சொந்தம்(சிறுகதை)
ஆச்சாரிApr 15, 2013
ட்ரிங்… ட்ரிங்… என தொலைபேசி மணி ஒலித்ததும், எடுத்த வாணிக்கு உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பித்தது. தன் தோழிக்கு விபத்து ஏற்பட்டுள்ள செய்தியைக் கேட்டவள், அவசர, அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல பயணச்சீட்டை எடுத்துக் கொண்டு இரயிலில் ஏறினாள். அதே பெட்டியில் முழங்கால் அளவுக்கு அழுக்குச் சட்டையை அணிந்த ஒரு சிறுவனும் ஏறினான். “அம்மா! பிச்ச போடுங்க… சாப்புட்டு ரெண்டு நாளாச்சு… ’’ என்று அனைவரிடமும் பிச்சை கேட்டான். சிறுவன் வாணியிடம் வந்ததும் சில்லற இல்ல போடா… என்றாள். அருகில் இருந்தவளோ; “இவங்களுக்கெல்லாம் இதுதான் வேல, படிக்கிற வயசுல பிச்ச எடுத்துகிட்டு போ . . போ . . என விரட்டினாள். சைதாப்பேட்டையில் இறங்கியதும், வாணியின் பணப்பையை பிடுங்கிக் கொண்டு ஓடிய சிறுவனை டேய்! நில்லுடா… ஒடாத… கத்தியபடியே துரத்தினாள் அவள். மூச்சிறைக்க ஓடியவன் எதிரே வேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதி, அம்மா… வென அலறிக் கீழே விழுந்தான். அவளோ’’ இந்தச் சின்ன வயசுல திருடுறியா? என்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
வாடா! ஒன்ன போலிஸ் ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போறேன் என்றதும், வேண்டாங்க்கா, இனி இந்த மாதிரி செய்ய மாட்டேன் இந்தாங்க உங்க பர்சு என்று அவளிடம் நீட்டினான். அவன்தான் பர்ச கொடுத்துட்டானே! அவன விட்டுடுமா… என்று அருகில் இருந்தவர் கூற… கோபத்தோடு புறப்பட்டவள் பின் மருத்துவமனையில் இருக்கும் தன் தோழியைப் பார்த்து விட்டு வெளியே வந்தாள். சற்றுத் தூரத்தில் அதே சிறுவனைக் கண்டதும். “டேய்! நீ இங்க என்னடா பண்ற… இங்க யார்கிட்டத் திருட வந்த? எனக் கேட்டதும், கண்களில் நீர் வழிய, என்கூட வாங்கக்கா என்று அதே மருத்துவமனைக்குள் மீண்டும் அவளை அழைத்துச் சென்றான். அங்கே படுக்கையில் அசைவற்றுக் கிடந்த சிறுவனின் தாயைக் கண்டதும்… இரக்கத்தோடு இருவரையும் பார்த்தாள் வாணி. அவனோ அழுது கொண்டே “ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பழம் விக்கப் போனப்ப கீழே அம்மா விழுந்துட்டாங்க. தலையில அடிபட்டிருக்கு காலும் ஒடஞ்சு போச்சு… படுத்த படுக்கையா கிடக்காங்க, சாப்பாடு வாங்கிக் கொடுக்க காசு இல்ல அதான்… வாணிக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் தனது பணப்பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள். அதெல்லாம் வேண்டாங்கா… நீங்க என்ன மன்னிச்சதே போதும்… என்றான்.
பரவாயில்லடா பணத்த வெச்சுக்க… இனி இந்த மாதிரி தவறச் செய்யாத… ஏதாவது உனக்கு இனி உதவி வேணும்னா எனக்கு போன் பண்ணு…என்று தனது விலாசமும், அலைபேசி என்னும் அடங்கிய முகவரி அட்டையைக் கொடுத்தாள். கொடுத்துவிட்டுக் கிளம்பிய அவளின் கைகளை, பிடித்தன அந்தப் பிஞ்சு விரல்கள்… தனக்கு ஒரு புதுச்சொந்தம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில்…
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
NICE MORAL….