மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 9

ஆச்சாரி

May 17, 2014

அதே சமயம் லாகூரில் காங்கிரசு மகாசபை கூடியது. காந்தி, ஆங்கில அரசுக்குக் கொடுத்த கால அவகாசம் முடிவடைந்துவிட்டது. குடியேற்ற மதிப்பை ஆங்கில அரசு இன்னமும் அறிவிக்கவில்லை. காந்தியின் அடுத்த நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆவலாக இருந்தனர்.

காந்தி, தான் முன்னரே அறிவித்திருந்ததை நினைவுப்படுத்தினார். பிரிட்டனுக்குக் கொடுத்த வாய்தா முடிவடைந்துவிட்டதால் இனி குடியேற்ற மதிப்பு தேவையில்லை, எங்களது தற்போதைய தேவை பரிபூரண சுதந்திரம் மட்டுமே.

போசு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் காந்தியை எதிர்த்து என்ன கூறினாரோ அதையேதான் காந்தியும் கூறுகிறார்.

காந்தியின் புதிய தீர்மானம் வெளியிடப்பட்டது. போசு இதற்காக மகிழ்ந்தாரா? ஆம் காந்தியுடன் மீண்டும் இணக்கம் வளர்ந்ததா? கிடையாது.

காந்தியின் தலைமையில் மீண்டும் கல்கத்தாவில் காங்கிரசு கட்சி கூடியது போசு, காந்தி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சுயராச்சியம் கோரும் காந்தியின் தீர்மானம் அவையில் வாசிக்கப்பட்டது. இப்போது போசின் முறை போசு முன்னர் வெளியிட்ட அதே தீர்மானத்தை காந்தியும் இப்போது வெளியிட்டதைக் கேட்ட அனைவருக்கும் திருப்தி. எல்லாரும் போசு என்ன பேசப்போகிறார் என்ற ஆர்வத்துடன் அவரை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

போசு தனது இருக்கையை விட்டு எழுந்தார். மகாத்மா காந்திக்கு எனது வணக்கம், காந்தியின் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டனர் கூட்டத்தினர். ஆனால் இதில் ஒரு திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. ஆரம்பித்துவிட்டது மீண்டும் காந்தியோடு மல்லுக்கட்டப்போகிறாரா? இருவரும் இணையவே மாட்டார்களா?

போசு தொடர்ந்து பேசினார். ஆங்கில ஆட்சியை நாம் மதிக்கத் தேவையில்லை. ஆங்கில அரசு இந்திய மக்களுக்கு விரோதமான அரசு எதற்காக நாம் அவர்களோடு பேச்சுவார்த்தையில் இருக்கவேண்டும்? நம்மைத் திணறடிக்கும் அவர்களை நாமும் திணறடிக்க வேண்டாமா?.

இவர் ஏன் காந்தி தேர்ந்தெடுத்த வழக்கிற்கு முற்றிலும் நேர் எதிரான வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்? இவருக்கு ஏன் இவ்வளவு போராட்ட குணம்?

ஆங்கில அரசை அகற்றுவோம் சுதேசி அரசை உருவாக்குவோம், அவர்களை நியமிப்போம்.

போசு அடித்தொண்டையில் குரல் கொடுத்துவிட்டு அமர்ந்து கொண்டார்.

அடுத்து காந்தி

“சுபாசு கூறிய சிந்தனைகள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் அவற்றைச் செயல்படுத்துவதற்கான தருணம் இதுவல்ல. காலம் இன்னமும் கனியவில்லை என்றே நான் நினைக்கிறேன்” என்ற பின்னர் தன் கையோடு கொண்டு வந்திருந்த வாழ்த்து அறிக்கையை வாசித்தார் காந்தி.

அது புகைவண்டி வெடி விபத்திலிருந்து தப்பிய வைசிராய் தம்பதிகளையும் அவரது சகாக்களையும் மற்றும் அந்த வண்டியிலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய சிப்பந்திகளையும் காங்கிரசு மகாசபை வாழ்த்துகிறது என்றார்.

அனைவரும் போசைத் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் எதிர் பார்ப்பதைப் போல் போசு இறுக்கமான முகபாவத்துடன் காந்தியைப் பார்த்துக்கொண்டிருந்தார். வைசிராயைக் காந்தி வாழ்த்தியது பிடிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

போசின் திருத்தமும், காந்தியின் தீர்மானமும் விவாதிக்கப்பட்டன. என்ன நடக்கும்  என்று போசுக்கு  நன்றாகவே தெரியும் வழக்கம்போல் காந்தியின் தீர்மானத்தைத் தான் முன்மொழியப் போகிறார்கள் அப்படித்தான் நடந்தது.

போசு எதிர்பாராத மற்றொரு சம்பவம் நடந்தது. காரியக் கமிட்டிக்கு உறுப்பினர்களைத் தேடும் பணி ஜனவரி 2-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. போசிடம் அவரது கட்சிப் பிரதிநிதிகளும் சபையில் இல்லை. அந்தச் சமயம் பார்த்துப் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போசின் பெயர் விட்டுப்போனது. அவரது இடத்திற்கு சென்குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டார் அதேபோல் ஸ்ரீனிவாச அய்யங்காருக்குப் பதிலாக ராஜாஜி இணைத்துக் கொள்ளப்பட்டார்.

தீவிரவாதிகள் என்று கருதப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதற்காக வேண்டுமென்றே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைக் கூறினார்.

காந்தி இதை ஒரு மோதலாகவே எடுத்துக் கொண்டாரா? போசை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தாரா?

அடுத்து என்ன செய்யவேண்டும் என்று போசுக்குத் தெரிந்துவிட்டது.

ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார் போசு.

காங்கிரசு கட்சி மதவாதிகளின் கைக்குப் போய்விட்டது. இனி நமக்கு அங்கு வேலை இல்லை.

காங்கிரசு ஜனநாயகக் கட்சி என்னும் பெயரில் ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்டது. ஸ்ரீனிவாச அய்யங்கார் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். காந்தியை எதிர்த்து காங்கிரசை எதிர்த்து ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்ட விடயம் பரவலாக அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்துகிறது.

தனது கொள்கைகளைத் திட்டவட்டமாக அறிவித்தார் போசு.

எங்களது லட்சியம் பரிபூரண சுதந்திரம் இந்த லட்சியத்தை அடைவதற்காக எந்தக் கட்சியுடனும், எந்தக் கட்சியின் கொள்கை நடவடிக்கைகள் ஆகியவைகளுடனும் ஒத்துழைத்து லட்சியத்தைத் விரைவில் கொண்டு வந்து சேர்க்கும்படியான முறைகளைக் கையாளுவோம். இதுவே காங்கிரசு ஜனநாயகக் கட்சியின் கொள்கை.

மற்றொருபுறம் காந்தி வட்டமேசை மாநாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். எதிர்பார்த்ததைப்போலவே போசின் பெயர் விடுபட்டுப்போனது.

ஏன் என்று கேட்கப்பட்டபோது காந்தி ஒரே வார்த்தையில் அளித்த பதில் குணப்பொருத்தமில்லை.

குணப்பொருத்தமில்லாத இரண்டு தனித்தனிக் குழுக்கள் உருவாகிவிட்டதை மக்கள் உணர்ந்துகொண்டனர்.

காந்தி தலைமையில் மதவாத காங்கிரசு, போசு தலைமையில் ஒரு தீவிர இயக்கம்.

அயர்லாந்தையும், பிரிட்டன் அடிமைப்படுத்தி இந்தியாவில் சுரண்டுவதைப் போன்று செய்துவந்தது முதல் உலகப்போர். மூண்டபோது அயர்லாந்து இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயன்றது. பிரிட்டன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே, பிரிட்டனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த முடிவு செய்தது அயர்லாந்து. போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் டிவெலரா. பேச்சுவார்த்தை உடன்படிக்கை எல்லாம் எடுபடாது என்று துப்பாக்கியைக் கையில் தூக்கிக் கொண்டார் இவர்.

கையில் கிடைக்கும் ஆயுதத்தை எல்லோரும் எடுத்துக் கொள்ளுங்கள் நமது போர் தொடங்கிவிட்டது என்ற டிவெலராவின் முழக்கம் அயர்லாந்து மக்களை உசுப்பேற்றிவிட்டது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர்.

பிரிட்டன் இந்தத் தாக்குதலை எதிர்பாக்கவில்லை. இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு தனது துருப்புகளைக் குவித்தது. கிட்டத்தட்ட புரட்சியாளர்களை    ஒடுக்கிவிட்டார்கள் என்றாலும் ஆரம்பத்தில் தொடங்கிய நெருப்புப்பொறி அணைந்துவிடவில்லை.

ஒரு பகுதியில் அழுத்தினால் வேறொரு பகுதியில் பற்றிக்கொண்டது. கிளர்ச்சிக்காரர்கள் துணிந்து ஒரு சுதந்திர அரசை ஏற்படுத்தினார்கள்.

இதுதான் மெய்யான அயர்லாந்து ஐரிசு மக்களின் பாதுகாவலன்  என்று பிரகடனப்படுத்தினர். பிரிட்டன் நம்மைச் சுரண்டுகிறது, நமது மண்ணில் அந்நிய அரசு உருவாவதை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று அறிவித்தது.

ஒரு பக்கம் புரட்சியாளர்களின் அரசாங்கம், மறுபக்கம் பிரிட்டனின் அரசாங்கம் ஒரே சமயத்தில் இருவேறு அரசாங்கங்கள் ஒரு நாட்டை நிர்வகிக்கும் விந்தை ஏற்பட்டது.

டிவெலரா முதல் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்குப் பிற நாடுகளில் நல்ல செல்வாக்கு இருந்தது. அமெரிக்கா சென்றபோது பிரஸிடெண்ட் டிவெலரா என்றே இவர் அழைக்கப்பட்டார்.

டிவெலராவின் அரசை ஒழிக்க பிரிட்டன் அனைத்து வழிகளையும் கையாண்டது. இவரை ஏற்றுக்கொள்ள வேண்டாம், இவர்கள் சட்ட விரோதமானவர்கள், இவர்களது ஆட்சி சட்டவிரோதமானது என்றெல்லாம் கூப்பாடு போட்டுப் பார்த்தது. கண்ணில் பட்டவர்களைப் பிடித்துச் சிறையில் தள்ளியது, பயமுறுத்திப் பார்த்தது. ஆனால் பிரிட்டனில் பாச்சா எதுவும் பலிக்கவில்லை. டிவெலராவின் செல்வாக்கு உயர்ந்துகொண்டே போனது இறுதியில் வேறு வழியின்றி அரைகுறை மனத்துடன் புரட்சிகார அரசை அங்கீகரிக்கத் தொடங்கினார்கள். வீம்புக்குத் தொடங்கப்பட்ட அரசு நிஜஅரசாங்கமாக மாறியது. பிரிட்டன் அயர்லாந்தை விடுவித்தது இதுதான்! இதுதான்! இதைத்தான் நான் சொன்னேன்! என்று துள்ளினார் போசு. இப்படித்தான் நாமும் செய்ய வேண்டும் ஆனால் காந்திக்கு இது புரியவில்லையே என்று வருந்தினார் போசு.

காந்தியைப்போல் சாத்வீகக் கொள்கை பேசிக்கொண்டிருந்தால் அயர்லாந்து ஒரு சுதந்திர நாடாக மாறியிருக்குமா? என்று கேள்வி எழுப்பினார் ஒத்துழையாமை இயக்கம், அகிம்சை எல்லாம் சரி ஆனால் ராட்சசப் படைகளும் பீரங்கிகளும் வைத்திருக்கும் பிரிட்டன் போன்ற சக்தியுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது உதவாத காரியம் என்றார் போசு.

That is, if the student cannot momentous source easily generate a good question, then it may be necessary to reread the text section or consult another source

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 9”

அதிகம் படித்தது