மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு: ஆபத்தின் தொடக்கம்

ஆச்சாரி

Oct 1, 2012

செப்டம்பர் 14. சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட நாள். இந்திய வருங்கால வரலாற்றில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த அனுமதி, எந்தவித முன்யோசனையும் இன்றி எடுக்கப்பட்டது என்று கருத முடியவில்லை. இதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை நன்கு தெரிந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அமெரிக்க பெரும் நிறுவனங்களின் பணவலை நமது அரசியல் வாதிகளின் கூடாரங்களில் பலமாக வீசப்பட்டு இருக்கிறது. நிலக்கரியை முகத்தில் பூசிக்கொண்டு, “கறை நல்லது” என்று நினைக்காமல் அதை கழுவத்துடிக்கும் நமது பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சிகளின் ஊழலுக்கு எதிரான  போராட்டத்தை திசை திருப்ப மேற்கொண்ட முயற்சியும் கூட. இனி இவரை யாரும் செயல் படாத பிரதமர் என்று சொல்லிவிட முடியாது.

இதில், ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், நாம் அந்நிய முதலீடை அனுமதித்த அதே நாளில், அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் இருந்து உலகின் மிகப்பெரிய சில்லறை வணிக நிறுவனமான வால்மார்ட் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இரண்டு பெரிய பேரணிகள், அமெரிக்க பெரும் நகரங்களில் வால்மார்ட்க்கு எதிராக நடந்துள்ளன. அங்கு ஒருமித்து ஒலித்த கோஷம் இது தான். “வால்மார்ட் எங்களுக்கு வேண்டாம்”.  அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்புக்களை சந்திக்கும் இந்த வால்மார்ட் இந்திய சந்தைக்கு தேவையா? சிவப்பு கம்பளம் விரித்து இவர்களை நாம் வரவேற்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு, அரசியல்வாதிகளும், இங்கு இருக்கும் அறிவு ஜீவிகளும் சொல்லும் காரணம், வேலைவாய்ப்பு பன்மடங்கு பெருகும், ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலை கிடைக்க இது வழிவகை செய்யும் என்பதுதான். ஆனால், இவர்களின் வாதம், வால்மார்ட்டின் பிறப்பிடமான அமெரிக்காவிலேயே  எடுபடவில்லை. அங்கு வால்மார்ட் உருவாக்கும் ஒவ்வொரு வேலைவாய்ப்பும், ஏற்கனவே இருக்கும் மூன்று வேலைவாய்ப்புக்களை முடக்குகின்றன என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இந்தியாவில் தற்போது சில்லறை வணிகத்தையே நம்பி இருக்கும் பத்து கோடி தொழில் முனைவோர் மற்றும் உள்ளூர் மளிகை வியாபாரிகளை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, ஒரு கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பு என்பது உண்மையிலயே கேலிக்கூத்தானது.

இந்த அந்நிய தலையீட்டால் பாத்திக்கப்போவது சில்லறை வர்த்தகர்கள் மட்டும் அல்ல. இந்திய உற்பத்தியாளர்கள், சிறு மற்றும் குறு தொழில் முனைவோர், கடைசியாக நுகர்வோரும் தான். இங்கு கடை பரப்பும், லாபம் ஒன்றையே தாரக மந்திரமாக கொண்ட வால்மார்ட், டெஸ்கோ மற்றும் கேரிபோர் போன்ற நிறுவனங்கள், மலிவான, தரம் குறைந்த சீன, கொரிய பொருட்களை மிகவும் மலிவு விலையில் வாங்கி சந்தைப்  படுத்தும். அவர்களின் இந்த மிகக் குறைந்த விலைக்கே இந்திய உற்பத்தியாளர்களும் தனது பொருட்களை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் தரமும் போய், இந்திய தயாரிப்புகள் படிப்படியாய் மறைந்துபோகும். தாய்லாந்து நாட்டில், வால்மார்ட் நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளில், அங்கிருந்த 65 சதவீத சிறிய சில்லறை நிறுவனங்கள் மூடுவிழா கண்டுவிட்டன. அமெரிக்காவிலும் இதே கதை தான். அங்குள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வின் படி, வால்மார்ட் நிறுவனம் இருக்கும் பகுதிகளில், 30 முதல் 65 சதவீதம் வரை மற்ற கடைகள் மூடப்படுவது அதிகரித்துள்ளது. மேலும், பணபலம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் மூலமாக, சில குறிப்பிட்ட, அன்றாடம் தேவைப்படும் பொருட்களை இப்பெரும் நிறுவனங்களில் மட்டுமே வாங்கமுடியும் என்ற நிலையை அவர்கள் ஏற்படுத்துவார்கள். இதனால் அப்பொருட்களுக்கு செயற்கை பற்றாக்குறை ஏற்படும். அவர்களிடம் 100 கிராம், 200 கிராம் அளவுகளில் பொருட்களே கிடைக்காது. ” தள்ளுபடி (Offer)” என்ற போர்வையில், அவசியமே இல்லாமல் நாம் சாக்குமூட்டையில் பொருட்களை அள்ளிக்கொண்டு வரவேண்டி இருக்கும். நமது தெருமுனைகளில் சிறு சிறு கடைகளை சொந்தமாக நடத்திகொண்டு, கௌரவமாக வாழ்ந்து வரும் நமது அண்ணாச்சிகள், காலத்தின் கட்டாயமாக வால்மார்ட்டின் சேவகர்களாக மாறும் காலம் உருவாகும். ஏனெனில், இந்த பெரும் நிறுவனங்கள், தொடக்கத்தில் ” சந்தையை ” தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மிக மிக குறைந்த விலையில் பொருட்களை நுகர்வோர்களுக்கு வழங்கும். அதையும் மிகுந்த பொருட்செலவில் விளம்பரம் செய்யும் யுக்தியும் உண்டு. இதனால் ஏற்படும் பல கோடி ரூபாய் நஷ்டம், அசுர பணபலம் கொண்ட அவர்களுக்கு ஒரு விஷயமே அல்ல. நாட்கள் செல்ல செல்ல, சந்தையை கைக் கொள்ள ஆரம்பித்ததும், அவர்களிடம் இருந்து ஒரு “அந்நியன்” வெளிப்படுவான். ஆனால்,அவன் நமது “அந்நியனை” போல நல்லது செய்ய அவதரிக்க மாட்டான். பிறகென்ன, அவர்கள்  வைத்ததே  சட்டமாக  இருக்கும். இந்த நிறுவனங்களில், அதன் கிடங்குகளே இருநூறு ஏக்கர் பரப்பளவில் இருக்கும். அதில், பல்லாயிரம் டன் பொருட்கள் கெட்டு போகாமலும், பாதுகாப்பாகவும் வைக்க முடியும். இந்த நூதன போட்டியில் எந்த அண்ணாச்சி கடை நடத்த முடியும்?

வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்தால் ஏற்படப்போகும் மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல. அவர்கள் முதலில் இடைத்தரகர்களை ஒழிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவர். உற்பத்தி நிலையிலேயே அனைத்து பொருள்களையும் வாங்குவதில் அவர்கள் கை தேர்ந்தவர்கள். இதனால் நுகர்வோர்களாகிய நமக்கு நன்மை தானே? என்ற கேள்வி எழலாம். அந்த கணிப்பு முற்றிலும் தவறானது. கடந்த ஜனவரி 2008 ம் ஆண்டு அமெரிக்காவில் அரிசியின் விலை எந்த வித காரணிகளும் இன்றி 2007 ம் ஆண்டை விட மும்மடங்கு உயர்ந்தது. அங்குள்ள மத்திய உணவுக்கழகம் நிலைமையை ஆராய்ந்ததில் விலையேற்றதிற்கான காரணம் என்னவென்று தெளிவாகியது. அமெரிக்காவில் உள்ள வால்மார்ட்டின் மொத்த விற்பனை கிளையான “சேம்ஸ் கிளப்” கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மொத்தமாக  அரிசியை  கொள்முதல் செய்து, செயற்கையாக விலையேற்றம் செய்ததை கண்டுபிடித்தது. இதிலேயும் ஒரு விஷயத்தை காணலாம். இதனால் விவசாயிகள் பயன் அடைந்திருப்பார்களே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதில் தான் வால்மார்ட்டின் தந்திரத் தோள்கள் விவசாயியை தழுவிக்கொள்கின்றன. தன்னிடம் இரண்டாம் நிலை முதலீட்டாளராக இருக்க செய்து, வால்மார்டை தவிர வேறு எங்கும் தன் உற்பத்தியை விற்றுவிடாமல் கவனமாக பார்த்துக்கொள்கிறது. காலப்போக்கில், விவசாயி தனது தானியங்களை விற்க சந்தையே இல்லாத செயற்கை சூழல் உருவாக்கப்படுகிறது. பிறகென்ன, அடிமை போலவே, இப்பெரும் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு பொருள்களை விற்க வேண்டியது ஒரு விவசாயியின் கடமை. வாங்குவது நுகர்வோரின் வேலை. இந்த சூழல் இன்னும் சில வருடங்களில் நிச்சயம் உருவாகும். அமெரிக்காவில் வேளாண்மை தொழிலில் ஈடுபடுவோர் வெறும் இரண்டு சதவீதம். ஐரோப்பிய யூனியனின் மொத்த வேளாண்மை சமூகத்தினரே வெறும்  ஐந்து சதவீதம் தான். அவர்களுக்கே இந்த கதி என்றால், நம் நாட்டின் முப்பது சதவீத விவசாய, வேளாண்மை குடிகளின் கதி என்னவாகும்? மேலும், நமது நாட்டில் விவசாயிகள் பெறும் மானியம், நேரடிக் கொள்முதல் என்ற பெயரில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு மடை திறந்த வெள்ளம் போல் பாயும். வரியாய் நாம் கட்டிய பணம் நாட்டு முன்னேற்றத்திற்கு பயன்படாமல், இது போன்ற அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு கொள்ளை லாபமாய் போவதில் யாருக்கு “லாபம்”?.

மேலும், வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் தாரக மந்திரமே, “உற்பத்தியாளரிடமிருந்து மொத்த நேரடி கொள்முதல்” என்பது தான்.

அதாவது, “விவசாயியின் நிலத்தில் இருந்து – வால்மார்ட்டின் வாசலுக்கு ” என்பது தான் இதன் பொருள்.  இது நமது நாட்டில் எப்படி சாத்தியம்? முதலில், நமது நாட்டின் வேளாண்மை பொருளாதார கட்டமைப்பை எடுத்துக் கொள்வோம். இந்நாட்டில் இது இயல்பாகவே எளிதானதாகவும், பல அடுக்குகளை கொண்டதாகவும் அமைந்துள்ளது. நமது நாட்டில் முப்பது கோடிக்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். நமது மொத்த உள்நாட்டு உணவு உற்பத்தியில் அறுபது சதவீதத்தை, உற்பத்தியாளர்கள் அதாவது விவசாயிகள், விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் கிராம மக்களே பயன்படுத்துகின்றனர். மீதம் உள்ள நாற்பது சதவீதம் உணவு உற்பத்தியே கிராமங்களைவிட்டு வெளியே, வணிக ரீதியிலான விற்பனைக்கு வருகிறது. ஆக, தங்களுடைய பயன்பாடு போக, மீதம் உள்ள உற்பத்தியே நகர்ப்புறங்களில் விற்பனைக்கு வருகிறது. இதனால், கிராமங்களில் வசிக்கும் உற்பத்தியாளன், உணவு தட்டுப்பாடு என்ற ஆபத்தை சந்திப்பதில்லை. ஆனால், வால்மார்ட்டின்  நேரடி கொள்முதலில் நகரம்-கிராமம் என்ற வேறுபாடு கிடையாது. இதன் விளைவாக, நாளடைவில், நகரத்தில் விற்கப்படும் தனது உற்பத்திப்பொருளை, உற்பத்தியாளனும் அதே விலையில் வாங்கும் நிலை உருவாகும். நமது கிராமங்களில் வசிக்கும் மக்கள், நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களைப் போல் வாங்கும் சக்தி கொண்டவர்கள் இல்லை. இதன் காரணமாக, எதிர்காலத்தில், கிராமங்களில் கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்று இந்தியாவின் தலை சிறந்த பொருளாதார வல்லுனரான எஸ். குருமூர்த்தி வலியுறுத்திக் கூறுகிறார்.

பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்திய நகரங்களில் மட்டுமே இந்த வணிக நிறுவனங்கள் கடை பரப்ப முடியும் என்று மத்திய அரசின் விதி சொல்கிறது. இது தொடக்கம் தான். தனது ராட்சச கால்களை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் வைக்க, அரசியல்வாதிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவற்றுக்கு நன்றாகவே தெரியும். இதற்கு உதாரணமாக நாம் இருபதாண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டி இருக்கிறது.

அது 1991 ம் ஆண்டு. அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவாக “திறந்த பொருளாதாரக் கொள்கை”யினை நாட்டுக்கு அர்ப்பணம் செய்திருந்தார்.  இதனால் நாடு மிகவேகமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் என்று மக்கள் கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டார்கள். இந்தியா கூடிய சீக்கிரத்தில் அமெரிக்காவாக மாறப்போகிறது என்றும், அதற்கான முன்னேற்பாடுகள் தான் இப்போது நடந்து வருகின்றன என்றும் தங்களுக்குள் அளவலாவிக்கொண்டனர். ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடாக, நம் நாடு மாறுவதற்கான ஒரு மந்திரச்சாவி இந்த கொள்கையினால் நமக்கு கிடைக்குமா? என்பதை யாரும் சீர்தூக்கி பார்க்கவில்லை என்பதே உண்மை.

சரி, திறந்த பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடித்தாகிவிட்டது. அமெரிக்க பெரும் முதலாளித்துவ நிறுவனங்களான பெப்சி மற்றும் கோலாக் கம்பெனிகள் இந்தியாவில் வந்திறங்கின. உள்நாட்டு குளிர்பானக் கம்பெனிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டன. அப்போது, அறிவு ஜீவிகளிடையே இருந்து ஒரு கூக்கூரல் எழுந்தது. உள்நாட்டு வியாபாரிகள் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள், அவர்களும் பெப்சி, கோலா அளவுக்கு தரத்தை உயர்த்தட்டும். இதனால் நுகர்வோருக்கு  உலகத்தரமான குளிர்பானம் கிடைக்கும் என்றார்கள். காலப்போக்கில் உள்நாட்டு கம்பெனிகள், பெப்சி மற்றும் கோலாவின் அட்டுளீயங்களால் மறைந்து ஒழிந்து போயின. நகர்புறம் மற்றும் கிராம புறங்களில் உள்ள கடைகளில் எத்தனையோ தகிடுத்தத்தங்கள் செய்து உள்ளூர் சோடாக் கம்பெனிகளை ஓட ஓட விரட்டிய இந்த வெளிநாட்டு பெப்சி கோலா கம்பெனிகள், தற்போது இந்தியாவின் குளிர்பான விற்பனையில் தொண்ணுறு சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளன. மதுரையில் மிகப்பிரபலமாக இருந்து கோலோச்சி வந்த மாணிக்க விநாயகர்  சோடாக் கம்பெனியை மூடுவதற்காக இந்த வெளிநாட்டு கம்பெனிகள் செய்த தந்திரங்கள், கிழக்கிந்திய கம்பெனியை நினைவூட்டுவதாக இருந்தன.

அஜீரண கோளாறுக்காக பெரும்பாலான மக்கள் அப்போதெல்லாம் இஞ்சி கலந்த சோடாவையோ அல்லது “டொரினோ” வையோ தான் குடித்தனர்.  எனது பால்ய கால நண்பன் நிமோனியாவிற்கு மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டதில் ஏற்பட்ட வயிற்றுப் புண்ணுக்காக “டொரினோ” குடிக்கச்சொல்லி டாக்டர் சொன்னதாக கேட்டிருக்கிறேன். இப்போது விற்கப்படும் “கோக்” பானத்தை தொடர்ந்து குடித்தால் ” சிறுநீரகத்தில்” கல் நிச்சயம். இப்படியாக, செவ்வனே திட்டமிட்டு சிறு வணிகர்களை துரத்தி அடித்து, இந்தியச் சந்தையில் பெப்சி கோலாவை தவிர வேறு எந்த பானத்தையும் காண முடியாத அளவுக்கு தனது ராட்சச கால்களை மிகப்பலமாக இந்தியாவில் காலுன்ற உதவி செய்தது மட்டுமே “திறந்த பொருளாதார கொள்கை”யின் கை மேல் பலன். அப்போது செய்த இமாலயத் தவற்றின் தொடர்ச்சியாக, ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தை முழுமையாக சீரழிக்கக் கூடிய “சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு” என்பதன் மூலம் மத்திய அரசு எடுத்துள்ளது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

சரி, இதற்கான மாற்று வழி என்ன? விவசாய நாடான நாம், மேற்கத்திய சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

அவர்களின் பொருளாதாரம், பணத்தை விரயமாக செலவு செய்யும் கலாசாரத்தை அடிப்படையாக கொண்டது. நாமோ இயல்பாகவே பணத்தை சேமிக்கும் மனோபாவம் கொண்டவர்கள். 2010ம் ஆண்டு கணக்கீட்டின் படி, தற்போது இந்தியரின் சேமிப்பு, GDP யில் 36 சதவீதமாக உள்ளது. கணிசமான இந்த சேமிப்பை, முதலீடாக மாற்றக்கூடிய மனோபாவத்தை மக்களிடம் கொண்டுவந்தாலே, நாட்டில் சிறுதொழில் வளம் பெருமளவில் அதிகரிக்கும். வேலைவாய்ப்பு பன்மடங்கு பெருகும். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை நாம் கண்டடையலாம். 2020ல் வல்லரசு என்ற பெயரில் மீண்டும் ஒரு அந்நிய ஆத்திகத்திற்கு இடம் கொடுக்காமல், மக்கள் நலனை கருத்தில் கொள்ளும் நல்லரசாக, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடை தடை செய்வதே மத்திய அரசுக்கு நல்லது. இந்த நாட்டிற்கும் நல்லது.

For some students this will be next to impossible, since they may have entered higher http://www.pro-homework-help.com/ education with the sole aim of enjoying the social life

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு: ஆபத்தின் தொடக்கம்”
  1. senthilkumar subramaniam says:

    Nice article. Jai Hindi

  2. saleem says:

    good article with a good vision

  3. arun says:

    நல்ல கட்டுரை.

அதிகம் படித்தது