சாதீயம் சரிவது எப்போது?
ஆச்சாரிAug 1, 2012
பாரதப் பண்பாடு, இந்தியத் தொன்மை பற்றி கழுத்து நரம்புகள் புடைக்கக் கத்துபவர்களைக் கண்டால் அவர்கள் மீது ரௌத்ரம் பழகலாமா என்று கெட்ட கோபம் முட்டி வருகிறது. சாதியத் திமிர் பிடித்த இந்திய மனங்களைக் காண மறுக்கின்ற காலக் குருடர்கள் இவர்கள்.
நாமக்கல் பகுதியில் நான் வாடகைக்குக் குடியிருக்கும் வீடு தெலுங்கு பேசும் தொட்டி நாயக்கர் குடுபத்துக்குச் சொந்தமானது. அருகிலேயே அருந்ததியர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்பும் உள்ளது. அங்கிருந்து ஒரு மாணவன். பெயர் சந்துரு. எனது மகன் தமிழ் எழிலின் வகுப்புத் தோழன். இருவருமே ஆறாம் வகுப்பு பயில்கின்றனர். ஒன்றாகப் பள்ளிக்குச் செல்லும் பொருட்டு சந்துரு என் மகனை அழைப்பதற்காக வருவான். வீட்டுக்கு வெளியே நிற்கும் அவனை அழைத்து வீட்டுக்குள் உட்கார வைப்பேன். பிறகு இருவரும் ஒன்றாகப் புறப்பாட்டுச் செல்வார்கள்.
சாதித் திமிர் கொண்ட வீட்டு உரிமையாளர் குடும்பத்தினரை இது மிகவும் உறுத்தியுள்ளது. நானும் எனது துணைவியாரும் சாதி, மத மறுப்புத் திருமணம் புரிந்துகொண்டவர்கள் என்பது தொட்டி நாயக்கர் குடும்பத்துக்கும் தெரியும். அதனால் நேரடியாக எங்களிடம் எதுவும் சொல்ல முடியாத அவர்கள், அருந்ததியச் சிறுவனை அழைத்து, ‘இங்கே எல்லாம் ‘நீங்கள்’ வரக்கூடாது. வந்தாலும் வீட்டுக்குள் போகக் கூடாது’ என்று கூறியுள்ளார்கள். பரம்பரை பரம்பரையாக சாதி ஒடுக்குதலை நேரடியாகப் பார்த்தும் அனுபவித்தும் வந்த அவ்வினச் சிறுவன் மவுனமாகத் தலையசைத் திருக்கிறான்.
இதனைக் கேட்டதும் சுள்ளென்று கோபம் என் தலைக்குள் ஏறியது. இருப்பினும் கட்டுப்படுத்திக் கொண்டு அவர்கள் முன்னிலையிலேயே அச்சிறுவனை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து சிற்றுண்டி அருந்தவைத்து சிறிது நேரம் அவனுடன் பேசிவிட்டு அனுப்பினேன். கள்ளத்தனம் புகுந்திராத மாணவ மனங்களில் இத்தகைய சாதிச் சண்டியர்களின் நச்சு அம்புகள் காலங்களால் அழிக்க முடியாத் தழும்புகளை உருவாக்கி விடுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், மற்ற சாதியைச் சேர்ந்தவர்களின் வீட்டுத் திருமணங்களுக்கு செல்ல மாட்டார். சாதாரணமாக மற்ற சாதியினரும் அந்த ஆதிதிராவிட நண்பரும் நன்றாகப் பேசிப் பழகுவார்கள். ஒன்றாக தேநீர் கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்துவார்கள். ஆனால் அதே நண்பர்களின் திருமணம் போன்ற வீட்டு விழாக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தாலும் அந்த ஆதிதிராவிட நண்பர் செல்ல மாட்டார். காரணம் சாதி வேறுபாடு கூறுபோடுமோ என்ற எண்ணம் அவர் மனதில் ஆழ வேரூன்றப்பட்டுள்ளது. காரணம் சாதி அடுக்கு சரிந்து மனிதர்கள் சமமாக ஆகாத நிலை நீடிப்பதுதான்.
அதேபோல அதே ஊரில் நிலம், வீடு போன்றவற்றை விற்பதானாலும் வாங்குவதானாலும் சில மேல் சாதியினர் தங்கள் சாதிக்குள்தான் அவற்றை வைத்துக் கொள்கிறார்கள். கீழ் சாதி எனப்படுவோருக்கு விற்கவோ வாங்கவோ நினைப்பதில்லை. இந்த சாதிப் பிரிவு என்னும் நச்சுக் களையைப் பிடுங்கி எறியப்பட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல கிராமங்களில் இன்னும் இரட்டைக் குவளை முறை முற்றிலும் ஒழியவில்லை. ஒரு கிராமத்தில் உயர்சாதியைச் சேர்ந்த ஒருவர் தேநீர் கடை நடத்தி வருகிறார். அக் கடையில் தங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் வந்தால் ஒரு குவளையிலும், மற்ற சாதியினருக்கு கண்ணாடிக் குவளையிலும் தேநீர் தருவார். கீழ் சாதியினர் தாங்கள் தேநீர் குடித்த குவளையை தாங்களே தண்ணீரில் சுத்தம் செய்து வைத்துவிட்டு செல்ல வேண்டும். உயர் சாதியினர் அப்படி செய்யவேண்டாம். வெட்கித் தலைக்குனிய வேண்டிய இந்த வேதனை இன்னும் தமிழகத்தில் நீள்கிறது. இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக துர்நாற்றம் வீசும் சாதிச் சகதியை ஒழிக்காமல் அதிலேயே இன்னும் உழன்று கொண்டிருப்போரை மனிதர் என்று சொல்லலாமா?
இந்த அளவிற்கு சாதிப் பெருமிதம் கொள்ளும் இவர்களிடம் என்ன ‘சரக்கு’ இருக்கிறது என்று கூர்ந்து கவனித்தால் இறுதியில் கேலியில் பொதிந்த நகைப்பு மட்டுமே எஞ்சி நிற்கிறது. முக அமைப்பு, உடல் அமைப்பு, நிறம், உணவு, உடை, மொழி எதிலும் வேறுபாடு இல்லை. பின் எதுதான் அவர்களை சாதி அகம்பாவம் பூண வைக்கிறது.
உலகத்தில் வேறெங்கும் காண முடியாத சாதிய அடுக்குகளாலான சமூக அமைப்பு இந்தியாவில்தான் இருக்கிறது. பார்ப்பனர்கள் மனுவில் இழைத்து மதத்தில் குழைத்துத் தந்த சாதி இழிவு என்ற சமூகக் கழிவை அப்படியே உட்கொண்டு அதனைத் தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் மீது வாந்தி எடுத்து தங்களது சீழ் பிடித்த மன அரிப்பைச் சொறிந்து விட்டு அற்ப சுகம் காண்கிறார்கள்.
இந்தியாவில் இதர தேசிய இனங்கள் எங்கேயோ கெடட்டும். நமது தமிழ்த் தேசிய இனம் இன்னமும் சாதிச் சேற்றுக்குள் உருண்டு புரண்டு கிடக்கும் எருமைக் கூட்டமாக உள்ளதே. முல்லைப் பெரியாறு உரிமை கோரி கேரள அரசுக்கு எதிராக, காவிரி உரிமை கோரி கர்நாடக ஆசுக்கு எதிராக, பாலாற்று உரிமை கோரி ஆந்திராவுக்கு எதிராகப் போராடி விடு அடுத்த அரைமணி நேரத்தில் சாதிச் சண்டையின் முடிச்சை அவிழ்க்கிறான் தமிழன். தீண்டாமை ஒரு பெருங்குற்றம், கொடுங்குற்றம் என் போதிக்கும் பாடப் புத்தகங்களைப் படித்துக் கிழித்துக் கடாசிக் கடந்து இல்வாழ்க்கையின் உள் நுழையும்போது ‘பெரும்பாவிகளாகவும்’ கொடுங்குற்றவாளிகளாகவும் மாறுவதில் எவ்விதக் குற்ற உணர்ச்சியும் கொள்வதில்லை இவர்கள்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் சாதி வெறி மறையவில்லை. இதற்கு எப்போதும் எடுத்துக்காட்டாக இருப்பது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாப்பாபட்டி, கீரிப்பட்டி கிராமங்கள். நெல்லை மாவட்டம் உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டாலும் இன்னும் பலர் மனதில் சாதி மாறுபாடு பார்க்கும் அழுக்குச் சிந்தனை அப்பியபடியேதான் இருக்கிறது.
தமிழ்ச் சமூகத்தின் இந்நிலையை மாறுவதற்கான நேரம் எப்போது கனியும்? யார் இதைச் செய்வார்கள்? இதற்கு ஓர் புதிய விடியல் தோன்ற வேண்டும், அந்த விடியல் ஆக்கச் செயலுக்கு வழிவகுக்கும். அந்த விடியல் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான- ஆணாதிக்கக் கருத்துகளுக்கு எதிரான பன்னாட்டு மூலதனச் சுரண்டலுக்கு எதிரான செயல்வடிவங்களை உள்ளடக்கியதாக அமையவேண்டும். அதற்கு சுரணை உள்ள தமிழர்கள் தயாராக வேண்டும்.
பின்னிணைப்பு: சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களை மாவட்டம் தோறும் தேடிப்பிடித்து அவர்களை ஒருங்கிணைத்து பாராட்டு விழா நடத்துவதுடன் அவர்களுக்கான மாநில அமைப்பு ஒன்றினைக் கட்டும் முயற்சியிலும் ஓயாமல் செயல்படுகிறார் ஒருவர். அவர் திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. குணசேகரன். 93615 45000 என்ற எண்ணில் அவரோடு கொஞ்சம் தொடர்பு கொள்ளுங்கள்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
உத்தப்புரம் மதுரை மாவட்டத்தில் உள்ளது அய்யா..!?!?!?!