மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சரியும் ரூபாய் – பொருளாதாரத்தை சூழும் கருமேகங்கள்

ஆச்சாரி

Dec 31, 2011

சிறிது காலத்திற்கு முன்னர் ரூபாய்க்கான புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்ட போது இருந்த இந்தியப்  பொருளாதாரத்தில்  தெரிந்த நம்பிக்கையும், இந்திய ரூபாய்  உலக அளவில் டாலர் போல ஒரு மதிக்கப்படும் பணமாக மாறும் என்னும் கனவும்  கடந்த சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து கொண்டுள்ளது. 2011  ஜூலை கடைசியில் கிட்டத்தட்ட ஒரு டாலருக்கு 44 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு சர சர வென சரிந்து டிசம்பர் இரண்டாம் வாரத்தில்  கிட்டத்தட்ட 53 .7 ஆக மாறி விட்டது. ரூபாயின் சரிவு ஒன்றும் புதிதல்ல. சுகந்திரத்தின் போது ஒரு டாலருக்கு ஒரு ரூபாய் என இருந்த ரூபாயின் மதிப்புத் தான் இப்போது கிட்டத்தட்ட ஐம்பது மடங்கு படிப்படியாகக்  குறைந்து இருக்கிறது. ஆனால் இந்த 64 ஆண்டுகளில்  ரூபாயின் மதிப்பு சில முறை தான் இப்படி திடீரெனக் குறைந்து இருக்கிறது.  ரூபாய் நான்கு மாதங்களில் கிட்டத்தட்ட 22  சதவீத வீழ்ச்சி  அடைந்து இருக்கிறது. அதுவும் கடைசி ஒரு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட எட்டு சதவீத வீழ்ச்சி!.   இதைத் தற்காலிகமான வீழ்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால் அதே நேரம் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் வலுவாக இருக்கின்றனவா என்பதை ரூபாயின் மதிப்பு இனி வரும் மாதங்களில் மாறுவதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

முதலில் ரூபாயின் வீழ்ச்சி எப்படி பொது மக்களை பாதிக்கிறது என்று பார்க்கலாம். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை வெகுவாக அதிகரிக்கப் போகிறது. இதனால் ஏற்கனவே வரலாறு காணாத பண வீக்கத்தால் விழி பிதுங்கி நிற்கும் பொதுமக்கள் இன்னும் விலை உயர்வை எதிர்பார்க்கலாம். முக்கியமாக இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணையை பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதால் இனி பெட்ரோலுக்கும் டீசலுக்கும் அதிகமான விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும்.  இந்தியா இப்போது உணவுப் பொருள்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடாக மாறி வருவதால் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் இறக்குமதியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். அதே நேரம் இந்த ரூபாய் மதிப்பு குறைவு- ஏற்றுமதி நிறுவனங்களுக்கு முக்கியமாக மென்பொருள் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி ரூபாய் மதிப்புக் குறைவின் காரணங்களை ஆராய்வோம். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு என்பது வெளிநாட்டு இந்தியர் இந்தியாவுக்கு அனுப்பும் டாலரின் அளவு , இந்திய ஏற்றுமதியின் அளவு. இந்தியாவில் செய்யப்படும் அந்நிய முதலீடு,இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த சந்தையின் நம்பிக்கை  போன்றவற்றின் மூலம் அதிகரிக்கிறது. அதே நேரம் இறக்குமதி அளவு, இந்தியாவில் இருந்து திருப்பி எடுக்கப்படும் அந்நிய முதலீடு ,இந்தியப் பொருளாதார வீழ்ச்சி குறித்த சந்தையின் நம்பிக்கை போன்றவற்றின் மூலம் குறைகிறது.

இந்தியா எப்போதும் ஒரு பொருளாதார சமநிலை நாடாக இருந்தது இல்லை. இந்தியாவின் இறக்குமதி எப்போதும் ஏற்றுமதியை விட அதிகமாகவே இருந்து வந்து இருக்கிறது. உதாரணமாக நடக்கும் 2010ஆம்  நிதி ஆண்டில்  ஆண்டில்  இந்தியாவின் இறக்குமதி 380 .9 பில்லியன் டாலர்கள். ஏற்றுமதி 250 .5 பில்லியன் டாலர்கள். இந்தியாவின் ஏற்றுமதிக்கும் , இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த இடைவெளி வெளிநாட்டு வாழ் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் மூலமாகவும், இந்தியாவில் முதலீடு செய்யப்படும் டாலரின் மூலமாகவும் சமன் செய்யப்படுகிறது. கடந்த சில வருடங்களாக இந்தப் பற்றாக்குறையை சரி செய்வதில் இந்தியாவுக்குப் பிரச்சினை இல்லை. இந்தியாவில் அந்நிய முதலீட்டின் மூலமாக இந்தப் பற்றாக்குறையை சரி செய்து அதற்கு மேலும்   300  பில்லியன் டாலரை தன்னுடைய பாதுகாப்பு வைப்பாக  சேமிக்க முடிந்தது.

ஆனால் இப்போது ஐரோப்பாவில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடியால்  அந்நிய முதலீடுகள் வெகுவாக குறைந்து விட்டன. இந்த வருடம் அக்டோபர் 31 வரை செய்யப்பட அந்நிய முதலீடு 0.39  பில்லியன் டாலர்கள் தான். இது கடந்த வருடத்தில் முதலீடு செய்யப்பட 29.3 பில்லியன்  டாலர்களை ஒப்பிடும்  போது மிகவும் குறைவாகும். எந்த ஒரு நாடும் ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்து தன்னுடைய நாணயத்தின் மதிப்பு சரியாமல் நீண்ட நாட்கள் சமாளிக்க முடியாது. இது ரூபாயின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். இந்திய அரசு ஏற்றுமதியின் வளர்ச்சி இறக்குமதியின் வளர்ச்சியை விட அதிகம் என்று சொன்னாலும் அதை நம்மால் நம்ப முடியவில்லை. இந்திய அரசின் நிதித்துறை ஏற்றுமதி வளர்ச்சி குறித்து அளிக்கும் புள்ளி விவரங்கள் ஏகப்பட்ட குளறுபடிகளுடன் உள்ளன. இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி வெளிநாட்டிலிருந்து கருப்புப் பணத்தை பொருளாதார சிறப்பு மண்டலங்கள் வழியாக இந்தியாவுக்கு திருப்பி கொண்டு வருவதற்கான ஒரு வழி என்று சென்னையைச் சேர்ந்த ஒரு பொருளாதார வல்லுநர் புள்ளி விவரங்களுடன் விளக்கி இருக்கிறார்.

பார்க்க ( http://www.rediff.com/business/slide-show/slide-show-1-re-fall-when-is-it-going-to-stop/20111223.htm )

ரூபாயின் வீழ்ச்சி ஆரம்பித்தவுடன் பெரும் நிறுவனங்கள் தங்களுடைய இருப்பிற்காக டாலரை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தன. இது டாலருக்குத்  தேவையை அதிகரித்து ரூபாயின் வீழ்ச்சியை துரிதப்படுத்தியது. இதைத் தடுக்க அரசு சில புதிய விதிமுறைகளை விதித்தாலும் இது வரை அவை வீழ்ச்சியைக்   கட்டுப்படுத்தவில்லை. இந்திய அரசு தனது கையிருப்பில் வைத்து இருந்த 300 பில்லியன் டாலர்களில் ஒரு சிறிய பகுதியை சந்தையில் விற்றுத்தான் ரூபாயின்  சரிவை தகடுக்க முடிந்தது. ஆனால் இதை அரசால் எவ்வளவு மாதங்கள் செய்ய முடியும் என்பது கேள்விக்குறியே!. இந்தியா கடந்த காலங்களில் வாங்கியுள்ள கடன்களைக் கட்ட  இந்த ஆண்டு கிட்டத்தட்ட 150  பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் இந்தியா ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற ஒரு அளவுக்கு மேல் இந்தியாவால் டாலரை விற்க முடியாது.

இனி வரும் காலங்களில் இந்தியாவிற்கு  தனது பற்றாக்குறையை சமாளிக்க அதிகளவு டாலர்கள் தேவைப்படும்.   இது வரை சுலபமாகக் கிடைத்து வந்த அந்நிய முதலீடுகள் இனி கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் இந்தியாவில் ஏற்கனவே முதலீடு செய்தவர்களுக்கு இந்திய பங்குச்சந்தையின் வீழ்ச்சி ( வளரும் நாடுகளிலேயே இந்திய பங்குச்சந்தை தான் அதிகளவு சரிந்தது ) ஒரு பக்க அடி என்றால், ரூபாயின் வீழ்ச்சி இன்னொரு பக்க அடி. அவர்கள் தங்களது முதலீட்டை திரும்ப எடுக்கும் போது பங்குச்சந்தையின் சரிவோடு, ரூபாயின் சரிவையும் சேர்த்து கிட்டத்தட்ட 36  சதவீத இழப்பை ஏற்க வேண்டி இருக்கும். இது இந்திய பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டை வெகுவாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இறக்குமதி குறைவதற்கான வழியே தெரியவில்லை. மல்லையாவின் சொகுசு கார்கள் முதல், சென்னையின் உணவு விடுதிகளில் மாறி வரும் மேலை நாட்டு உணவு வகைகள் வரை இந்தியாவின் செல்வந்தர்களும் ,உயர் மத்திய தர வகுப்பினரும்  கடந்த பத்தாண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட வாழ்க்கை முறைக்கு பழகி விட்டனர்.  அவர்கள் தங்களது வாழ்க்கை முறையை அவ்வளவு சீக்கிரம் திரும்ப மாற்றி விட முடியாது. ஆனால் இவர்களின் இந்த வாழ்க்கை முறைக்கு இந்தியாவின் மற்ற வகுப்பினர் பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்.

இந்திய  அரசு  இந்த டாலர் தேவையை சமாளிக்க எந்த விலையும் கொடுக்கத் தயாராகி விட்டது போல தெரிகிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி ,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வைப்பிற்கு அதிகளவு வட்டி, கடன்களுக்கு அடமானமாக இந்தியாவின் முக்கிய அரசு நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடமானம் வைப்பது என இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட வழி தேடுகிறது. ஆனால் உலக பொருளாதார வீழ்ச்சி , ஐரோப்பாவின் பிரச்சினை போன்றவற்றில்  சிக்கித் தவிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இனி இந்தியாவில் சில காலம் முதலீடு செய்யுமா என்பது கேள்விக்குறியே. அதே நேரம் ஏற்கனவே விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டு  கிட்டத்தட்ட விளிம்பிற்கு தள்ளப்பட்டு இருக்கும் இந்தியாவின் ஏழைகளும், மத்திய தர வர்க்கமும் இன்னும் கடினமான காலங்களை எதிகொள்ள வேண்டி இருக்கும். மத்திய அரசுக்கு  பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்களை திருத்தவும் இந்த வீழ்ச்சி ஒரு சாக்காக பயன்படப் போகிறது.மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரமும் ,இந்திய மக்களும் ஒரு சிக்கலான கட்டத்தை நோக்கி நகர்கின்றார்கள்.

* புள்ளிவிவரங்கள் மத்திய நிதி அமைச்சகத்தின் 2011  ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டன.
* 2011  அந்நிய முதலீட்டு புள்ளிவிபரம் அக்டோபர் மாதம் வரையிலான முதலீட்டைக் குறிக்கிறது.
* ஒரு பில்லியன் டாலர் என்பது ஒரு டாலருக்கு 50 ரூபாய் என கணக்கிட்டால்  5000  கோடி ரூபாய்.
* எதிர்பார்ப்பில் பற்றாக்குறை என்பது அரசின் வருவாய் எதிர்பார்ப்புக்கும், உண்மையான வருவாய்க்கும் உள்ள வித்தியாசம்.
* உண்மையான பற்றாக்குறை என்பது அரசின் வரவுக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாசம்.
* முதன்மைப் பற்றாக்குறை என்பது உண்மையான பற்றாக்குறையின் ஒரு பகுதி. அரசின் கடன்களுக்கான வட்டி கட்டுவது போன்றவற்றைக் கழித்த பின்னர் உள்ள பற்றாக்குறை.
மேலும் விவரங்களுக்கு பார்க்க. http://www.daytradingshares.com/quick_learning/fiscal_deficit_revenue_deficit.html* அரசின் பற்றாக்குறை புள்ளிவிபரம் அந்தந்த வருடங்களில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான பற்றாக்குறையைக் குறிக்கிறது.

New technologies make it possible for students in schools to use tools very much essaydragon.com/ like those used by professionals in workplaces see chapter

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “சரியும் ரூபாய் – பொருளாதாரத்தை சூழும் கருமேகங்கள்”
  1. kondrai vendhan says:

    கட்டுரையின் ஒவ்வொரு சொல்லும், போலி பொருளாதார பொய் சுவற்றின் கற்களை கட்டுடைத்து உண்மையை வெளிச்சமிடுகிறது. உப்பு கரிப்பதும் உண்மை உரைப்பதும் சுரணை உள்ள உயிரினங்களுக்கு.

  2. kasi visvanathan says:

    சிக்கலுக்குள் சிக்குண்டு கிடக்கும் நாடும், மக்களும் கடவுளால் காப்பாற்றப்படுவார்களாக.

அதிகம் படித்தது