மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னைத் துறைமுகம் – ஒரு பார்வை

ஆச்சாரி

Dec 1, 2012

சென்னை மாநகருக்கென்று பல சிறப்புக்கள் உண்டு. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று சென்னை மாநகரின் மிகப் பழமை வாய்ந்த துறைமுகம். இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் மும்பைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை வகிக்கும் இத்துறைமுகம், பல விதங்களில் சிறப்பு வாய்ந்தது. தென் இந்தியாவின் நுழைவாயில் என்ற பெருமை  சென்னைக்கு கிடைக்க இந்த துறைமுகம் தான் காரணம். மேலும், தென் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக இது விளங்குகிறது என்பதில் மாற்று கருத்தில்லை.

இந்தியாவில் உள்ள 12 துறைமுகங்களில் 3 வது பழமையான ஒன்றாக திகழும் இது, 125 வருடங்களுக்கு  மேலாக பயன்பாட்டில் உள்ளது. எனினும், 1639 ம் ஆண்டிலிருந்தே இங்கு கடல் வழி போக்குவரத்து துவங்கிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருடம் முழுக்க, நான்கு காலநிலைகளிலும் இயங்கும் இந்த செயற்கை துறைமுகம், முதலில், பயணிகள் போக்குவரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்கியது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல ஆசிய நாடுகளோடு பயணிகள் போக்குவரத்தே இங்கு மும்முரமாக நடந்து வந்தது. பிறகு, சிறிய அளவில் சரக்கு ஏற்றுமதி தொடங்கி, நாளடைவில், மிகப்பெரிய சரக்கு போக்குவரத்தைக் கையாளும் திறன் கொண்டதாக இத்துறைமுகம் தன்னை மாற்றிகொண்டது.

வெளிநாடுகளில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதில் முன்னணியில் உள்ள சென்னைத் துறைமுகம், பணப்பயிர்களையும், கிரானைட் கற்கள் மற்றும் இரும்புத் தாது போன்றவற்றை ஏற்றுமதி செய்வதிலும் முன்னிலை வகிக்கிறது. ஆண்டுக்கு 60 மில்லியன் TEU அளவு வரை சரக்கு போக்குவரத்தை இது கையாள்கிறது. TEU எனப்படுவது twenty foot equivalent units என்பதன் சுருக்கமாகும். அதாவது, ஒருவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து இருபது அடி தூரம் நடந்தால் வரும் தொலைவு அளவு கொண்ட சரக்குப் பெட்டியை(containers) TEU என்று  குறிப்பிடுகிறார்கள். இந்த சரக்கு கையாளும் திறனை 120 மில்லியன் TEU வாக கொண்டு வருவதற்கான கட்டமைப்பை தற்போது சென்னைத் துறைமுகத்தில் இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் உருவாக்கி வருகிறது. அவ்வாறு நடந்தால், உலக அளவில் சரக்கு கையாள்வதில் 86 வது  இடத்தில் இருக்கும் இத்துறைமுகம், கணிசமான அளவு தர வரிசையில் முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

பண்டைய காலத்தில் இருந்தே இந்த துறைமுகம் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. பல்லவர்கள், சோழர், பாண்டியர் மற்றும் விஜய நகர அரசுகள் இந்நகரக் கடற்கரையை தங்களது கடல் வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக  6 ம் நூற்றாண்டில்  இருந்து 9 ம் நூற்றாண்டு வரை தென் இந்தியாவை ஆண்ட  பல்லவர் காலத்தில், தற்போது, சென்னையின் முக்கியப் பகுதியாக விளங்கும் மைலாப்பூர் புகழ்பெற்ற துறைமுகமாக விளங்கியதாகவும், ரோமானிய அரசில் மைலாப்பூர்  “மேலியாபோர்”(meliyapor) என்று அழைக்கப் பெற்றதாகவும் உறுதியான  தகவல்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், ஆங்கில ஆட்சியின் போது தான், இத்துறைமுகம் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டு உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாக அமைந்தது. இவர்களின் ஆட்சியின் போது, 1815 ம் ஆண்டு வரை சென்னைக் கடற்கரையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில், அதாவது, 0.66 கடல் மைல் தொலைவிலேயே கப்பல்கள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சிறிய படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் கடற்கரைக்கு சரக்குகள் கொண்டுவரப்பட்டன. இந்த சிறிய கட்டுமரங்கள், படகுகள் பெரிய சரக்கு பெட்டிகளை தாங்கமுடியாமல் கடலில் மூழ்கி போயின. மேலும், படகுகளில் சென்ற கூலிகள், சரக்கு பெட்டிகளை திருடி, அவற்றை மாலைநேர சந்தையில் (இப்போது பர்மா பஜார் என்று அழைக்கப்படுகிறதே அங்கே தான்)விற்று, கடுமையான நட்டத்தை வியாபாரிகளுக்கு ஏற்படுத்தினர். இதனால் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்திற்கு கடுமையான சேதாரம் ஏற்பட்டதால், செயற்கையாக, பெரிய கப்பல்கள் நிறுத்துவதற்கு முதல் துறைமுகம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.

பின்பு, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஜவகர்லால் நேரு நினைவாக “ஜவகர் நிறுத்தம்”(jawagar dock) 1964 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்களால் நாட்டுக்கு அர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 6 பெரிய கப்பல்களை நிறுத்தி சரக்கு கையாளக்கூடிய திறன் கொண்ட இது, இரும்பு தாது, நிலக்கரி போன்றவற்றை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின்பு, 1974 ம் ஆண்டு பாரதியின் பெயர் தாங்கி, மற்றுமொரு நிறுத்தம்  நிறுவப்பட்டது.

தற்போது, ஜவகர், டாக்டர் அம்பேத்கர் மற்றும் பாரதி போன்றோர்களின் பெயரில் மொத்தம் 3 நிறுத்தங்கள் சென்னை துறைமுகத்தில் உள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 23 கப்பல் நங்கூரமிடும் இடங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், ஆஸ்திரெலிய துறைமுகத் கழகத்தோடு இணைந்து மிகப்பெரிய சரக்கு பெட்டிகள் கையாளும் முனையம்  ஒன்று 2014 க்குள் அமைக்க முடிவாகி இருக்கிறது. அவ்வாறு, இந்த சரக்கு முனையம் உருவாகும் பட்சத்தில், இந்தியாவிலேயே மிகப்பெரியதாக அது இருக்கும். இன்னும் 20 சதவீதம் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும். தென் இந்தியாவின் 59 சதவீத சரக்கு போக்குவரத்து இந்த முனையத்தின் மூலமாகவே நடைபெறும்.

இப்போது, சென்னை துறைமுகத்தின் கப்பல் நிறுத்தும் இடங்களில் கடலின் ஆழம் 17 மீட்டர்(56 அடி) வரை உள்ளது. இதனால் நான்காம் தலைமுறை கப்பல்கள், அதாவது, நவீன சொகுசுக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் போன்றவை  இந்த துறைமுகத்தில் வந்து செல்லும் வசதி உள்ளது.

சென்னைத் துறைமுகம், நகரின் மையப் பகுதியில் இருப்பதால், நிலக்கரி மற்றும் இரும்பு தாதுக்களை சரக்கு பரிமாற்றம் செய்யும்போது, சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதால், சென்னை உயர்நீதி மன்றம், இந்த சரக்குகளை பரிமாற்றம் செய்ய தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது சென்னைத் துறைமுகத்துக்கு  பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இத்துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும், கார் ஏற்றுமதியால், இந்த இழப்பு ஓரளவு ஈடு செய்யப்படுகிறது. கார் ஏற்றுமதியில், ஹூண்டாய் நிறுவனம், இங்கு முன்னணியில் உள்ளது. போர்டு, நிசான், ஹோண்டா போன்ற பிரபல கார் உற்பத்தி நிறுவனங்கள் படிப்படியாக தனது உற்பத்தியை அதிகரித்து, இத்துறைமுகத்தை பயன்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒரு ஆண்டில் மட்டும் இங்கிருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்னை மாநகரம் இந்தியாவின் தலைசிறந்த  வாகன உற்பத்தி கேந்திரமாக உருவெடுத்ததில், சென்னைத் துறைமுகத்தின் பங்கு அளப்பரியது.

கடல் வழி பயணிகள் போக்குவரத்துக்காக, இந்திய கப்பல் கழகம் கண்டறிந்த ஐந்து துறைமுகங்களில் சென்னையும் ஒன்று. கோவா, கொச்சின், மும்பை மற்றும் மங்களூர் போன்றவை  மற்ற நான்கு பயணிகள் போக்குவரத்து நடைபெறும் துறைமுகங்களாகும். கடந்த 100 ஆண்டுகளாக, சிங்கப்பூர், மலேசியா, மணிலா,சூயஸ், ஏடன், கொழும்பு மற்றும் லண்டன் போன்ற அயல்நாட்டு நகரங்களுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சென்னையில் இருந்து நடந்து வந்திருக்கிறது. 1984 வரை சென்னை – சிங்கப்பூர் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது என்ற தகவல் ஆச்சரியத்தை அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சொகுசுக் கப்பல்கள் சென்னைத் துறைமுகத்தைத் தொட்டுச் செல்கின்றன. இந்தியாவின் பிரபலமான பயணிகள் சொகுசுக் கப்பல் AMET Majesty சென்னையில் பதிவு செய்யப்பட்டு, தனது முதல் பயணத்தை கடந்த 2011 ம்  ஆண்டு ஜூன் 8 ம் தேதி சென்னையில் இருந்து துவக்கியது சென்னைவாசிகளுக்கு நினைவிருக்கலாம்.

எனினும், கடல் போக்குவரத்தின் மூலம், நமது உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதியாக அயல்நாடுகளுக்கு செல்வது, மற்ற வளரும் நாடுகளான பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு தான். நமது நாட்டின் சாலைப் போக்குவரத்து குளறுபடிகள், துறைமுகத்தில் இருந்து முக்கிய நகரங்களை இணைக்கும் நான்கு வழிச் சாலைகள் போதிய அளவில் இல்லாதது மிகப்பெரியக் குறைபாடாகும். மேலும், சரக்கு கையாள்வதில் தரத்தை மேம்படுத்த நவீன கிரேன் வசதிகள், தொழில்நுட்ப தளவாடங்கள், ஊழியர்களுக்கான தொழிற் பயிற்சி போன்றவையும்  கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

சென்னைத் துறைமுகம் பழமை வாய்ந்தது என்ற பெருமையோடு நிற்காமல், அதை உலகத்தரத்தோடு மற்ற முன்னேறிய நவீன  துறைமுகங்களோடு  போட்டிபோடும் நிலையை மத்திய அரசு உருவாக்கினால், அது  தமிழகம் மட்டுமல்ல மொத்த தென் இந்தியாவுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

The day before an exam, I cell phone locator check my grades to see if I can afford to fail it

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “சென்னைத் துறைமுகம் – ஒரு பார்வை”
  1. Sankara Narayanan says:

    துரைமுகம் அமைத்தால் வடசென்னையில் இருந்த பல மீனவர் குப்பங்கள் கடலுக்குள் சென்றன. இன்று கடல் அந்தப் பகுதியில் ராட்சச வேகத்தில் நிலத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது. சிங்கார மெரினாவும் இந்தத் துறைமுகம் அமைத்தால் ஏற்பட்டதே. இயற்கையுடன் விளையாடுவது வசதி படைத்தோருக்கு ஒரு வாடிக்கை. அதனால் அழியும் அடித்தட்டு மக்களுக்கு இது வேதனை. அது சென்னைத் துறைமுகமாகவும் இருக்கலாம், இறால் பண்ணைகளாகவும் இருக்கலாம், கூடங்குளம் அணுமின் நிலையமாகவும் இருக்கலாம். அனுபவிப்பவர்கள் சிலர். மாள்பவர் பலர்.

அதிகம் படித்தது