மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்டா விவசாயிகளின் இன்றைய நிலை

ஆச்சாரி

Jan 15, 2013

பேருந்து கட்டண உயர்வு, ரயில் கட்டண உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போன்றவற்றை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ ஏற்றம் செய்யும்போது அனைவரும் கொதிப்படைகிறோம். கூடிக் கூடி விவாதிக்கிறோம். தெருக்கோடியில் போராட்டம் நடத்துகிறோம். ஆனால், உழவன் வாழ்வை நிர்மூலமாக்கும் வகையில் உரவிலை மத்திய அரசால் ஏற்றப்படும் பொழுது நமது எதிர்ப்பை நாம் பலமாக பதிவாவது செய்கிறோமா? இல்லை. ஏனென்றால்,

விவசாயி உழைக்கத்  பிறந்தவன். பிழைக்கத்  தெரியாதவன். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு எதிர்ப்பார்போடு, தனக்கு என்ன வருமானம் கிடைக்கும் என்று தெரியாத, நிச்சயமற்ற நிலையில் பயிர் சாகுபடிக்கு துணிந்து கடன் வாங்குபவன். அவனும் மீனவனும் ஒரே சாதிதான். இந்த இருவரிடமிருந்து சமூகம் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறது. அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க நம்மிடம் எதுவுமே இல்லை. அதனாலேதான், 2010 ல் 486 ரூபாய்க்கு விற்ற 50 கிலோ டி.ஏ.பி. உர விலை இப்போது  1250 ரூபாய்க்கு தாவியபோதும் நாம் எந்த பிரக்ஞையும் அற்றுப்  பர்கரையும், கெண்டகி கோழிக்கறியையும் பீட்சா படம் பார்த்தபடியே முழுங்கிக்கொண்டு இருக்கிறோம்.

உரங்களின் விலையை அதனை தயாரிக்கும் நிறுவனங்களே, உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டம் பற்றி நமக்கு என்ன கவலை? மொத்த உள்நாட்டு மதிப்பில் வேளாண்மைத் தொழில் வெறும் 15 சதவீதம் தானே?இயந்திர   மட்டும் கட்டுமான தொழில்கள் மற்றும் சேவைப் பிரிவு சார்ந்த தொழில்கள் எஞ்சிய வளர்ச்சி விகிதத்தை வைத்திருப்பதால் அவற்றுக்கே கூடுதல் கவனம், மதிப்பு எல்லாம். டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தால் ஏற்றுமதி பாதிப்பு ஏற்படுமே என்று நள்ளிரவில் கவலைப்பட்டு அறிக்கை விடுவார் நமது மத்திய நிதி அமைச்சர். உண்ணும் உணவிற்கு தன்னிறைவு பற்றி யோசிக்காமல், கட்டுமானங்களை நிர்மாணம் செய்வதிலும், தொழில் புரட்சியை கண்டடைவதிலும் ஆர்வம் காட்டும் இவர்களை என்னவென்று சொல்வது?

இந்த உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என எந்த மயமும் தமிழக விவசாயியின் வாழ்வில் எந்த மாயமும் செய்ய முடியவில்லை. அடிப்படையில் நாம் ஒரு விவசாய நாடு என்பதை யாரவது நமது அரசியல்வாதிகளுக்கு எடுத்துச் சொன்னால் நல்லது. தொடர்ந்து பொய்த்து வரும் பருவமழை, நீர் ஆதாரம் குறைந்து வருவது,  விவசாய நிலங்களை தொழில் புரட்சி என்ற பெயரில் விவசாயம் சாராத தொழிற்சாலைகளுக்காக தாரை வார்ப்பது, வீடுமனை வணிகப் பெருக்கத்தால் நல்ல விளைநிலங்களை தரிசாக்கி விற்பனை செய்வது, சீரற்ற மின்சார விநியோகம், விவசாய இடுபொருட்களின் கடும் விலைஉயர்வு, கூலியாட்கள் பற்றாக்குறை, விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்காதது என்று விவசாயி சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு பிரளயத்திற்கு சமம்.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தகவல் அறிக்கையின்படி 1995 முதல் 2010 வரையிலான காலத்தில் இந்தியா முழுவதும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 56  ஆயிரத்து 913 பேர்.  மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் வாரந்தோறும், தினந்தோறும் நடக்கும் விவசாயிகளின் தற்கொலைகள், எல்லைத் தாண்டித் தமிழகத்திலும் அரங்கேறத் தொடங்கியுள்ளன. நீரில்லா நெல்வயலை காணச்  சகிக்காமல் சாகும் தமிழக விவசாயியின் தற்கொலை கூட, வேறுவிதமாய் பிற மக்களுக்கு தமிழக அரசு அதிகாரிகளால் கற்பிக்கப்படுகிறது. தற்கொலை செய்துகொண்டவர் விவசாயியே அல்ல என்று நிரூபிக்க பிரம்ம பிரயத்தனம் எடுக்கின்றனர் நமது விவசாய வேளாண்மை அதிகாரிகளும், வட்டார அலுவலர்களும். இந்த ஒரு சேதி போதாதா நமது விவசாயியின் நிலை எந்த அளவில் இருக்கின்றது என்பதற்கு?

இதிலும், கடன் கொடுக்கிறேன் பேர்வழி என்று கூட்டுறவு வேளாண்மை சங்கங்களும், வங்கிகளும் விவசாயிகளிடம் செய்யும் அராஜகம் உண்மையிலேயே வெட்கக்கேடானது. விவசாயிகளுக்கு பயிர் கடனாக ஒரு இலட்சம் வரை ஜாமீன் கடன் வழங்கப்படுகிறது என்று வங்கிகளில் சொல்கிறார்கள். இரண்டு நபர்களை ஜாமீனுக்கு தேடி அலைந்து பிடித்துக்கொண்டு, விவசாயி வங்கிக்கு சென்றால், அவர்களிடம் படிவம் 26 என்ற ஒரு குழப்பமான, தெளிவில்லாத அரசு ஆவணத்தை வங்கி அதிகாரிகள் கேட்பார்கள். பெரும்பாலும், ஏழை விவசாயி வீட்டில் ரேசன் அட்டையைத் தவிர வேறொன்றும் இருக்காது. இதனால், ஒரு இலட்சம் பயிர்க்  கடன் என்பது கானல் நீர்தான். அடுத்தது, நகைக்கடன். மனைவி போட்டிருக்கும் எந்த நகையும் குருவைச்  சாகுபடிக்கு வங்கிக்கு போய்விடும், குறைந்த வட்டி விகிதம் என்ற காரணத்தால். போனது போனது தான். வயலில் போட்ட உழைப்பு போலவே இதுவும் திரும்ப வராது.

பயிர்க் கடனை சரக்கீட்டுக் கடனாக கொடுங்கள் என்று விவசாய சங்கங்கள் அரசிடம் மன்றாடி பார்த்துவிட்டன. இதுக்கு செவி சாய்க்க மறுக்கும் தமிழக அரசு, விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்கு கடன் கொடுத்திருக்கிறோம் என்று ஆவணத்தில் பதிவு செய்வதற்காக, முன்னுரிமைக் கடன் என்ற பெயரில் முத்தூட் போன்ற தனியார் நுண்கடன் நிறுவனங்களுக்கு 300 கோடி, 400 கோடி என அள்ளி வழங்குகிறது. இதையே சரக்கீட்டுக்  கடனாக தனி விவசாயிகளுக்கு கொடுத்தால் ஏழை விவசாயிகள் கந்துவட்டி, மீட்டர்வட்டி போன்ற தனியார் முதலாளிகளிடம் மாட்டிக்கொண்டு அல்லல்படத் தேவையில்லை.

மஞ்சள் விளைவிக்கும் விவசாயி அதன் விலை ஏறும்வரை காத்திருந்து விற்க முடிவதில்லை. போதிய நிதியின்மையால் மஞ்சளைத்  தக்கவைத்துக்  கொள்ளமுடியாமல், மாபியா கும்பலைப் போன்ற இடைத்தரகர்களுக்கு, ஏழை விவசாயிகள் சுடச்சுட குறைந்த விலைக்கு விற்கிறார்கள். பின்பு, அவ்விடைத்தரகர்கள், மஞ்சளைப்  பதுக்கிவைத்து, நல்ல விலை வரும்போது விற்பார்கள். ஆனால், மஞ்சள் பயிரிடும் விவசாயி அதை செய்ய முடியாது. சரக்கீட்டு கடன் கொடுக்க சங்கங்களும் வங்கிகளும் முன்வந்தால் ஏழை விவசாயி நிச்சயம் பயன்பெறுவார்.

2010 ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, இந்தியா முழுக்க, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் வராக்கடன் 44 சதவீதம். கடன் பெற்றால் திருப்பிச் செலுத்த தேவை இல்லை, அது தள்ளுபடி செய்யப்பட்டு விடும் என்று உறுதியாக விவசாயிகள் நம்புவது தான் வங்கிகள் கடன் கொடுக்க தயங்குவதற்கு முக்கியக் காரணம் என்று வங்கிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இப்போது தமிழக அரசு காவேரி நீரின்றி வாடும் 15 இலட்சம் சம்பா பயிர்களை காப்பாற்ற பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ஏக்கர் ஒன்றுக்கு 13, 500 ரூபாய் வரை காப்பீட்டுத் தொகையாக கிடைக்கும். ஆனால், டெல்டா விவசாயிகளோ, ஒரு ஏக்கர் பயிருக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ள எங்களுக்கு இந்த தொகை மிகவும் குறைவு என்று கூறுகின்றனர். மத்திய அரசிடம் மானிய உதவி கேட்டு பெற்றாலும், டெல்டா பகுதியில் விவசாயிக்கு விடிவு காலம் வருமா என்பது தெரியவில்லை.

திருச்சியில் ஆரம்பித்து, சிதம்பரம் வரை உள்ள உழவர்கள் இனி நெல் மற்றும் கரும்பு பயிரிட சற்றே யோசிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. கர்நாடகக் காவேரி படுகை நிலங்கள், குறைந்த அளவு நீரே போதுமான மானாவாரி பயிர்கள் செய்ய ஏற்றவை. ஆனால், பிடிவாதமாக, அவற்றில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல் மற்றும் கரும்பு விவசாயம் கர்நாடக விவசாயிகளால் பயிரிடப்படுகிறது. வீம்புக்காக விவசாயம் செய்யும் இவர்களை நம்பி இருப்பதை விட, நீர் மேலாண்மை, நீர் ஆதாரக் கொள்கைகளில் மிகுந்த கவனம் செலுத்தி, மாற்று விவசாயத்திற்கான முயற்சியை நாம் தொடங்க வேண்டும். இஸ்ரேல் மற்றும் ஜப்பானிய முறையிலான வேளாண்மை குறித்து ஆய்வு செய்து, அவற்றில், நம்மால் சாதிக்க முடிந்த வழிமுறைகள் என்ன என்பதை கண்டறிந்து, தொழில்நுட்ப உதவியோடு, தமிழகத்தில்  உழவுத்தொழில் சிறக்க வழிவகை செய்யப்படவேண்டும்.

விவசாய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, பணப்பயிர்கள் விளைச்சல், தரிசு நிலங்களிலும் தானியங்கள் பயிரிடக்கூடிய தொழில் நுட்பம் போன்றவை தமிழக விவசாயிக்கு தலைகீழ் பாடமாகக்  கற்பிக்கப்படவேண்டும். இதற்கு முதலில் அவர்களை, இரசாயன பூச்சி மருந்து கலாச்சாரத்தில் இருந்து, இயற்கை விவசாயத்திற்கு மன மாற்றம் செய்யவேண்டும். இதற்கு காலம் அதிகமாகலாம். ஆனால், மாற்றத்திற்கு சரியான தருணம் இதுவே.

சென்ற வாரம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிப் பாளையத்துக்கு சென்று இருந்தேன். தென்னந்தோப்புகளும், வயல் வெளிகளும் நிறைந்திருந்த பகுதி அது. கடந்த இரு ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாததால் நெல் வயல்களை அதிகமாய் காண முடியவில்லை. பவானி சாகர் அணைக்கட்டில் இருந்து வரும் நீரைக் கொண்டு, தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை என இரு கால்வாய்ப் பாசனம் பெறும் இந்த பச்சை பூமி, வறண்டு போய் மேய்ச்சல் நிலங்களாய் மாறிப்போனதைப் பார்க்கையில் மனம் கசிந்தது.

காவேரி டெல்டா பகுதிகளுக்கு அடுத்ததாக நெல் விளைச்சல் அதிகமாக இருக்கும் இந்த பகுதியின் (ஏழை) விவசாயிகளில் எனது நெருங்கிய உறவின் முறை மாமனும் ஒருவர்.

எனது மாமன் இயற்கை விவசாயத்தில் தணியாத ஆர்வம் கொண்டவர். புன்செய் நிலங்கள் சில ஏக்கர் இவருக்கு இருந்தாலும், நெல் சாகுபடி தொடர்ந்து இவருக்கு கடன் சேர்க்கும் தொழிலாகவே ஆகிவிட்டு இருந்தது. இதனால், நெல்லை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, மரம் வளர்ப்பதிலும், தோட்டங்களை அமைப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.  தனது நிலங்களை மரங்கள் அடர்ந்த பசுமைச் சோலையாக மாற்றும் ஆவேசம் எனது மாமாவிற்கு இருப்பதை அவரோடு பேசும்போது உணர முடிந்தது. இயற்கை விவசாயத்திலும், திறன் அதிகமுள்ள பாசன முறைகளிலும் சற்று பட்டறிவு கொண்ட மனிதராகையால் அவருக்குள் புதியதொரு உத்வேகம் கிடைத்து, மிகுந்த ஆர்வத்துடன் வேலை செய்து வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாய் மழை பொய்த்து, அணைக்கட்டு கால்வாய்த் தண்ணீர் வராமல் நெல் விவசாயம் என்பது ஒரு முடிந்து போன ஒரு பழங்கனவாக அவருக்கு ஆகிவிட்டிருந்தது. இதனால், அவரது நிலத்தை கொத்திச் சமன்படுத்தி, அதில் இயற்கை விவசாயத்தைக் கொண்டு காய்கறிகளையும் பழ மரங்களையும் வளர்க்க ஆரம்பித்தார். கத்திரி, வெண்டை, மிளகாய், தக்காளி, எள்ளு, வாழை, முருங்கை, அகத்திக் கீரை, அரைக் கீரை என்று வீட்டுக்குத் தேவையான அனைத்துக் காய்கறிகளையும் அவரால் ஒரு பொழுதுபோக்கு போலப் பயிரிட முடிந்தது.

அவர் தனது கனவு நோக்கி மெல்ல முயற்சிகளை துவக்கினார். நிலத்தைச் சமன்படுத்த, புல் வெட்ட, குழி தோண்டி கன்றுகள் வைக்க அவற்றை பராமரிக்க, சொட்டு நீர் பாசனம் அமைக்க என்று சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவு செய்தார். அதிர்ஷ்ட வசமாக, நிலத்தடி நீர் 250 அடியில் கிடைத்தது.

அவரது தொடர்ந்த ஆர்வத்தினால், சொட்டு நீர் பாசனத்துக்கு ஏற்பாடு செய்து, நிலத்தைச் சமன் செய்து, குழிகள் வெட்டி, உரம் இட்டு, கன்றுகளை வாங்கி நட்டு  பூமியை ஒரு தோட்டம் போன்ற வடிவுக்குக் கொண்டு வந்திருந்தார். இப்போது, அவரது மேற்பார்வையில் மெல்ல மெல்ல அனைத்து மரங்களும் வளர்ந்து வருகின்றன. தென்னை,மா,கொய்யா,சப்போட்டா,தேக்கு,பாக்கு,நெல்லி,எலுமிச்சை, மாதுளை, முருங்கை,வேம்பு,அத்தி,புங்கை,பூவரசு,வில்வம்,பலா,சீத்தாப் பழமரம்,சரக் கொன்றை,நாவல், முருங்கை, அகத்தி என்று கலவையாக மொத்தம் இரு நூறு மரக் கன்றுகள் நடப்பட்டு வளர்ந்து வருகின்றன. முருங்கை, கொய்யா, மாதுளை, சப்போட்டா போன்றவை காய்க்கவும் ஆரம்பித்து விட்டன. இவை தவிர, இந்த பழத் தோட்டத்திற்கு வேலி போன்று சுமார் 100 சவுக்குக் கன்றுகளும் நடப்பட்டுள்ளன. இடைப்பட்ட இடங்களில் கீரை மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. ஊடுபயிர் செய்வதற்கான நிறைய இடம் இருக்கிறது. ஆனால் வேலை செய்வதற்கும் பராமரிக்கவும் தான் ஆள் இல்லை. அதனால் இடைப்பட்ட நிலம் பெரும்பாலும் வெறுமையாகவே கிடக்கிறது. இடையே நிறைய வாழைகள் போட முடியும். சவுக்கு மர வேலியை ஒட்டிப்  பெரும்பாலும் தேக்கு, பூ மரங்கள் மற்றும் பழமில்லாத மரங்களை நட்டுள்ளார்.

இவரது இந்த அரிய முயற்சியால், இன்னும் ஒரு ஐந்து வருடங்களில் தரிசு நிலங்களுக்கு மத்தியில் ஒரு பசுஞ்சோலை சாத்தியமாகும் என்றே நினைக்கறேன். நெல் விவசாயத்தை விட்டுவிட்ட அவர், பழத் தோட்டம் நிறைந்த அடர்ந்த காடு ஒன்றை உருவாக்கிவருகிறார்.

நமது நாட்டில் விவசாயத்திற்கும், காடு வளர்ப்பிற்கும் உள்ள மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. முப்போகம் நெல் விளைந்து கிடந்த பூமி, வானம் பொய்த்து, மேட்டு நிலமாய் போனது. ஆனால், மீண்டும்,  அதற்கு மறுவாழ்வு கொடுத்து, அதை பழக்காடாக மாற்றும் முயற்சி,  மாற்று விவசாயத்திற்கான ஒரு முதல் படி என்றே நான் கருதுகிறேன்.  ஆரம்பத்தில், கரடு முரடாக தெரியும் இப்பாதை, நெல் பயிரிட்டு சோர்ந்திருக்கும் டெல்டா விவசாயிகளுக்கு, பழத் தோட்டம், பணப்பயிர்ச் சாகுபடி, வேளாண் பொருட்கள் ஏற்றுமதி என அவர்களின் விவசாய மறுமலர்ச்சிக்கான நல்வாழ்வு பாதையாக மாறும் நிலை உண்டானால், அது நல்லது. அண்டை மாநிலங்களோடு தண்ணீர் தண்ணீர் என்று கேட்டு நீதிப் போராட்டம் நடத்தும் நமக்கு மிக நல்லது.

Citations from authorities https://homework-writer.com may clarify and support the choice of methodology, although the methodology selected is a responsibility of the researcher

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “டெல்டா விவசாயிகளின் இன்றைய நிலை”
  1. கிராமத்தான் says:

    ஆந்திராவில் விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகம். தமிழகத்தில் குறைவிற்கு காரணம்: விவசாய குடும்பங்களில் உள்ளோர் பலர் வெளிநாடுகளில் இருப்பதால், தேவைகளை சமாளிக்க முடிகிறது; முழுவதும் விவசாயத்தை ந்ம்பி வாழ்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இந்த அரசாங்கத்தை நம்பி விவசாயம் செய்து உயிரோடு இருக்க முடியாதென்பதை அறிந்து, பிழைப்பு தேடி வெளிநாடுகளில் கூலி ஆட்களாக குடும்பங்களை காப்பாற்றி வருகிறார்கள். ஆதலால் ஆந்திரா அளவிற்கு தாக்கம் இல்லாதது இந்த அரசாங்கத்திற்கு சௌகரியமாக இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.

    எங்கள் கிராமத்தில் சாதிக்கொன்றும் வீதிக்கொன்றுமாக மொத்தம் 15 சுடுகாடுகள் அரசாங்க செலவில் ரூ 10 இலட்சம் முதல் ரூ 20 இலட்சம் வரை செலவு செய்து கட்டப்பட்டு இருக்கின்றன. இடரில்லாமல் பயணம் செய்ய தார் சாலை, பூமிக்கு சூடு பரவாமல் இருக்க சிமெண்ட் தளம், புயல் அடித்தாலும் தாங்கும் காங்கீரீட் கூரை, இருட்டு என்ற கவலையில்லாமல் எத்தனை மணியானாலும் பிணங்களை கொண்டு வர சாலை இருபுறமும் சுடுகாட்டிலும் மின் விளக்குகள், இறந்தவர் மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டே சுடுகாடு செல்ல பாதையின் இருபுறமும் பூச்செடிகள் / மரங்கள் – இப்படியாக இறப்போருக்கு பல வசதிகள். ஆனால் இருப்பவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, பள்ளி செல்ல வழி இல்லை – புத்தகம் இல்லை – ஆசிரியர் இல்லை – மருத்துவமனை வசதி இல்லை – பேருந்து போக்குவரத்து வசதி இல்லை – சமூக பாதுகாப்பு இல்லை – உரிமைகள் இல்லை – விவசாயிகள் அனாதைகளாக இருக்கிறார்கள்.

    மொத்ததில் அரசாங்கம் யாருக்கு வசதி செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது?!

அதிகம் படித்தது