மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 12

ஆச்சாரி

Jun 7, 2014

subash12-1மத்திய பிரதேசத்தில் உள்ள சியோனி என்னும் பகுதியிலுள்ள சிறையில் போசு வைக்கப்பட்டார். ஒரு சில வாரங்களில் அவரது சகோதரர் சரத் சந்திராவும் கைது செய்யப்பட்டார். இவர் கல்கத்தாவில் வழக்கறிஞராக அவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் தன் சகோதரனிடம் ஆலோசனை கேட்பது போசின் வழக்கம். இந்த இருவரையும் கைது செய்து அவர்களை ஒன்று சேர்த்து வைக்கும் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது பிரிட்டன்.

subash12-1 v.j.patelசிறை இருவரையும் வாட்டி வதைத்தது. மனதளவில் முன்னரே பாதிக்கப்பட்டிருந்த போசு துவண்டு போனார். அவரது மோசமான உடல்நிலையைக் கண்டு சிறை நிர்வாகமே கலக்கம் அடைந்தது. சியோனிலிருந்து அவரை ஜபல்பூருக்கு மாற்றினார்கள். முன்னேற்றம் இல்லை. ஒவ்வொரு சிறையாக மாற்றிக்கொண்டே வந்தார்கள்,பயனில்லை. இனி ஒரு நிமிடம் சிறையில் வைத்திருந்தாலும் விடயம் விபரீதமாகிவிடும் என்கிற கட்டத்தில் வேறு வழியில்லாமல் போசை ஜரோப்பாவிற்கு அனுப்பி வைக்க சிறை நிர்வாகம் ஒப்புக்கொண்டது. மருத்துவ செலவுகளுக்கு சல்லி பைசா கூடக் கொடுக்க மாட்டோம் என்று முதலிலேயே கைவிரித்துவிட்ட பிறகு அவரை வெளியே விட்டது. இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னால் தனது பெற்றோரை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று போசு விரும்பினார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. பிப்ரவரி 13,1933 அன்று போசு ஐரோப்பா நோக்கிப் பயணமானார். சர்தார் வல்லபாய் படேலின் சகோதரர் பி.ஜே.படேல் வியன்னாவில்தான் அப்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். போசும் அவருடன் தங்கிக்கொண்டார். சிறந்த மருத்துவ சேவைக்கு வியன்னா பெயர் பெற்றிருப்பது பொருத்தமானதுதான் என்று போசு நினைத்துக்கொண்டார்.

மருத்துவர்கள் அவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார்கள். வெகு விரைவில போசில் உடல்நிலை தேறியது. சுறுசுறுப்புடன் இயங்க ஆரம்பித்தார். போலந்து, செக்கஸ்லோவாக்கியா, ஹங்கேரி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் என்று ஐரோப்பா முழுவதும் சூறாவளியாகச் சுற்றினார்.

ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் மட்டும் போகவே கூடாது என்று பிரிட்டிஷ்அரசு முன்னரே போசை எச்சரித்திருந்தது. காரணம் இந்த இரு நாடுகளிலும் இந்திய மாணவர்கள் மிகுதியான அளவில் தங்கியிருந்தனர். போசோ ஒரு தீவிரவாதி,இந்திய மாணவர்களைப் பார்த்ததும் இவர் ஏதாவது பேசப்போய் அவர்களும் போசிடம் இணைந்து ஏதாவது ஆபத்தான வேலையில் ஈடுபட்டால் என்ன செய்வது?

ஊர் சுற்றிப் பார்ப்பதல்ல அவரது பயணத்தின் நோக்கம். ஒவ்வொரு நாட்டின் அரசியலமைப்பையும் அரசாங்கம் செயல்படும் விதத்தையும் கூர்மையுடன் கவனித்தார். மார்ச் 6, 1933வெனிஸ் வந்து சேர்ந்தார். வெனிஸ் வாசிகளுக்கு போசு ஓரளவிற்குப் பரீட்சயமையமானவராக இருந்தார். இந்தியாவின் முக்கியத் தலைவர்,காங்கிரசு கட்சி பிரமுகர் என்கிற அளவில் அவரைச் சற்று மரியாதையோடு பார்த்தனர். இத்தாலி ஹிந்துஸ்தான் அமைப்பு, அவரைத் தடபுடலாக வரவேற்றது. எங்கோ போயிருந்தாலும் போசு இந்தியாவைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்தார். காந்தி ஒத்துழையாமையைக் கைவிட்டார் என்றும்,ஹரிஜன சேவையில் இறங்கிவிட்டார் என்றும் செய்திகள் வந்தன. வியன்னாவிலிருந்தபடியே ஓர் அறிக்கையை வெளியிட்டார் போசு.

subash12-4தனது ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதன் மூலம் தனது தோல்வியைத் தானே ஒப்புக்கொண்டிருக்கிறார் காந்திஜி. இவர் நமக்கு ஒரு தேசியத் தலைவர் என்ற முறையில் நமக்கு தோல்வியாகவே விளங்குகிறார். காங்கிரசைப் புதுப்பிக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. புதிய கொள்கைகளை நாம் உருவாக்க வேண்டும், அதற்கு ஒரு புதிய தலைவர் இருக்க வேண்டியது அவசியம். காந்தி நீண்ட காலமாக ஒரு கொள்கையைக் கடைபிடித்து வருகிறார். அந்தக் கொள்கையிலிருந்து அவர் வெளியேறி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவார் என்றும் நாம் எதிர்பார்க்க முடியாது.

காங்கிரசையே புதுப்பித்து அமைத்துவிட்டால் தேசத்திற்கு அது பெரும் நன்மையாகும். தவறினால் காங்கிரசுக்குள்ளே ஒரு புதுக்கட்சி தோன்றும். சூன் மாதம் லண்டனில் நடைபெற்ற இந்தியர்களின் மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும்படி போசிற்கு அழைப்பு வந்தது. ஆனால் போசை போகவிடாமல் பிரிட்டிசு அரசு தடுத்து நிறுத்தியது. போசு தனது மாநாட்டு உரையை மட்டும் அனுப்பி வைத்தார்.

நமது போராட்டத்திற்கு ஒரு கவர்ச்சி இல்லை,ராஜதந்திரம் துளிகூட கிடையாது,காந்தி-இர்வினுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தவறானது, சட்ட மறுப்பை நிறுத்தியதும் பெரிய தவறு, தேசத்திற்கே பெரும் தீங்கு. கடந்த 13 ஆண்டு காலமாக நாம் செய்து வரும் பணிகள் அனுபவித்து வரும் சிரமங்கள், செய்யும் தியாகங்கள் அனைத்தும் வீணாகிவிட்டன.

subash12-5பிரிட்டன் வேறு ஒருநாடு,நமக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது,அவர்களுடன் எதற்காக நாம் சமரசம் செய்து கொள்ள வேண்டும்? இப்படிப்பட்ட ஓர் எண்ணம் நமக்கு ஏற்பட்டிருக்கவே கூடாது,இல்லையா. இனி நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். மாபெரும் போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும் கூடியவிரைவில். 1934-ல் ஆஸ்திரியாவிலுள்ள பாட்கஸ்டீன் (Badgastein) என்னும் பகுதியில்தான் போசு எமிலியை முதன் முதலாகச் சந்தித்தார். போசின் காரியதரசியாக எமிலி நியமிக்கப்பட்டிருந்தார். எமிலி ஒரு ஆஸ்திரியப்பெண்,வசதி குறைவான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகவே போசு எமிலிக்குச் சிறு சிறு பணிகளை ஒதுக்குவார். இவர்கள் சந்தித்துக் கொள்வது மிக அரிதாகவே இருக்கும். இந்தியாவிலிருந்து அவசரமாக ஒரு புத்தகம் தேவைப்படுகிறது எப்படியாவது வாங்கி இந்த முகவரிக்கு அனுப்பு என்று எழுதுவார். எப்படியாவது அந்தப் புத்தகத்தை வாங்கி போசுக்கு அனுப்பிவைப்பார் எமிலி.

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் எமிலிக்குக் கடிதம் எழுதுவதை மட்டும் போசு நிறுத்திக்கொள்ளவேயில்லை. 1934 முதல் 1942 வரை இருவரும் பரிமாறிக்கொண்ட கடிதங்களின் எண்ணிக்கை மட்டும் 162.

subash12-7

கீழ்கண்ட செய்யுளை மட்டும் ஜெர்மனியில் அனுப்புவாயா? என்று ஒரு செய்யுளை அனுப்புவார். இதோ நீங்கள் கேட்ட ஜெர்மனிய செய்யுள் என்று எமிலி எழுதி அனுப்புவார்.

ஓர் பத்திரிகையாளராக வேண்டும் என்ற கனவு எமலியிடம் இருந்தது. எமிலிக்கு அந்த ஆசையைத் தூண்டிவிட்டது வேறுயாருமல்ல,போசுதான். ஆஸ்திரியப் பெண்ணான எமிலிக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. இருந்தாலும் அவரைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதும்படி ஊக்குவிப்பார். போசு எந்தெந்தப் பத்திரிகைகளுக்கு எந்த மாதிரியான கட்டுரைகளை அனுப்ப வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடுவார். தான் வாசிக்கும் செய்தித்தாளிலிருந்து தேவைப்படும் செய்திகளைக் கத்தரித்து அனுப்புவார். இந்த செய்திகளைக் கட்டுரையாக மாற்றி சென்னையிலுள்ள தி இந்துவிற்கு அனுப்பு, அவர்கள் கட்டாயம் இதை விரும்புவார்கள் என்று எழுதி அனுப்புவார். முக்கிய வரிகளை அடிக்கோடிட்டு அனுப்புவார், இந்தியப் பெயர்களுக்குத் தகுந்த ஆங்கிலப் பதங்களைத் தெளிவாகக் குறிப்பிடுவார்.

இந்தியப் போராட்டம் எனும் புத்தகத்திற்கு நவம்பர் 29, 1934ல் போசு எழுதிய முன்னுரையில் அவர் குறிப்பாக நன்றி தெரிவித்திருந்தது எமிலிக்கு மட்டுமே.

ஒரு முறை பால்கன் யுத்தம் பற்றி ஒரு கட்டுரை எழுதி போசின் பார்வைக்கு அனுப்பியிருந்தார் எமிலி. அதை வாசித்துப் பார்த்து போசு பொரிந்து தள்ளிவிட்டார். உன்னிடமிருந்து இப்படி ஒரு கட்டுரையை நான் எதிர்பார்க்கவில்லை,உன் ஆங்கிலம் மிக மிக மோசமாக இருக்கிறது,உன்னுடைய மொழிநடை சரியில்லை. நீ குறிப்பிடும் விவரங்கள் தவறு என்று தொடங்கி எமிலி செய்த ஒவ்வொரு தவரையும் வரிசையாகச் சுட்டிக்காட்டுகிறார் போசு. ஆனால் அடுத்த கடிதத்திலேயே அமைதியாகிவிடுகிறார். ஆங்கிலம் உன்னுடைய சொந்த மொழி அல்ல என்று எனக்குத் தெரியும். ஆனால் அப்படியிருந்தும் நீ ஓரளவிற்கு நல்ல ஆங்கிலத்தையே பயன்படுத்துகிறாய், உனக்கு ஆங்கிலம் தெரிந்த அளவிற்கு எனக்கு ஜெர்மனி தெரிந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்! என்று ஆச்சரியப்படுகிறார். இயன்றபோதெல்லாம் எமிலிக்குப் பணம் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் போசு. தேவைக்கு மீறி எமிலி எப்போதாவது செலவு செய்தால் அவரைக் கடிந்துகொள்ளவும் போசு தயங்குவதில்லை.

என்னுடைய கருப்பு மேல் கோட்டை அனுப்பு என்று கேட்பார் போசு. எமிலி அவசர அவசரமாக அதை எக்ஸ்பிரஸ் தபாலில் அனுப்பிவைப்பார்.

இதை ஏன் எக்ஸ்பிரஸில் அனுப்பினாய் இது அவ்வளவு முக்கியமா? ஏன் அனாவசியமாக பணத்தை வாரி இறைக்கிறாய்? என்று கத்துவார். பிறகு அமைதியாக விஸ்வேஸ்வரய்யாவின் இந்தியப் பொருளாதாரம் புத்தகத்தை ஏதோ ஒரு பெட்டியில் வைத்திருக்கிறேன், தேடியெடுத்து அனுப்பிவைக்கவும் என்பார். இங்கு பொழுதே போகவில்லை ஒரு கிராஃபோன் கருவி மட்டும் இருக்கிறது ஏதாவது நல்ல ரெக்கார்டுகள் இருந்தால் சொல் என்று ஆலோசனை கேட்பார். விவேகானந்தரின் படைப்புகளைப் படி, பகவத்கீதை படி பெரும்பாலும் உனக்குப் புரியாது. எனக்கே கீதையில் பல பகுதிகளுக்குப் பொருள் தெரியாது இருந்தாலும் இயன்ற வரை புரிந்துகொள்ள முயற்சிசெய்! என்று உற்சாகமூட்டுவார். உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் அதைப் பற்றித் தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். எல்லா நாட்டுப்பத்திரிகைகளையும் தேடிப்பிடித்துப் படித்தார். ஒருமுறை எமிலி அதிர்ஷ்டம் அளிக்கும் சில இலைகளைக் கத்தரித்து போசிற்கு அனுப்பியிருந்தார்.

இதை வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும், நான் பரிசோதித்துப் பார்த்துவிட்டேன் உங்களுக்காக இப்போது இந்த இலைகளை அனுப்பி வைத்திருக்கிறேன் தங்களுடைய பர்சில் வைத்துக்கொள்ளவும் என்று எழுதியிருந்தார். போசு அளித்த பதில் இதுதான்.

இந்தியாவில் குவியல் குவியலாக மூடநம்பிக்கைகள் நிறைந்திருக்கின்றன. எனக்கு அவற்றில் எதுவொன்றின் மீதும் நம்பிக்கை இருந்ததில்லை. இந்தியா மட்டும்தான் மூடநம்பிக்கைக்குச் சொந்தமான நாடு என்று இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் உனக்கும் கூட இப்படி சில நம்பிக்கைகள் இருக்கும் என்பது சுவாரசியமாக உள்ளது. உன்னுடைய உணர்வுகளை எந்த வகையிலாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். போசு எமிலியை எத்தனை ஆழமாகக் காதலித்தார் என்பதைத் தெரிந்துகொள்ள ஜனவரி 25,1935 அன்று அவர் எழுதிய இந்த ஒரு கடிதம் போதும். உன்னுடைய தொலைபேசி எண்ணை மறந்து விட்டிருப்பேன் என்று நினைக்கிறாயா? அதெப்படி முடியும்? அடுத்த வரியில் போசு இப்படி எழுதுகிறார். என்னுடைய பிறந்த நாளை எனக்கு நினைவூட்டியதற்கு மிக்க நன்றி என்னுடைய பிறந்த நாள் என்றைக்கு என்பதே எனக்கு மறந்து விட்டது.

-தொடரும்

As a general rule, teens care about their privacy and don’t want you butting in where you’re not wanted and few things will turn your relationship sour faster than the thought that you don’t trust them and why not check there want to see everything they’re doing

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 12”

அதிகம் படித்தது