மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செர்நோபில் பேரழிவு

ஆச்சாரி

Dec 1, 2011

சுவீடன் நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம் போர்ச்மார்க் (Forsmark). அந்த கிராமத்தின் ஒரே சிறப்பு அங்கிருக்கும் அணுமின் நிலையமே. 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி திங்கள்கிழமை போர்ச்மார்க் அணுமின் நிலையத்திற்கு வரலாற்றில் இடம் பெரும் நாளாக அமைந்தது. வழக்கம் போல் காலைப் பொழுதில் பணியாளர்களின் உடைகளில் ஊடுருவியிருக்கும் கதிர்வீச்சை அளந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். எப்பொழுதும் மணிக்கு நான்கு மைக்ரோ-ரெம்ஸ் (micro-rems) இருக்கும் கதிர்வீச்சு அன்று மணிக்கு நூறு மைக்ரோ-ரெம்ஸ் இருந்ததே அதிர்சிக்கான காரணம். போர்ச்மார்க் அணுமின் நிலைய மேலாளர்கள் அணுமின் நிலையத்தில் எங்கோ எதிர்பாரா விபத்தாக பெருமளவில் கதிர்வீச்சு கசியத் தொடங்கியிருக்கிறது என்கிற முடிவிற்கு வந்தனர். உடனடியாக அவசர பணிகள் தொடங்கப்பட்டன. பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர். வானொலி மூலம் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு கதிர்வீச்சின் பாதிப்பைக் குறைக்கும் அயோடின் மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. வல்லுனர்கள் போர்ச்மார்க் அணுமின் நிலையத்திற்குள் கதிர்வீச்சின் கசிவு தொடங்கிய இடத்தை கண்டறிய முடியாமல் திணறினர். சிறிது நேரத்தில் தான் தெரியவந்தது இதே போன்று சுவீடன் நாட்டின் பல பகுதிகளிலும் கதிர்வீச்சு பரவிவந்தது.

அன்று சுவீடன் மட்டுமன்று நார்வே, பின்லாந்து, டென்மார்க் நாடுகளிலும் கதிர்வீச்சு பரவத் தொடங்கியிருந்தது. ஆராய்ச்சியாளர்கள் கதிர்வீச்சின் அளவு, காற்றின் திசை, வேகம் ஆகியவற்றை ஆராய்ந்ததில் 1500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இரசியாவின் செர்நோபில் அணுமின் நிலையத்தில் இருந்து தான் கதிவீச்சு கசிந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் செர்நோபில் பகுதியில் இருந்து அளவிற்கு அதிகமான வெப்பம் வெளிவருவதை உறுதி செய்தது.

கதிர்வீச்சு கசிவைப் பற்றிய எச்சரிக்கை செய்தியை ஏன் அனுப்பவில்லை என்று இரசியாவின் மீது சுவீடன் கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்தும் இரசியாவிற்கு உண்மையை விளக்கும் படி நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அனைத்து நெருக்கடிகளையும் புறந்தள்ளி இரசியா எந்த தகவலும் வெளியிடாமல் மூடி மறைக்கப் பார்த்தது.

இரசியா தன் சொந்த நாட்டு மக்களுக்கும் எந்த வித எச்சரிக்கை செய்தியையும் வெளியிடவில்லை. செர்நோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் வசித்த மக்கள் கூட விபத்து நடந்த முப்பத்தாறு மணி நேரம் வரை வெளியேற்றப்படவில்லை. பொது மக்கள் அனைவரும் வழக்கம் போல் அன்றாட வாழ்க்கைப் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். விபத்து நடந்த பதினெட்டு நாட்களுக்குப் பின்னரே இரசிய அதிபர் மிக்ஹைல் கோர்பசேவ் தொலைக்காட்சியில் அணுஉலை விபத்து பற்றி மக்களுக்கு தெரிவித்தார்.

1986 ஏப்ரல் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று செர்நோபில் அணுமின் நிலையத்தில் பொறியாளர்கள் தொடங்கிய ஒரு சோதனையே உலகத்தின் மாபெரும் அனுவிபத்தாக முடிந்தது. அணு உலையின் உற்பத்தி ஆற்றலை குறைத்து அதற்கேற்ப குளிரூட்டுவதையும் குறைத்துப் பார்ப்பது தான் சோதனையின் நோக்கமாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த சோதனை கட்டுப்படுத்த முடியாத தொடர்வினையை உருவாக்கிவிட்டது. குளிரூட்டுவது குறைக்கப்பட்டதால் அணு உலைக்குள் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. அன்று நள்ளிரவு நேரத்தில் நிலைமை மோசமடைந்து குளிரூட்டுவதற்கு அணு உலைக்குள் செலுத்தப்படும் நீர் கொதிக்க தொடங்கிவிட்டது. இது அணு உலையின் வெப்பத்தை மேலும் அதிகரித்து அளவிற்கு அதிகமான நீராவியை உருவாக்கியது. பொறியாளர்கள் நிலைமையை உணர்ந்து அணு உலையை அவசர நிறுத்தத்திற்கு கொண்டுவருவதற்குள் காலம் கடந்துவிட்திருந்தது. அதிக வெப்பத்தில் எரிபொருள் குழாய், நீர்க் குழாய்கள் உருகி சிதையத் தொடங்கிவிட்டன. நீராவி அழுத்தம் அதிகரிக்கவே அணு உலையின் 2000 டன் எடையுள்ள மேல்தட்டு வெடித்து எறியப்பட்டு நீராவி வெளியேறியது. இரண்டு மூன்று வினாடிகளில் இன்னும் பெரிதாக ஹைட்ரஜன் வெடித்து தொடர்வினையை தானாகவே முடிவிற்கு கொண்டுவந்தது. தொடர்ந்து எறிந்த தீயும், காற்றும், பின்னர் மழையும் கதிர்வீச்சை அனைத்து திசைகளுக்கும் பரப்பிவிட்டன.

நடந்திருப்பது அணு விபத்து என்கிற தீவிரத்தை உணராமல் தீயணைப்பு வீரர்கள் அணு உலையின் தீயை அணைப்பதற்கு களமிறங்கினர். 2700 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் எரிந்து கொண்டிருந்த தீயில் தீயணைப்பு வீரர்கள் ஊற்றிய நீர் உடனே நீராவியாக மாறி கதிர்வீச்சை அனைத்து திசைகளிலும் மேலும் பரப்பின. இந்த விபத்தில் உடனடியாக பலியானவர்களில் பெரும்பாலானோர் தீயணைப்பு பணியாளர்களே. அதிகளவு கதிர்வீச்சை உள்வாங்கிய 129 பணியாளர்கள் மறுநாள் மாஸ்கோ சிறப்பு மருத்துவமனைக்கு விமானத்தில் அனுப்பப்பட்டனர். அதில் 29 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மறுநாள் மதியத்திற்கு பின்னர் 1200 பேருந்துகள் கொண்டுவரப்பட்டு செர்நோபில் அருகிலிருக்கும் ப்ரிப்யாட் (Pripyat) நகரிலிருந்து பொதுமக்கள் யாவரும் வெளியேற்றப்பட்டனர். செர்நோபிலை சுற்றி முப்பது கிலோ மீட்டருக்குள் வாழ்ந்த 135,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

செர்நோபில் விபத்து ஏழு டன் எடைக்கதிகமான கதிர்வீச்சு பொருட்களை காற்றில் கலந்தது. கதிர்வீச்சு பொருட்களை தாங்கிய மேகங்கள் ஐரோப்பா முழுவதும் பரவிச்சென்றன. போலந்து நாட்டில் பெய்த மழையில் கதிர்வீச்சு பொருட்கள் விளைநிலங்கள் மீது வீழ்ந்து விசமாக்கின. மழையில் நனைந்தவர்கள் உடனடியாக வாந்தி, உடலரிப்பு போன்ற அவதிக்குள்ளாயினர். ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்தன. ஐரோப்பா முழுவதும் மக்களுக்கு எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டன. பால், மீன், பழம் போன்ற பொருட்களை தவிர்க்கும்படி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

செர்நோபில் தீயை அணைக்க ஹெலிகாப்டரில் இருந்து ஐந்தாயிரம் டன் மண், ஈயம், போரான் போன்றவைகள் கொட்டப்பட்டன. பூமிக்கு கீழே கதிர்வீச்சு பொருள்கள் ஊடுருவதை தடுக்க அணு உலைக்கு கீழே சுரங்கப் பாதை தோண்டி கான்கிரிட் அடித்தளம் அமைக்கப்பட்டது. பாதுகாப்பான கவச உடைகள் அணித்து பொறியாளர்கள் கடைசி கட்ட பணிகளில் ஈடுபட்டனர். தானியங்கி வாகனங்கள் மூலம் இடிந்த பொருள்கள் அகற்றப்பட்டன. அணு உலையில் இருந்து வெளியேறும் நீர் ப்ரிப்யாட் (Pripyat), ட்னீபேர் (Dnieper) ஆறுகளில் கலந்துவிடாமல் தடுக்கப்பட்டது. கடைசி செயலாக வெடித்த அணு உலை முழுவதுமாக மூடும் வகையில் பெரிய கான்கிரிட் கட்டடம் கட்டப்பட்டது. இவை அனைத்தும் முடிந்த பிறகே இரசிய அரசு வெளிப்படையாக விபத்து பற்றிய செய்திகளை வெளியிடத் தொடங்கியது.

இந்த கொடூர விபத்தில் நேரடியாக 57 பேர் உயிரிழந்தனர். ஆனால் உலகம் முழுவதும் இந்த விபத்தில் இருந்து வெளியான கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு புற்று நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 27,000 ஆக இருக்ககூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இலட்சக்கணக்கான மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு விகாரமாகவும் ஊனமுற்றும் குழந்தைகள் பிறந்தன.

80,000 மக்களுக்கும் அதிகமானவர்கள் அவர்கள் வசித்த ஊர்களுக்கு திரும்பச் செல்ல இயலவில்லை. 200 கிலோமீட்டர் நீளமான வேலி அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஊர்கள இன்று மக்கள் வாழமுடியாத பாழ்நிலங்கலாக வீனாகிகிடக்கின்றன. 25 வருடங்களுக்கு பிறகு தற்போது செர்நோபில் எப்படி இருக்கிறது என்று அறிய ஆர்வம் இருப்பின் கீழ்கண்ட காணொலியை பாருங்கள்.

இந்த விபத்தினால் ஏற்பட்ட பொருள் சேதமும் பெரியளவிலானதே. இரசிய அரசிற்கு மட்டுமே பல ஆயிரம் கோடி டாலர்கள் செலவாயிற்று. சுவீடன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளும் கோடிகணக்கான டாலர்களை கொட்டி கதிர்வீச்சின் தாக்கத்தைக் குறைத்துக்கொண்டன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் செலவிடப்பட்ட இந்த தொகைகள் இன்றைய மதிப்பில் எவ்வளவு இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

விபத்திற்கு முன்னர் இரசிய அரசும், அணு நிபுணர்களும் பேசியவைகள் கவனிக்க வேண்டியவைகள். விபத்திற்குள்ளான நான்காம் அணு உலை பணியைத் தொடங்கிய 1985 ஆம் ஆண்டில் அதன் தலைமை பொறியாளர் வ்யசெஸ்லாவ் அகின்பிஎவ் (Vyacheslav Akinfeyev) “செர்நோபில் அணு மின் நிலையம் அனல் மின் நிலையங்களை விட சுற்றுப்புறத்திற்கு மிகவும் தூய்மையானது” என்று பத்திரிகையில் பெருமையுடன் எழுதினார்.

செர்நோபில் அருகில் அமைக்கப்பட்ட ப்ரிப்யாட் நகரின் நகராட்சித் தலைவர் வ்லடிமிர் வோலோஷ்கோ (Vladimir Voloshko) பத்திரிக்கையாளர்களிடம் “அணு மின் நிலையத்தில் பணிபுரிவது சாலையில் வாகனம் ஓட்டுவதை விட பாதுகாப்பானது” என்று தெரிவித்தார்.

விபத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்னர் சோவியத் வாழ்க்கை (Soviet Life) என்கிற இதழ் செர்நோபிளின் பாதுகாப்பு நிலையை மிகவும் பாராட்டி கீழ்கண்டவாறு  எழுதியது.

“நம்ப முடியாத நிகழ்வுகள் நடந்தால் கூட தானியங்கி கட்டுபாடு மற்றும் பாதுகாப்பு கருவிகள் அணு உலையை நிமிடங்களில் முழுவதுமாக நிறுத்திவிடும்.”

அதே கட்டுரையில் மின்சாரத் துறை அமைச்சர் விட்டாளி ச்க்லைரோவ்  (Vitali Sklyarov) பத்தாயிரம் வருடங்களுக்கு ஒரு முறை தான் அணு உலை உருகுவதற்கு வாப்பிருப்பதாக தெரிவித்திருந்தார்.

விபத்திற்கு பின்னர் சோவியத் தீயணைப்புத் துறைத் தலைவர் பாதுகாப்பான அணு உலை என்பது எதுவும் கிடையாது என்பதை செர்நோபில் நிரூபித்தாக தெரிவித்தார்.

யார் என்ன சொல்லி என்ன பயன்? விபத்துகள் என்பதே எதிர்பாராதவைகளே. பாதிக்கப்படுகிற இலட்சக்கணக்கான மக்களுக்கு தான் அதன் வலி புரியும். இனியும் இது போன்ற விபத்துகள் எங்குமே நடக்கக் கூடாது என்பதே நல்லெண்ணம் உடையவர்களின் எதிர்பார்ப்பு.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “செர்நோபில் பேரழிவு”
  1. kasi visvanathan says:

    விவரமாக சம்பவ நிகழ்வினை விவரமாக அறியத்தந்த சிறகு ஊடகத்திற்கு நன்றி. அனைவரும் பகிர்ந்து பயனடையுங்கள்.

  2. TamilMani says:

    too super bro.. very nice..

    really thinkable…

  3. muruganantham says:

    அணுகதிர் அணு உலையில்தான் இருந்துதான் வர வேண்டூம் என்பதில்லை இப்ப்டியும் வரலாம்

அதிகம் படித்தது