மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சொற்பொருள் தெளிவோம்: கற்றலும் படித்தலும்

ஆச்சாரி

Nov 1, 2012

முன்னுரை:

இன்று நாம் பல சொற்களைக் குறிப்பிட்ட நிலைமைகளில் மட்டும் வழங்குவதால் அவற்றின் முதற்பொருள் தெரியாமல் கிடக்கிறோம். இதனால் என்னாகிறதென்றால் படிப்படியாகச் சொற்களைத் தவறான இடங்களில் வழங்கத் தொடங்கிவிடுகின்றோம்; இப்படி வழங்குவதால்  மொழிக்கும் நம் தெளிவுக்கும் கெடுதல் நிகழ்கிறது. மேலும் இந்தக் குழப்பத்தால் இன்றைக்குப் புதிதாக எழும் கருத்துக்களுக்கும் கருவிகளுக்கும் தக்கசொற்களை வழங்குவதிலும் பெருத்த தடையேற்படுகிறது. எனவே இந்தக் கட்டுரைத் தொடரில் நாம் சொற்களின் முதற்பொருளை அறிந்து தவறான வழக்கங்களைத் தவிர்க்குமாறு ஆராய்கிறோம்.

இந்தக் கட்டுரையின் தூண்டல் என்னவென்றால் ஓர் இளநிலைத் தமிழ்மொழிப் பயிற்சியில்  “நீச்சல் படிக்கிறாள்” என்று சொல்லியிருந்தது!  அது கேட்டவுடன் மிகவும் வருத்தமாகிவிட்டது.  நீச்சல் என்பது படிப்பது கிடையாது; அது கற்பது.

இப்படியெல்லாம் தவறு நிகழ்வதன் காரணம் நாம் தமிழ்ச்சொற்களை அன்றாடம் வழங்கும்பொழுது அடிப்படைப் பொருளை நினைக்காமல் ஏறக்குறைய வெறும் ஒலித்தொடராக மட்டும் பேசுவதே காரணம்;  நம்மிடைய சீரான பயிற்சி இந்த நோக்கிலே இல்லாமையே காரணம் என்று தெளிந்தது.

கற்றலுக்கும் படித்தலுக்கும் வேறுபாடென்ன?

தொகுத்துச் சொன்னால் கற்றல் கல்வி ஆகியவற்றின் வினைச்சொல்லாகிய கல் என்பதன் பொருள் பழகு அதாவது  பயில் என்பதாகும். படித்தல் என்பதன் வினைச்சொல்லாகிய படி என்பதன் பொருள் சொல்லு  அல்லது ஓது என்பதாகும்.  இதனை விரிவாக மேலும் காண்போம்.

கற்றல் என்றால் பழகுதல்:

நாம் இன்று கற்றல் கல்வி என்றால் உடனே இன்றைய கல்விநிலையங்களில் புத்தங்களைப் படிக்கும் செயலையே நினைவுகூர்கிறோம். இதனால் கல்வி என்றாலும் படிப்பு என்றாலும் ஒன்றே என்ற நிலைமை நேர்ந்துவிட்டது.

ஆனால் கல் என்ற சொல்லின் பொருள் பழகு அல்லது பயில் என்பதேயாகும். அதனாலேயே  இன்றுங்கூடச் “சிக்கனாமாய் வாழக் கற்றுக்கொள்”, “வண்டியோட்டக் கற்றுக்கொண்டேன்” என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் கல்வி என்ற சொல்லைப் பழக்கம் பயிற்சி என்ற கருத்துக்களோடு சேர்த்து நாம் நினைப்பதில்லை. உடனே புத்தங்களையும் பட்டங்களையும் நினைக்கிறோம்!

திருக்குறளில் “அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார் தமரின் தனிமை தலை” (தீநட்பு) என்ற பாட்டுப் “போர்க்களத்தில் நடுவழியில் கைவிடும் பழகாத குதிரையைப் போன்றவர்களான தம்ஆட்களைவிடத் தனிமையே சிறப்பு” என்று பொருள்படும். பரிமேலழகரும்[i] “கல்லா மா” என்பதற்குக் “கல்வி இல்லாத புரவி” என்று பொருள் சொல்வார். இங்கே குதிரைக்குக் கல்வி என்றால் பாடநூற் படிப்புக் கிடையாது! வெறுமனே அடிப்படைப் பொருளான பயிற்சி என்றுதான் பொருள்.

பழகுதல் பயிலுதல் ஆகியவற்றின் பொருள் நெருங்குதல் உறவாடுதல் பொருந்துதல் என்பதாகும்.

“மரம்பயில் கா” (மதுரைக்காஞ்சி: 335) என்றால் “மரங்கள் நெருங்கிய சோலை”. “பயிலிதழ் மலர்” (கலித்தொகை: 103) என்றால் “நெருங்கின இதழ்கள்கொண்ட மலர்” என்று பொருள். திருக்குறளில் நட்பிலே “பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு” (திருக்குறள்: நட்பு: 783) என்பதிலே “உறவாடுந்தோறும் அல்லது கூடுந்தோறும் பண்புடையாளரின் தொடர்பு” என்று பொருள்படும்.

எனவே கற்றல் என்றால் நூல்களைப் படிப்பது என்றல்லாமல் ஒரு திறனைப் பழகுதல் என்றே பொருளாகும். பழகுதல் என்பதால் அடிக்கடிப் பொருந்துவது என்பது பெறுகிறது. இதனாலேயே கல்வி என்ற அதிகாரத்தின் முன்னுரையில்[ii] பரிமேலழகர் “யானை குதிரை தேர்படைக்கலம் “ என்று நீதிநூல் போன்றவை அல்லாத உடல்சார் திறன்களையும் கூறிக் “கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்” என்றுசொல்லிப் பலகாலும் அதாவது பலதடவை, அடிக்கடி என்று உரைகூறுகிறார்.

படித்தல் என்றால் ஓதுதல்

நாம் கல்வித்தொடர்பாக வழங்கும் படித்தல் என்ற சொல்லுக்கு முதற்பொருள் ஒலித்தல் ஆகிய  ஓதுதல் என்பதேயாகும். மேலும் இந்தச் சொல் தமிழ்மொழியிலே பழைய இலக்கியங்களில் பெரிதாகக் காண்பதில்லை. அதற்கு ஈடாக ஓதுதல் என்பதே பெருவாரியாக வழங்கும். அதனாலேயே ஓதுவதொழியேல் என்று தோராயம் ஆயிரமாண்டுகள் பழைய ஔவையாரின் ஆத்திசூடியும் வழங்குகிறது.

படி என்ற சொல் வடமொழி மரபிலேயிருந்து புகுந்துள்ளது என்று சென்னைப் பேரகராதி[iii] சொல்கிறது. வடமொழியிலே பட2- (paṭh-) என்ற சொல் வடமொழிமறை மரபில் ஓதுதல் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லுதல் என்ற பொருள்களில் சங்க இலக்கியங்களுக்கும் பலநூற்றாண்டுகள் முன்பிருந்தே வழங்கியுள்ளது. பாடம் என்ற வடமொழிச்சொல்லும் அதே வேர்ச்சொல்கொண்டதுதான்.

ஆயினும் அந்தச் சொற்களின் வளைநா ஒலியாகிய ட2கரம் வடமொழியின் இந்தோ ஐரோப்பியமொழிக் குடும்பத்திற்கு அயலானது. எனவே அது தென்னாசியாவில் ஆரியர் புகுந்தபின்னர் வளைநாவொலிகொண்ட திராவிட மொழிகளைப் பேசும்  அயல்மொழியினர் உறவாடலில் பெற்றதாய் இருக்கவாய்ப்புண்டு என்று ஏற்கெனெவே விற்றுசல் போன்ற அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்[iv];  ஒலிப்பொருள்கொண்ட பாடு, பாட்டு ஆகிய தமிழ்மொழிச்சொற்களை அவர் சுட்டுகிறார். மேலும் அவர் வேதத்து ஓதல்மரபில் மேலும்பல அயல்மொழிச் சொற்களான மண்டலம், கண்டம், காண்டம், ப்ரபாடகம், படலம், தண்டம், ஓரிமீகா போன்றவற்றையும் உடந்தைச் சான்றுகளாகவும் சுட்டுகிறார்; அவை டகரம் ணகரம் ஆகிய வளைநாவொலிகள் கொண்டிருப்பதைக் கவனிக்கவும்.

அப்படி ஒருபுறம் இருக்கவும். படித்தல் என்றால் இப்பொழுது  பலரும் புத்தகத்தினைப் பார்த்துச் சொற்களை ஒலிக்கும் செயலை மட்டுமே நினைப்பர். ஆனால் படித்தல் என்பதற்குப் பொருள் ஒலித்தல் என்ற அடிப்படைப்பொருள்கொண்ட சொல்லுதல், பாடுதல்,  துதித்தல் ஆகியன. இதனாலேயே இலக்கியங்களில் “படித்தனன் வாலி மைந்தன்” (கம்பராமாயணம்.:திருவடி:25), அதாவது, “வாலிமகன் சொல்லினான்” என்று பொருள்படவும், “நின்பாதம் படித்தோர்க்கும்” (தனிப்பாடல்) அதாவது “நின்பாதம் புகழ்ந்தோர்ர்கும்”  என்று புகழ்தற் பொருளிலும் வழங்குவதைக் காண்கிறோம் (சென்னைத் தமிழகராதி).

இன்றும் சிலர் “அவன் அவரிடம் பாட்டுப் படிக்கிறான்” என்று பேசுவதைக் கேட்கிறோம்; ஆனால் அது அருகிவருகிறது. உ.வே.சாமிநாதையர் போன்றவர்களும் இந்தந்த நூலை இன்னாரிடம் பாடங்கேட்டதாகச் சொல்வார்கள்.

தொல்காப்பிய மரபியல் அறிவுறுத்தும் சொல்நெறி:

நாம் இந்தக் கவனத்தோடு பேசாததாலேயே கடைசியில் நீச்சல் கற்கிறாள் என்று சொல்லாமல் நீச்சலைப் படிக்கிறாள் என்று பிசகலாகப் பேசும் நிலைமைக்கு வந்துசேர்ந்துள்ளோம்.

சொற்களைத் தொன்றுதொட்டு பொருள்வழுவாமல் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியே தொல்காப்பியத்தில் மரபியல்[v] என்ற அரிய படலம் அமைந்துள்ளது. சான்றாக மரபியலின் தொடக்கத்தில் எந்தெந்த விலங்குகளின்  இளஞ்சிறிய நிலைமைக்குக் குட்டி, குருளை, கன்று, பார்ப்புப், பிள்ளை, மறி, பறழ், போத்து ஆகிய சொற்கள் வழங்கவேண்டும் என்று கூறுகிறது.  நாம் அந்த மரபிலிருந்து வழுவி இன்று குட்டி, கன்று என்ற இரண்டு சொற்களை மட்டுமே வழக்கிலே ஆடுகின்றோம். இதனால் எத்தனை அரிய பழைய சொற்கள் மறைந்துபோய்விட்டன என்று எண்ணி நோகவேண்டும். இப்படித்தான் கற்றலும் படித்தலும் குழம்பிப்போய்விட்டன.

மேலும் அந்த மரபியல் தொடங்கும்பொழுதே “மாற்றருஞ் சிறப்பின் மரபியல்”  (தொல்காப்பியம்:பொருள்: மரபியல்:1), அதாவது, “விலக்குதற்கரிய சிறப்பினை உடைய மரபியல்” என்று கூறுகிறது. மேலும் அந்த மரபுநிலை பிசகினால் நிகழும் கேடும் சொல்கிறது[vi]: “மரபுநிலை திரியிற் பிறிது பிறிதாகும்” (தொல்காப்பியம்:பொருள்: மரபியல்:93), அதாவது, “மரபுநிலை திரிந்துவரின் பொருள் வேறுவேறாகும் … வழு” (இளம்பூரணர் உரை). ஆகமொத்தம் மொழி பிதிர்ந்து சிதைந்துபோகும். பழைய இலக்கியங்கள் மரபுநினைவுகள் அழியும். புதுக்காலத்திற்கான மொழித்தேவைகளுக்கு ஈடு கட்டும் மொழிவளமும் வற்றிப்போகும். நம் கருத்துத்திறனும் பகுத்தாய்வும் குறைபடும்.

முடிவுரை:

கற்றல் என்றால் பழகுதல் என்று நெருக்கப் பொருளாகும். படித்தல் என்றால் பேசுதல் ஓதுதல் என்ற ஒலிப்பொருளாகும். நீச்சல் போன்றவை கற்பவை. நீச்சல் படிக்கிறாள் என்றெல்லாம் பேசுவதை அறவே தவிர்க்கவேண்டும்.  பொதுவாக நாம் படிப்பதாகச் சொல்பவை எல்லாமே கற்பவையாகவும் சொல்லமுடியும். ஆனால் அதற்கு மறிப்பாகக் கற்பவை எல்லாமே படிப்பவையாகச் சொல்லமுடியாது.

கல்வி என்றால் பயிற்சி, பழக்கம் என்ற சொற்களும் கருத்துக்களும் உடனே பிரியாமல் நம் உள்ளத்திலே ஊன்றவேண்டும். எந்தக் கல்லூரியிலே பயில்கிறார். பயின்றுகொண்டிருக்கிறார், நான் நீச்சல் பயின்றுகொண்டிருக்கிறேன் என்றெல்லாம் வழக்கூன்றுமாறு பேசவும் எழுதவும் வேண்டும். சொல்லிக்கொடு போன்ற சொற்களையும் குறைத்துப் பழக்கு, பயிற்று என்ற சொற்களை அன்றாடப்பேச்சிலே வழங்குதல்வேண்டும்.

மேலும் பொதுவாகவே சொற்களின் அடிப்படைப்பொருளை உணர்ந்து மரபோடு பேச முனையவேண்டும். சான்றாக வணக்கம், கும்பிடல், வழிபடல் ஆகியவையும் இப்படிக் குழம்பிப்போன ஒருதுறையாகும்.

இங்கே கல்வி என்பதை ஆராய்ந்ததால் கல்வியின் நெறிமுறைபற்றியும் நமக்கு நல்ல தெளிவுகிட்டுகிறது.  கசடறக் கற்கவேண்டியவற்றிலே  மாணவர்களை மீண்டும்மீண்டும் பொருத்திப் பழக்கவேண்டும் என்பதே அது. அதன்படி நம்முடைய இன்றைய தமிழ்மொழிக்கல்வியும் முறையாக மாணவர்களைப் பழக்குவதில்லை.

பழைய இலக்கியங்களைக் கருத்தளவிலும் பெருமையளவில் மட்டும் கல்வித்திட்டமும்  பேசுகிறது. ஆனால் அந்த இலக்கியச் செய்யுள்களை நேரடியே புரிந்துகொள்ளும்படி நெருக்கமாகப் பழக்குவதில்லை. பொருளைமட்டும் தெரிந்துகொண்டால் போதும் என்கின்றன. மிக எளிமையாக இனிமையாக வெளிப்படையாகப் பயிற்றவேண்டிய கல்விநெறியை மறந்ததால்தான் இன்று இலக்கியப் பயிற்சிக்கே பெருத்தகேடு நேர்ந்துள்ளது. மேலும் சொற்களின் அமைப்பைப் பகுப்பதிலும் முறையான பயிற்சிகிடையாது.  நன்னூல் போன்ற நூல்கள்  ஆயிரமாண்டுகள்முன்பே காட்டினதை அட்டவணையாகக் காட்டிச் சீர்மைகாட்டிக் கற்பிப்பதில்லை. இதனால் மாணவர்களுக்குச் சொற்களிடையே உள்ள தொடர்பும் பொதுமையும் தெரிவதில்லை;  புதுச்சொற்கள் ஆக்கும் வழியும் தெரிவதில்லை.

ஏன் இன்றைய உரைநடைமொழிக்கான கல்விமுறைகள்கூடப் பழுதுபட்டுள்ளன.  ஏன் வெறும் ழகர, ளகர, டகர, ணகரங்களை நாமடக்கித் திருத்தமாக ஒலிக்கும் பயிற்சிகூடக் கல்விமுறையில் கிடையாது.  இதனாலே ழகரம், ளகரம் இரண்டுமே இன்று லகரமாகவே ஆசிரியர்கள்கூடப் பேசும் நிலைமை! தமிழ்மொழிக்கு இருப்பதிலேயே மிகப்பெரிய கேடு இந்தத் தவறான ஒலியுச்சரிப்பே. இவ்வாறு  எல்லா நிலையிலும் மொழிகுலையுமாறும் மாணவர்கள் மலைக்குமாறும் செய்து நாம் கல்வி கற்பித்தல் என்றாலே என்னவென்று தெரியாதவர்களாகக் கிடக்கிறோம். கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற சுப்பிரமணியப் பாரதியாரின் புகழ்ச்சொல்லுக்குத் தக நம் நிலைமையில்லை இன்று.

பழம்பொருள்மரபோடு சொற்களை வழங்கும் முயற்சியிலும் நம் மொழிக்கல்வியை மேம்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டால் செந்தமிமொழிக்கு மறுமலர்ச்சியுண்டு. நம் அறிவுத்திறனுக்கும் வளர்ச்சியுண்டு.

Just over two in five students % writemyessay4me.org were in their first year of community college when they took the survey, while percent were in their second year, and percent had been in college for three or more years

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “சொற்பொருள் தெளிவோம்: கற்றலும் படித்தலும்”
  1. வே.தொல்காப்பியன் says:

    கல், படி இரண்டையும் ஆழமாகப் புரிந்து கொள்ளச் செய்யும் நல்ல கட்டுரை. ‘அடியாத மாடு படியாது’ என்பதில் உள்ள ‘படி’ என்பதையும் ஒப்பிட்டு நோக்கலாம். தொடர்ந்து மீண்டும் மீண்டும் செய்வதால் நம்மிடம் படியும் பண்புகள் என்ற பயன்பாட்டையும் காண்க. படி = பணி (படிந்து செல். அதாவது பணிந்து செல்) என்ற பொருளும் உள்ளது. பெரியண்ணன் சந்திரசேகரன் இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுத வேண்டும். மொழி ஓர் இன்பம் என்பதை நாம் அடுத்த தலைமுறையினருக்கும் நுகரப் பழக்க வேண்டும்.

    சில‌ எடுத்துக் காட்டுகள்:

    மண் என்றால் மண்டிக் கிடப்பது. ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடப்பது. எனவே களி மண் எனப்பட்டது. ஆனால் ஆற்று (அல்லது கடல்) மணல் என்ப்பட்டது. மண் + அல் = மணல். ‘மண்ணில் கயிறு திரிக்கிறான்’ என்று சொல்லாமல் ‘மணலில் கயிறு திரிக்கிறான்’ என்று சொல்லக் காரணம் மணல் ஒன்றோடு ஒன்று ஒட்டாத துகள்களைக் கொண்டது. எனவே மணலில் கயிறு திரிப்பது முடித்தால் பெரும் சாதனை, முடியாததற்குப் புரட்டு.

    விலங்குகளின் குட்டிப் பெயர்களைப் போல் மரங்களின் தொகுதிக்கும் பலவிதமான பெயர்கள் உள்ளன. மாஞ்சோலை. ஆனால் தென்னந் தோப்பு. கரும்புத் தோட்டம். மூங்கில் புதர் / காடு.

    குளமும் ஏரியும் அளவில் மட்டும் வேறு படவில்லை. குளிக்கப் பயன்பட்டது குளம். ஏர் உழவுக்குப் பயன்பட்டது ஏரி.

அதிகம் படித்தது