மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சித்தமருத்துவம் – இயற்கையின் அற்புதம்

ஆச்சாரி

Oct 1, 2013

சித்த மருத்துவம், மிகவும் எளிமையான மருத்துவ முறை என்று எண்ணிவிடக்கூடாது. இது பல்வேறு யோக, ஞான, வைத்திய விடயங்களைத் தன்னகத்தே கொண்டு, உலகை ஆளும் பெருங்கடல் இயற்கையின் அற்புதம்.

‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த தமிழ்க்குடி மக்களால் கண்டறியப்பட்ட நமது சித்த மருத்துவத்திற்கு வேறு எந்த மருத்துவ முறையையும் இணையாகக் கருத முடியாது. சித்தர் பெருமக்களால் கண்டறியப்பட்ட சித்த மருத்துவமானது, சித்தர்களின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு,  மென்மேலும் மெருகூட்டப்பட்டு, வாழ்வியலின் ஓர் அங்கமாக உணரப்பட்டது.

சித்தர்கள் தங்களது யோக சித்தியால், தவ வலிமையால் பல்வேறு மூலிகைகளின் குணங்களை உணர்ந்து, மக்களைப் பாதிக்கும் நோய்களை விரட்டி, நூறாண்டு வாழ்வதற்கு ஏற்ப பல்வேறு மருந்துகளைக் கண்டறிந்தனர். அந்த வகையில், சித்த மருத்துவத்திற்குச் சேவை புரிந்தவர்கள், 1. திருமூலர், 2. இராமதேவர், 3. கும்பமேனி, 4.கொங்கணவர், 5.கமலமுனி, 6. சட்டமுனி, 7.கருவூரார், 8. சுந்தரானந்தர், 9. வான்மீகர், 10.நந்தீசர், 11. பாம்பாட்டி சித்தர், 12.போகர், 13. மச்சமுனி, 14.கோரக்கர், 15. பதஞ்சலி முனிவர், 16. தன்வந்திரி, 17.குதம்பைச்சித்தர், 18.இடைக்காடர் என பண்டைய பதினென் சித்தர்கள்தான். இவர்கள், தங்கள் தவ வலிமையால் உணரப்பட்ட தாது, தாவர, ஜீவ வர்க்கங்களின் தத்துவங்களை அப்படியே ஏட்டுச் சுவடிகளில் பதிவு செய்து பிற்கால சந்ததியினருக்குப் பயன்படும்படி பாடம் செய்துவைத்தனர்.

சித்தர்கள், மருந்துகள் கண்டறியும் விதமே மிகவும் அலாதியானது. சித்தர்களின் ஒருமித்த கருத்து என்னவென்றால், ‘அண்டத்தில் உள்ளதே பிண்டம்’ – ‘பிண்டத்தில் உள்ளதே அண்டம்’. அதாவது, இந்த உலகத்தில் எல்லாம் இருக்கின்றன என்பதே இதன் பொருள்.

ஒரு மூலிகையின் நோய் நீக்கும் தன்மையானது, பின்வரும் குறிகளைக் கொண்டே சித்தர்களால் உணரப்பட்டது. ஒரு பொருளின் வடிவம், நிறம், சுவை, தன்மை போன்ற நான்கு அம்சங்களைக் கொண்டு, இந்த மூலிகையானது இந்த நோயைத் தீர்க்கும் என்று சித்தர்களால் குறிப்புகள் வரையப்பட்டன.

முள்ளங்கி:

உதாரணத்துக்கு, முள்ளங்கியை எடுத்துக்கொள்வோம். முள்ளங்கி, இந்த உலகில் மனிதர்களுக்கு உணவாகப் பயன்படும் ஒரு பொருள்.

அதன் வடிவம் – நெட்டை

அதன் நிறம் – வெள்ளை

அதன் சுவை – கார்ப்பு (துவர்ப்பு)

மருத்துவத்தன்மை – நீர்ப்பெருக்கி

மேற்கண்ட முறைப்படி ஒரு பொருளைப் பகுத்தறிந்து, அதை மனித உடலோடு ஒப்பிட்டு, அதை மருந்தாக மாற்றி அமைத்தனர். அதாவது, மனிதனுடைய உடலில் முள்ளங்கியைப் போல் நீண்ட தோற்றம் உள்ள எலும்புகள் சார்ந்த குறைபாட்டு நோய்களுக்கு முள்ளங்கியை மருந்தாகக் கண்டறிந்தனர். முதுகுத்தண்டுவட வலி, மூட்டுகள் தேய்வு, கை, கால் எலும்புகளில் உண்டாகும் வலிகளுக்கு முள்ளங்கியை மருந்தாக்கும்போது, உண்மையிலேயே மேற்கண்ட குறைபாடுகள் விரைவாகவும், முழுமையாகவும் தீர்வதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

இன்றைய நவீன மருத்துவத்தில் கூட கண்டுகொள்ளப்பட்ட உண்மையான ஓர் விசயத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒருவர் அடிக்கடி பயணம் மேற்கொண்டால் அல்லது சிறுநீரை அடிக்கடி அடக்கினால் அல்லது குறைவான அளவில் தண்ணீர் குடித்துவந்தால் அல்லது கார உணவுகளை அடிக்கடியும் அதிகமாகவும் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் தொற்றுநோய் (Urinary Infection)  ஏற்பட்டு சிறுநீரில் யூரிக் அமிலத்தின் (Uric Acid) அளவு அதிகரித்துவிடும். அப்படி, யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது நமது எலும்புகளில் தொற்று (Infection) ஏற்பட்டு, கை, கால் மூட்டுகளில் கடுமையான வலியை உண்டாக்கும். இதற்கு, யூரிக் அமிலத்தின் அளவு குறைவான மருந்து எடுத்துக்கொண்டால் ஒழிய, பின்னாளில் சிறுநீரகம் செயல் இழப்பதைத் தடுக்க இயலாமல் போய்விடும்.

இப்போது, மறுபடியும் முள்ளங்கியைப் பற்றிய விசயத்திற்க்கு வருவோம். முள்ளங்கியைச் சாறாகவோ அல்லது பிற உணவுகளுடன் சேர்த்தோ சாப்பிடும்போது, நமது எலும்புகளில் உள்ள நோய்த்தொற்றின் அளவு குறைக்கப்படுகிறது. முள்ளங்கியின் நிறம் வெள்ளை. அதில் உள்ள திரவநிலை சுண்ணாம்புச்சத்தைப் பிரதிபலிப்பதால், புண்களை ஆற்றும் வல்லமை முள்ளங்கிக்கு வந்துவிடுகிறது. முள்ளங்கியின் சுவை – துவர்ப்பு. இந்தச் சுவையால், தளர்ந்த நரம்புகள் இறுகும். முக்கியமாக, உணர்வு நரம்புகள் வலுவடையும். ஆக மொத்தத்தில், கண், காது, மூக்கு, மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உணர்வு உறுப்புகளைப் பாதுகாக்கும் பாதுகாவலனாக முள்ளங்கி செயல்படுகிறது.

முள்ளங்கியின் தன்மை:

முள்ளங்கியின் தன்மை சிறுநீர் பெருக்குவதாக இருப்பதை அறிவோம். முள்ளங்கியின் நீர் பிரிக்கும் தன்மையால் சிறுநீரகம் தனது பாதிப்பில் இருந்து மீள்கிறது. புராஸ்டேட் கிளாண்ட் (Prostate Gland)  உறுதியாகிறது. உடலில் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டால் மூளை, கல்லீரல், இதயம் சார்ந்த நோய்கள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கிவிடும். ஆக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது பகல் நேர உணவில் அடிக்கடி முள்ளங்கியைச் சேர்த்துக்கொண்டு வர வேண்டும். இதில் இருந்து, முள்ளங்கியின் வடிவம், நிறம், சுவை, மருத்துவத் தன்மை அடிப்படையில், சித்தர்களின் மருத்து கண்டறிந்த விதம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

மூலிகைப் பொருளின் வடிவம் – மனித உடல் உறுப்பின் வடிவம்.

மூலிகைப் பொருளின் நிறம் – மனித உடலில் காணப்படும் திரவங்களின் நிறம்.

மூலிகைப் பொருளின் சுவை – மனித உடலில் சுவைகளுக்கு ஏற்ப இயங்கும் முறை.

மூலிகைப் பொருளின் மருத்துவத் தன்மை – மனித உடலில் உண்டாகும் பற்றாக்குறைக்கு மருந்து.

இப்படித்தான், நோய்களுக்கு ஏற்றபடி ஒரு மருந்தைச் சித்தர்கள் வகைப்படுத்தினர். சித்த மருத்துவமும் அதன் அடிப்படையில் தான் செயல்படுகிறது.

வெற்றிலை:

வெற்றிலையின் வடிவத்தை உற்றுப் பாருங்கள். அது, இதய வடிவத்தை ஒத்திருக்கும். சித்தர்களின் அனுபவ ஆய்வானது. இதய நோய்களுக்கு வெற்றிலையை மருந்தாக்கிப் பார்க்கிறது. அனுபவம் வெல்கிறது. இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானம் கூட ஒப்புக்கொண்ட உண்மை என்னவென்றால், இதய நோய்களை உண்டாக்கும் நோய்க் குறிகளுக்கு விசேச மருந்துப் பொருள்கள் வெற்றிலையில் உள்ளதாகச் சொல்கிறது.

அதே போல், அரச மர இலையும் இதய வடிவம் கொண்டது. இன்னும் பல்வேறு மூலிகைகள் இதய வடிவில் ஒத்திருப்பதை நாம் காண்கிறோம். அந்த, இதய வடிவ மூலிகைகளின் மருத்துவக் குணங்களை, சித்தர்கள் அருளிய ‘ பதார்த்த குண சிந்தாமணி’ என்ற நூலில் ஒப்பிட்டுப் பாருங்கள். கிட்டத்தட்ட வடிவங்கள் அடிப்படையில் நோய்களுக்கான மருந்துகள் சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

கீழாநெல்லி – வல்லாரை:

கீழாநெல்லி இலை, கிட்டத்தட்ட பித்தப்பையை ஒத்திருக்கும். கல்லீரல் கோளாறுகளைக் குணப்படுத்துவதில் கீழாநெல்லிக்கு நிகரான மருந்து இல்லை என்று நவீன மருத்துவமே சொல்கிறது. வல்லாரை இலையைப் பாருங்கள். நமது பெருமூளையின் வடிவம் போல் இருக்கும். வல்லாரை, அற்புதமான நினைவாற்றல் தரும் ரகசியத்தை இந்த உலகமே அறியும். நாவல்மர இலையைப் பாருங்கள். கிட்டத்தட்ட நமது கணையத்தைப் போல் இருக்கும். நாவல், சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்தாக இருக்கிறது. தூதுவளை இலையைப் பாருங்கள். நமது நுரையீரலைப் போல் காணப்படும். இதை மருந்தாக்கிச் சாப்பிடும்போது, நுரையீரல் சார்பு நோய்கள் நூறு சதவீதம் குணமாகும் என்பது முற்றிலும் உண்மை.

மரமும் – மனிதனும்:

ஒரு மரத்தை ஒரு மனிதனுக்கு ஒப்பிடலாம். அதாவது,

ஒரு மரத்தின் பட்டை    – மனிதனின் சருமம்

மரத்தின் தண்டுப் பகுதி  – மனிதனின் சதை

தண்டின் நடுப்பகுதி      – மனிதனின் எலும்பு

மரத்தின் வேர்           – மனிதனின் நரம்புகள்

மரத்தின் பூக்கள்         - நாளமில்லாச் சுரப்பிகள்

மரத்தின் பழம்         - மனித உடலின் போசாக்கு

மரத்தின் வித்து        – விந்து (ஆண்),  கருமுட்டை (பெண்)

ஆக, மனித உடலுக்கு எது குறைபாடோ, அதற்கு ஏற்ப ஒப்புடைய மரங்களில் இருந்து மருந்துகளைச் சித்தர்கள் கண்டறிந்தனர். இதுமட்டுமல்ல, முத்து, பவளம், வெள்ளி, மாணிக்கம், வைரம், தங்கம் போன்றவைகளும் முறைப்படி புடம்போட்டு மருந்தாக்கிப் பயன்படுத்தியுள்ளனர், சித்தர்கள்.

பற்பம் (பஸ்பம்)  – எலும்பின் வன்மைக்கும்

செந்தூரம்        - ரத்தம் மற்றும் நரம்பின் வன்மைக்கும்

சித்தர்களால் மருந்தாக அருளப்பட்டு இன்றும் புழக்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

சித்தர்கள், ஒரு நோய்க்கு மருத்துவம் பார்ப்பதற்கு, தங்களது மருத்துவ பாணியில் பல்வேறு வகைப்பாடுகள் செய்து வைத்திருந்தனர். முதலில் மனித உடல் தத்துவங்களான 96 முறைகளையும் கண்டு, நோயாளியின் நாடியைப் பரிசோதித்து நோய்வரும் பாங்கினை நுணுக்கமாக அறிந்துகொண்டனர்.

வாத – பித்த – கப தோசங்களை வகையாக அறிந்து, நோய்க்கு ஏற்ற மருந்துகளைப் பரிந்துரைத்து, நோய் நீக்கி வந்தனர். நோய்க்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, பத்திய முறைகள் வகுக்கப்பட்டு, நோய்கள் நிரந்தரமாகவும், முழுமையாகவும் குணமாக்கப்பட்டன.

அத்தகைய ஆற்றல்மிக்க சித்த மருத்துவர்கள் போற்றி வளர்த்த சித்தமருத்துவம், மக்களிடையே மிகப் பிரபலமாக இருந்த சித்தமருத்துவம், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு நவீன அலோபதி மருத்துவத்தின் ஆளுமையால், மெல்ல தனது முக்கியத்துவத்தை இழந்தது. சமீபத்திய ஆய்வுகள் நவீன மருத்துவத்தின் குறைபாடுகளை, பக்கவிளைவுகளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறது. இதனால், ஒவ்வொரு மனிதனும் தன் அளவில் யோசித்து மீண்டும் இயற்கை மற்றும் பாரம்பரிய விசயங்களைத் தேடி ஓட ஆரம்பித்துவிட்டான். இதைப் புரிந்துகொண்ட மத்திய, மாநில அரசகளும் இந்திய மருத்துவ முறைகளுக்குத் தனது ஆதரவைப் பெருக்கி, மேம்பட்ட ஆய்வுக்கு உத்தரவிட்டு வருகிறது. தற்போது சித்த மருத்துவம், தன் தனித்தன்மையால் மேலும், மேலும் மெருகேறிக்கொண்டிருக்கிறது.

சித்த மருத்துவத்தின் ஒரு பகுதிதான் ‘சிட்கா மருத்துவம்’ என்பது. நமது முன்னோர்கள், வழிவழியாக தங்களது குடும்ப அமைப்பில் சில மருந்துகளைப் பயன்படுத்தி வந்தனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று சொல்வதைப்போல், ஒன்றிரண்டு மூலிகைகளை ஒன்றாக்கி, அவற்றை அரைத்தோ, கசாயம் வைத்தோ, குடிநீர் செய்தோ சாப்பிட்டு, நோய் வராமல், வந்தாலும் அது முற்றாமல் தங்களைச் சிறு மருந்துகளால் காத்துக்கொண்டனர்.

நுணா மரம்: 

விஞ்ஞானம் வளராத அன்றைய காலத்தில் கூட வேப்பிலை, மஞ்சள், படிகாரம், நுணாப்பட்டை போன்றவற்றைக் கொதிக்க வைத்து கசாயம் செய்து, வீட்டைச் சுற்றித் தெளித்து, தங்கள் வீட்டுக்குள் காலரா, டைபாய்டு, விசக் காய்ச்சல் வராமல் பார்த்துக்கொண்டார்கள். இந்த மருத்துவ அறிவு அவர்களுக்கு எங்கிருந்து வந்தது?

தலைமுறை தலைமுறையாக, நமது பாரம்பரிய விசயங்களிலேயே மருந்து அறிவெனும் ஊற்று பெருகிக் கிடக்கிறது. அன்று, நுணாப் பட்டையால் வைரசு நோய்களை விரட்டி அடித்தார்கள் என்று நான் சொல்வதை நம்ப மறுப்பவர்கள், இன்று நுணா பற்றிய மருத்துவ ஆய்வுகளைத் திரட்டிப் பார்த்தால், நிச்சயம் திகைப்பார்கள்.

ஏனெனில், நுணா- புற்றுநோயைக்கூட குணப்படுத்தும் என்று இன்றைய மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இன்று, கடைகளில் விற்கப்படும் ‘நோனி’ என்ற நுணா சர்பத்- பல்லாயிரக்கணக்கானவர்களால் விரும்பிப் பருகப்படுகிறது. அதாவது, நுணாப்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் இது, காலரா, டைபாய்டு, காமாலை, தைராய்டு, உடல் பருமன், இதய நோய்கள், புற்றுநோய்கள் போன்றவற்றைக் குணமாக்குவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

ஆதாரமே இல்லாமல் வெறும் வழக்கு முறையில் உபயோகப் படுத்தப்படும் மருந்துகள்கூட, எண்ணற்ற மருத்துவப் பலன்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தால், ஆய்வு நோக்கில் வானுயர வளர்ந்தாலும் மூலிகைகள் பற்றிய ஆய்வை உடனடியாக முடிக்க முடிவதில்லை. உதாரணமாக, கீழாநெல்லியை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் வேதிப்பொருள்களைப் பகுத்தாய்வு செய்து, அது குணப்படுத்தும் நோய்களைப் பட்டியலிட குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகும். சித்தர்களால் அருளைப்பெற்ற மூலிலைகள், ஆயிரக்கணக்கில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான மூலிகைகளையும் இன்றைய விஞ்ஞானம் ஆய்வுக்கு உட்படுத்தினால், முறையான ஆய்வு முடிவுகளைப் பெற பல நூறு ஆண்டுகளாவது ஆகிவிடும்.

ஆனால், பண்டைய சித்தர்கள் எப்படிச் சாதித்தார்கள்? அதுதான் அவர்களது தவ வலிமை. என்னதான் விஞ்ஞானம் விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்தாலும், சித்தர்களின் ‘அறிவை’ கிட்டவும் நெருங்க இயலாது.

சித்தர்கள் அருளிய குறிப்புகள் அனைத்தும் இன்றும், இதற்கு முன்பும் உபயோகப்படுத்தப்பட்டு வரும் குறிப்புகளாகும். இதனால், இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள் என்பதே உண்மை. இன்றும் மலைகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆதிவாசிகள். இவர்கள், இன்றும் பிரசவத்துக்குக்கூட மருத்துவமனைப் பக்கம் ஒதுங்கியது, ஒதுங்குவது இல்லை. ஆனாலும், அவர்களும் பூரண உடல் நலத்துடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றனர். நம் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பச்சைத் தண்ணீர் ஒத்துக்கொள்வதில்லை. ஆனால், அவர்களுடைய பிள்ளைகள் கடுங்குளிரிலும், மழையிலும் காடுகளில் ஆரோக்கியமான உடல் நலத்துடன் உலவுகிறார்கள்!

இது எப்படிச் சாத்தியமாகிறது…? அவர்களின் மூலிகை சார்ந்த உணவுகளும், மருத்துகளுமே அவர்களைப் பேணிப் பாதுகாக்கின்றன. அவர்கள் சாப்பிட்டுவரும் மருந்துகள், எந்த ஆய்வுச் சாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன…?

இவை, சித்தர்களால் ஒரு காலத்தில் அருளப்பட்ட மருந்துகள். இவை வழிவழியாக வலம் வரும் எளிய வகை மருத்துவக் குறிப்புகள். முனித உடலில் உண்டாகும் எந்த நோயாக இருந்தாலும், முதலில் அது ஓர் எளிய நோயாகவே வெளிப்பட்டு, பிறகு பல்கிப் பெருகி பெரு நோயாக உருவெடுக்கும்.

சித்தமருந்துகளும் அதன் உபயோகமும்:

குறிப்பிட்ட சில மருந்துகளை ‘அரைத்தல்’ என்றால், இலை, பட்டை, வேர் ஆகியவற்றை நீர் அல்லது பால் அல்லது தேன் விட்டு மைய அரைத்துக்கொள்வதாகும்.

மருந்து உண்ணும் அளவுகள், மருந்தையும் நோயையும் பொறுத்து மாறுபடும் இயல்புடையவை. பெரும்பாலும் மருந்தின் அளவுகள்,

1.     மிளகு அளவு

2.     பட்டாணி அளவு

3.     சுண்டைக்காய் அளவு

4.     நெல்லிக்காய் அளவு

5.     எலுமிச்சை அளவு – என்ற வீதத்தில் இருக்கும்.

மருந்துகளை, சொல்லப்பட்ட அளவுக்கு, குறைந்தபட்சம் மூன்று நாள்களில் இருந்து 21 நாட்கள்வரை சாப்பிட்டுவந்தால் மட்டுமே, உறுதியான, நிச்சயமான பலனைப் பெற இயலும்.

குறிப்பிட்ட மருந்துப் பொருள்களை, உலர்த்தி தூள், பொடி செய்து கொள்வது என்பது, இலை, பட்டை, வேர், ஓடு, பூ, தண்டு ஆகியவற்றை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி சலித்துக்கொள்வதைக் குறிக்கிறது. பெரும்பாலும், மருந்துத்தூள் அல்லது பொடியை, 2 முதல் 5 கிராம் வரை, அதாவது அரை தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டி வரை சாப்பிடுவதைக் குறிப்பதாகும். இந்த வகை மருந்துகளை, குறைந்தபட்சம் மூன்று வேளை முதல் 21 நாள்கள் வரை, தேவைப்பட்டால் 48 நாட்கள் (ஒரு மண்டலம்), 96 நாட்கள் (இரண்டு மண்டலம்) அல்லது தொடர்ந்து சாப்பிடலாம்.

குறிப்பிட்ட மருந்துகளை கசாயம் வைப்பது என்பது இலை, பட்டை, வேர், விழுது, வித்து மற்றும் வேறு சில மூலிகைகளைக் குறிப்பிட்ட அளவு தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து, பாதியாகச் சுண்டச் செய்வது அல்லது நான்கில் ஒரு பங்காகச் சுண்டச் செய்வதைக் குறிப்பதாகும்.

கசாயத்தை, நோயின் தீவிரம் மற்றும் நோயாளிகளின் வயதிற்கு ஏற்ப அளந்து கொடுக்க வேண்டும். உதாரணமாக,

1.     குழந்தைகளுக்கு (மூன்று வயதுக்குள்) – 5 மில்லி முதல் 10 மில்லி வரை.

2.     மூன்று வயது முதல் பத்து வயதுக்கு உள்பட்டவர்களுக்கு – 10 மில்லி முதல் 30 மில்லி வரை.

3.     பெரியவர்களுக்கு – 30 முதல் 60 மில்லி வரை தரலாம்.

பெரும்பாலும், கசாய முறை மருந்துகள், நான்கு மணி நேரத்திற்கு ஒரு மறை தரப்பட வேண்டும். நோயின் தன்மை அறிந்து, மூன்று வேளை முதல் எவ்வளவு நாளுக்கு வேண்டுமானாலும் கொடுத்து வரலாம்.

குறிப்பிட்ட மருந்துகளைக் குடிநீர் செய்வது என்பது, இலை, பட்டை, வேர், விழுது ஆகியவற்றைக் காய்ச்சி குடிநீரைப் போல் வடித்து வைத்துக்கொள்வதாகும். இதைக் குடிக்கும் தண்ணீருக்கு மாற்றாக இரண்டு வேளை குடித்தால் கூட விசேச பலனைத் தரும். நோயின் தன்மைக்கு ஏற்ப தொடர்ந்தும் குடிநீரைப் பயன்படுத்தி வரலாம்.

வெளி மருந்துகளாக அரைக்கப்படும்போது, தேவையான அளவில் அவ்வப்போது அரைத்துப் பயன்படுத்துங்கள். இயற்கைக்கு மாறாக குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து மறுநாள் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அதேபோல், மூலிகைகளை ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு பரிசோதித்துப் பயன்படுத்துங்கள். உங்கள் அருகில் உள்ள சித்தமருத்துவரையும் அணுகி, மருத்துவ விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்து, குறிப்புகளை மருந்துகளாகப் பயன்படுத்துங்கள்.

ஒன்று, இரண்டு முறை மருந்துகளைப் பயன்படுத்திவிட்டு, மருந்துகள் சரியில்லை என்று ஒதுக்கிவிடாதீர்கள். தொடர்ந்து முயற்சியுங்கள். ‘நோயில்லா ஆரோக்கியமான நூறாண்டு வாழ்க்கை’ – சித்தர்களின் ஆசியுடன் உங்களுக்கும் சாத்தியமாகும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,

15 வது செக்டார், கே.கே.நகர்,

சென்னை – 78

அலை பேசி: 98840 76667

The un is an international organization that attempts to encourage peace in the world www.justdomyhomework.com

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “சித்தமருத்துவம் – இயற்கையின் அற்புதம்”
  1. k.k.s.saravanakumar says:

    மிகவும் அருமையான கட்டுரை.

  2. sivakumar says:

    காது வலி மருந்து, காது கேட்காதுக்கு மருந்து வேன்டி

  3. சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.

  4. கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை says:

    நல்ல பதிவு மிக்க நன்றி தொடரவும்….
    ……………………………..

    கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை
    http://www.tamilkadal.com/?p=2213

    அக்பர் நடத்தும் அனைத்து சோதனைகளிலும் பீர்பால் வெற்றி பெற்று வந்ததை பொறாமைக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அக்பரும் பீர்பாலை ஏதாவது ஒரு வகையில் திணற வைத்து அவருக்கு தோல்வியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும் காய்ச்சலால் அவதிப்படுவது போலவும் நடித்தார். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்.

அதிகம் படித்தது