மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செய்யுள்களை எளிதில் புரிந்து கொள்வது எப்படி? – 5

ஆச்சாரி

Sep 15, 2012

சங்கஇலக்கியத்தில் நகர் என்பதற்கு மாளிகை கோயில் என்ற பொருள்

[செய்யுள்களை நேரடியாகப் புரிந்துகொள்ளச் சில சீரான நெறிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று செய்யுளில் பல சொற்கள் அன்றாடம் பழகிய சொற்கள்போல் ஒலித்தாலும் எதிர்பாராத பொருள்களிலும் வழங்குவதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதாகும். அப்படிப் புரிந்துகொண்டால் கிடைக்கும் பொருட்டெளிவும் இன்பமும் பயனும் அளவிடமுடியாதது.]

இக்காலத்திலே ஏறக்குறைய எல்லாருமே நகர், நகரம் என்ற சொற்களை இலக்கியங்களிலே எதிர்கொண்டால் ஊர் என்ற பொருளைமட்டுமே நினைப்பர். ஆனால் சங்க இலக்கியப் பாடல்களில் நகர் என்றால் ஊர் என்ற பொருளைப் பலதடவை குறிப்பது மட்டுமன்றி (1) கடவுட்கோயில் (2) வீடு, மாளிகை, அரண்மனை என்ற பொருள்களையும் குறிக்கும். மேலும் மற்றபடிச் சடங்குசெய்யும் இடம், மண்டபம் போன்ற பொருள்களையும் குறிப்பதை இலக்கியங்களிற் காணலாம்.

குறுந்தொகை, அகநானூறு போன்ற அகப்பொருட்பாடல்களில் நகர் என்ற சொல் மாளிகை, குறிப்பாகத் தலைவன் தலைவியரின் மாளிகை, என்ற பொருளையே பெரும்பாலும் குறிக்கும். அந்த அகப்பாடல்களில் ஊரென்ற பொருளை மறந்துவிட்டு மாளிகை என்ற பொருளைமட்டுமே நினைத்துக்கொண்டால்கூடப் பொருளைத் தவறாக உணரும் வாய்ப்பு மிகவும் குறைத்தே. அந்த அளவிற்கு மிகுதியாகச் சங்கக்காலத்திலே மாளிகை என்ற பொருளோடு நகரென்ற சொல் வழங்கிற்று.

இனி நாம் பழைய இலக்கியங்களில் நகர் என்ற சொல்லின் இந்த வெவ்வேறு பொருள்களைச் சான்றுகளோடு காண்போம்.

கடவுட்கோயில் என்ற பொருள்:
புறநானுற்றிலே கரிகிழார் என்ற புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பார்த்துப் “பணியட்டும் நின் வெண்கொற்றக்குடை, முனிவர்கள் பாடுகின்ற முக்கண்கொண்ட பெரியவனின் கோயிலை வலம் வருவதற்கு” என்கிறார்:
“பணியியர் அத்தை நின்குடையே, முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே!” (புறநானூறு:6:18)
[பணியியர் = பணியட்டும்; அத்தை = அசைச்சொல்; செல்வர் = தலைவன்; நகர் = கோயில்]
அதற்குப் பழையவுரையும் தெளிவாக “மூன்றுதிருநயனத்தையுடைய செல்வரது கோயிலை வலம்வருவதற்குத் தாழ்க” என்று பொருள்கூறுகிறது.

இங்கே கவனிக்கவேண்டியது இன்னொன்று என்னவென்றால் கோயில் என்றால் கோவாகிய தலைவனின் இல்லம் என்றுதான் பொருள்; அதனால்தான் கோயில் என்ற சொல்லை மன்னனின் இல்லத்திற்கும் கடவுளின் இல்லத்திற்கும் வழங்கினர். பின்னர்ப் படிப்படியாகக் கடவுளின் இல்லத்திற்கு மட்டும் சொல்வழக்கம் சுருங்கிவிட்டது. கோயில் என்றால் மன்னனின் இல்லம் என்ற பொருளை இன்னொரு புறநானூற்றுப் பாடலின் உரையிலே காணலாம்:

“ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்” (புறநானூறு:177:1)
என்ற பாட்டிற்குப் பழையவுரை “விளங்கிய வாளையுடைய வேந்தரது ஒள்ளிய விளக்கத்தினையுடைய உயர்ந்த கோயில்” (= “பளபளப்பான வாளையுடைய வேந்தரது ஒளிர்கின்ற விளக்கினையுடைய உயர்ந்த அரண்மனை”) என்றே பொருளுரைப்பதைக் காணலாம். அந்த உரையிலே கோயில் என்றால் மன்னன் கடவுளைப் போற்ற எழுப்பிய கோயிலென்று குழம்பிக்கொள்ளக்கூடாது.

அந்தப் பாட்டின் ஒற்றை அடியிலேயே நகர், கோயில் என்ற சொற்களின் பழைய பொருள்கள் கூடிவருவதைக் காண்கிறோம். இப்படி விழிப்புணர்வு இல்லாவிட்டால் “நகர் என்றால் ஊர் என்றுதானே நினைத்தோம் என்ன இது உரையில் கோயில் என்று பொருள்சொல்கிறதே!” என்று குழம்பும்!

நகர் என்பதற்குக் கடவுட்கோயில் என்பதற்கு இன்னொரு சான்றும் காணலாம். நக்கீரரின் திருமுருகாற்றுப்படையிலே “நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி” (திருமுருகு:238) என்பதற்கு நச்சினார்க்கினியர் “செறிந்த மலைப்பக்கத்திலுள்ள நல்ல ஊர்கள்” என்று பொருள் சொல்லிப் பிறகு “நகர் – பிள்ளையார் கோயில் என்றுமாம்” என மாற்றுப்பொருளும் உரைக்கிறார். பிள்ளையார் என்றால் இளைஞனான முருகனைக் குறிக்கும். பிள்ளையார் என்ற சொல்லுக்கும் இன்று யானைமுகக் கடவுளென்று மட்டும் பொருள்வழக்கம் குன்றிப்போயுள்ளதைக் கவனிக்கவும்.

நகர் என்றால் மாளிகை என்ற பொருள்:
அடுத்து நகர் என்ற சொல் மாளிகை என்ற பொருளிலே வழங்குவதைக் காண்போம்.

• பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக்காஞ்சியிலே தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆடிய போரைப் பாடும்பொழுது போராற் பாழான ஊர்களின் நிலைமை சொல்லும் காட்சி:
“நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளி” (மதுரைக்காஞ்சி:169)
[நகர் = மாளிகை; குதிர் = நெற்குவிக்கும் கூடு; பள்ளி = இடம்]
என்று பாடுகிறது. அதற்கு நச்சினார்க்கினியர் “பெரிய மாளிகைகளிலே வெந்துவீழ்ந்த கரிந்த குதிரிடங்களிலே” என்று பொருளுரைக்கிறார்.

• பத்துப்பாட்டிலே இன்னொரு பாட்டாகிய மலைபடுகடாம் என்ற பாட்டிலே பெருங்கௌசிகனார் நன்னன் என்ற மன்னனைப் பார்க்கும் முறைபற்றிச் சொல்லும்பொழுது பாடுவது:
“திருநகர் முற்றம் அணுகல் வேண்டி” (மலைபடுகடாம்:548)
என்பதாகும். அதற்கு நச்சினார்க்கினியர் “செல்வத்தையுடைய தன் மனையின் முற்றத்தை நீங்கள் செல்லுதலை விரும்பி” என்று சொல்லுவார். இங்கே நன்னனின் மனை அல்லது அரண்மனையைக் குறிக்கிறது நகரென்னும் சொல்.

• அகத்துறைப் பாடல்களில் நகர் என்ற சொல் தலைவன் அல்லது தலைவியோடு சேர்த்துச் சொல்வதாக அமைந்தால் தத்தம் மாளிகையைக் குறிக்கும். சில சான்றுகளைக் காண்போம்:

• அகநானுற்றிலே தலைவன் வேந்தனின் பொருட்டுப் பாசறையிலே தங்கி வினைமுடித்தபின் மீளும்பொழுது தலைவியை நினைந்து சொல்வது:
“மாட மாண்நகர்ப் பாடமை சேக்கைத்
துனிதீர் கொள்கைநம் காதலி இனிதுற” (அகநானூறு:124:6-7)
[மாண் = மாட்சி; நகர் = மாளிகை; பாடு = செவ்வி, செம்மை, திருத்தம்; சேக்கை = படுக்கை; துனி = ஊடல், வெறுப்பு; கொள்கை = உள்ளம்; உறு = அடை]
அதற்குப் புலியூர்க்கேசிகன் உரை “மாடங்களால் மாட்சிமைப்பட்ட மாளிகையிலே செவ்வியமைந்த பள்ளியிலே வெறுப்புத் தீர்ந்த நம் காதலி இன்பமடைய” என்று கூறுவதைக் கவனிக்கவேண்டும்.

• புறநானூற்றிலே சோழன் இளஞ்சேட்சென்னியின் மாளிகைமுன்னே நிற்பதைப் பாடுகிறார் ஊன்பொதிபசுங்குடையார்:
“பனிக்கயத்து அன்னநின் நீள்நகர் நின்று” (புறநானூறு: 378:7)
[கயம் = நீர்நிலை, குளம்; அன்ன = போன்ற; நகர் = மாளிகை]
அதற்கு உரை “குளிர்ந்த நீர்நிலைபோல் குளிர்ச்சி பொருந்திய நெடிய பெருமனையின் முன்னே நின்று” என்றே பொருளுரைப்பதனைக் காணலாம்.

• அகநானூற்றின் இன்னொரு பாட்டிலேயும் தலைவியினுடைய தந்தையின் வீட்டிற்குக் களவுக்காதலின்பொழுது வந்து தான் நின்றதைக் கூறும் தலைவனின் சொல்:
“தந்தை நெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக” (அகநானூறு:162:9)
[நெடுநகர் = நீண்ட, பெரிய மாளிகை; சிறை = பக்கம்; நின்றனென் = நின்றேன்]
அதற்கும் புலியூர்க் கேசிகன் உரை “தந்தையின் நீண்ட மாளிகையினுள் ஒருபுறத்தே சென்று நின்றேன்” என்று சொல்வதைக் கவனிக்கவும்.

• கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் வளநகர் என்றால் வளமான வீடு என்று பொருள்காண்கிறோம்:
“மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப” (குறிஞ்சிப்பாட்டு: 201-2)
[மிடா = பெரிய கலயம், சொன்றி = சோறு; வரைதல் = வரம்பிடுதல்; வரையா = வரம்பிடாத]
அதற்கு “மிடாவிலே உள்ள சோற்றை வருபவர்களுக்கு வரம்புவைக்காமல் இடுகின்ற செல்வத்தைக்கொண்ட வீடு பொலிய” என்று பொருள்; நச்சினார்க்கினியரும் வளநகர் என்பதற்குச் “செல்வத்தையுடைய அகம்” என்றுரைப்பார்.

• நகர் என்பது ஊர் என்ற ஐயம் இன்னும் இருப்பின் நற்றிணையின் ஒருபாட்டை ஆராய்ந்தால் ஐயந்தீரும்:
“சிறுகுடிப் பாக்கத்துஎம் பெருநக ரானே” (நற்றிணை:169:10)
என்ற பாட்டிலே “சிறுகுடிகளை உடைய பாக்கத்தின்கண்ணே உள்ள எம் பெரிய மாளிகையிடத்து” என்று உ.வே.சா.வின் உரைப்பதிப்புக் கூறுகிறது. “பாக்கத்திலுள்ள பெரிய ஊர்” என்ற பொருள் பொருந்தாமையைக் கவனிக்கவும்.

நகர் என்பதற்குப் பிற பொருள்கள்:
சென்னையகராதி நகர் என்ற சொல்லுக்குச் “சடங்கு செய்யும் இடம்” என்ற பொருளும்படும் என்று கூறிச் சீவகசிந்தாமணியிலே “தூநகரிழைத்து” (சீவக. 2633) (“தூய்மையான இடம் உருவாக்கி”) என்று மேற்கோள் சொல்கிறது. கூடவே “விசேடங்கள் நிகழும் மண்டபம்” என்ற பொருளும் சீவகசிந்தாமணியிலேயே “அணிநகர் முன்னினானே“ (701) என்பதிலே குறிப்பதாகச் சொல்கிறது.

முடிவுரை:
இந்தக் கட்டுரையிலே சங்க இலக்கியத்திலும் மற்ற தொல்லிலக்கியங்களிலும் நகர் என்ற சொல் ஊர் என்ற பொருள்மட்டுமன்றி இன்றுநாம் எதிர்பாராத வகையிலே கடவுட்கோயில், மாளிகை, சடங்கு செய்யும் இடம், மண்டபம் போன்ற பொருள்களும் குறிப்பதைக் கண்டோம். இந்த விழிப்புணர்வு இலக்கியங்களைப் படிக்கும்பொழுது உண்மையான பொருளை உணர உதவும்.

இதுபோன்ற செய்திகள் சீராகத் தமிழர்களுக்குத் தெரியாமைக்குக் காரணம் தமிழிலக்கியத்தைத் துல்லியமாகப் பொருளுணரும் பழக்கமோ அப்படியுணரக் கற்பிக்கும் பழக்கமோ இல்லாததே. எனவே தமிழ்மொழிக் கல்விமுறை மாறித் தேர்வுகளில் இப்படிச் செய்யுள்களின் குறிப்பிட்டசொற்களின் பொருளை வெளிப்படையாக வினாவி மதிப்பிடவேண்டும். அதனால் மாணவர்கள் எல்லாருக்கும் முறையாகவும் பரவலாகவும் இந்த அறிவுசேரும். அப்பொழுதுதான் தமிழ்மொழி வாழும்; அந்தத் தொடர்ச்சியால்தான் தொலைந்த அறிவினை இப்படி மீட்கமுடிகிறது.

மேலும் இந்தப்பொருள்களில் அந்தச் சொல்லை வழங்கவும் வேண்டும்.
இப்படித் தெளிவான நிலைக்குத் தமிழறிவு மீண்டால் தமிழர்களும் தெளிவும் இன்பமும் வாழ்க்கைப்பயனும் அடைவார்கள்.

நன்றியுரை:
இங்கே பழைய இலக்கியங்களின் அரிய பழைய உரைகளை இணையத்திலே இட்டு இப்படி நொடிப்பொழுதில் உடனே கிட்டுமாறு ஏற்படுத்தியுள்ள தமிழிணையக் கல்விக் கழகத்திற்கு ( http://www.tamilvu.org/ ) என் நன்றியினைத் தெரிவிக்கிறேன்.

1. உ.வே.சா. ஆறாம்பதிப்பு, 1962: http://tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=6&file=l1280101.htm
2. http://www.tamilvu.org/slet/l1100/l1100pd1.jsp?pno=69&bookid=20&auth_pub_id=68
3. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், தமிழ்ப்பல்கலைக் கழகம்,1986: http://tamilvu.org/library/l1100/html/l1100bod.htm
4. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், தமிழ்ப்பல்கலைக் கழகம்,1986: http://tamilvu.org/library/l1100/html/l1100bod.htm
5. அகநானூறு – மணிமிடை பவளம், பாரிநிலையம், 1999, பக்கம் 18.
6. புறநானூறு, ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, http://tamilvu.org/slet/l1281/l1281pd2.jsp?bookid=28&page=382
7. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், தமிழ்ப்பல்கலைக் கழகம்,1986: http://tamilvu.org/library/l1100/html/l1100bod.htm
8. நற்றிணை மூலமும் உரையும்,1997, உ.வே.சா. நூல்நிலையம், சென்னை
9. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?p.7:30.tamillex

A recent survey found that 80 percent of http://topspying.com/ americans have used online dating services and view it as an acceptable way to meet people

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “செய்யுள்களை எளிதில் புரிந்து கொள்வது எப்படி? – 5”
  1. ramanathan says:

    -simply superb-ramanathan

  2. arunkumar01012002 says:

    அருமயான தொடர்.

அதிகம் படித்தது