மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நினைத்தபடி

ஆச்சாரி

Jul 1, 2011

அன்று மதனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை, அவன் இளநிலை மின்னணுவியல் (எலக்ட்ரானிக்ஸ்) வகுப்பு சேர்ந்திருந்தான்.  தனது முப்பதாவது வயதில் ஏதோ புதிதாய் பிறந்தது போல் உணர்ந்து கொண்டிருந்தான். ஆர்வமும், சந்தோசமும் பொங்கிக்கொண்டு இருந்தது. மனது இறக்கை விரித்து பறந்து கொண்டிருந்தது.

இதைத்தான் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், தந்தையிடம் மன்றாடினான்.  அவரோ சிறிதும் பொருட்படுத்தவில்லை. அன்று நடந்தது இன்னும் பசுமையாய் நிழலாடியது அவன் மனதில்.

“பக்கத்து வீட்டு ராசு மகனப்பாருடா, அவன் கம்ப்யூட்டர் படிச்சான்,  இன்னைக்கி பாரு கை நிறைய காசு சம்பாதிக்கிறான்.  அமெரிக்கா போய் டாலரா கொட்டுராண்டா, நீ சொல்ற எலட்ரானிக்ஸ் படிச்சா வேலை கிடைக்காம அல்லாடனும்டா, கடைசில ஏதாச்சும் ஒரு காலேசுல வாத்தியாரா தாண்டா போகணும்.  வெளிநாடு போய் பாக்க முடியுமா, இல்ல நாலு காசு, பணம் தான் சம்பாதிக்க முடியுமா? குண்டு சட்டிக்குள்ள தான் குதிரை ஓட்டனும்! பேசாமே நான் சேத்து விடுறதைப் படி.

மதன் தன தந்தையிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்து வெறுத்து போனான். அவர் ஒரே பிடிவாதமாக இருந்து அவனை தன் விருப்பப்படி கணினித் துறையில் சேர்த்து விட்டார். மதனுக்கோ எள்ளவும் நாட்டமில்லை, அதனால் படிப்பில் கவனம் ஓடவில்லை.

தேர்வில் எந்த பாடத்திலும் தேற முடியாமல் இருந்தான். அவன் அப்பா  ட்யூசன் வைத்து பார்த்தார்,  அப்படியும் தேறவில்லை. ஆனால் துணைப் பாடமாக வரும் மின்னணுவியலில் மட்டும் எப்பவும் அவன் தான் வகுப்பில் முதலாவதாக வந்தான். அவன் அப்பா அவனை “உனக்கு எல்லாம் திமிருடா, இந்தப்பாடம் படிக்கிற மாதிரி அந்த பாடம் படிக்க முடியாதா? ” என கரித்து கொட்ட ஆரம்பித்து விட்டார்.

மதன் சிறுவயதில் இருந்தே அப்படித்தான். இந்த நேரம் இது படி, அப்புறம் அது படின்னு யாராவது சொல்லிவிட்டால் போயிற்று, அவ்வளவு தான் ஒன்றுமே படிக்கமாட்டான்.  அவனாக படிக்கும் நேரம் தான் படிப்பான், நன்றாகவும் படிப்பான்.  இப்போதும் அதே பழக்கம் தான், அவன் அப்பாவின் ஆசை வேறு, இவனின் ஆசை வேறு!

கல்லூரியும் ஒரு  வழியாக முடிந்தது , ஆனா ஒன்று இரண்டு பாடங்களில் தேற முடியவில்லை அவனும் முயற்சித்து படித்தும் பார்த்தான், எதுவும் ஏறவில்லை.  அவன் அப்பாவோ , அவனை திட்டித் தீர்த்தபடியே இருந்தார். கடைசியில் அவன் பட்டம்  கூட வாங்க முடியாத பரிதாபத்தில் இருந்தான்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முன்பு கேலிக்கூத்தானான்.  இரண்டு ஆண்டுகள் கழித்து, தட்டு தடுமாறி தேர்ச்சி பெற்றான், படிப்பில் அந்த அளவுக்கு அறிவு இல்லாததால் வேலையும் கிடைக்க வில்லை, மேற்படிப்புக்கும் போக முடியவில்லை.

இப்படியே இரண்டு, மூன்று  வருடம் ஊர் சுற்றித்திரிய ஆரம்பித்தான். அவர் அப்பா யார் யாரிடமோ போய் சிபாரிசு வாங்கி, இரண்டு மூன்று முறை வேலைக்கு சேர்த்து விட்டார், மதனுக்கு அங்கேயும் வேலை பார்க்க பிடிக்க வில்லை, ஆறு மாதம் வேலை பார்ப்பான், அப்புறம் பிடிக்காமல் நின்று விடுவான்,  தந்தையின் கவலை மேலும் மேலும் வளர ஆரம்பித்து விட்டது.

மதனின் நிலையைப் பார்க்க சகிக்காமல், அவனை தனியாக அழைத்து, “உன்ன படிக்க வைச்சேன் , அதுக்கு ஏத்த வேலையும் வாங்கி கொடுத்தேன். இதற்கு மேல ஒரு தகப்பனால என்னடா பண்ண முடியும்? நான் என்ன செஞ்சா, நீ உருப்படுவேனு சொல்லு, செஞ்சு தொலையிறேன், என அழாத குறையாக கேட்டார்.

“அப்பா நீ என்னைய படிக்க வைச்ச, நீ விருப்பப்பட்டு  படிக்கச் சொன்ன படிப்பு !  வேலையும் அப்படித்தான், நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி  பார்த்தேன், ஆனா என்னால ஒன்னும் முடியலப்பா, நீ மட்டும் இப்ப சரின்னு சொன்னா, நான் மாலை நேரக் கல்லூரியில, எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறேன்” என்று  சொன்ன உடனே அவர் மனம் திருந்தியவராய் தலையாட்ட, இதோ மதன் மாலைக் கல்லூரி சென்று கொண்டிருக்கிறான்.

வெளியே தென்றல் இனிமையாக வீசி கொண்டிருந்தது, மாலைக் கதிரவனின் ஒளி பிரகாசமாக தெரிந்தது. மதன் வாழ்விலும் தான்.

 

This includes your title on the title page, all main headings as these must start a new page, lines of text, and http://writemypaper4me.org any tables, figures, formulas, etc

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நினைத்தபடி”

அதிகம் படித்தது