சீனத்திடம் தோற்ற இந்தியா – சதியால் வஞ்சிக்கப்பட்டதா?
ஆச்சாரிFeb 15, 2013
“சென்றதடா அமைதி நோக்கி உலகம் – அட
சீனாக்காரா ஏண்டா இந்தக் கலகம்?
“சீனனுக்கே இங்கு என்ன வேலை? நம்
சிங்கப்படை கிழிக்கட்டும் அவன் தோலை
தானே வந்தான் கொழுத்து – தன்
தலை இழந்தது கழுத்து!”
இவ்வரிகளை எழுதியவர் புதுவை கண்ட புதுமைக் கவி. 1962-லிலேயே இதை எழுதி சீனர்களின் கயமைத்தனத்தை அன்றே சுட்டிக்காடியுள்ளார் புரட்சிக்கவி. சீனத்தினால்தான் இந்தியாவிற்கு சரிவு வரும் என்பதை உணர்த்திய கவிஞரின் வரிகள் இன்றைய இந்திய வெளியுறவு அதிகாரிகளின் காதில் விழவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. அல்லது அவர்கள் செவிடர்கள் போல் நடித்து இந்தியாவையே காட்டிக் கொடுத்துள்ளார்களா? என்கிற ஐயமும் தோன்றுகிறது. சீனர்கள் தென்னிலங்கையில் கால் பதித்தால் இந்தியத்திற்கு பெருவலி உண்டாகும் என்று தெரிந்தும் ஏன் சீனர்களை இந்த அதிகாரிகள் சீனம் காலூண்ற வழி செய்தார்கள்? ஒருவேளை சீனர்களிடமிருந்து பயனடைந்துள்ளார்களா என்கிற பலரின் கேள்வி நியாமானதுதான். சீனத்தின் மீது ஏன் காதல் இவர்களுக்கு? இவர்கள் அனைவரும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், யார் இவர்கள்?
திரு. சிவ சங்கர மேனன்: இவர் இந்நாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர். முன்னாள் வெளியுறவுத் துறை செயலர். இவர் மூன்று முறை சீனத்தில் வெளியுறவுத்துறையின் சார்பில் பணியாற்றியுள்ளார்.
திரு. விஜய் நம்பியார்: இவரும் முன்னாள் இந்திய வெளியுறவுத் துறையைச் சார்ந்தவர். இந்தியாவின் உதவி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர். இந்திய தூதுவராக சீனத்தில் 1996-2000 வரை பணியாற்றியவர். தற்போது ஐநா அவை செயலரின் ஆலோசகர். ஐநா பாதுகாப்பு அவையில் முக்கியப் பதவி வகிப்பவர். திரு. நம்பியார் 1967-ம் ஆண்டு வெளியுறவுத்துறையில் சேர்ந்து சீனாவைக் குறித்து தீவிரமாக ஆய்ந்தவர். சீன மொழியைக் கற்று ஆங் காங்கிலும், சீன தலைநகரான பீச்சிங்கிலும் பணியாற்றியுள்ளார்.
திருமதி நிருபமா ராவ்: இவரும் இந்தியத் தூதுவராக சீனத்தில் பணியாற்றியவர். முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலர். திரு. நம்பியார் போன்று இவரும் பணி துவங்கியக் காலத்தில் இந்திய-சீன உறவைக்குறித்து ஆய்ந்தவர். முன்னாள் தலைமையமைச்சர் திரு. இராசீவ் காந்தி திசம்பர், 1988 –ம் ஆண்டு சீனாவிற்கு சென்ற போது அக்குழுவில் உருப்பினராக இருந்தவர்.
இவர்களுடன் திரு. எம்.கே. நாராயணனும் இணைந்து இக்கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பதாக பலர் ஐயப்படுகிறார்கள். இனி இவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படக் காரணமென்ன என்பதை ஆய்வோம்.
சேரநாட்டுத் தமிழர்களே இன்றைய மலையாளிகள் என்பது நாம் அறிந்த உண்மை. பழந்தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்களா என்றால் நிச்சயம் இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. இது ஒரு சிலரின் சதியேயன்றி ஒட்டுமொத்த மலையாளிகளின் சதியல்ல என்பதை முதலில் தெளிவு கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழர்கள் தமிழகத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள். பிரிக்க முடியாத உறவு அது. அதனாலேயே ஈழத்தமிழர்கள் என்றுமே இந்தியா மீது பற்றும் அன்பும் கொண்டவர்கள். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் ஈழத்தமிழர்கள் என்றுமே இந்தியாவையே ஆதரித்தவர்கள். இன்றும் ஈழத்தில் காந்தி சிலைகள் அதிகமுண்டு. முன்னாள் தலைமையமைச்சர் திருமதி இந்திரா காந்தி, முன்னாள் தமிழக முதல்வர் திரு. மா.கோ. இராமச்சந்திரன் (MGR) போன்றோர் சிலைகள் எங்கும் பார்க்கலாம். மாகவி பாரதியையும், உத்தமர் காந்தியையும் போற்றியவர்கள், சைவத்தில் தழைத்தவர்கள். சைவத் திருக்கோவில்களில் முக்கியத் திருத்தலங்கள் இன்றும் ஈழத்தில் உள்ளன. திருநாவுக்கரசர் சென்று வழிபட்டு பாடியத் திருத்தலங்கள் அங்குள்ளன. ஆறுமுக நாவலரும், விபுலானந்தரும் ஈழத்தில் சைவம் தழைக்க பாடுபட்டது அனைவருக்கும் தெரியும். எனவே இவர்கள் என்றுமே இந்தியாவைத் தந்தை நாடாகவே கருதினார்கள். இன்றும் பெரும்பாலோர் இந்தியா ஈழப்பிரச்சினைக்கு உதவும் என்கிற நம்பிக்கையில்தான் வாழ்ந்து வருகின்றனர்.
தென்னாசியப் பகுதியில் இந்தியாவின் தலைசிறந்த நண்பர்கள் என்றால் அது ஈழத்தமிழர்களாகத்தான் இருக்க முடியும். இயற்கை (சுனாமி) பேரழிவிலும் நம்மைக் பெருமளவுக் காத்தது ஈழம்தான். தமிழீழம் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரையில் இந்தியாவின் தென்பகுதியில் எவரும் காலூண்ற முடியாது என்பது தெரிந்த சீனர்கள் எப்படி ஈழத்தமிழர்களை இந்தியாவிடமிருந்து பிரித்து அவர்களை அழிப்பது என்று சிந்தித்ததின் விளைவுதான் மேல் கொண்ட நால்வர் என்று ஐயப்படத் தோன்றுகிறது. இந்நால்வரில் மூவர் சீன வல்லுநர்கள், சீன அரசிடம் நெருக்காமானவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களை வைத்து முதலில் ஈழத்தமிழர்களைத் தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளின் இச்செயலினால் இந்தியா இழந்ததுதான் அதிகம். தமிழர்களை ஒழித்துக்கட்டியதில் வெற்றியடைந்தது சீனம் தான். ஈழத்தமிழர்கள் பலத்துடன் இருக்கும்வரை சீனம் இலங்கையில் நிலை கொள்ள முடியாது என்றறிந்த இவர்கள் தமிழர்களை ஒழிக்கும் காலம் காத்திருந்திந்தனர். இராசபக்சே என்கிற காலனால் வந்தது காலம் இக்கயவர்களுக்கு. முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு ஒரு மனிதப் பேரவலத்தை நடத்திக் காட்டியதில் இந்த நால்வரின் பங்கு உலகறிந்தது. போரின் போது திரு. நாராயணன், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர். திரு. மேனன், வெளியுறவுத்துறை செயலர். திரு. நம்பியார் இந்த மனிதப் பேரவலம் நடக்கும் போது ஐநா தலையிடாமல் பார்த்துக் கொண்டார். போர் முடிந்தபின் திருமதி ராவ் வெளியுறவுத் துறைச் செயலரானார். அதன் முன் இலங்கையில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றியவர் திருமதி. நிருபமா ராவ். மேனனும், நாராயணனும் போர் நடந்து கொண்டிருக்கும் போது பல முறை இலங்கை சென்று வந்தது நமக்கு நன்குத் தெரியும். வெள்ளைக் கொடியுடன் வந்த புலித்தலைவர்களையும் அவர்களின் துணைவியரையும் கொடுமைப்படுத்தி கொன்றதை நன்கறிவார் திரு. நம்பியார். இவருக்குத் தெரிந்த பின்தான் புலித்தலைவர்கள் திரு. நடேசனும், திரு. புலித்தேவனும் வெள்ளைக்கொடியுடன் சரணடையச் சென்றனர்.
திருமதி. இந்திரா காந்தி இருந்தவரை ஈழத்தை இந்தியாவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்திவந்தார். அன்றிருந்த வெளியுறவுத் துறையினர் ஈழத்தமிழர்களின் இந்தியப் பற்றை நன்கறிந்ததிருந்தனர். அதனால்தான் அவர்கள் தமிழர்களை ஆதரித்தனர், அரசும் ஆதரித்தது. ஆனால் திருமதி. காந்தியின் இறப்பிற்குபின் வந்தவர்களின் அறிவிலித்தனத்தினால் இலங்கையை இந்தியா இழக்கத் துவங்கியது. அதை முழுமையாக்கியப் பெருமை மேற்கண்ட நான்கு வெளியுறவுத்துறை அதிகாரிகளையேச்சாரும். இந்தியப் பெருங்கடலில் மிக முக்கிய கேந்திரமாக இலங்கை திகழ்கிறது. இலங்கையை கையில் கொண்டவர்கள் இந்தியப் பெருங்கடலை ஆள்வார்கள் என்பது உண்மை. எனவேதான் சீனம் தனது முத்து மாலைத்திட்டத்தில் இலங்கையையும் இணைத்து இன்று தென்னிலங்கையின் அம்மந்தோட்டா என்கிறப்பகுதியில் கடல்தளம் அமைத்துள்ளது. இதன் மூலம் சீனம் இலங்கையை தன் வசப்படுத்தியுள்ளது. செல்வம் கொழிக்கும் சீனத்திடம் இலங்கை சரணடைந்துள்ளது. இந்தியாவின் புன்சிரிப்பில் இலங்கை மயங்கிவிடும் என்கிற மாயையில் இந்தியாவை வீழ்த்தி சீனத்திடம் இலங்கையை ஒப்படைத்துள்ளனர் இந்நால்வர். இலங்கை ஒருபோதும் இந்தியாவை ஆதரித்ததில்லை, ஆதரிக்கப் போவதுமில்லை. சீனத்திடம் இருக்கும் பெரும் செல்வம் இலங்கையை நிரந்தரமான சீன அடிமையாக மாற்றியுள்ளது. இந்தியாவினால் சீனச்செல்வத்துடன் போட்டியிட இயலாது. பாக்கித்தான் போரில் இலங்கை இந்தியாவிற்கு எதிராகவிருந்தது வரலாறு. ஆனால் ஈழத்தமிழர்கள் என்றுமே இந்தியாவிற்கு எதிராக இருந்ததில்லை. இதன் மூலம் இந்தியா இந்தியப் பெருங்கடல் பகுதியை சீனத்திடம் இழந்து நிற்கிறது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறியுள்ளதை இந்திய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் பெரும்புதிர்.
ஆனால் இந்தியாவினால் இச்சதியை முறியடிக்க இயலும், யார் நண்பன், யார் எதிரி என்பதை புரிந்துக் கொண்டால். இலங்கையின் வல்லமையை ஒழிப்பதில்தான் அது சாத்தியம். அதற்கு தமிழர்களின் ஒத்துழைப்பு இந்தியாவிற்குத் தேவை. தமிழர்கள் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராகப் போராடி வருகின்றனர். ஆயுதப் போராட்டம் ஓய்ந்து இன்று மனித உரிமைப்போராட்டம் பல நாடுகளில் அந்நாடுகளின் சட்டத்திற்கு உட்பட்டுப் போராடிவருகின்றனர். இத்துனை நடந்தும் ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதில்லை. ஏனென்றால் தமிழத்தமிழர்களுடன் இருக்கும் பண்பாட்டுத் தொடர்பும், மொழித் தொடர்பும் தான் காரணம். இத்தொடர்பு தமிழர் இருக்குவரை தொடரும், அதை அழிக்க முடியாது. அன்றுவரை ஈழத்தமிழர்கள் இந்தியாவின் பக்கம்தான் இருப்பர்.
இந்தியாவின் இலங்கை-தமிழர் கொள்கையில் மாற்றமைடைந்து பன்னாட்டு நாடுகளுடனும் அமைப்புகளுடனும் இணைந்து இலங்கையில் போரின் போது நடந்த போர்க்குற்றம் குறித்த பன்னாட்டு விசாரனையை ஆதரித்தால் இலங்கையில் பெரும் மாற்றம் வரும். அதை இந்தியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இயலும். பொருளாதாரத் தடையின் மூலமும் மற்ற நெருக்கடியின் மூலமாகவும் இதைச் சாத்தியமாக்க முடியும். தமிழர் பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமையுடனும் அல்லது தன்னாட்சி உரிமையுடனுமான ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியும். அதன்பின் அம்மக்கள் விரும்பினால் பிரிந்து செல்லும் உரிமையையும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தமிழீழம் தனிநாடானால் தமிழ்நாடு தனிநாடாகும் என்கிற புரட்டைத் திரும்பத்திரும்ப கதறிக்கொண்டிருக்கும் கயவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழகத் தமிழர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்துச் செல்லும் எண்ணம் என்றும் இருந்ததில்லை என்று. தமிழகத்தின் இன்றைய நிலையை உற்றுக் கவனித்தால் ஒன்று நன்கு தெரியும், தமிழர்கள் இந்தியாவிடம் இருப்பதைதான் விரும்புகிறார்கள் என்று.
இந்தியாவின் தமிழர் எதிர்ப்பு நிலையைக் கண்டு கொதித்தெழுந்த புரட்சிக்கவிஞர் 1958-ம் ஆண்டில் எழுதுகிறார்,
”உறவுகொள் இலங்கையில் ஆயிரம் தமிழரின்
உயிர்க்கொலை செய்தாரை ஆதரித்தே
நெறியற்ற தில்லியின் நீட்டாண்மைக் கஞ்சோம்
நேயத்தால் தம்தமிழ்நாட்டை மீட்பீர் “
என்று. இது இந்திய அரசிற்கு அவர் தொடுக்கும் எச்சரிக்கை. தமிழகம் இந்தியாவிடம் இருப்பதுதான் அனைவருக்கும் விருப்பம். ஆனால் இந்தியா தமிழர்கள் மீதான தனது கொள்கையை மாற்ற வேண்டும். தமிழர்களுக்கு ஆதரவாக மாறவேண்டும். அது நடந்தால் இந்தியாவிற்கு நல்லது, தமிழினம் இந்தியாவைக் காக்கும். அதைதான் கவிஞர் 1963-ம் ஆண்டில் பாடுகிறார்.
”இமையத்துக்கே வெற்றி – தென்
குமரிக்கு நல் வெற்றி!
கமழும் காவேரிக்கும் – நற்
கங்கைக்குமே வெற்றி! “
ஒட்டு மொத்த இந்தியாவின் வெற்றியைக் கனவுக்கண்டவர் சுப்புரத்தினக்கவி. எனவே தமிழர்களின் இந்தியத் தேசியப் பற்றை எவராலும் குறை கூற இயலாது. அது உத்தமர் காந்தியின் கூற்றிலே காணலாம். நேதாச்சி சுபாசு சந்திர போசின் கனவிலும் தமிழர்களின் தேசப்பற்றைக் காணலாம்.
இம்மூவர்கள், இந்தியாவின் உண்மை நண்பர்களான ஈழத்தமிழர்களை அழிப்பதின் மூலம் பழம்பெருமை வாய்ந்த நமது நாட்டையும் அழிக்க நாம் விட முடியுமா? மேற்கண்ட செய்திகள் உண்மையாக இருந்தால் இந்திய அரசும், இந்தியாவின் மீது அன்பு கொண்ட அனைத்து அரசியல் தலைவர்களும், இந்திய மக்களும் நடுநிலையுடன் சிந்தித்து தமிழருக்கு எதிரான கொள்கையை மாற்ற வேண்டும். இலங்கை முழுதும் நம்மிடமிருந்து பறிபோகாமல் இருக்க விரைவில் இம்மாற்றம் ஏற்பட வேண்டும். விளங்கிக் கொள்ளுமா இந்திய அரசு?
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
ok nalla karuthu
இக்கட்டுரை, சீனத்திடம் இந்தியா தோற்றதில் தமிழ்நாட்டுத் தமிழர்கள், ஈழத்தமிழர்களின் (யார் நீண்ட கால நண்பன் என்பது பற்றியும் உலகளாவிய அரசியல் பற்றியும் தெளிவில்லாமல்) பங்கைப் பற்றிக் குறிப்பிடவில்லை. தமிழ் நாட்டிலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் சீனாவின் பங்கைப் பற்றிப் பேசுவது குறைவு. சீனப் பொருள்களைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தி இருந்தால் இந்திய அரசின் கை வலுப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் (பொதுவுடைமை பேசுவன உள்பட) இயக்கங்கள் சீனாவின் இந்தியாவுக்குப் பாதகமான போக்குகளைக் (முன்பும் இன்றும்) கண்டித்தது உண்டா?
இந்திரா காந்தி பங்களாதேஷ் சிக்கலைத் துணிவாகவும் திறமையாகவும் பயன்படுத்திக் கொண்டு இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்தாலும் அங்கு நடந்த இந்திய ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு நீதி வழங்கிப் பங்களாதேஷ் உடன் நட்புறவைப் பேணத் தவறி விட்டார். இன்று இங்கிலாந்தும் அமெரிக்கவும் அப்படி ஈராக்கில் தங்கள் ராணுவத்தினரின் அத்துமீறல்களுக்கு ஓரளவேனும் விசாரணை தண்டனை வழங்கி வருவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இலங்கைச் சிங்கள அரசை வழிக்குக் கொண்டு வருவதில் துணிவான தீவிரமான நடவடிக்கை எடுக்க இந்திரா காந்தி இல்லாது போனார். அதற்குக் காரணம் இந்தியாவில் இந்திய அரசு இல்லை. இந்திரா காந்தி அரசு தான் இருந்தது. இன்றும் கிட்டத்தட்ட அதே நிலை தான். கருணாநிதி அரசு என்றும் ஜெயலலிதா அரசு என்றும் உள்ளதே தவிர தமிழக அரசு இல்லை. இப்படி எல்லாம் இல்லாமல் போனதற்கு நம்மைப் போன்ற படித்த பஜனைபாடிகளே முக்கியக் காரணம்.
மேலும் நேரு முதற் கொண்டே எந்தத் தலைவரும் ‘இந்தி-யா’ / இந்துஸ்தான் என்ற சிந்தனையைத் தாண்டி இந்தியாவை உணர்வு ரீதியாகவும் (தேசியமொழி…)பொருளாதார ரீதியாகவும் (நதிகள் இணைப்பு…) ஒற்றுமைப் படுத்தும் பரந்த நோக்கம், துணிவு கொண்டிருக்கவில்லை. இன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. சமுதாய அமைப்புகளின் (நாடு, தேசியம்…) உருவாக்கம் நேர்க்கோட்டில் (லினெஅர்) இருக்காது. அது திரிபுக்கோட்டு வழியாக (னொந்லினெஅர் நய்)) அமையும் என்பதைப் புரிந்து கொண்டால் இன்று இந்தியாவை உடைப்பதை விட (தனித் தமிழ்நாடு…) இந்தியாவை முறையாகப் பலப்படுத்துவதே சரியான, ஒப்பீட்டளவில் சாத்தியமான, பாதுகாப்பான, நீண்ட கால நல நோக்கான வழியாகும். தமிழ் மொழி, இன நலன்களை நாம் தனி நாடு கண்டு காப்பாற்ற முடியாது என்பதற்கு அயர்லாந்து போன்ற நாடுகளே நல்ல எடுத்துக்காட்டாகும்.
இன்று போராட்டங்கள் வெறும் உணர்வு அடிப்படையிலும் மக்களைத் தூண்டி விட்டுத் தங்களைத் தலைவர்களாகப் பதவிக்கு, பணத்திற்குப் பேரம் பேசும் சுயநலச் சூழ்ச்சிக்காகவும் நடைபெறுகின்றன. பெரியார் ஈ.வெ.ரா.வின் போராட்டங்களைப் பயன்படுத்திக் (leverage) கொண்டு மத்திய அரசிடம் பல திட்டங்களைப் பெற்றவர் காமராசர். இன்று இந்திய அரசிற்கும் தமிழகத்திற்கும் இடையில் அத்தகைய உறவு – உரிமைப் பாலம் இல்லை.
மேற்கு நாடுகளின் வெற்றிக்குக் காரணங்களாக அறிவியல் முன்னேற்றம், சூழ்ச்சியான போர்கள், காலனித்துவக் கொள்ளைகள்… எனப் பல இருந்தாலும் அவற்றைத் தக்க வைத்துக் கொள்ளத் தங்களைத் தொடர்ந்து காலத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்வதில் தான் முக்கியமாக உள்ளது. சீனாவும் இந்தியாவும் அப்படி மாறாவிடில் தங்கள் வளர்ச்சியை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ள முடியாது. சீன, இந்திய ஆதிக்க வகுப்பாரின் ‘தேசிய நீரோட்டச்’ சூழ்ச்சிகளுக்கு அந்தந்த நாட்டு நடுத்தர மக்கள் பலியாகாமல் ‘ஒரே உலகம்’ என்ற அடிப்படையில் செயல்பட்டால் தான் இன்று மனித குலத்திற்குள்ள பல சவால்களைச் சரியாக எதிர் கொள்ள இயலும். இதில் நம்மைப் போன்ற படித்தவர்கள் தெளிவாக இருந்து நடைமுறைச் சாத்தியமான யோக்கியமாக நடந்து கொண்டால் தான் திருப்பம் நிகழும். எனவே கட்டுரையின் இறுதியில் ‘இந்திய அரசு விளங்கிக் கொள்ளுமா’ என்ற கேள்விக்கு ‘நாம் விளங்கிக் கொண்டு செயல் படுவதே’ பதிலாகும்.