மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சீர்திருத்தம் + வேலைவாய்ப்பு + வளர்ச்சி = சொர்க்கம் ?

ஆச்சாரி

Jun 30, 2012

கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் “சீர்திருத்தம் , வேலைவாய்ப்பு, வளர்ச்சி”  என்ற மூன்று வார்த்தைகளையும் கேட்டு உங்கள் காது   புளித்துப் போய் இருக்கும்.  எங்கள் ஊரில் இரண்டு பேர் தங்கள் பிள்ளைகளுக்கு சீர்திருத்தம் என  பெயரே வைத்து விட்டார்கள். கூடங்குளத்தில் “அணு உலைகள் மூலம் கடுகளவும் ஆபத்து இல்லை” என சொல்லி தன்னுடைய அரசியல் திறமையை தமிழ்  மக்களுக்கு சிரமப்பட்டு புரிய வைத்த பழுத்த அரசியல்வாதி அப்துல்கலாம் முதல், எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமலே நம்மை பத்து வருடமாக ஆளும் வணிகர் சங்கத் தலைவர் மன்மோகன் சிங்  வரை இந்த மூன்று வார்த்தைகளையும் தினமும் மந்திரம் போல உச்சரித்து வருகிறார்கள்.

எனக்கு தலையில் எதுவும் அவ்வளவாக எதுவும் உடனே ஏறாது. அதனால் இந்த ஒரு வருடமாக நமது இந்தியத் தொலைக்காட்சிகளை பார்த்து சீர்திருத்தம், வளர்ச்சி , வேலைவாய்ப்பு  என்றால் என்ன என கற்று வருகிறேன்.    இந்தியா வல்லரசாக என்னென்ன சீர்திருத்தங்கள்  தேவை , அதன் மூலம் எப்படி பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் அதனால் எப்படி வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என இப்போது நன்றாக அறிந்து கொண்டேன். நான் அறிந்ததை தமிழ் பேசும் இந்தியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

> விவசாயம் செய்வது தீவிரவாதமாக அறிவிக்கப்பட வேண்டும். விவசாயம் ஒரு தேவையற்ற , அதிகமான பொருள் ஈட்டாத ஒரு தொழில். அதனால் விவசாயம் தடை செய்யப்பட்ட தொழிலாக அறிவிக்கப்பட வேண்டும். மரபணு மாற்றம் செய்யாத   உணவை மனிதன் நேரடியாக சாப்பிடுவது  தடை செய்யப்பட வேண்டும்.

> உங்கள் வீட்டில் வடை சுட்டால் கூட அதை பிளாஸ்டிக் காகிதத்தில்   சுற்றி அதில் ஒரு விலைப்பட்டியல் ஒட்டி பின்புதான் அதைப் பிரித்து சாப்பிட வேண்டும். இல்லா விட்டால் நீங்கள் வடை சுட்ட கணக்கு இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏறாது. அப்படி ஏறாவிட்டால்  கலாம் கண்ட கனவான இந்தியா -  2020  எப்படி நனவாகும்?

> மலைகளில் வசிக்கும் பழங்குடியினர் அவர்கள் வழியில் வாழ்வதால் இந்தியாவின் பெயரைக் கெடுக்கிறார்கள். இதிலிருந்து இந்தியாவின் பெயரைக் காப்பாற்ற ஒரே வழி, அவர்கள் அனைவரையும் அவர்கள் வாழும் இடங்களில் இருந்து வெளியேற்ற வேண்டும். அந்த மலைகளில் பணக்காரர்கள் வந்து இறங்கி செல்ல வசதியாக விமான (Helicopter) தளங்கள் அமைக்கப்பட வேண்டும். உயரமான இடங்களில் இவை இருப்பதால் இந்தியாவின் வளர்ச்சி உலகம் முழுவதும் தெரியும்.

> இந்தியாவின் பல கட்சி ஆட்சி முறை வியாபாரத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது. நிலையான ஆட்சி பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம். அதனால் உடனடியாக குலுக்கல் முறையில் அரசைத் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப்பட வேண்டும். இந்த முறைப்படி “அம்பானி – டாட்டா ” என்ற இரு பெயர்கள் கொண்ட சீட்டுக்கள் மக்களுக்கு தரப்படும். உலகத்திலேயே முதல் முறையாக இந்த இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்படும். ஒருமுறை அரசு அமைந்தால்  நூறாண்டுகள் கழித்து மறு தேர்தல் நடத்தப்படும். இதனால் தேர்தல் செலவும்  மிச்சம் ஆகும்.

> நாட்டில் அனைத்து இரு வழி சாலைகளும் பதினாறு வழிச் சாலைகள் ஆக்கப்படும். அனைத்து நான்கு வழி சாலைகளும் அறுபத்தி நான்கு வழி சாலைகளாக மாற்றப்படும். இதில் குறைந்தது நூறு சதவீத சாலைகள் நான்கு அடுக்கு சாலைகளாக மாற்றப்படும். தப்பித் தவறிக் கூட நடப்பதற்கு பாதைகள் இந்தச் சாலைகளில் இருக்கக் கூடாது. இந்தச் சாலைகளில் ஒவ்வொரு குடிமகனும் ஒரு நாளில் குறைந்தது நூறு கிமீ ஒரு யந்திர வாகனத்தில் பயணம் செய்திருக்க வேண்டும். நாட்டில் மண் வெளியே தெரிவது தேசிய அவமானமாக  அறிவிக்கப்பட வேண்டும்.

> யாரும் வீட்டில் ஒருவருடன் ஒருவர் நேரில் பேசக் கூடாது. அலைபேசியில் ( மொபைல் ) தான் பேச வேண்டும். அப்படி பேசும் போது தாய் மொழியில் பேசக் கூடாது.

> ஒவ்வொரு வீட்டின் சமயலறையிலும்  ஒரு அணு உலை அமைக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு வீடும் தங்களது பலசரக்கு சாமான்கள் வாங்குவதற்கு அந்நிய முதலீட்டைப் பெற முடியும்.

> திருமணமாகாத ஆண்கள் திருமணம் செய்ய வேண்டுமென்றால் மூடி .எஸ்.பி ( Moody  , Standard and Poor )  போன்ற தர நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

> வீட்டில் இருக்கும்போது கூட அனைவரும் கோட்டும் சூட்டும் போட வேண்டும். இதற்காக மொத்த நாட்டிலும்  குளிர் சாதன வசதி செய்யப்பட வேண்டும்.

> ஏழைகள்  யாருக்கும் சொந்தமாக நிலம் இருக்கக் கூடாது. அவர்களுக்கு அதைப் பயன்படுத்த தெரியாது. அதனால் அதை அவர்கள் பணக்காரர்கள் மாளிகைகள் கட்ட கொடுத்து விட வேண்டும். நூறாண்டுகள் கழித்து அந்த மாளிகைகளில் இந்த ஏழைகளின் வாரிசுகளுக்கு காவல் இருக்கும் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

> அனைத்து மீனவர்களும் கடற்கரையை விட்டு வெளியேற வேண்டும். அந்த இடங்களில் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் சொகுசு விடுதிகள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் சில மீனவர்களுக்கு இந்த விடுதிகளில் தங்குபவர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் வேலை கிடைக்கும்.

> வெளியே சென்று விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் தடை செய்யப்பட வேண்டும். தொலைக்காட்சியின் முன் அமர்ந்து மட்டைப்பந்து IPL தொடர் பார்ப்பது பள்ளியில் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

இந்த சீர்திருத்தங்களை செய்தால் இந்தியாவின் வளர்ச்சி வருடத்திற்கு  99.9999999999 ஆக உயர்ந்துவிடும். இந்த வளர்ச்சி எப்படி இருக்கும் தெரியுமா?

>  நாட்டில் ஒரு சதவீதம் பேர் வயிறார சாப்பிட முடியும்.  அரை சதவீதம் பேர் நல்ல குடிநீர் குடிக்க முடியும். அதற்கும் குறைவான சதவீதத்தினர் கழிப்பறை பயன்படுத்த முடியும். ஆனால் நூறு சதவீதம் பேர்  இரு சக்கர வாகனம் வைத்திருக்க முடியும்.

> நாட்டில் ஒவ்வொரு அடி இடமும் பிளாஸ்டிக் குப்பையால் நிரப்பப்படும். இதன் மூலம் பல நோய்கள் உருவாகும்.  இதை சரி செய்ய மருத்துவமனைகள் நூறு அடிக்கு ஒன்று உருவாகும்.

> யாரும் நிம்மதியாக ஒரு இடத்தில் இருக்க முடியாது.  இதை சரி செய்ய மன நல மருத்துவமனைகள் நிறைய இருக்கும்.

> குடும்பம் என்று ஒன்று ஏழைகளுக்கு இருக்காது. பணக்காரர்களின் குடும்பத்தை ஏழைகள் படங்களில் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்வார்கள்.

> நாட்டில் மலைகள், ஆறு , குளம் எதுவும் இருக்கக் கூடாது. குறிப்பாக தண்ணீர் தரையில் எங்கும் ஓடவே ஓடாது. ஆனால் மதுக்கடைகளும், விபச்சார விடுதிகளும் ஊரெங்கும் பெருகி இருக்கும்.

> நாட்டில் பத்து சதவீதம் பேர் சொந்த வீடு வைத்திருப்பார்கள். அதில் 99 .99  பேர் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடனுக்கு வட்டி கட்டுவார்கள்.

> எந்த வீட்டிலும் நல்ல சாப்பாடு இருக்காது. ஆனால் வீடு முழுவதும் மின்னணு சாதனங்களின் எச்சங்கள் நிறைந்து இருக்கும்.

இந்த வளர்ச்சி உருவானால்,

> ஒவ்வொரு குடிமகனுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஆனால் குறைந்தது ஒவ்வொரு நபரும் ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் ஒவ்வொரு நபரும் குறைந்தது அறுபது வருடங்கள் படித்திருக்க வேண்டும்.

என்னய்யா சொல்கிறீர் . தலை சுற்றுகிறது, இதுவெல்லாம் செய்தால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.

ஒரு குடும்பத்தை அழித்து ஒரு கிராமத்தை  காக்கலாம்.
ஒரு கிராமத்தை அழித்து நாட்டை காக்கலாம்.
ஒரு நாட்டையே அழித்து பொருளாதாரத்தை காக்கலாம்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சீர்திருத்தம் + வேலைவாய்ப்பு + வளர்ச்சி = சொர்க்கம் ?”

அதிகம் படித்தது