இருக்கிறது. உயிர் போகும் பிரச்சினைகளில் கூட நாம் ஒன்றாய் ஒற்றுமையாய் நிற்பதில்லை.

வழக்கமாக, இந்த வகைப் போராட்டங்களில் சட்டக்கல்லூரி மாணவர்களும் கலைக் கல்லூரி மாணவர்களும் மட்டுமே பங்கெடுப்பார்கள். ஆனால், ஐ.ஐ.டி.யில் படிக்கும் தமிழ் மாணவர்கள், முதல்தர பொறியியல் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என மொத்த இளைஞர் சமுதாயமே திரண்டெழுந்து போராட்டக்களத்தில் குதிக்கும் நிலை வந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் திமுக அரங்கேற்றும் நாடகத்தையும், அவரது குடும்பத் தொலைக்காட்சியின் “தொழில் தர்மத்தையும்” தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தக்க சமயம் வரும்போது இதற்கான பதில் அளிக்கவும் தயங்க மாட்டார்கள்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “சன்ரைசர்சும் இலங்கை கிரிக்கெட் வீரர்களும் (கட்டுரை)”
  1. balusavi.244 says:

    மிகவும் சரி. இது தமிழர்க்கு புரிந்தால் நல்லது.

அதிகம் படித்தது