டெங்கு
ஆச்சாரிNov 15, 2012
இது பெருமழைக்காலம். வங்கக்கடலின் காற்றழுத்தச் சுழற்சி புயலையும், மழையையும் ஒருசேரக் கொண்டுசேர்க்கும் காலம். வானிலை நிபுணர் திரு. ரமணன் அவர்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் அடிக்கடி தோன்றி, முன்னுக்குப்பின் முரணாக பேசும் காலம். கோடை வெயிலின் தகிப்பால் தவித்த தமிழக மக்கள், சாரல் மழையையும், குளு குளு காற்றையும் சுவாசிக்கும் காலம். இப்படியாக, நாம் இந்த சீதோஷ்ண நிலையை ரசித்துக் கொண்டிருக்கும் வேளையிலே, சாத்தானால் சபிக்கப்பட்ட வியாதிகளும் வருகின்றன. கோடை காலங்களில், ஒண்டி ஒளியும் பல வியாதிகள், மழைக் காலங்களில் புதுப்புது பெயர்களை தாங்கியபடி, நம் மீது படையெடுக்கின்றன. அவற்றில், நமது உயிருக்கே உலை வைக்கக் கூடியது, டெங்கு காய்ச்சல் தான்.
உலக அளவில், சுமார் 110 நாடுகளைத் தன் நோய்க்கொற்றக்குடையின் கீழ் கொண்டுள்ள வல்லமை டெங்குக்கே உரியது. ஒவ்வொரு ஆண்டும் 5 கோடியிலிருந்து 10 கோடி பேர் இந்த காய்ச்சலால் பாதிக்குள்ளாகின்றனர். இதில், 15000 முதல் 25000 பேர் பலியாகவும் செய்கின்றனர். இது உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) புள்ளிவிபரக் கணக்கு.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கடந்த வாரத்தில் ஒரே நாளில் 12 பேர் பலியானது, டெங்கு இங்கு வெகு வேகமாக பரவி வருவதை காட்டுகிறது.
டெங்கு காய்ச்சல் நான்கு வகை நுண்கிருமிகளால்(DENV-1, DENV-2, DENV-3 & DENV-4) உருவாகிறது. இந்த நுண்கிருமிகளைப் பரப்பும் கொசுவுக்கு ஏ. எஜிப்டி(A. aegypti) என்று மருத்துவர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த கொசு மனிதனை கடிக்கும்போது, அதன் எச்சில்(saliva) மூலமாக, நுண்கிருமிகள் நம் இரத்தத்தில் கலக்கிறது. இது நேரடியாக இரத்த வெள்ளணுக்களை தாக்கி, அதனுள் இனப்பெருக்கம் செய்து நம் உடல் முழுவதும் பரவுகிறது. இதனால், ஈரல்(liver) மற்றும் எலும்புத்திசுக்கள்(bone marrow) பெரும் பாதிப்படைகின்றன. இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுகளின்(Blood Platelets) எண்ணிக்கை கணிசமாக குறைகிறது. நமது உடலில் ஒரு கன மில்லி லிட்டருக்கு, சராசரியாக 1.5 லட்சம் முதல் 4 லட்சம் மில்லி லிட்டர் வரை இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை இருக்கவேண்டும். இந்த இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைவதால், இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் குறைந்து, இரத்தக்கசிவு ஏற்படுகிறது. இந்த நுண்கிருமிகளின் தொடர்ந்த தாக்குதல் காரணமாக, இரத்த வெள்ளணுக்கள்
முழுமையாக அழிந்துவிடுவதால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, முக்கிய உறுப்புக்களான இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து மரணம் சம்பவிக்கிறது.
இந்த டெங்கு நுண்கிருமிகள், கொசுக்களின் மூலம் மனித உடலுக்குள் நுழைந்த 3 முதல் 13 நாட்களுக்குள் இனப்பெருக்கம் மூலம் பல்கி பெருகத்தொடங்கும். டெங்கு பாதிப்பு கொண்ட ஒருவர், 5 முதல் 8 நாட்களுக்குள் நன்கு அதன் அறிகுறிகளை உணர முடியும். 105 டிகிரி வரையிலான கடுமையான காய்ச்சல், வாந்தி, கண்வலி, மூட்டு வலி மற்றும் உடல் முழுவதும் வலி போன்றவை இதன் அறிகுறிகள். உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றும். உடல் அரிப்பும் முக்கிய அறிகுறி தான்.
டெங்கு காய்ச்சலை சாதாரண இரத்தப் பரிசோதனை மூலம் அறியமுடியாது. “எலிசா”(Elysa Test) என்ற சிறப்பு இரத்தப் பரிசோதனையின் மூலம் மட்டுமே அறியமுடியும்.
இந்த ஏ. எஜிப்டி(A. aegypti) வகைக் கொசுக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் உலவி, மனிதர்களைப் பதம் பார்ப்பவை. மூடப்படாதத் தண்ணீர் தொட்டிகள், நீர் நிரம்பிய ஆட்டு உரல்கள், பயன்படுத்திய தேங்காய்த் தொட்டிகள், தெருவோரங்களில் கிடக்கும் பழைய டயர்களின் உட்பகுதிகள், மழை மற்றும் கழிவுநீர் தேங்கியிருக்கும் பகுதிகள், இவைகள் யாவும் இக்கொசுக்களின் வசிப்பிடங்கள்.
டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க ஒரே வழி, கொசுக்களை நம் அருகில் அண்டவிடாமல் தடுப்பது தான். இதற்கு, நமது வீட்டின், அலுவலகத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். வீட்டு முற்றங்களில் டி.டி.டி (T.T.T.) மருந்தை தெளிக்கலாம். வீட்டின் அருகில் கழிவுநீர் சாக்கடை இருந்தால், அதில் “டெல்டா மெத்தரின்”(Telta Metharin) கிருமி நாசினியை தெளிப்பதன் மூலம், டெங்கு கொசுக்களின் இனப்பெருக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்தலாம். குடிசைகள் நிறைந்த நெருக்கமான வசிப்பிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் கொசுக்களை கூண்டோடு ஒழிக்க “கிரிசால்” என்ற வேதிப்பொருளை புகைய விடலாம். வீட்டினுள் கொசுக்கள் இருப்பதாக உணர்ந்தால், கொசுவிரட்டிகளை பகல், இரவு என இரு நேரங்களிலும் பயன்படுத்தலாம். கூடுதல் பாதுகாப்பிற்கு, கை, கால்களை நன்கு மூடும் விதமாக, முழுக்கை சட்டை மற்றும் முழுக் கால் சட்டை அணியலாம்.
டெங்கு காய்ச்சல் தொற்று வியாதி அல்ல. இது இருமல், தும்மல் மற்றும் சளி போன்றவற்றால் பரவாது. கொசுவின் மூலமாகவோ அல்லது இரத்தத்தின் மூலமாகவோ மட்டுமே பரவக்கூடியது.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி போடப்படுவதில்லை. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனையையோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களையோ அணுகவேண்டும். சாதாரண காய்ச்சலுக்கு தரப்படும் மருந்து மாத்திரைகளே இந்த டெங்கு காய்ச்சலுக்கும் தரப்படுகின்றன. ஆனால், தேவையான அளவு இரத்தம் செலுத்துதல், இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை கண்காணித்தல் என சிறப்பு கவனம் மிக அவசியம்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த குழந்தைகள் மற்றும் முதியோருக்கே டெங்கு காய்ச்சல் வரும் வாய்ப்பு அதிகம். கடந்த 2006 ம் ஆண்டு தமிழகத்தை நிலைகுலைய வைத்த சிக்குன் குனியா போலவே, டெங்கு காய்ச்சலை எதிர்கொள்ள வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். நாட்டுக்கோழி ரசம், ஆட்டுக்கால் சூப், சத்து மிகுந்த காய்கனிகள் மற்றும் முட்டை என நன்றாக சாப்பிடுவது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
தமிழ்நாட்டின் போற்றப்படாத பொக்கிஷமான சித்த மருத்துவத்தில் டெங்கு காய்ச்சலை ஓட ஓட விரட்டும் அளவுக்கு மிகச் சிறந்த மருந்துக்கள் உள்ளன. நில வேம்பு நீரும் ஆடா தொடை நீரும் டெங்குவை அடி வேரோடு சாய்க்கும் ஆற்றல் கொண்டவை. காலை உணவுக்கு முன்பாக நிலவேம்பு நீரையும், இரவு உணவுக்கு முன்பாக ஆடா தொடை நீரையும் இரண்டு தேக்கரண்டிகள் எடுத்துக்கொண்டு, அதை 200 மி.லி. தண்ணீரில் கலந்து, நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி, தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், டெங்கு காய்ச்சல் பரிபூரணமாக குணமாகும்.
பொதுவாகவே, ஒவ்வொரு மழைக் காலத்திலும், பல்வேறு விதமான வியாதிகள் வந்தாலும், அதை தகுந்த மருத்துவத்தை கொண்டு எதிர்கொள்ள வேண்டிய ஒரு பெரு முனைப்பு நமது அரசுகளுக்கு இல்லை என்றுதான் நினைக்க தோன்றுகிறது. தமிழக முதல்வரின் டெங்கு பற்றிய ஒரு அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் டெங்கு போன்ற வியாதிகள் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதத்தினரை தாக்குவது இயல்பான ஒன்று தான் என்று குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. டெங்கு போன்ற உயிர்க் கொல்லிப் பிரச்சனையில் கூட தமிழக அரசு சமாதானம் சொல்வதையே குறிக்கோளாக கொண்டிருப்பதாக தெரிகிறது.
ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று டெங்கு பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்தவேண்டும். இது முற்றிலும் சாத்தியமான ஒன்றுதான். கிராமச் சுற்றுப்புறங்களை நேரில் ஆய்வு செய்து, அம்மக்களுக்கு தேவையான அறிவுரை வழங்கி, தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தாலே, டெங்கு போன்ற வியாதிகளை, கிராமங்களில் இருந்து அடியோடு விரட்ட முடியும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
I am in Unit Vektor(Denggi) in Malaysia, this Mosiquitoe only lives in clear water….But I dont know how your TV station in Tamil Nadu airs only dirty water if i can but i dont how come in India they always show the dirty drainage only mind you somebody is breeding it in their homes……….