மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சமூகமும் குழந்தையும்

ஆச்சாரி

Feb 22, 2014

குழந்தை, படிப்படியாக சமூகத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் ஒரு சீவன். அது சமூகத்தின் கடைசி அங்கம். ஒரு குழந்தையால் தீர்மானகரமாக எதையும் மாற்ற முடியாது.  குழந்தைக்குள் மரபாக அளிக்கப்பட்ட சமூகம் மட்டும் இருக்கிறது. குழந்தையை சமூகம் மனிதனாக மாற்றுகிறது. அதற்கு உணர்வு, அறிவு எல்லாம் சமூகத்தால் அளிக்கப்படுகிறது. அது தன் வளர்ச்சிக்கு ஏற்றவாறு சமூகத்தை உள்வாங்குகிறது. அதையே பிரதிபலிக்கிறது. அதை மாற்றுகிறது.

உலகத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் சீவன் குழந்தையல்ல. அதற்கு மகிழ்ச்சி, துக்கம், கோபம் எல்லாம் பிரதிபலிப்பு அளவிலேயே உள்ளது. பாலுக்காக குழந்தை அழும். ஆனால் பிரக்ஞை பூர்வமாக உணராது. வளர வளர பசி உட்பட ஒவ்வொன்றாக உணரத் தொடங்குகிறது. பசியை மாற்றும் உணவை தெரிந்து உட்கொள்கிறது. இங்ஙனம் குழந்தையிடம் மரபாக உள்ள எல்லா உணர்வுகளையும் சமூகம் சிறிது சிறிதாக மாற்றுகிறது.

குழந்தையிடம் உள்ள எல்லா உணர்வுகளுக்கும் சமூகமே பொறுப்பு. ஏனெனில் குழந்தை குடும்பத்தில் வளருகிறது. குடும்பம் சமூகத்தில் உள்ளது. ஆக குடும்பம் வழி சமூகம் குழந்தையை அடைகிறது. சமூக போக்கு குடும்பத்தைத் தீர்மானிக்கிறது. குடும்பம் குழந்தையைத் தீர்மானிக்கிறது. நல்ல சமூகம் நல்ல குழந்தைகளை உருவாக்குகிறது. கெட்ட சமூகம் கெட்ட குழந்தைகளை உருவாக்குகிறது. ஒருபோதும் கெட்ட சமூகத்திடமிருந்து நல்ல குழந்தைகளையோ, நல்ல சமூகத்திடமிருந்து கெட்ட குழந்தைகளையோ எதிர்பார்க்க முடியாது. ஆனால் கெட்ட சமூகம் நல்ல சமூகமாக மாற்றப்படும் மாறுதல் கட்டத்தின் போது குழந்தையும் நல்ல குழந்தையாக மாறும்.  எனவே குழந்தையைப் புரிந்துகொள்ள முதலில் சமூகத்தைப் புரிந்தாக வேண்டும்.

இந்தியச் சூழலில் குழந்தைகள்:

எல்லா நாடுகளிலும் குழந்தைகள் சமூகத்தையே சார்ந்துள்ளன. முதலாளித்துவ சமூகம் அனைத்திலும் பெற்றோர் குழந்தைகளுக்கும், குழந்தைகள் பெற்றோருக்கும் சுமையாக உள்ளனர். இது தனியுடைமைச் சமூகத்தின் குறைபாடாகும். அதிலும் இந்தியச் சமூகம் ஒரு பிரத்யேகத் தன்மையுடையது. மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து செல்வங்களும் மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்க வேண்டும்.  ஆனால் அச்செல்வங்கள் மனிதனுக்குத் துன்பத்தைத் தருகின்றன. இதனால் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வழங்க வேண்டிய குழந்தையும் பெற்றோரும் ஒருவருக்கொருவர் துன்பத்தை கொடுக்கின்றனர். குழந்தைகள் பெற்றோரை சொத்துப் பத்திரமாகப் பார்க்கின்றனர். சொத்து கைக்கு வந்ததும் பெற்றோர் கைவிடப்படுகின்றனர். இது போலவே பெற்றோர் குழந்தைகளை சம்பாத்தியமாகப் பார்க்கின்றனர். இந்த இரண்டிலும் பெற்றோரும் பிள்ளைகளுமாக, வாழ்வது என்பது இல்லாமல் போகிறது.

இந்த சிக்கல் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்புதான் வரும் என்பதில்லை. குழந்தைகளாக இருக்கும் போதே சிறிது சிறிதாக ஒவ்வொரு நடவடிக்கையின் வாயிலாகவும் இந்த நச்சு ஏற்றப்படுகிறது. இது பெரியவர்களைப் பாதிக்கின்ற அதே வேகத்தில் குழந்தைகளையும் பாதிக்கின்றது. தனது பொருளை யாருக்கும் விட்டுக் கொடுக்காதது குழந்தையின் இயல்பன்று. அது தனிச்சொத்தின் பாதிப்பு. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடம் ஆசிரியர், மாணவர் தங்களுக்குள் விட்டுக் கொடுக்குமாறும், பிறருக்கு உதவுமாறும் அறிவுறுத்துவர். ஆனால் குழந்தைகள் அவ்வாறு நடப்பதில்லை. காரணம் தனிச்சொத்துச் சமூகம் பிறரை விட்டுக் கொடுக்கச் சொல்லுமே தவிர ஒரு போதும் தான் விட்டுக் கொடுக்காது. இதுவே குழந்தைகளிடமும் காணப்படுகிறது.

இந்திய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் பேசும் ஆனால் நடைமுறையில் ஏற்றத்தாழ்வை வைத்திருக்கும். சாதிகள் இல்லையடி பாப்பா பாட்டு சொல்லிக் கொடுக்கப்படும் பள்ளியிலேயே சாதி சான்றிதழும் கேட்கப்படும். இங்ஙனம் இரட்டை வேடம் போடும் சமூகத்தில் வளரும் குழந்தைகளும் பேசுவது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருப்பர். இதைத் தவிர்க்க முடியாது.

குழந்தை வளர்ப்பு:

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு வேலை. மிக மிக கருணையுடனும், அளவான கண்டிப்புடனும், மிகுந்த புத்தி கூர்மையுடனும் செய்ய வேண்டிய வேலை. இந்தச் சமூகத்தில் எந்த வேலையையும் விருப்பமுடன் செய்ய முடிவதில்லை. அதுபோலவே குழந்தை வளர்ப்பிலும் விருப்பமுடன் செயல்பட முடிவதில்லை. பெற்றோர் மற்றும் ஆசிரியரின் தான்தோன்றித் தனம் மட்டுமே குழந்தைகளிடம் பரப்பப்படுகின்றன. சிறு வயது முதலே அவர்களின் ஆசைகளின் மீதும் சுதந்திரத்தின் மீதும் கண்டிப்பு மட்டுமே காட்டப்படுகிறது. ஏனென்றால் பெற்றோரோ ஆசிரியரோ சுதந்திரமாக இல்லை.

சமூகம் அவர்கள் மேல் திணித்ததை அவர்கள் குழந்தைகளின் மீது திணிக்கின்றனர். அவர்களின் இயல்பான மனவெழுச்சிக்கு இச்சமூகம் பெரும் தடையாக இருக்கிறது. இது குழந்தைகளிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொள்வதும். மாணவன் ஆசிரியரைக் கொலை செய்வதுமான குரூர நிலைக்குக் கொண்டு செல்கிறது. ஆசிரியர்- மாணவர், குழந்தை- பெற்றோர் ஆகியோருக்கு இடையே ஒரு எதிர்ப்புணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. இது இந்தச் சமூகத்தின் விளைவு.

குழந்தை சுயநலமின்றி இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தங்களிடம் இருக்கும் சுயநலத்தைப் பார்ப்பதில்லை. தாங்கள் சுயநலத்துடன் இருப்பதை மறைக்க குழந்தைகளிடம் வாய்வார்த்தைக்காக சுயநலத்துடன் இருக்கக்கூடாது என்று கூறுகின்றனர். தாங்கள் சுயநலத்துடன் இருப்பதை பார்க்க மறுப்பதால் சமூகம் சுயநலமுடையதாக இருப்பதையும் பார்க்க முடிவதில்லை. குழந்தை வளர்த்தல் என்பது குழந்தை மட்டுமே வளர்வதன்று. தாயும் உடன் வளர்வதே.

குழந்தைகளிடம் உருவாகும் அனைத்தும் தங்களின் வழி, சமுதாயத்தால் அனுப்பப்பட்டவையே. பெற்றோர் தங்களிடமும் சமூகத்திடமும் உள்ள குற்றங்கள் மீது சமரசம் செய்து கொண்டு, அதே குற்றங்கள் குழந்தைகளிடம் காணும் போது மட்டும் தீர்க்க முயல்வதுபோல நடிக்கின்றனர். ஒருவேளை தீர்க்க  முயன்றாலும் ஒருபோதும் முடியாது. ஒட்டு மொத்த சமூக மாற்றத்தின்போதுதான் தனிமனித மாற்றம் சாத்தியம். தவிர, ஒட்டு மொத்த சமூக மாற்றத்திற்கான வேலைகளைச் செய்யும் தனிமனிதர்களுக்கு இது சாத்தியமாகும். அந்த தனிமனிதர்களால் குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியும். அவர்களிடம் வளரும் குழந்தைகள் சுதந்திரமாகவும் சமூக அக்கறையுடனும் வளர்வர்.

சமூகத்தின் ஒவ்வொரு தனிநபருக்கும் தாங்கள் வாழும் சமூகம் குறித்த அக்கறையும் பிரக்ஞையும் இருக்க வேண்டும். தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வு சமூக மக்கள் அனைவரின் பிரச்சினைகளுக்குமான தீர்வில் இருப்பதை உணந்து போராட வேண்டும். அத்தகைய தெளிவு பெற்றவர் தன்னளவில் சுதந்திரம் அடைவர். அவர்கள் தங்கள் குழந்தைகளை முறையாக வளர்த்து இன்பமாக வாழ முடியும்.

இல்லையெனில் சமூகம் தங்கள் மீது திணித்த கூலி புத்தியையும், இயலாமையையும், இரக்கமின்மையையும், பாசாங்கையும், சூதையும் பெற்றோர் தங்களது சொந்த கைகளாலேயே தமது குழந்தைகளுக்குக் ஊட்டுவர். பொருளாதாரத்தில் மேம்பட்ட பெற்றோராலும் இந்நிலையைத் தவிர்க்க முடியாது. அன்றாடம் பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் இதை தெளிவுறுத்துகின்றன.

 

The third http://writemypaper4me.org/ illustrates another sense in which how can be interpreted as why

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமூகமும் குழந்தையும்”

அதிகம் படித்தது