மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கேரளாவின் சிறுமைத்தனம்!

ஆச்சாரி

Jun 30, 2012

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழகத்தை தொடர்ந்து கொட்டிக் கொட்டி வம்புக்கிழுக்கும் கேரளா, இப்போது சிறுவாணி அணையின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்போகிறோம் என்று கனைக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்து கைவிட்ட இந்த முடிவை இப்போது மீண்டும் கேரளா கையில் எடுத்துள்ளது. இதற்கு ஆயிரம் காரணம் கூறினாலும்- தமிழகத்தை சீண்டிப் பார்க்க வேண்டும் எனும் கேரளாவின் சிறுமைத்தனமும் இதில் உள்ளது.

பூகோள அமைப்பின்படி தமிழகம் இந்தியாவின் தெற்கே கடைசி மாநிலமாக அமைந்துள்ளது. இதனால் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் அண்டை மாநிலங்களை எதிர்பார்க்க வேண்டிய சூழல். ஆனால் பக்கத்து மாநிலங்களோ சகோதரத்துவம் இல்லாமல் வேற்று நாடுகளைப் போல செயல்படுகின்றன. இயற்கை தரும் தண்ணீரை அணைகள் கட்டி தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டு உரிமை கொண்டாடி- பகிர்ந்து கொடுப்பதில் பாராமுகம் காட்டுவது இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்ட செயலல்ல என்பது தெரிந்தும் தண்ணீர் தருவதைத் தடுத்தால் என்ன செய்வது?

இயற்கையின் கொடையால் கேரளத்தில் உற்பத்தியாகும் ஆறுகளின் நீரில், இருபது சதவிகித நீர் வீணாகக் கடலில் கலக்கிறது.  மொத்த நீரில் கேரளா பயன்படுத்துவது பதினைந்து சதவிகித  நீரைத்தான். அதற்கு மேல் பயன்படுத்த அவர்களிடம் இடமும் இல்லை. விளை நிலமும் இல்லை. ஆனாலும்  தமிழகத்துடனான தண்ணீர்ப் பிரச்சினையில் தொடர்ந்து முரண்டுபிடிப்பதில் முன்னணியில் உள்ளது கேரளா. அதன் விளைவுதான் இப்போது சிறுவாணி அணையின் குறுக்கே தடுப்பணை கட்டும் அறிவிப்பும்.

நீண்ட காலமாக கோவை மாநகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்து வரும் சிறுவாணி ஆறு, குடிநீர்த் தேவைகளை நிறைவேற்றும், மிக சுவையான தூய்மையான குடிநீர் மூலங்களில் ஒன்றாகும்.

நாம் சிறுவாணி பகுதியைப் பற்றி ஆராய்ந்தால், இந்த திட்டம் எவ்வாறு தமிழகத்தை பாதிக்கும் எனப் புரியும். சிறுவாணி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு ஆறு. அது கேரள மாநிலத்தில் உள்ள பட்டிவாசலில் தேக்கமாக உள்ளது. அங்கு சிறு சிறு  ஓடைகள் சங்கமிக்கின்றன. அதைத் தாண்டி, சில கிலோ மீட்டர் தொலைவில் அட்டப்பாடியில் 450 மீட்டர் நீளத்தில், 4,387 ஹெக்டேர் நிலப்பரப்பில் சிட்டூர், வெங்கடவு என்ற இடத்தில் புதிய தடுப்பு அணை கட்டப்போவதாக கேரளா அறிவித்துள்ளது. அங்கிருந்து அட்டப்பாடியை நோக்கி  அணை கட்டப்பட்டால், அங்குள்ள பவானி ஆறு தடுத்து நிறுத்தப்படுவதோடு  தமிழ்நாட்டிற்குள் வராமலே போய்விடும்.

மேட்டுப்பாளையத்திலிருந்து  கிழக்கே வரும் பவானி ஆறு, கீழ் பவானியாக ஈரோடு பகுதிக்குச் செல்கிறது. இதுவும் தடைபடும். இதனால்  கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பது உறுதி. இந்த ஆறு, கால்வாய்களை மறித்துத்தான் வனப்பகுதியில் கேரள அரசு புதிய அணை கட்ட ஏற்கனவே கடந்த 1980-ஆம் ஆண்டு முடிவு செய்தது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததால் அணை கட்டும் முடிவை கேரளம் அப்போது நிறுத்தியது.

இப்போது சிறுவாணிக்கும் அட்டப்பாடிக்கும் நடுவே அணை கட்ட  முடிவு செய்துள்ளது கேரளா. இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைக் கட்டவேண்டும் என்றால் கடைமடை பாசனப்பகுதியில் அமைந்துள்ள மாநிலத்தின் அனுமதி பெறப்படவேண்டும் என்பது விதியாகும். ஆனால் இந்த விதிகளை எல்லாம் மதிக்காமல் தடுப்பணை கட்டப் போகிறோம் என்று கேரளா கூறுகிறது. சமீபத்தில் அட்டப்பாடி பகுதிக்குச் சென்ற கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, அப்பகுதி மக்களுக்கு,  சிறுவாணியில் இருந்து  மேற்கில் அணை கட்டி அந்த குடிநீரை அட்டப்பாடி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு கொடுக்கப்போவதாக  கூறியுள்ளார்.  அதன் தொடர்ச்சியாக, அவர் கேரளா மாநில முதல்வரை சந்தித்த பிறகு அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுவாணி ஆற்றுக்கு குறுக்கே அணை கட்டித்தான் அட்டப்பாடி மக்களுக்கு குடிநீர் கொடுக்க வேண்டுமா?  தனது சொந்த மண்ணில் இருக்கும் இடுக்கி அணையில் இருந்து குழாய் மூலமும் தண்ணீர் கொண்டு சென்று கொடுக்கலாம்.

இப்படிச் செய்யாமல், முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஏற்பட்ட ஏமாற்றத்தால் கேரள அரசு வீண் வம்புக்காக தமிழகத்தை கோபப்படுத்த இப்போது சிறுவாணி அணை குறுக்கே தடுப்பு அணை கட்டப் போகிறோம் என்று முண்டா தட்டுகிறது. சிறுவாணி அணைக்கு மலைப்பகுதிகளில் உள்ள இருபது  சிறு சிறு ஆறு, கால்வாய்களில் இருந்து தற்போது தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணை கட்டப்பட்டால்  கோவைக்கு குடிநீர் தரும் சிறுவாணி அணையின் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு மக்களுக்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடும், ஈரோடு மாவட்டத்திலும், மேட்டுப்பாளையம் பகுதியிலும் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்காத அபாயமும் உருவாகும். சிறுவாணி  அணையில் இருந்து தமிழகம் தண்ணீரை குடிநீர் தேவைக்காக மட்டும் எடுத்துக்கொள்கிறது. இதற்கு விலை நிர்ணயமும் இருக்கிறது. மேலும் பராமரிப்பு செலவாக ஆண்டுதோறும் தமிழகத்திடம் கேரளா கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொள்கிறது.

சிறுவாணி அணைக்கு உரிமையாளர் கேரளாவாக இருந்தாலும் அணையின் கட்டுமானத்தின்போது அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்காக தமிழகம் தந்த அரிசி மூட்டைகளை அடுக்கினால் அது சிறுவாணி அணையை விட உயரமாக இருக்கும் என்பதை கோவைப் பகுதி மக்கள் இன்னும் தங்கள்  நினைவில் வைத்துள்ளனர். இங்கு நாம் நினைவில் கொள்ளத்தக்க செய்தி ஒன்று. கேரளாவுக்கு  தமிழகத்தில் இருந்து 30 ஆயிரம் வண்டிகளில் பால், முட்டை, காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தினமும் கொண்டு செல்லப்படுகிறது. இதில் கோவை மாவட்டத்தில் இருந்துமட்டும் தினமும் ரூ.500 கோடி மதிப்புள்ள மளிகை, காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வண்டிகளில் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. அந்தக் கோவை மாவட்ட மக்களுக்குக் கிடைத்து வரும்  குடிநீரைத்தான், புதிய தடுப்பணையின் மூலம் தடுக்கப் பார்க்கிறது கேரளம். இதனால் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களிடையே கேரள அரசின் இந்த புதிய அணை கட்டும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காவிரி நீர் பெற முடியாமல் தவிப்பு, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தில் தகராறு,  பாலாற்றின் குறுக்கே ஆந்திரா புதிய அணை கட்டிவிடுமோ என்ற அச்சம் என பல்வேறு நிலைகளில் ஆற்று நீர் உரிமைகளை தமிழக விவசாயிகள் இழந்து வருகிறார்கள். இப்போது  தமிழனுக்குத் தண்ணீர் தரக் கூடாது என்ற முனைப்புடன்  கேரளா ஓடி ஓடி செய்யும்  ஆய்வுகளில் நூற்றில் ஒரு பங்கை தமிழக மக்களின் குடிநீர், விவசாயத்துக்கான நீர் வளத்துக்கு நமது மாநில முன்னாள், இந்நாள் முதல்வர்கள்  செய்தார்களா என்றால் இல்லை என்பதுதானே உண்மை.

இந்தப் பிரச்சனையிலும் மத்திய அரசு வழக்கம்போல மௌனமாக இருந்துவிடுமா? அல்லது உரிய தீர்வு காணுமா? இந்த அணை கட்டும் அறிவிப்புக்குக் காரணமானவர் காங்கிரசின் கேரளா மாநிலத் தலைவர். அதனால் கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் இடையில் எழுந்திருக்கும் இந்தப் பிரச்சினையை கட்சிக் கண்ணோட்டத்தில் அணுகி வேடிக்கை பார்க்காமல்-நடுநிலையுடன் சிந்தித்து இன்னொரு முல்லைப் பெரியாறு பிரச்சினையாக உருவெடுக்காமல் தடுப்பது மத்திய அரசின் கடமை. கடமையைச் செய்யுமா? கண்மூடிக் கிடைக்குமா?

If you chose a, you may be a visual learner paper-writer.org/

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கேரளாவின் சிறுமைத்தனம்!”

அதிகம் படித்தது