மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செல்வந்த வாரிசுகளால் சிதையும் நிர்வாகங்கள்

ஆச்சாரி

May 17, 2012

பெரும் செல்வந்தர்களின் உலகம் எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்போதோவது எண்ணிப் பார்த்ததுண்டா?  உங்களைப் போலவே நானும் உலக பணக்காரர்களின் வரிசை முதல் உள்ளூர் பணக்கார்களின் வரிசை முதல் பார்த்து படித்துக் கொண்டு தான்  இருக்கின்றேன். மற்ற நாடுகளின் எப்படியோ? ஆனால் இந்தியாவில் பணக்காரர் ஆக வேண்டுமென்றால் மிகப் பெரிய புத்திசாலித்தனமோ, கடுமையான உழைப்பென்பதோ தேவையில்லை.  ஆனால் நிச்சயம் சாமர்த்தியம் என்பது அவசியம் தேவை.  குறிப்பாக தரகு வேலை பார்க்கத் தயாராக இருந்தால் எந்த துறையிலும் எளிதாக வெற்றி பெற்று  மேலே வந்து விடலாம்.

நாம் பேசப் போவது பணக்கார உலகத்தின் அரசியல், பண பல செல்வாக்கைப் பற்றியல்ல. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு இந்த பணம் கடத்தப்படுத்துவதும், அதைக் கையாளும் வாரிசுகளின் வாழ்க்கையைப் பற்றியும் தான் அலசப்போகின்றோம்.

சாதாரண மனிதர்களின் வாழ்க்கையின் போராட்டத்தைப் போல இவர்களின் போராட்டங்கள் எது குறித்து இருக்கும்?  எப்படி இருக்கும் என்பது போன்ற பல கேள்விகளை அடிக்கடி எனக்குள் கேட்டுக் கொள்வதுண்டு. அதை இப்போது  மிக அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதால் மனதில் இருக்கும் ஆச்சரியங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

திருப்பூரில் நான் கடந்து வந்த பாதையில் பார்த்த பல முதலாளிகளின் வாரிசுகளை சிறு வயது முதல் பார்த்த காரணத்தால் பல தகவல்களை உத்தேசமாகத்தான் மனதில் வைத்திருந்தேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் முதலாளிகளின் வட்டத்திற்கும் இடையே பல படிகள் இருந்தது.  என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளும் முன்பே அடுத்து அடுத்து என்று ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் எதையும் மனதில் வைத்துக் கொள்ள முடியாமல் கடந்து வந்துள்ளேன்.  ஆனால் தற்போது உயர் பொறுப்பில்  இருப்பதன் காரணமாக மங்கலாகப் பார்த்த பல நிகழ்வுகளை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.

வியப்பு ஒரு பக்கம்.  வேதனை மறு பக்கம்.

நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வந்த எனக்கு வெளி உலகம் அறிமுகம் ஆனது முதல் இன்று வரை தினந்தோறும் அடுக்கடுக்கான ஆச்சரியங்கள். திருப்புமுனைகளை சந்தித்து வந்தபோதிலும் பல புதிர்கள் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தனிப்பட்ட முறையில் உண்மை வாழ்க்கை குறித்த ஆச்சரியங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

நம் நாட்டில் உள்ள சொல்லி மாள முடியாத ஏற்றத்தாழ்வுகளும் அதை சகித்துக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல ஒவ்வொரும் தன்னை மாற்றிக் கொள்ளும் விதமும் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைக்கின்றது.  தவறு யார் மேல்? என்பது போல பல கேள்விகள் எனக்குள் இருந்தாலும் அதற்கான முழுமையான விடைகள் கிடைத்தபாடில்லை.  ஒன்றோடு மற்றொன்று, அதோடு இன்னொன்று என்று ஒவ்வொரு மனிதர்களின் குறைகளும் நிறைகளும் கண்ணில் தெரிகின்றது. மொத்தத்தில் உழைக்க விரும்பாதவர்களின் கூட்டம் மட்டும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றது என்பது மட்டும் உண்மை.

ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் கல்லூரி வரைக்கும் ஒரு ஆசையும், ஆனால் இயல்பு வாழ்க்கைக்கு வந்த பிறகு வேறொரு விதமாகவும் தங்களை  மாற்றிக் கொள்கின்றனர். வாழ்ந்து முடிக்கும் போது ஏக்கத்தை மட்டும் தங்களின் வாரிசுகளுக்கு கடத்தி விட்டு இறந்தும் போய் விடுகின்றனர். பல நடுத்தர வர்க்க இளைஞர் கூட்டத்தின் வாழ்க்கையை பணம் படைத்தவர்களின் வாரிசுகளின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றேன். மொத்தத்தில் பணக்காரர்களின் குடும்ப வாழ்க்கையென்பது வேறு விதமாகவே உள்ளது.

தொடக்கப்பள்ளி வாழ்க்கையில் பத்து பைசா தீனிக்கு ஏங்கிய காலமும், பள்ளி இறுதியில் எப்படியாவது ஒரு திரைப்படத்திற்கு போய்விட மாட்டோமா என்ற ஏக்கத்தை கல்லூரியின் இறுதி ஆண்டில் தான் என்னால் நிறைவேற்ற முடிந்தது.  கட்டுப்பாடுகள் ஒரு பக்கம். தினந்தோறும் வரும் கட்டளைகள் மறுபக்கம். இத்தனையும் கடந்து வந்துதான் என்னுடைய இன்றைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். தனிப்பட்ட என் வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாதபோதும் கூட லட்சியங்களை எட்ட முடியாதவர்களின் வாழ்க்கையை மறுபக்கம் பார்க்க வேண்டியதாக உள்ளது.

ஆனால் திருப்பூருக்குள்ளும் சுற்றியுள்ள பல ஊர்களிலும் பல நிறுவன முதலாளிகளின் வாரிசுகள் படிக்கும் பள்ளி வாழ்க்கையென்பது வெளிநாட்டு கலாச்சார வாழ்க்கைக்கு சரி சமமாகவே இருக்கிறது.  கலாச்சார ச் சிதைவு என்று ஒரு சொல்லில் இதைக் கொண்டு வந்தாலும் இவர்களின் ஒவ்வொரு  நடவடிக்கைகளும் பின்னால் இவர்களுக்காக காத்திருக்கும் ஒரு நிறுவன சாம்ராஜ்ய  சரிவுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது என்பது தான் உண்மை.  ஒரு படிப்பறிவு சுமாராக உள்ள ஒரு முதலாளி தன்னுடைய உழைப்பின் காரணமாக 30 வருடங்களாக பாடுபட்டு சேர்த்து உருவாக்கிய ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை வாரிசுகள் பொறுப்புக்கு வந்த நாலைந்து வருடங்களில் தலைகீழாக மாற்றி சிதறடித்து விடுகிறார்கள்.

இந்த லாப நட்ட கணக்கினால் புதிதாக நிர்வாகத்திற்கு வரும் வாரிசுகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் நிர்வாகத்தை நம்பி நேரிடையாக மறைமுகமாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை குடும்பங்களும் நடுத்தெருவுக்கு வந்து விடுகின்றது.

பணக்கார வாரிசுகளின் பள்ளி வாழ்க்கை என்பது, இந்தப் பள்ளியில் தான் சேர வேண்டும் என்பதிலிருந்து தொடங்குகின்றது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு விதமான தரம். அந்தப் பள்ளியின் தரம் குறித்த கவலையையை விட சமூக கௌரவம் என்பதாகத்தான் இவர்களின் வாழ்க்கை தொடங்குகின்றது. நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் வாரிசுகளை ஒரு பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு, சேர்த்த பிறகும் மனதில் கொண்டிருக்கும் கவலைகளை பட்டியலிட முடியாது. கல்வி குறித்த அக்கறை, எதிர்காலம் குறித்த கவலை, பிள்ளைகள் பெறவேண்டிய மதிப்பெண்களின் அவசியம் போன்ற எதுவும் பணக்கார வாரிசுகளுக்கு இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்…

மொத்தத்தில் இவர்களுக்கு எது குறித்தும் கவலையில்லை. வாகனம், வண்டி, தினச் செலவுப் பணம் முதன்மையாகவும், கல்வியென்பது இரண்டாம் பட்சமாகவும் இருக்கின்றது. இவர்கள் பிஞ்சில் பழுத்த பழமாக வாழ்க்கையில் அனுபவித்தே ஆக வேண்டிய கேளிக்கைகளை உடனடியாக அனுபவிக்கும் வேகமும் என்னை  மிகவும்  சிந்திக்க வைக்கின்றது.  ஒரு பள்ளியில் ஆறாவது படிக்கும் பையன் கொண்டாட்டம் (Get together party) என்ற பெயரில் ஷாம்பெய்ன் மற்றும் பீர் குடுவைகளை பயணிக்கும் வாகனத்தில் கொண்டு போய் மொத்தமாக இறக்கி கொண்டாடிய கொண்டாட்டங்களை பார்த்த போது கனவா நிஜமா என்பது போலவே இருந்தது. இவர்கள் படிக்கும் பள்ளிகளும் வசூலிக்க வேண்டிய பணத்தில் மட்டும் குறியாக இருப்பதால் மௌன சாட்சியாகவே அங்கீகாரம் கொடுத்து இவர்களை கெடுத்துக் கொண்டிருக்கின்றன.

இவர்கள் தட்டுத்தடுமாறி பள்ளி இறுதியை தாண்டிவிட்டால் போதும். நிச்சயம் ஏதோவொரு ஒரு வெளிநாட்டில் பணம் கட்டி அல்லது பணம் கொடுத்து ஒரு டிகிரியை வாங்க வைத்து விட்டால் வாரிசுகளின் கல்வி வாழ்க்கை முடிவுக்கு வந்து விடுகின்றது. நிச்சயம் ஆங்கிலம் பேசமுடியம். இந்த ஒரு தகுதியே போதும் என்ற நிலையில் இருப்பதால் சமூக, தொழில் அங்கிகாரத்திற்குள் எளிதாக நுழைந்து விட முடிகின்றது.

நம்மூர் பி.காம் பட்டப்படிப்புக்கு அமெரிக்காவில் தனது மகனை படித்து வைக்க ஒரு முதலாளி செலவழித்த தொகை ஒரு கோடி ரூபாய்.  பையன் இப்போது நிர்வாகத்திற்கு வந்து விட்டார். திருப்பூருக்கு அருகே உள்ள ஒரு பள்ளியில் 12 வருடமும் குடும்ப வாடையே இல்லாமல் படித்து, குடும்பத்தினர் விரும்பியபடி வெளிநாட்டிலும் படித்து முடித்து  நிர்வாகப் பொறுப்புக்கு உள்ளே வந்த முதல் வருடம் நிறுவனம் இழந்த தொகை சுமார் ஆறு கோடி. குடும்ப பாசமும் இல்லை. அப்பா உழைத்த உழைப்பின் அக்கறையும் தெரியாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற ரீதியில் எடுத்த முடிவுகளால் நிர்வாகம் தள்ளாடிக் கொண்டு மூடுவிழாவை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் நிர்வாகத்திற்கு பாதிப்பு என்பதை விட நிர்வாகத்தை நம்பிய பல துணை நிறுவனங்கள் தெருக்கோடிக்கு வந்து பல பேர்கள் கடனுக்கு பயந்து காணாமல் போய்விட்டார்கள்.

ஆனால் நடுத்தர வாழ்க்கையின் வாரிகளின் எண்ணங்கள் உயர்வாக இருக்கலாம். உழைப்பும், நேர்மையும் கூட அதிகமாக இருக்கலாம்.  ஆனாலும் இவர்கள் அத்தனை பேர்களும் இது போன்ற நிர்வாகம் தெரியாதவர்களிடம் தங்களை அடகு வைத்துக் கொண்டு  வாழும் சூழல் இருக்கிறது. இதிலும் சிலர் மட்டும் உடைக்கப்பட வேண்டிய வளையங்களை உடைத்துக் கொண்டு உன்னதமான இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Such joint study ought to be done in a do my homework for money spirit of understanding

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “செல்வந்த வாரிசுகளால் சிதையும் நிர்வாகங்கள்”
 1. LAKSHMANAN says:

  சிறகுக்கு உங்கள் பங்களிப்பு மகிழ்வைத் தருகிறது

 2. JOTHIG says:

  THANKS MUTHUKUMAR. I WILL CORRECT IT.

 3. முத்துக்குமார் says:

  வசதி படைத்த அத்தனை பேரையும் இப்படி ஒட்டுமொத்தமாக குற்றம் சுமத்திவிட முடியாது. பணம் இருப்பதால் எதையும் பெற்றுவிட விட முடியும் என மனோபாவம் பிள்ளையிடம் வளர்வது மட்டுமே இதற்குக் காரணமாக இருக்க முடியும். நடுத்தர வர்க்க குடும்பத்தில் எத்தனை பேருக்கு தன் குழந்தை எப்படிப் படிக்கிறது என்று தெரியும்? அவர்களுக்கு தன் குழந்தை நான்கு வார்த்தை ஆங்கிலத்தில் பேசினால் நன்றாக படிப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஆக இது மிகவும் விவாதத்துக்குட்பட்ட கட்டுரை. வேறு கோணத்தில் இதை அலச வேண்டும் என்று எண்ணுகிறேன்.

  கட்டுரையில் நிறைய எழுத்துப் பிழைகள்:
  1.ஆச்சரியங்கள். திருப்பு முனைகளை சந்தித்து வந் போதிலும்
  ==>ஆச்சரியங்கள், திருப்பு முனைகளை சந்தித்து வந்த போதிலும்
  2. அதை சகித்துக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல ஒவ்வொரும்
  ==> அதை சகித்துக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல ஒவ்வொருவரும்
  3.வாழ்ந்து முடிக்கும் போகும் ஏக்கத்தை மட்டும்
  ==> வாழ்ந்து முடிக்கும் போது ஏக்கத்தை மட்டும்

  4. இளையர் கூட்டத்தின்
  ==> இளைஞர் கூட்டத்தின்

  5. கொண்டிருககும்
  ==> கொண்டிருக்கும்

  6. ஒரு பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு, சேர்த்த பிறகும்
  ==> ஒரு பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பும், சேர்த்த பிறகும்

அதிகம் படித்தது