மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 8

ஆச்சாரி

May 10, 2014

“இந்தியாவிற்கு சுயாட்சி வழங்குவதா?, விளையாடுகிறீர்களா? முதலில் சுயாட்சி என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியுமா?. அவ்வளவு ஏன்?, குறைந்தது ஒரு அரசியல் சட்டம் வடிவமைக்கவாவது தெரியுமா?, அதற்கான தகுதி அவர்களுக்கு இருக்கிறதா?, வழிவழியாக ஓர் அரசனின் கீழ் அடிமையாக இருந்தவர்கள்தானே?”

இவ்வாறு கூறியவர் இந்திய மந்திரியாக இருந்த பர்க்கன் ஹெட்.

ஏற்கனவே கொந்தளித்துக் கொண்டிருந்த மக்களுக்கு இந்தப் பேச்சு மேலும் கோபம் அடையச் செய்தது.

வெள்ளைக்கார மந்திரியின் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று காங்கிரசு துடித்தது. டிசம்பர்  1928ம் ஆண்டு காந்தியின் தலைமையில் கல்கத்தாவில் காங்கிரஸ் கட்சி மாநாடு கூடியது. மிகுந்த உற்சாகத்துடன் தயாரானார் போசு. இரண்டு முக்கிய எதிர்பார்ப்புகளே அவரது உற்சாகத்திற்குக் காரணம். ஒன்று, பிரிட்டிசாருக்கு எதிராக மிகக் கடுமையான தீர்மானத்தை காங்கிரசு நிறைவேற்றுவதை நேரடியாகக் காணலாம். இரண்டாவது, காந்தி, மோதிலால் நேரு, சவகர்லால் நேரு உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேருக்கு நேர் சந்தித்து உரையாடலாம்.

அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தியது போசு தான், மக்களை ஒன்றுபடுத்தியதும் அவர்தான். மேடை அமைப்பது முதற்கொண்டு அத்தனை வேலைகளையும் பார்த்துப் பார்த்துச் செய்தார். ஓடி ஓடி உபசரித்தார், வந்திருந்தவர்கள் அனைவரும் மூக்கின் மீது விரலை வைத்து ஆச்சரியப்பட்டனர். விசயலட்சுமி பண்டிட் தன் தந்தை மோதிலால் நேருவுடன் வந்தபொழுது கல்கத்தாவின் அங்குள்ள உற்சாகமான வரவேற்பு அவரைக் கவர்ந்தது. சந்தேகமேயில்லாமல் போசு கல்கத்தாவின் கதாநாயகன்தான் என்றார் அவர்.

முதலில் மோதிலால் நேரு, தான் கையோடு கொண்டு வந்திருந்த தீர்மானத்தை வாசித்துக்காட்டினார். அதன் சாராம்சம் இதுதான், “குடியேற்ற நாடு என்னும் நிலையை பிரிட்டன் வழங்க வேண்டும் அதுவே எங்களுக்குப் போதுமானது” என்றதும் அதிர்ந்து போனார் போசு. இப்படி ஒரு தீர்மானத்தை காங்கிரசு முன்மொழியும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை அவர். மோதிலால் நேரு அந்த அறிக்கையைப் படிக்கப் படிக்க போசிற்கு கோபம் உச்சியைப் பிளந்து கொண்டு சென்றது.

இந்தியாவிற்கு வேண்டியது குடியேற்ற நாடு எனும் நிலை (Dominion Status) அல்ல, பரிபூரண சுதந்திரம், சுயாட்சி. குடியேற்ற நிலை கேட்கும் காலம் எப்போதோ மலையேறிவிட்டது. கூட்டமைப்பு முறையில் பரிபூரண சுதந்திரம் மட்டுமே நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பது போசின் தீர்க்கமான முடிவு. முழுமுற்றான சுயாட்சி உரிமையைக் கோரியே போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதிலும் அவருக்குச் சந்தேகம் இருந்ததில்லை.

காந்தியை ஒரு முறை பார்த்தார் போசு, பிறகு நேருவை, பிறகு கூட்டத்தை ஒரு வினாடி சிந்தித்துவிட்டு திடீரென்று எழுந்து நின்றார். இந்தத் தீர்மானத்தில் எங்களுக்குத் துளி சம்மதமும் கிடையாது, இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார் போசு.

குரலின் திசையில் திரும்பினார் காந்தி, சிறிது நேரம் போசை கண் அசைவின்றி அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார். ஐ.சி.எஸ் (I.C.S) வேலையைத் துறந்துவிட்டு அடுத்து என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் என்று கைகளைக் கட்டிக்கொண்டு தன் முன்னால் பணிவுடன் வந்து நின்ற இளைஞனா இவன்?.

காந்தி தனது தீர்மானத்தை முன்வைத்தார். “1929 டிசம்பர்  31-ம் தேதிக்குள் பிரிட்டிசார் இந்தியாவிற்குக் குடியேற்ற நாடு எனும்(மதிப்பை) கொடுத்தால், காங்கிரசு மகாசபை அதை ஒப்புக் கொள்ளும். இல்லாவிட்டால் காங்கிரசு பரிபூரண சுயராச்சியத்தையே கோரி நிற்கும். இதற்குக் குறைவாக எதைக் கொடுத்தாலும் ஏற்காது”.

தவறான கோரிக்கை, இதை நிறைவேற்றுவதற்கு ஆங்கிலேயரிடமே அனுமதி கேட்டது அதைவிடத் தவறானது. 1929 வரை கால அவகாசம் முட்டாள்தனத்தின் உச்சம், மொத்தத்தில் காந்தியின் தீர்மானம் போசிற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. கோரிக்கை, கோரிக்கைக்கு மேல் கோரிக்கை என்று இப்படியே காலம் தள்ளிவிடத்தான் காங்கிரசு லாயக்கு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் போசு.

ஆனால் காந்தியின் தீர்மானம் நிறைவேறியது.

காந்திக்கும் போசிற்கும் இடையே ஒரு சீனப் பெருஞ்சுவர் மளமளவென உருவானது.

கல்கத்தா காங்கிரசு தன்னைக் கவரவில்லை என்றார் காந்தி. சர்க்கசுக்கு திரள்வதைப் போல் கூட்டம் திரண்டிருக்கிறது. நடுவே சர்க்கசில் அமைக்கப்பட்டதைப் போன்ற ஒரு காங்கிரசு மேடை என்று கடிந்துக் கொண்டார்.

இத்தனைப் பெரிய கூட்டத்தைச் செம்மைப்படுத்தி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்ட போசைப் பாராட்ட வேண்டும் என்று காந்தி நினைக்கவில்லை மாறாக கிண்டலே செய்தார்.

அவரைத் யங் இந்தியாவில் இப்படி எழுதினார்.

அவர்கள் ஐரோப்பிய ஆடைகளை அணிந்திருந்தார்கள், இது எனக்கு வேதனையளிக்கிறது. ஒரு நாடே ஏழ்மையில் வாடிக் கொண்டிருக்கையில் இத்தனைப் பிரம்மாண்டமாகச் செலவு செய்து இந்த மாநாட்டை நடத்தியிருக்க வேண்டுமா?

காந்திக்கு எதிராக இளம் எதிர்ப்பாளர்கள் கட்சிக்குள்ளே உருவாகி விட்டனர் என்ற செய்தி பல  இடங்களில் பரவியது.

போசிற்குக் கிடைத்த ஒரு ஆறுதல், இவரைப் போலவே சவகர்லால் நேருவும் குடியேற்ற நாடு  கோரிக்கையை எதிர்த்ததுதான். சுயாட்சி மட்டுமே தேவை அதுவும் உடனடியாக என்பதில் நேருவும் பிடிவாதமாக இருந்தார். இருவரும் மக்களிடையே தீவிரமாக பிரச்சாரம் செய்யத்  தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து “விடுதலைச் சங்கம்” என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். இதனால் இருவருக்கும் தீவிரவாதிகள் என்னும் முத்திரை குத்தப்பட்டது. ஆளானப்பட்ட காங்கிரசையே எதிர்க்கிறார்களே என்று மக்கள் குழப்பத்துடனும் அச்சத்துடனும் இவர்களைப் பார்த்தனர்.

ஆங்கிலேயரின் அடாவடிப் பிரச்சாரங்களை ஒவ்வொன்றாகத் தேடிப்பிடித்து நசுக்கினார் போசு. நாங்கள் வந்துதான் இந்தியாவை முன்னேற்றினோம், நாங்கள்தான் கல்வியைக் கொண்டு வந்தோம், சனநாயகம் என்றால் என்ன என்றே இந்தியாவிற்குத் தெரியாது என்று பீற்றிக்கொண்டிருந்த துரைமார்களை ஒரு பிடி பிடித்தார்.

வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்னால் இந்தியா ஒன்றும் காட்டுமிராண்டித்தனமாக இருக்கவில்லை. ஓர் அரசனின் கீழ் வாழ்ந்தாலும் அரசன், குடிமக்களுக்காகவே வாழ்ந்தான், ஆண்டான். எங்களை நிர்வாகித்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும். சனநாயகம் என்பதை மேலைநாட்டார்தான் கண்டுபிடித்ததாகக் கூறுவது முழுப் பொய். அது உரிமை, சொத்து எங்களது என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது.

இந்தியாவின் பழைய சரித்திரத்தை ஆராய்ந்தால் இங்கு சனநாயக ரீதியில் ஆட்சி இயங்கி வந்தது என்பதைக் காணலாம். சனநாயகம் மட்டுமல்ல தீவிரமான இதர அரசுக் கொள்கைகள் கூட இந்தியாவில் முன்பு இருந்திருக்கின்றன. பொதுவுடைமை கூட வெள்ளையர்களின் ஏகபோக கொள்கையல்ல, அதுவும் இந்தியாவில் முன்பே இருந்திருக்கிறது என்றார்.

கல்கத்தா மாநாட்டில் காந்தி முன்வைத்த தீர்மானத்தை ஆங்கிலேயர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்.

1929 அக்டோபர் 29ம் தேதி லார்ட் இர்வின் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

1917ல் அரசு என்ன வாக்குறுதி கொடுத்தார்களோ அதைத் திரும்பவும் கூறுவதற்கு எனக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள். அதாவது இந்தியாவிற்கு குடியேற்ற நாடு அந்தஸ்து தருவதுதான் எங்களது நோக்கம். சைமன் கமிஷன் அறிக்கை விரைவில் வெளியாகிவிடும். அதன் பிறகு லண்டனில் வட்ட மேசை மாநாட்டை இந்தியத் தலைவர்களைக் கொண்டு கூட்டுவதாக மன்னர், அரசிற்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.

பரவாயில்லையே அரசு சமரசத்திற்குத் தயாராக இருக்கிறதே என்று காந்தி மகிழ்ந்தார்.

ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. டிசம்பர் 23 அன்று அந்தப் புகைவண்டி புது தில்லியை நெருங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று வெடிச்சத்தம். வண்டியின் ஒரு பகுதி வெடித்துச் சிதறியது. அதில் பயணித்துக் கொண்டிருந்த வைசிராய் மயிரிழையில் உயிர் தப்பினார்.

       -தொடரும்

It is believed that teenagers log onto social media sites or apps more than ten times free cell phone gps tracker by celltrackingapps.com/ per day

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 8”

அதிகம் படித்தது