சமையல் குறிப்பு
ஆச்சாரிMar 1, 2013
இயற்கையோடு இணைந்து ஆரோக்கியமாய் வாழ்ந்தவர்கள் நாம். இடையில் இந்த ஆரோக்கியத்தை அந்நியக் கலாச்சார மோகத்தில் தொலைத்துவிட்டோம். ஆனால் மீண்டும் இப்பொழுது தொலைத்த ஆரோக்கியத்தைத் தேடிக் கொண்டு இருக்கிறோம். அந்தத் தேடுதலின் விளைவுதான் இந்தச் சிறுதானியங்களின் வரவு. இந்தச் சிறு தானியங்களின் பயன்பாடு மீண்டும் நம் உணவு முறையில் வருமானால் நாம் தொலைத்த ஆரோக்கியம் மீண்டும் நமக்கே என்ற நிலை வந்து விடும் என்பது நிச்சயம். அந்த வகையில் இந்த இதழில் “கேழ்வரகு” என்ற பெயருடைய சிறு தானியத்தில் செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பும், காரமும் பார்க்க இருக்கிறோம்.
முதலில் கலப்புக் காய்கறி (மிக்ஸ்டு வெஜிடபிள்) கொழுக்கட்டையின் செய்முறையைப் பார்ப்பாம் :
தேவையான பொருட்கள்
வறுத்த கேழ்வரகு மாவு = 1 கப்
பீன்ஸ், காரட், வெங்காயம், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், முள்ளங்கி ஆகிய காய்கள், பொடியாக நறுக்கியது = 1 கப்
இஞ்சி = 2 சிறியதுண்டு பொடியாக நறுக்கியது.
பச்சை மிளகாய் = 3 பொடியாக நறுக்கியது.
உப்பு = தேவைகேற்ப
எண்ணெய் = 6 தேக்கரண்டி.
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள காய்கள், இஞ்சி, பச்சடி மிளகாய் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கவேண்டும். காய்கள் சற்று வதங்கியதும் கேழ்வரகு மாவைக் காய்களுடன் போட்டு நன்றாகக் கலக்கவும். வதக்கிய பின் வாணலியை இறக்கி வைத்து உப்புச் சேர்க்கவேண்டும். இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவேண்டும். இந்த உருண்டையை இட்லித் தட்டில் வைத்து 12 நிமிடம் வேகவைக்க வேண்டும். நன்கு வெந்தபின் இந்தக் கலப்புக் காய்கறி (மிக்ஸ்டு வெஜிடபிள்) உருண்டைகளைத், தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
ராகி இனிப்பு உருண்டை:
வறுத்த ராகி மாவு = 1 கப்
பொடி செய்த வெல்லம் = 1 கப்
ஏலக்காய் தூள் = அரைத் தேக்கரண்டி
முந்திரி பாதாம் = தேவைக்கு
நெய் = 1 கப்
வாணலியில் நெய்யை விட்டு, லேசாகச் சூடு செய்யவேண்டும். நெய்யில் வெல்லத்தூள், ராகி மாவு, ஏலப்பொடி போட்டு நன்கு கலந்து கரண்டியால் பிரட்டியபின், கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளைப் பிடிக்கவேண்டும். பிடித்த உருண்டைகளின் மேல் பாதாம், முந்திரி வைத்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இந்த இரண்டு உணவுகளுமே மிகவும் சத்தானவை.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமையல் குறிப்பு”