சிறகு விரிப்போம் – நவம்பர் 2011
ஆச்சாரிNov 1, 2011
தமிழகத்தில் தற்போது உடல் உழைப்பு செய்யும் தொழிலாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஒன்று நிலவி வருகிறது. விவசாயம், கட்டிட வேலை, ஆலைகள் போன்றவற்றில் கடும் உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளை செய்ய ஆட்கள் கிடைப்பது அருகி வருகிறது. இதனால் இவர்களின் கூலி,சம்பளம் போன்றவை கடும் ஏற்றத்தை சந்தித்து உள்ளது. உடல் உழைப்பை வாங்கும் வேளைகளில் ஈடுபட யாருமே விரும்புவதில்லை, இப்போது அந்த வேலைகளை செய்து கொண்டு இருக்கும் மனிதர்களும் தமது குழந்தைகள் உடலால் உழைப்பதை விரும்பவில்லை. ஏற்கனவே மூளை உழைப்பு செய்யும் மனிதர்களின் குழந்தைகள் உடல் உழைப்பு செய்வதை அறவே வெறுக்கின்றனர். அனைவரும் கல்வி கற்று வெள்ளைச் சட்டை வேலைகளில் அமர்ந்து கைகளில் அழுக்குப் படாமல் பணி செய்யவே விரும்புகின்றனர். அது போக சமுதாயத்தின் நன்மதிப்பு உடல் உழைப்பு செய்வோருக்கு கிட்டுவதில்லை. இது மிக வெட்கக்கேடான நிலைமை.
ஆனால் உண்மையான உற்பத்தி என்பது உடல் உழைப்பு செய்யும் மனிதர்களாலேயே ஏற்படுகிறது. உணவு,உடை உறைவிடம் என்ற மூன்றையும் உடல் உழைப்பாலேயே உருவாக்க முடியும். என்ன தான் எந்திரங்களை பயன்படுத்தினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் மனிதர்களின் உழைப்பு தேவைப்படும்.அந்த மனிதர்களுக்கு தற்போது பஞ்சம் வந்துவிட்டது. கல்வி கற்று பட்டம் பெற்ற யாரும் இந்த வேலைகளை விரும்புவதில்லை, ஆனால் கல்வி கற்ற கூட்டம் அளவுக்கு அதிகமாக பெருகி விட்டதால் பட்டதாரிகளின் சம்பளம் உழைப்பாளிகளைக் காட்டிலும் குறைந்து விட்டதைக் காண முடிகிறது. உடல் உழைப்பால் நாம் பெறும் சேவைகளும் பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்து வருகின்றன.
உடல் உழைப்பு குறைபாட்டினால் பல்வேறு உடல் நலக்கேடுகளும் பெருகிவிட்டன. இதனால் ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. பணம் கரை புரண்டு ஓடினாலும் அதன் அடிப்படையான உற்பத்தி குறைந்து அல்லது நசிந்து போய் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் கடும் இடர்களை நமது சமுதாயம் சந்திப்பது உறுதி. வாரத்தில் ஒரு நாளேனும் அனைவரும் ஏதேனும் ஒரு உடல் உழைப்பை செய்து சமுதாயத்திற்கு பங்களித்தால் ஓரளவு நிலை சீர் ஆகும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
இது இன்று அவசியமான சிந்தனைக்குரிய தலையங்கம். உடல் உழைப்பின் அவசியமும் அதன் பங்களிப்பின் இன்றியமையா தேவையும் மிகச்சரியாக வரிசையிட்டு எழுதியமைக்கு நன்றி. மேலும் “சமுதாயத்தின் நன்மதிப்பு உடல் உழைப்பு செய்வோருக்கு கிட்டுவதில்லை. இது மிக வெட்கக்கேடான நிலைமை” என்று உடல் உழைப்பிற்கு சமூகம் மறுக்கும் மரியாதை என்பதனை நினைவிற்கொண்டு வாசகர்களுக்கு வழஙியமைக்கு நன்றி. உழவினார் கை மடங்கின்..? என்று வள்ளுவப்பெருந்தகையின் எச்சரிக்கை இன்று பொருள் புரிய தொடன்கி உள்ளது. நன்றி.