மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சமூக வலைத்தளங்கள்: புதிய அரசியல் களம்

ஆச்சாரி

Jun 1, 2012

எண்முறை (digital) புரட்சி உலகிற்கு அளித்த தனிநபர் கணினி, இணையம், அலைபேசி போன்ற புதுமைகளின் வரிசையில் வந்திருக்கும் கடைக்குட்டி சமூக வலைத்தளங்கள். எண்பதுகளின் இறுதியில் வளரத் தொடங்கிய இணையத்திற்கு நூறு கோடி மக்களைத் தொட இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாகியது. பின்னர் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வெளிவந்த அலைபேசிகள் பத்தாண்டுகளிலே நூறு கோடி மக்களை சென்றடைந்து விட்டன. 2000-த்திற்கு பிறகு வளரத்தொடங்கிய புதிய சமூக வலைத்தளங்கள் ஐந்தாண்டிற்கும் உள்ளாகவே நூறு கோடி மக்களைத் தாண்டி, புதிய வாழ்க்கை முறையையே உருவாக்கி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாற்பது கோடிக்கும் அதிகமானோர் புதிய முகநூல் கணக்கைத் தொடங்கி இருக்கின்றனர் என்பது பெரும் வியப்பைத் தருகிறது. புள்ளி விவரங்களைப் ஒப்பிட்டு பார்த்தால் அதி வேகமாகப் பரவும் வைரஸ் பாக்டீரியா போன்ற கிருமிகள் கூட முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களிடம் பரவும் வேகத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டாகவேண்டும்.

தொடக்கத்தில் பழகிய நண்பர்களுடன் தொடர்பிலிருப்பதற்காக மட்டும் பயன்பட்ட சமூக வலைத்தளங்கள் இன்று புதிய நண்பர்களை உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல் புதிய குடும்ப உறுப்பினர்களை உருவாக்கும் நிலைக்கு பயன்படுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள, புதிய பொருள்களைப் பற்றி கருத்தறிய, விளம்பரபடுத்த என்று பல வழிகளிலும் வியாபார நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றன. அண்டை வீட்டாரிடம் பேசுவது போன்று மக்கள் இன்று பிரபலங்களுடன் சமூக வலைத்தளங்களில் எளிதாக உரையாடுகின்றனர். பொழுது போக்கு, வியாபாரத்திற்கு என்று மட்டுமல்லாமல் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவ நிதி திரட்டுவதற்கும், பல நேரங்களில் மனிதர்களின் உயிர் காப்பதற்கும் கூட சமூக வலைத் தளங்கள் பேருதவியாக இருக்கின்றன. இவ்வாறு நம் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளுக்குள்ளும் நுழைந்து விட்ட சமூக வலைத்தளங்களை அரசியலுக்கு பயன்படுத்தாமல் விட்டுவிடுவார்களா என்ன?

அமெரிக்காவின் முதல் கருப்பு அதிபர் ஒபாமா என்பதை அனைவரும் அறிவர். உலகிலேயே சமூக வலைத்தளங்களால் வெற்றியடைந்த முதல் அதிபரும் அவர் தான். 2007 பிப்ரவரி மாதத்தில் நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனர் மற்றும் முகநூல் இயக்குனர்களுள் ஒருவருமான மார்க் ஆண்டேர்சனை சந்திக்கும் வரை ஒபாமா ஒரு சாதாரண அரசியல்வாதியாகத் தான் இருந்தார். பின்னர் அவர்கள் இணைந்து உருவாக்கிய சமூக வலைத்தள பரப்புரை திட்டங்களின் ஒவ்வொரு படிகளும் பிரமாண்டமானவைகள். 2008 இல் ஒபாமா ஆதரவாளர்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்த அவர்கள் உருவாக்கிய www.my.barackobama.com இணையதளம் இன்று முகநூலில் இருக்கும் அனைத்து வசதிகளையும் அன்றே கொண்டிருந்தது. ஒபாமா ஆதரவாளர்கள் இந்த இணைய தளத்திற்குள் நுழைந்து அவர்கள் நகரில் அல்லது தெருவில் உள்ள அனைத்து அனைத்து ஆதரவாளர்களின் தொடர்புகளை எடுக்க முடியும். மேலும் நிகழ்வுகளை உருவாக்க, பரப்புரை செய்ய, ஊடகங்களுக்கு தெரிவிக்க, நிகழ்விற்கு தேவையான துண்டறிக்கை வடிவங்களைப் பதிவிறக்க என அனைத்து பணிகளையும் இந்த சமூக இணையதளம் மூலம் ஒபாமா ஆதரவாளர்களால் எளிமையாக செய்யமுடிந்தது அவர்களின் வெற்றிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது. ஒவ்வொரு தரப்பட்ட மக்களுக்கும் அனுப்பும் வகையில் 8000 வெவ்வேறு மின்னஞ்சல் உரை வடிவங்கள் வைத்திருந்தார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு கவனமாக இந்த இணைய பரப்புரையை செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

2008 அமெரிக்க தேர்தலில் சமூக வலைத்தளங்கள் ஆற்றிய பெரும்பங்கை உணர்ந்ததால் 2009 ஈரான் தேர்தலில் மக்களையும் எதிரணியினரையும் சமூக வலைத்தளங்களை பெருமளவில் பயன்படுத்த அமெரிக்கா ஊக்குவித்தது. ஈரான் தேர்தல் காலத்தில் டிவிட்டர் திட்டமிட்டிருந்த பராமரிப்பு பணி நிறுத்தத்தைக் கூட அமெரிக்க தேர்தல் முடியும் வரை தள்ளிவைக்க வைத்தது. சமூக வலைத்தளங்களை மக்கள் அணுக முடியாமல் ஈரான் அரசு தொழில்நுட்பத் தடை செய்தபோது, அதை மீறி மக்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அமெரிக்க அரசே மறைமுகமாக ஹேஸ்டாக் (heystack) என்ற மென்பொருளை பரவவிட்டது.

தேர்தல்களுக்கு மட்டுமல்ல மக்கள் போராட்டங்களுக்கும் சமூக வலைத்தளங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. சென்றாண்டு துனிசியா புரட்சியில் டிவிட்டரின் பங்கு அளப்பெரியது. மக்கள் தாக்கப்படும் இடங்கள், போராட்டம் நடக்கும் தேதி, இடம் ஆகியவற்றை மக்கள் டிவிட்டர் மூலம் உடனுக்குடன் பகிர்ந்து கொண்டனர். மக்களின் மீது திணிக்கப்பட்ட ஒவ்வொரு வன்முறையும் சில வினாடிகளில் முகநூலில் படங்களாக பதிவேற்றப்பட்டன. துனிசியா அரசு சமூக வலைத்தளங்களை ஒடுக்க எண்ணற்ற முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. உதாரணத்திற்கு துனிசியா அரசு அதிகாரிகள் இணைய தொடர்பு நிறுவனங்களில் ஒரு மென்பொருளை நிறுவி மக்களின் முகநூல் கணக்குப் பெயரையும் கடவுச் சொல்லையும் திருடி, மக்களின் முகநூல் கணக்கில் நுழைந்து கணக்கை செயலிழக்க (disable) செய்தனர். இந்த நூதன தாக்குதல் தொடங்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலே முகநூல் அலுவலர்கள் கண்டறிந்து கணக்கை செயலிழக்க வைக்க, நிழற்படங்களில் அவர்களின் நண்பர்களின் பெயர்களை கண்டறிய வேண்டும் என்ற புதிய பாதுகாப்பு விதியை அமல்படுத்தினர். இதன் மூலம் துனிசியா மக்களின் முகநூல் தொடர்புகள் காப்பாற்றப்பட்டன. இது துனிசியா மக்கள் சர்வாதிகாரியிடமிருந்து காப்பாற்றப்படுவதற்கு பேருதவியாக அமைந்தது.

கடந்த ஆண்டு எகிப்திய புரட்சி ஒரு முகநூல் பக்கத்திலிருந்து தான் தொடங்கப்பட்டது. காலித் சேத் என்ற இளைஞர் காவல்துறையினரின் வன்முறையில் கொல்லப்பட்டதை கண்டித்து “நாங்கள் அனைவரும் காலித் சேத்” (http://www.facebook.com/ElShaheeed) என்று தொடங்கப்பட்ட முகநூல் பக்கம் படிப்படியாக வளர்ந்து சில மாதங்களில் எகிப்திய புரட்சிக்கு அடிகோலியது. இம்முகநூல் பக்கத்தை நடத்தி இணையத்திலிருந்து தெருவிற்கு மக்களை அழைத்து வந்தவர் பெரிய புரட்சியாளரோ அரசியல்வாதியோ அல்ல. கூகிள் நிறுவனத்தில் நிர்வாகியாக பணிபுரிந்த வேல் கோனிம் (Wael Ghonim) என்ற நம்மைப் போன்ற சாதாரண குடிமகனே. இந்த வேல் கோனிம் காந்தியடிகளை தனது முன்மாதிரியாக (role model) கொண்டு அகிம்சை வழியில் செயல்பட்டதாக அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

பல நாடுகளின் தலைவிதிகளை மாற்றிய சமூக வலைத்தளங்களை தமிழர்கள் இன்னும் தங்களது அரசியல் காரணங்களுக்கு சரியாகப் பயன்படுத்தத் தொடங்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான தமிழர்கள் முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இருப்பினும் இதுவரை சமூக வலைத்தளங்களால் தமிழர்கள் எந்த பெரிய அரசியல் பயனையும் அடைந்துவிடவில்லை.

இலட்சக்கணக்கான புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் முகநூலில் பரவியிருக்கின்றார்கள். அவர்கள் பல முகநூல் குழுக்களைத் தொடங்கி ஒவ்வொரு குழுவிலும் பல ஆயிரம் மக்களாக பிரிந்துகிடக்கின்றனர். அவர்களின் முகநூல் குழுக்களும் பக்கங்களும் பெரும்பாலும் அவர்களின் கோபத்தையும் விரக்தியையும் தணிக்கும் வடிகால்களாகத் தான் பயன்படுத்தப்படுகின்றன. இணைய கோரிக்கைகளில் (online petition) சில ஆயிரம் கையொப்பங்கள் சேர்ப்பதற்கு மட்டுமே பயன்படும் அளவில் அந்த குழுக்களும் பக்கங்களும் செயல்படுகின்றன. 2009 தமிழினப் படுகொலைக்கு பின்னர் ஈழத்தமிழர்கள் அடைந்த சிறிய அரசியல் முன்னேற்றங்களான சானல் 4 காணொளி தொகுப்பு வெளியீடும், சமீபத்திய ஐ.நா.சபை தீர்மானமும் அவர்கள் மரபு வழியில் (traditional approach) அடைந்த முன்னேற்றங்களே. சமூக வலைத்தளங்களின் பேராற்றலை ஈழத்தமிழர்கள் இன்னும் உணரவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல இலட்சம் தமிழர்களும் முகநூல், ட்விட்டர் வலைத்தளங்களை பெருமளவில் பயன்படுத்துகின்றனர். அவர்களின் பயன்பாடும் பெரும்பாலும் திரைத்துறை, விளையாட்டு, பொழுதுபோக்கு தொடர்பான செய்திகளை பகிர்வதிலும், சொந்த நிழற்படங்களை பகிர்வதோடும் நின்றுவிடுகின்றது. நாட்டில் நடக்கும் ஊழல்களையும், அரசு நிர்வாக சீர்கேடுகளையும், அத்தியாவசிய தேவையான கட்டுமான வசதிகள் உருவாக்காததையும், கடுமையான விலையேற்றங்களையும், மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதையும் யாரும் பெருமளவில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்வதில்லை. சமூக அக்கறையுள்ள செய்திகளை பகிரும் சில நூறு இளைஞர்களும் பல நேரங்களில் அவர்கள் சார்ந்த கட்சி கொள்கைகளுக்காக வீண் விவாதம் செய்து அவர்களின் ஆற்றலை விரயம் செய்கின்றனர்.

தமிழர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி துனிசியாவைப் போன்றோ எகிப்தைப் போன்றோ புரட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதில்லை. ஆனால் பல அத்தியாவசிய சமூக மாற்றங்களைக் கொண்டுவரலாம். நமது தினசரி வாழ்க்கையில் பல சமூக அவலங்களை மௌனமாக கடந்து வருகின்றோம். அந்த சமூக அவலங்களை வலைத்தளங்களில் வெளிப்படுத்தி கண்டிக்கத் தொடங்குவதே மாற்றங்களுக்கான முதல்படியாகும். சாலையில் நின்று பணம் வாங்கும் காவல்துறையினரை கடந்து சென்றாலோ, குடிபோதையில் சாலையில் குப்பையாகக் கடக்கும் மனிதர்களைக் கண்டாலோ, மேடு பள்ளங்களாக சீரழிந்த சாலைகளில் பயணித்தாலோ, அரசு அதிகாரிகளின் முறைகேடுகள் தெரியவந்தாலோ சமூக வலைத்தளங்களில் பகிருங்கள். பல ஆயிரம் அல்லது சில லட்சம் மக்கள் அவற்றைப் பார்த்து அவர்களும் கண்டிக்கட்டும். சமூக விரோதிகளிடமிருந்து காத்துக்கொள்ள தேவைப்பட்டால் உங்களது உண்மையான விவரங்களை மறைத்து புனை பெயர்களில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுங்கள். கணினியின் முகவரி (IP address) கொண்டு தங்களின் இருப்பிடம் கண்டறிந்து விடுவார்கள் என்று ஐயமிருந்தால் டார் (Tor) போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தினால் எந்த வல்லுனராலும் கண்டறிய முடியாது. பத்திரிக்கை ஊடகங்கள் வந்து நம் பகுதியில் நடக்கும் அவலங்களை வெளிக்கொண்டு வரும் என்று காத்திருக்க வேண்டிய அவலமில்லை இன்று. இனி நாம் ஒவ்வொருவரும் ஊடகமே. நமது நிழற்படக் கருவியையும் (camera) விசைப்பலகையும் (keyboard) விட வலிமையான ஆயுதம் ஏதுமில்லை.

சில சமூக ஆர்வலர்கள் தமிழக மக்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு ஒரு சில முகநூல் பக்கங்களையும், குழுக்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். அவற்றில் ஆர்வமாக பல ஆயிரம் தமிழர்கள் இணைந்திருப்பது சமூக முன்னேற்றத்திற்கான சிறந்த அறிகுறி. ஆனால் இந்த முகநூல் குழுக்களிலும், பக்கங்களிலும் உறுப்பினர்களின் ஈடுபாடு மிகக் குறைவாகவே இருக்கின்றது. பத்தாயிரத்திற்கு அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களில் கூட குழு தொடர்பான கருத்துக்களை ஐம்பதிற்கும் குறைவானவர்களே தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலான உறுப்பினர்களை தொடர்ந்து ஈடுபாட்டுடன் பதிவிட வைப்பதே முதல் பெரும் சிக்கல். குழுக்களின் நிர்வாகிகள் புதுமையான முறைகளை கையாண்டு அனைத்து உறுப்பினர்களையும் ஈடுபாட்டுடன் பங்குபெற வைக்க வேண்டும். பதிலளிக்கத் தூண்டும் வகையிலான கேள்விகள், கணக்கெடுப்புகள், கோபத்தையோ பரிதாபத்தையோ தூண்டும் வகையான பதிவுகளை இடுவதன் மூலம் பெரும் அளவிலான மக்களை பதிவிட தூண்ட முயலலாம். ஒவ்வொரு வெற்றிகரமான குழுக்களுக்குப் பின்னாலும் அக்குழு நிர்வாகிகளின் கடுமையான உழைப்பு மறைந்திருக்கின்றது.

சமூக வலைப்பக்கங்களில் மக்களின் கவனத்தையும், ஈடுபாட்டையும் கவர்ந்துவிட்டாலே செயல்திட்டங்களும், நடவடிக்கைகளும் தானாக உருவாக தொடங்கிவிடும். முதலில் மக்களுக்கு பாரமாக இல்லாத எளிமையான செயல்களை கொண்டு தொடங்குவதே வெற்றிக்கான வழியாகும். எகிப்து புரட்சிக்கு வித்திட்ட முகநூல் பக்கத்தின் உறுப்பினர்கள் ஈடுபட்ட முதல் செயல் “நான் காலித் சேத்” என்று கையால் எழுதி பிடித்து தங்களது படங்களை பகிர்ந்துகொண்டதே. (ஒரு கர்ப்பிணிப் பெண் தன் வயிற்றிலிருக்கும் சிசுவின் படத்தில் (scan) “நான் காலித் சேத்” என்று எழுதி பதிவிட்டது பெருமளவிலான உறுப்பினர்களின் உணர்வுகளை தூண்டியது.) படிப்படியாக பின்னர் இதே மக்களே தெருவில் இறங்கி, இறுதியில் இராணுவ பீரங்கி வண்டிகளின் மீதேறி கொடிபிடித்து நின்றனர். இணையத்திலிருந்து மக்களை எப்படி வேல் கோனிம் (Wael Ghonim) தெருவிற்கு அழைத்து வந்தார் என்பதைப் படிப்படியாக விவரிக்கும் “Revolution 2.0″ புத்தகத்தை அனைவரும் வாசிப்பது அவசியம். அதே போன்று சமூக வலைத்தளங்களை எவ்வாறு சமூக மாற்றங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை எளிமையான திட்டங்களுடன் விவரிக்கும் “The Dragonfly Effect” என்ற புத்தகத்தையும் வாசிப்பது பலன் தரும்.

செய்தித்தாள், திரைப்படம், தொலைக்காட்சி என்று அனைத்து ஊடங்களையும் அரசியல்வாதிகள் கைப்பற்றிவிட்டனர். ஆனால் சமூக வலைத்தளங்கள் திறந்த மேடைகள். இங்கு ஆண்டியும் அரசனும் ஒன்றுதான். நம் மக்களின் வளமான எதிர்காலத்திற்கான விதை உங்கள் விசைப்பலகையிலிருந்து கூட விதைக்கப்படலாம்.

In the college of business http://college-essay-help.org administration, many students elect to take management h, which is an honors version of management , required to graduate from cba

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமூக வலைத்தளங்கள்: புதிய அரசியல் களம்”

அதிகம் படித்தது