மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறகு விரிப்போம் ஆகஸ்டு 2011

ஆச்சாரி

Aug 2, 2011

தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், தற்போது நிகழ்ந்து வரும் விடயங்களையும் கவனிக்கும் போது பெருத்த ஒரு சந்தேகம் மேலிடுகிறது. என்னவெனில் அரசு என்பது தம் குடிமக்களை காப்பதற்காக செயல்படுகிறதா அல்லது சுயநலம் கொண்ட சமூக எதிரிகளை காப்பதற்காகவும், அவர்தம் வசதிக்கும் செயல்படுகிறதா என்று தெரியவில்லை. தனி நபர் பாதுகாப்பு, அந்த நபர் செய்யும் தொழில் பாதுகாப்பு, தனிப்பட்ட சொத்து பாதுகாப்பு போன்றவை அறவே உறுதி செய்யப்படுவதில்லை அனைத்து சாதனங்களும் கொடுமனம் படைத்த பாவிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவே தோன்றுகிறது. பொது மக்களின் பணத்தை உறிஞ்சும் பேராசை படைத்த வியாபாரிகள், அவர்களுக்கு துணை போகும், லஞ்ச ஊழலில் திளைக்கும் அரசு அதிகாரிகள், அதிகாரம் கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்த அரசியல்வாதிகள், கொலை செய்யும் குண்டர்கள், இவர்களால் மக்கள் பாதுகாப்பு சாதனமே செயலற்று இருக்கிறது. காவல் நிலையம், நீதி மன்றம் போன்றவை சமூக எதிரிகளுக்கு பணி செய்யும் கூடாரங்களாகவே மாறிவிட்டன.

தேர்ந்தெடுக்கப்படும் எந்த அரசியல் கட்சியும், மக்களைக் காட்டிலும் குண்டர்களையே நம்புகின்றனர். இருக்கும் சட்டங்களை எப்படி வளைப்பது, புதிய கொடுஞ்சட்டங்களை எப்படி கொண்டு வருவது என்ற மனநிலையில் இருந்தால் எங்ஙனம் உருப்படுவது. தாம் கடும் பாடுபட்ட பணத்தை மக்கள் வரியாக கட்டுவது எதற்காக? தாங்கள் தேர்ந்தெடுத்த அரசு தமக்கு அரணாக இருக்கும் என்பதற்காக தானே, அந்த அரசே எதிரிகளுடன் இணைந்து கொண்டு விரோதியாக நடந்தால் என்ன செய்வது?
மக்களின் நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்து மொத்தமாக ஒரு நாள் குலையும் போது இந்த அரசு அமைப்பே செயல் இழந்து போகும். மறுபடியும் அதனை சீர் செய்ய ஏராளமான நேரமும் உழைப்பும் செலவாகும். மனிதன், அரசு தனக்கு பாதுகாப்பு வழங்க வில்லை என்ற போது அதனை வேறு வழியில் தேடுவான். சாதி, மதம் போன்ற குறுகிய எல்லைகளை அழிக்க இது நாள் வரை பாடுபட்டு வந்துள்ளோம். தனது பாதுகாப்புக்காக மறுபடியும் இத்தகைய எல்லைகளில் சென்று அடைக்கலம் கொள்ளும் நிலை தான் ஏற்படும். நல்லதொரு வீணை செய்து கொண்டிருக்கும் போதே, பாதியிலேயே அதனை புழுதியில் எறியும் செயல் தான் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறகு விரிப்போம் ஆகஸ்டு 2011”

அதிகம் படித்தது