சிந்தனையும் சிரிப்பும்
ஆச்சாரிMay 1, 2013
1.செய்தி: சென்னையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் தொழிலாளர்களில் 80 சதவிகிதத்தினர் வட மாநிலத்தவர்களே. நம் ஆட்களே வேண்டாம். காரணம் கட்டுமானத் துறையின் இன்றைய ராட்சச வேகத்திற்கு வெளி மாநிலத்தவர்களே ஈடுகொடுக்கின்றனர். -முன்னணி கட்டுமான நிறவனமான “எல் அண்டு டி” யின் பொது மேலாளர் எஸ்.நடராஜன்.
சிந்தனை: நம் தமிழர்கள் மற்ற மாநிலங்களில் உழைக்கின்ற கடின உழைப்பு, உங்களுக்குத் தெரியல போல. உள்ளூர் மாடு வெல போகாதுணு சும்மாவா பழமொழி சொன்னாங்க.
2. செய்தி: இந்தியாவின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவல். இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் பேச்சு தோல்வி – படைகளைத் திரும்பப் பெற சீனா மறுப்பு.
சிந்தனை: இலங்கையத்தான் இந்தியா நட்பு நாடுன்னு சொல்லிருச்சு. நாமளும் இந்தியாவுக்குள்ள வந்து நட்பு பாராட்டலாம்னு வந்திருப்பாங்க போல.
3.செய்தி: தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் ரூ. 2.252 கோடி ஊழல் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் அம்பலம்.
சிந்தனை: உங்க ஆட்சியில எந்த துறையிலதான் ஊழல் இல்லாம இருந்துச்சு? நடத்துங்க எத்தனை நாளைக்கு நாங்களும் பாக்குறோம்.
4. செய்தி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல். பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற பாரதிய ஜனதா கோhpக்கையை சோனியா நிராகரித்தார்.
சிந்தனை: இருங்கப்பா ஏன் அவசரப்படுறீங்க. அடுத்த தேர்தல் செலவுக்கு பணம் சம்பாதிக்க வேண்டாமா? அடுத்தது நீங்க பண்ணுவீங்கல்ல. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.
5. செய்தி: தரமற்ற சாதணங்களால் பாதுகாப்புக்கு ஆபத்து. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தடை விதிக்க வேண்டும். -ஜி.சுந்தர்ராஜன் சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு.
சிந்தனை: மக்களப் பத்தி கவலைப்பட்டா, ஏனய்யா இப்படி பண்ணப்போறீங்க. சரி சரி, நாலு காசு நீங்க சம்பாதிக்க கூடங்குளம் அணுஉலை உங்களுக்கு தேவைப்படுது. அணுஉலை மேல காட்டுற அக்கறைய கொஞ்சம் மக்கள் மேலயும் வையுங்க ஆபீசர்களா.
6. செய்தி: இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவு வைத்திருக்கிறோம். அந்த நல்லுறவை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுவோம். – ராஜபக்சே
சிந்தனை: மீதம் இருக்கிற தமிழரைக் கொல்லறதுக்காகத்தான் இப்படி எல்லாம் பேசுறார் போல. சிந்திய தமிழ் ரத்தத்துக்கெல்லாம் பதில் சொல்ற நாள் ரொம்ப தூரமில்லை பக்சே.
7. செய்தி: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு இலங்கைக்கு இந்தியா அறிவுறுத்தல். -பாராளுமன்றத்தில் மந்திரி ஏ.கே. அந்தோணி தகவல்.
சிந்தனை: என்னிக்காவது ஒரு சிங்கள மீனவன, இந்திய கடற்படை சுட்டுக் கொன்னுருக்கா, அவங்க படகுகள சேதப்படுத்தி இருக்கா? நீங்க சொன்னதுமே அந்தப் பசங்க கேட்டு நடந்திருவாங்களா? ஏனய்யா வெறும் வாய மெல்லுறீங்க? உருப்படியா ஏதாவது செய்யுங்க.
8. செய்தி: ஓட்டுக்கு பணம் வாங்கும் குற்றத்தை கடுமையாக்க தேர்தல் கமிஷன் திட்டம். 18 மாநில அரசுகள் ஆதரவு.
சிந்தனை: சும்மா வாயிருக்குன்னு எதையாவது பேசக்கூடாது ஆபிசர். நீங்க சொல்றபடி தான் இங்க நடக்குதா? தலைக்கு மேல வெள்ளம் போய்டுச்சே…
9. செய்தி: விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லாக் கடன். மாணவர்களுக்கு இலவச லேப்டாப். ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி. கர்நாடக தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.
சிந்தனை: தேர்தல்னாலே, அப்போதான் மக்கள் மேல புதுசா பாசம் வரும். இது புதுசா என்ன? அப்புறம் ஈயடிச்சான் காப்பி எல்லாம் பண்ணக்கூடாது. ஏதையும் சுயமா யோசிச்சு பண்ணனும்.
10. செய்தி: பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். – மன்மோகன்சிங் வற்புறுத்தல்.
சிந்தனை: சொல்லிட்டீங்கள்ல. இதச் செஞ்சுட்டுத்தான் உங்க ஆளுங்க மத்த வேல பாப்பாங்க.
11.செய்தி: சென்னை மெரினா கடற்கரையில் செல்போன் மற்றம் பணம் பறிக்கும் கும்பல். – கண்டுகொள்ளாத சென்னை காவல்துறை.
சிந்தனை: மெரினா ஒரு காலத்தில் கவிஞர்களின் கூடாரம், ஒரு காலத்தில் காதலர்கள் கூடாரம், இன்று கயவர்களின் கூடாரம்.
12.செய்தி: நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி:- பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணச் சட்டம் நிறைவேற்றம். – ஜுன் மாதம் முதல் திருமணம் தொடக்கம்.
சிந்தனை: இந்த உலகமே இந்த விசயத்துல உங்கள பாத்துதான் கத்துக்கணும். நாட்டுக்கொரு கொள்கை, திட்டம், செயல்பாடு. ஆனா ஒண்ணு நம்ம பண்பாடு கலாச்சாரத்த யாரும் மறந்திடாதீங்க.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிந்தனையும் சிரிப்பும்”