செய்யுள்களை எளிதில் புரிந்து கொள்வது எப்படி? – 3 திருக்குறளில் சூழ்தல் என்றால் நினைத்தல்
ஆச்சாரிJul 15, 2012
[செய்யுள்களை நேரடியாகப் புரிந்துகொள்ளச் சில சீரான நெறிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று அன்றாடம் பழகிய சொற்கள்போல் ஒலித்தாலும் பல சொற்கள் எதிர்பாராத பொருள்களிலும் வழங்குவதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதாகும்.]
இலக்கியங்களில் அன்றாட வழக்குப்போலவே ஒரே சொல்லுக்குப் பலபொருள்கள் குறிக்கும் நிலைமையுண்டு. இங்கே நாம் திருக்குறளில் சூழ் என்பது வழங்குவதை ஆராய்வோம்.
பொதுவாக இன்று சூழ்தல் என்ற வினைச்சொல்லை நாம் வளைத்துக்கொள்ளுதல் என்ற பொருளில்தான் வழங்குகிறோம். செய்திகளில் “தஞ்சைக் கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது”, “மக்கள் கூட்டம் தலைவரைச் சூழ்ந்துகொண்டது” என்றெல்லாம் படிக்கிறோம். இந்த அன்றாடப் பழக்கத்தால் பலரும் திருக்குறளைப் படிக்கும்பொழுது அதே பொருளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்; ஆனால் அது ஒருசிறிதும் பொருந்தாமற்போவது கண்டு திகைத்துப்போகிறார்கள்.
சான்றாக “மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு” (குறள்:21:4) என்ற குறளில் “மறந்தும் பிறனுடைய கேட்டை வளைத்துக்கொள்ளாதே; வளைத்துக்கொண்டால் அப்படி வளைத்துக்கொண்டவனுடைய கேட்டை அறம் வளைத்துக்கொள்ளும்” என்பது பொருந்தாது. இப்படியே குடிசெயல்வகையிலும் “சூழாமல் தானே முடிவெய்தும், தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு” (குறள்:103:4) என்ற குறளுக்குத் “தம் குடியைத் தாழவிடாதவாறு உழைப்பவர்க்கு வளைத்துக்கொள்ளாமல் தானே முடிவு கிடைக்கும்” என்ற பொருள் அறவே பொருந்தாது!
இங்கேதான் திருக்குறளில் சிறப்பாகக் கவனிக்கவேண்டியது என்னவென்றால் சூழ் என்றால் நினை, ஆராய், எண்ணிப்பார், சிந்தி, ஆலோசி என்றுதான் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பொருள்படும்! திருக்குறளில் பதினைந்து குறட்பாக்களில் மொத்தம் இருபது தடவை சூழ் என்னும் சொல் பயில்கிறது, சூழ்ச்சி என்பதையும் சேர்த்து. திருக்குறளில் ஒருதடவைகூட வளைத்துக்கொள்ளுதல் என்ற பொருள் இல்லை என்று பழைய உரைகார்ர்களின் உரைப்படிச் சொல்லலாம்!
அந்த நினைத்தற் பொருளோடு அதே குறள்களை மீண்டும் படித்தால் இயல்பான பொருள் எந்தப் பாடும்படாமல் விளங்கும். அதற்கு முதலில் பழைய உரைகளோடு அதே குறள்களின் பொருளைப் பார்ப்போம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. (குறள்:21:4)
பரிமேலழகர் உரை[i] கூறுவது என்ன? “ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும்”. பயக்கும் என்றால் “பயனாக விளைவிக்கும்” என்று பொருள்; பயப்படும் என்ற பொருளன்று. திருக்குறளிலும் மற்ற பழைய இலக்கியங்களிலும் பழைய உரைநடைகளிலும் பயம் என்றால் பயன், பயத்தல் என்றால் பயன்தருதல் அல்லது விளைவித்தல் என்றுதான் மிகப்பெரும்பான்மைப் பொருள்.
எனவே மீண்டும் விளக்கிச்சொன்னால்: “ஒருவன் பிறனுக்குக் கேடு விளைவிக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, எண்ணுவானாயின், அப்படி எண்ணினவனுக்குக் கேடு விளைவிக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும்”.
சூழாமல் தானே முடிவெய்தும், தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு. (குறள்:103:4)
[உஞற்று = உழை]
மணக்குடவர் உரை: “தம்குடியைத் தாழச்செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்” அதாவது: “தம் குடியைத் தாழவிடாதவாறு உழைப்பவர்க்கு ஆராயாமல் தானே முடிவு கிடைக்கும்”. அதாவது தான்குறித்த முடிவினை எய்தப் பலவகையாக ஆராயவேண்டியதில்லை; அந்த முயற்சியுழைப்பே முடிவினை அடைவிக்கும்.
இப்படிச் சூழ்தல் என்ற வினைச்சொல்லுக்கு இந்த நினைத்தற் பொருளை உள்ளத்திலே ஊன்றப் பதிந்துகொண்டு மீதிப் பல குறட்பாக்களையும் பொருள்கண்டால் தெளிவடையலாம்.
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும் (குறள்:18:6)
[வெஃகு = விரும்பு]
பொருள்: “அருளை விரும்பி அறநெறியிலே நின்றவன் பிறன்பொருளை விரும்பிப் பொல்லாதவற்றை நினைத்தால் கெடுவான் ”.
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. (குறள்:33:4)
பொருள்: “நல்லவழி என்று சொல்வது எதுவென்றால் எந்த உயிரொன்றையும் கொல்லாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கும் வழி”
நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம், கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை (குறள்:33:5)
மணக்குடவர் உரை[ii]: “மனைவாழ்க்கையில் நிற்றலை அஞ்சித் துறந்தவருள் எல்லாரினும் கொலையை அஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன், இல்வாழ்க்கையில் நிற்பினும்”. இல்வாழ்க்கையை நீத்த துறவிகளைவிட இல்வாழ்க்கை வாழ்ந்துகொண்டே உயிர்க்கொலையைத் தவிர்ப்பதைச் சிந்திப்பவன் சிறந்தவன் என்கிறது.
ஊழிற் பெருவலி யாஉள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.(குறள்:38:10)
பொருள்: “ஊழினைவிடப் பெரிய வலிமைகள் எவை உள்ளன? அதற்கு மாற்றமாக ஒன்றை நினைப்பினும் தான் முந்திவிடும்”. மாற்றுவழியாக அதே ஊழ்தான் முந்திப்போய் அமையும் என்று பரிமேலழகர் கூறுகிறார்[iii].
சிற்றினம் அஞ்சும் பெருமை; சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். (குறள்:46:1)
பொருள்: “சிற்றினத்தை அஞ்சும் பெரியகுணம்; சிறுகுணமோ அந்தச் சிற்றினத்தைத் தனக்குச் சுற்றமாக நினைத்துக்கொள்ளும்”. பரிமேலழகர் உரை[iv] சூழ்ந்து என்பதற்கு எண்ணி என்றே பொருள்சொல்லும்: “பெரியோர் இயல்பு சிறிய இனத்தைச் அஞ்சாநிற்கும்; ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும்”.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். (குறள்: 45:5)
இன்று பலரும் இங்கே சூழ்வார் என்றால் மன்னனைச் சுற்றியிருப்பவர் என்று பொருள்கொள்வார்கள். ஆனால் மணக்குடவர் உரை[v]: “அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல், காரியம் எண்ண வல்லார் தனக்குக் கண்ணாக ஒழுகலான்.” மணக்குடவர் இங்கே இரண்டு தடவையும் சூழ்வார் என்பதற்கு “நினைப்பார்”, “எண்ணவல்லார்” என்று நினைத்தற் பொருளையே சொல்வதைக் கவனிக்கவேண்டும்! [குறிப்பு: மணக்குடவர் “கொளல்” என்பதற்கு மாற்றாகக் “கொலல்” என்று செய்யுள் வேறுபாடு கொண்டுள்ளார்; அதனாலேயே என்பதால்தான் கொல்லல் பற்றி உரையில் சொல்கிறார். ஆனால் அதனால் நமக்குச் சூழ் என்பதன் பொருள்பற்றிய எந்தத் தாக்கமும் இல்லை.]
இங்கே அமைச்சர்களைச் சூழ்வார் அதாவது ஆராய்பவர்கள் என்று சொல்கிறது. ஆலோசகர் என்று இன்றும் நாம் வழங்குவதுண்டு; அதன் வடமொழி வினைச்சொல் ஆலோச் = நினை, ஆராய் என்று பொருள்படும்.
அப்படி ஒருவரோடொருவர் கூடி ஆலோசனை செய்வதைச் சூழ்தல் என்று காமத்துப்பாலின் குறளொன்று வழங்குவதைக் காணலாம்:
இனி,அன்ன நின்னோடு சூழ்வார்யார் நெஞ்சே?
துனிசெய்து துவ்வாய்காண் மற்று. (குறள்:130:4)
[அன்ன = அப்படிப்பட்ட, துனி = கோபம், ஒருவகை ஊடல், துவ்வு = நுகர்]
பொருள்: (தலைவி தன் நெஞ்சினைச் சொல்வது): “நெஞ்சே! தலைவரோடு முதலிலே ஊடல் செய்து பின்னர் இன்பம் நுகரமாட்டாய்; இனிமேல், அப்படிப்பட்ட நின்னோடு கூடி அதுபோன்ற செயல்களைச் செய்ய எண்ணுவார் யார்?”.
சூழ்ச்சி என்றால் சதி என்று பொருளன்று!
சூழ்ச்சி என்றாலே உடனே இன்று பலரும் கெடுதல் இழைக்கும் தந்திரம் என்று மட்டுமே நினைக்கிறார்கள். இதனால் அந்தச் சொல்லுக்கான உண்மையான பொருளைத் தொலைத்துவிட்டார்கள். ஆனால் சூழ் என்ற சொல்லுக்கு மேலேசொன்ன விளக்கங்களிலிருந்து சூழ்ச்சி என்ற சொல்லின் பொருள் வெறுமனே ஆராய்ச்சி, நினைப்பு என்று தேறலாம். வீழ் என்கிற வினைச்சொல்லிருந்து வீழ்ச்சி என்ற பெயர்ச்சொல் அமைவதுபோல் சூழ் என்கிற வினைச்சொல்லிருந்து சூழ்ச்சி என்று பெயர்ச்சொல் அமைகிறது. அந்த அடிப்படைப்பொருளை நேரடியாகத் திருக்குறளிலே மேற்கொண்ட வினைசெயல்வகை என்ற அதிகாரத்திலே காணலாம்.
“சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல்; அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது” (குறள்: வினைசெயல் வகை: 68:1)
அதன்பொருள்: “வினைசெய்யவேண்டிய வழியைப்பற்றிய ஆராய்ச்சிக்கு எல்லை ஒரு தீர்மானத்தை அடைதலாகும்; அந்தத் தீர்மானம் காலந்தாழ்த்தலிலே சிக்குவது தீமையாகும்”. நெடிய ஆலோசனைக்கு எல்லையாக ஒருவழியாக அடைந்த தீர்மானத்தின்படிச் செய்யாமல் காலம்நீட்டிப்பது கெடுதல் என்கிறது.
சூழ்ச்சி என்பதற்கு நுண்ணறிவு என்ற பொருளில் “கலங்காச் சூழ்ச்சி” என்று பெருங்கதை என்ற பழைய நூலில் வழங்குவதாகச் சென்னை அகராதி[vi] கூறுகிறது.
இப்படியாகச் சூழ்ச்சி என்பதற்குப் பொதுப்பொருள் இருக்கக் காலப்போக்கில் “கெடுக்கும் வழியை ஆராயும் ஆராய்ச்சி” என்று மட்டும் மீண்டும் மீண்டும் சிலசார் மக்களால் வழங்கிப் பொருள் சுருங்கிவிட்டது; பொதுமைப்பொருள் மறையும் நிலை நேர்ந்துவிட்டது. ஆங்கிலத்திலே cruise என்பது ஊர்திகளின் இயக்கம் என்றுமட்டுமே அடிப்படையில் குறிப்பது இன்று அமெரிக்காவிலே சொகுசுக் கப்பற் செல்கை என்று பொருட்குறுக்கம் அடைந்துள்ளது நல்லசான்றாகும்; ஆனால் cruising altitude, cruise control போன்ற சொற்களில் பொதுமைப்பொருளைக் காணலாம்.
தெலுங்குமொழியின் சூடு:
சூழ் என்றால் அடிப்படையிலே பார் என்ற பொருள் குறித்திருக்கிறது என்று உறுதிசெய்ய தென்நடுவண் (South Central Dravidian), நடுவண் (Central Dravidian) திராவிடமொழிகளில் சூடு என்கிற சொல் பார் என்கிற பொருளில் வழங்குவது உதவுகிறது.சூடு என்பதன் டகரம் முதலில் ழகரமாக ஒலியாக இருந்தது. எல்லாத் திராவிடமொழிகளுக்கும் மூலமான மூலத்திராவிடத்தில் வழங்கிய ழகரவொலி தென்நடுவண், நடுவண் திராவிடமொழிகளில் டகரவொலியாகச் சீர்மையோடு மாறியுள்ளது; தமிழ்மொழி அந்த ழகரவொலியைப் போற்றியுள்ளதால் நாம் சொற்களைப் பொருத்திப் பழைய பொருளை மீட்கலாம். சான்றாக ஏழு என்பது தெலுங்கிலே ஏடு என்றும் கோழி என்பது கோடி என்றும் சீராகப் பொருந்துவதைக் காணலாம்.
பரோ எமனோ என்ற திராவிடமொழியியல் அறிஞர்கள் ஏற்கெனெவே அப்படிப் பொருத்தியுள்ளனர்[vii]: சூழ் என்றால் தமிழிலே நினை, ஆராய், அறி; தெலுங்கிலே சூடிக்கி என்றால் பார்வை, சூடி என்றால் கவனித்துக்கொள் என்று பொருள். பர்சி, கடபா மொழிகளில் சூட்- என்றால் பார் என்று பொருள்; கொண்டா மொழியில் ஸுட்- என்றால் பார்; கூயி மொழியில் ஸூட என்றால் பார்த்தல், பார்வை என்று பொருள். கன்னடம், துளு, கொரகா போன்ற தென்திராவிடமொழிகளில்கூடப் பார்த்தல் பொருளில் அதே வேர்ச்சொல்லில் கிளம்பிய சொற்கள் வழங்குகின்றன. ஆனால் மலையாளத்திலும் சுவடு காணவில்லை. எனவே சங்கக் காலத்திற்குச் முன்பேஅந்தப் பார்வைப்பொருள் கழிந்துவிட்டதாகத் தெரிகிறது.
முடிவுரை:
திருக்குறளில் சூழ் என்கின்ற சொல்லுக்கு வளைத்துக்கொள்ளல் என்ற பொருளை அறவே மறப்பது தகும் என்று உணர இந்தக் கட்டுரை உதவுகிறது. இந்த அறிவு மிகவும் வழக்கமாக என்றோ தமிழர்களிடையே பரவியிருக்க வேண்டியது; ஆனால் இப்படிச் சிறப்பாகச் சுட்டி நிறுவவேண்டிய நிலைமையில் உள்ளோம். அதற்குக் காரணம் தமிழிலக்கியத்தைத் துல்லியமாகப் பொருளுணர்வதும் அப்படியுணரக் கற்பிப்பதும் இல்லாததே. எனவே தமிழ்மொழிக் கல்விமுறை மாறித் தேர்வுகளில் இப்படிச் செய்யுள்களின் குறிப்பிட்டசொற்களின் பொருளை வெளிப்படையாக வினாவி மதிப்பிடவேண்டும்; அப்பொழுதுதான் தமிழ்மொழி வாழும்; தமிழர்களும் வாழ்க்கைப்பயன் அடைவார்கள்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
சூழ், சூழ்தல், சூழ்ச்சி பற்றித் தெளிவு படுத்தியமைக்கு நன்றி. சொல்-பொருள் ஆராய்ச்சியும் தொல்-பொருள் ஆராய்ச்சி போன்றதே. கல்லின் (மண்ணின்) புதைபடிவங்கள் போன்று சொல்லின் (மொழியின்) புதைபடிவங்களும் மனித சமுதாய மாற்றங்களின் பதிவுகளாக இருக்கின்றன.
நன்றி, மிகச்சிறப்பான கட்டுரை, தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
என்ற குறளில் கொளல் என்பது தவறாக கொலல் என்று உரையில் கொள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளீர்கள், குறளின் சரியான விளக்கத்தை அளிக்குமாறு வேண்டுகின்றேன், நன்றி.
நன்றி. மணக்குடவர் என்கிற பழைய உரைகாரர் கொளல் என்பதற்குக் கொலல் என்று வேறுபாடம் படிக்கிறார். அது தவறு கிடையாது. அவர் காலத்திலேயே கொலல் என்றும் மாற்றாக அந்தச் சொல் கிடைத்துள்ளது. அவர் அதனால் “கொல்லல் வேண்டும்” என்று பொருளுரைக்கிறார்.
Fantastic explanation! Would like to know words like this have different meaning than conventional meaning.
soozhthal in Tirukkural means not just to think,
but to think and plan. That is why it acquired
the meaning of conspiring (sathi seithal)in later
days, when planning itself was thought to be
evil doing by foreign invasions and influences.
What you have said in the meaning of the Kural “soozhchi mudivu thunivu eitha…” is correct and it has to be stressed.
G. Poornachandran
திட்டம்போடுதல் என்பதுவும் நினைத்தல்தான். நாம் இன்று அதன்பொருளை மறந்துவிட்டதால் இரண்டையும் அடிப்படையில் வேறென்று நினைந்துகொள்கிறோம்.
அருமை.