மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறகை வருடிய உலகத் திரைப்படங்கள் – நோ கண்ட்ரி பார் ஓல்டு மென்

ஆச்சாரி

Oct 1, 2012

2007 ஆம் ஆண்டு வெளியான இந்த அமெரிக்க  திரைப்படத்தின் பெயர் “நோ கண்ட்ரி பார் ஓல்டு மென் “.
“கார்மேக் மெக்கார்த்தி” என்ற அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய நாவலை மையமாககொண்டு, இப்படத்தை இயக்கியவர்கள் ஜோயல் மற்றும் ஈத்தன் கோயன் சகோதரர்கள்.இவர்களை பற்றி ஹாலிவுட்டில் ஒரு சுவராசியமான சங்கதி சொல்லப் படுவது உண்டு. இவர்கள் இருவரிடமும்  அவர்கள்  இயக்கும் திரைப்படத்தின் திரைக்கதையையோ அல்லது காட்சி அமைப்பையோ அல்லது   நடிகர்களின் நடிப்பு எந்தவகையில் அமையவேண்டும் என்று,  எதை கேட்டாலும் ஒரே மாதிரியான பதில் தான் வருமாம். இந்த சகோதரர்களிடையே  தங்களது திரைப்படத்தை பொறுத்தவரையில் மாறுபட்டகருத்தே இல்லை என்று சொல்கிறார்கள். இவர்களின் திரைப்படங்கள் எப்போதெல்லாம் வெளியாகிறதோ , அப்போதெல்லாம் அந்த ஆண்டின் அகாடமி (ஆஸ்கர் ) விருது  அவர்களுக்கு நிச்சயம் என்று அகாடமி வரலாறு சொல்கிறது.

இத்திரைப்படத்திற்கு  சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர்  மற்றும் சிறந்த திரைக்கதைக்கான அகாடமி விருதுகள் கிடைத்தன. “பவ்டா”எனப்படும்  பிரிட்டிஷ் அகாடமி விருதுகள் மூன்றும் , இரண்டு கோல்டன்  குளோப்   விருதுகளும் கிடைத்தன.

1980 களில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில்  இப்படத்தின் கதைக்களம் நிகழ்கிறது. மலைகளும், வனாந்தர சமவெளிகளும் நிறைந்த பகுதி இது. மெக்ஸிகோவில் இருந்து போதை பொருள்கள் சர்வ சாதாரணமாக அமெரிக்காவுக்குள் வந்து கொண்டிருந்த காலக்கட்டம்.

வியட்நாம் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரன் மோஸ், ஆளில்லாத வனாந்திர சமவெளியில் வேட்டையாட செல்லும்போது, கடுமையான துப்பாக்கி சண்டையினால் கொல்லப்பட்டு கிடக்கும்  பலரது உடல்களை  காண்கிறான். அதில் இறந்து போன ஒருவன் வைத்திருக்கும் பெட்டியில் இரண்டு மில்லியன் டாலர்கள் இருப்பதை கண்டு, அதை எடுத்துக்கொண்டு தனது வசிப்பிடத்திற்கு வருகிறான்.அன்றிரவு தூக்கம் வராமல், அக்கொலைக்களத்தில் படுகாயம் அடைந்து சாகும் தருவாயில் தன்னிடம் தண்ணீர் கேட்டு மன்றாடிய ஒருவனின் பரிதாப நிலையை கண்டு மனம் பொறுக்காமல், நடுநிசியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு செல்கிறான். ஆனால், தண்ணீர் கேட்ட அந்த மனிதன் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதைக்  கண்டு பதற்றமடைகிறான். மோஸ் நிறுத்தியிருந்த வாகனத்தின் அருகே தற்போது ஒரு வாகனம் வந்து நிற்கிறது.

வாகனத்தில் வந்தவர்கள் துப்பாக்கியால் மோசை நோக்கி சுடுகிறார்கள் .அவர்களிடம் இருந்து திறமையாக தப்பித்து வீட்டுக்கு வருகிறான் மோஸ். போதைபொருள் தாதாக்கள், மோஸ் எடுத்துச் சென்ற இரண்டு மில்லியன் டாலர்களை மீட்க ஆண்டன் ஷிகார் என்பவனை வாடகைக்கு அமர்த்துகின்றனர். இரண்டு மில்லியன் டாலர்கள் இருக்கும் அந்த பெட்டியில் உள்ள ரகசிய சமிஞ்சை கருவியின் மூலம் ஷிகார், மோசை பின் தொடர்கிறான். இதற்கு நடுவே ,குற்றங்கள் மலிந்த அந்தபெருநகரத்தின் இழிவு நிலையை நொந்தபடி அந்நகர ஷேரிப்(காவலதிகாரி) டாம்பெல்( டாமி லி ஜோன்ஸ்) அந்த இருவரையும் தேடி அலைகிறார்.  இறுதியில் யார் வெல்கிறார் என்பதோடு படம் நிறைவடைகிறது.

இந்த திரைப்படத்தின் கதை, வழக்கமான “பூனை – எலியை துரத்தும் கதை ” தான். ஆனால், இப்படத்தில் நிறைந்திருக்கும் புத்திசாலித்தனமான காட்சி அமைப்புக்கள் , ஆழமான ஆனால் சிறியதான “நறுக்” உரையாடல்கள், கதாபாத்திரங்களின் அனாயசமான  உடல்மொழி மற்றும் இத்திரைப்படத்திற்கு மிகவும் தேவையான நேர்த்தியான, உன்னத ஒளிப்பதிவு நம்மை திக்குமுக்குக்காட வைக்கிறது. இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது, இத்திரைப்படத்தில் இசைக்கோர்வை எந்த இடத்திலும்  கிடையாது. சாதாரண சப்தங்கள் மட்டும்தான். உதாரணமாக, கார்விரையும் சப்தம், துப்பாக்கி வெடிக்கும் சப்தம், கதவு திறக்கும் அல்லது உடைபடும் சப்தம் போன்றவைகள்.

மோசை விடாமல் துரத்தும் ஷிகார் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஜேவியர்பார்டெம் என்ற ஸ்பானிய நடிகர். ஆங்கிலம் சரளமாக பேச தெரியாத அவர்வன்முறையில் ஆழ்ந்த வெறுப்புணர்வு  கொண்டவர். துப்பாக்கியின் “ட்ரிக்கரை”அவரது வாழ்நாளில் இதுவரை தொட்டதே கிடையாது. ஆனால், இந்த படத்தில், அவரின்  கதாபத்திரம், சிறிதும் உணர்ச்சிக்கு ஆட்படாத, இரக்கமற்ற  ஒரு தொழில்முறைகொலைகாரனை  சித்தரிக்கிறது. அதில் அவர்  தனது மிகச்சிறந்த நடிப்பாற்றலைவெளிப்படித்தியிருக்கிறார்  என்பதற்கு, அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த துணைநடிகருக்கான அகாடமி விருதே சாட்சி. மெக்கார்த்தியின் நாவலில் ஆண்டன்ஷிகாராக வரையப்பட்ட ஓவியத்தை (பார்க்க: படம்) வைத்துக்கொண்டு, இரண்டுமாதங்கள் அலைந்ததில், இச்சகோதரரர்களால் ஜேவியர் பார்டெம் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

ஜேவியர் பார்டெம்

ஷிகார் ஓவியம்

ஷிகாராக ஜேவியர் பார்டெம்

 

உண்மையாகவே, இப்பாத்திரப்படைப்பு ஒரு உச்சபட்ச கற்பனைத் திறனின் அடையாளம். அதிலும், சாலையோர வணிக வளாக முதலாளியிடம் ஷிகார் மேற்கொள்ளும் உரையாடல், குண்டுக்காயம் பட்டு, அதற்கான  சிகிச்சைக்காக,  ஒரு காரை வெடிக்க வைத்து, அதன் மீது மற்றோரின் கவனம் குவியும்போது, மருந்துக்களை எடுத்து கொள்வது, “பவுண்டி ஹன்டர்” எனப்படும் பணத்துக்காக தலைமறைவானவர்களை தேடுபவனான “வெல்ஸ்” என்ற இடை தரகனை எந்த உணர்ச்சியும் இல்லாமல் கொல்வது, என்று அவர் பரிமளிக்கும் ஒவ்வொரு காட்சியும் உலகத்தரம்.

இக்கதைக்களம் மேற்கு டெக்ஸாஸ் பகுதியில் நடைபெறுகிறது. அங்குவசிப்பவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கன் ஆங்கிலத்தை பேசுவதில்லை.அவர்களது ஆங்கிலம் தென்னமெரிக்க வட்டார வழக்கில் உள்ளதால், நம்மைபோன்றவர்கள், இத்திரைப்படத்தில் பேசப்படும் ஆங்கிலத்தை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது. எனினும், தமிழ்  நாட்டில் உள்ளதை போலவே, நெல்லை வட்டார வழக்கில் பேசும் ஒருவரை சென்னையில் சற்று உன்னிப்பாக கவனித்து பேசுவதை போல, சிறிது கூடுதல் கவனம் செலுத்தி பார்த்தாலே போதுமானது.

ஆள் அரவமற்ற சமவெளியில், கடுமையான துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில், குண்டுக்காயம்பட்டு இறந்துபோன பல மனித உடல்களோடு, நாய்களும் பிணமாககிடக்கும் ஒரு காட்சி. சுமார் இரண்டு நாட்கள் இடைவெளியில், பல்வேறுகதாபாத்திரங்கள் அந்த இடத்திற்கு வந்துசெல்வதை போல அமைக்கப்பட்டுள்ளது.அக்காட்சிகளை கூர்ந்து கவனித்தால், கலை இயக்குனரின் உழைப்பு அசர வைக்கிறது.எவ்வளவு நுணுக்கமான கலை உணர்வுடன் அந்த சூழல் உருவாகி இருக்கிறது என்பதைஎன்னும்போது வியப்பேற்படுகிறது. முதல் நாளில் காட்டப்படும் இறந்துபோன  நாயின் ரத்தம் தோய்ந்த முகம், இரண்டாம் நாளில், அழுகி விகாரமாய் மாறுவதுமுதல், மனித  உடல்களின் நசுங்கிய கோணங்கள் வரை கூடுதல் கவனம் செலுத்திஅர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்திருக்கின்றனர்.

நவம்பர், 2007 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் 25 மில்லியன்கள் செலவில் உருவானது.  ஆனால், அத்திரைப்படம் வாரிக்குவித்ததோ 170 மில்லியன்கள்.அமெரிக்க சினிமா வரலாற்றில் 5 வது பெரிய வசூல் சாதனை செய்த இப்படம், கோயன் சகோதரர்களின் மிகச்சிறந்த படைப்பாக்கத்தில் ஒன்று. இந்த அரிய திரைப்படத்தை காண வாய்ப்புக்காக காத்திருங்கள் அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

When the app launches in late november, anyone will http://trackingapps.org be able to leave reviews and one-to-five star ratings for everyone you know

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “சிறகை வருடிய உலகத் திரைப்படங்கள் – நோ கண்ட்ரி பார் ஓல்டு மென்”
  1. senthilkumar subramaniam says:

    Good Approach
    Good Title
    Good Writing. Work on eassy structure.
    Yes. Good details for all the characters and all the representation here.

    Your enthusiam for this topic helps American movies world.

    Good job.

அதிகம் படித்தது