மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தங்க மீன்கள் – விமர்சனம்

ஆச்சாரி

Sep 15, 2013

“கற்றது தமிழ்” என்ற சிறப்பான ஓர் படத்தைக் கொடுத்த இயக்குனர் ராம் அவர்களின் மற்றொரு உணர்ச்சி கலந்த படைப்பாய் வந்திருப்பதே தங்க மீன்கள் என்ற படம். அன்புள்ள அப்பா என்ற திரைப்படத்திற்குப் பின்பு அப்பாவுக்கும், மகளுக்கும் உள்ள அன்பை, பரிவை, பாசத்தை எதார்த்தமாகவும், கவித்துவமாகவும் சொன்ன முதல் தமிழ் சினிமா இப்படமாகும்.

காட்டுக் கூச்சல் போட்டு செவிகளையும், நம் உணர்வுகளையும் சிதைக்கின்ற திரைப்படத்தை விட்டு கொஞ்சம் விலகி தனித்து நிற்கிறது தங்க மீன்கள். “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை” என்ற ஒற்றை வரியே பார்வையாளர்களை திரை அரங்கத்திற்குள் அழைத்து அமர வைத்திருக்கிறது எனக் கூறலாம். சரி கதைக்கு வருவோம்.

அப்பாவாக வரும் இயக்குனர் ராம் (கல்யாணி) சராசரி மனிதனுக்குச் சற்று அப்பாற்பட்டவர். தம் ஒரே மகள் செல்லம்மாளுக்காக(சாதனா) எவ்வளவு தூரத்திற்கும் போகக் கூடிய மனிதர். மகளின் விருப்பத்திற்காய் எதையும் செய்யக்கூடிய மனிதர்.

ஆனால் செல்லம்மாள் வயதிற்கு ஏற்ற அறிவு வளர்ச்சி, பக்குவம் இல்லாத குழந்தை. மனிதர்கள் இறந்த பின்பு தங்க மீன்கள் ஆகிவிடுகிறார்கள் என்ற கதையைக் கூட அப்படியே நம்பும் அப்பாவிப் பெண்.

தனது பாசத்திற்குரிய ஒரே மகளான செல்லம்மாவோடு எந்நேரமும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குனர் ராம், கொஞ்சம் கூட வருமானமே வராத, பாத்திரம் செய்யும் பட்டறையில் வேலை செய்கிறார். இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்தும் நன்கு சம்பாதிக்காமல் தனக்குப் பாரமாக இருக்கும் இயக்குனர் ராமை அவானப்படுத்தி, உதாசீனப்படுத்திக்கொண்டே இருக்கிறார், நல்லாசிரியர் விருது பெற்ற இயக்குனர் ராமின் தந்தையான ‘பூ’ ராம்.

மற்ற குழந்தைகளைக் காட்டிலும் அறிவில் சற்றே மந்தமான குழந்தையான செல்லம்மாவை மேலும் மேலும் செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கி விடப்போகிறானே மகன் ராம் எனும் பயத்தில் பூ ராம், இயக்குனர் ராமை கண்டிக்கிறார். இதுவே அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே பெரும் பிரிவை உண்டாக்கி விடுகிறது.

இதன் விளைவு மொத்தக் குடும்பத்தில் இருந்து பிரிந்து கேரளா- கொச்சிக்கு வேலைக்குப் போகிறார் ராம். அப்பாவும் மகளும் பிரிவு தாங்காமல் அடிக்கடி தொலைபேசியில் புலம்பி அழும்போது, திரையரங்கில் நாமும் இவர்களோடு சேர்ந்து அழுவது மாதிரியான உருக்கமான காட்சிகள் ஒரு பக்கம் நம்மை உலுக்கி எடுக்கிறது.

மற்றொரு புறம் இன்றைய கல்வி, பணத்திற்காக வியாபாரம் ஆகும் அவல நிலையையும், இப்பள்ளிகளில் மாணவர்களை கட்டுப்படுத்தும் கண்டிப்பும் தன் மகளின் வாழ்வைப் பாழ் பண்ணி விடும் என நம்பும் இயக்குனர் ராம், தம் மகள் விரும்பும், எவிட்டா ஆசிரியர் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டு மகள் விரும்பிய கல்வியைத் தருகிறார். மக்களுக்குப் பாடமும் நடத்துகிறார். இதுவே தங்கமீனின் கதை.

இதனூடே தம் மகளுக்கு இருக்கும் ஒரே ஆசையான ஹட்ச் (HUTCH) விளம்பரத்தில் வரும் நாய்க்குட்டியை பிறந்த நாள் பரிசாகக் கொண்டு போக நினைக்கிறார் இயக்குனர் ராம். ஆனால் இந்த நாய் விலை உயர்வானதாக இருக்கவே, இவ்வளவு பணம் கொடுத்து வாங்க முடியாததால் கஷ்டப்படுகிறார்.

கேரளாவின் ஒரு பழமையான பாரம்பரிய இசைக்கருவியை வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கு கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.25 ஆயிரம் கிடைக்கும் எனத் தெரியவர அதைத் தேடத் தொடங்குகிறார் இயக்குனர் ராம்.

இன்னொரு பக்கம் பிறந்த நாளில் தான் விரும்பிய நாய் குட்டியை அப்பா வாங்கி வரவில்லை என்றால் தங்கமீன்கள் ஆகிவிடவேண்டும் என்று செல்லம்மா முடிவெடுக்கிறாள். கேரளாவின் மலை உச்சியில் பழங்குடி மனிதரிடம் இருக்கும் இசைக்கருவியை வாங்கப்போகும் ராமின் மலைப் பயணமும், தங்க மீன்களாக மாற தற்கொலையின் விளிம்பில் நிற்கும் செல்லமாளின் பயணமும் ஓரிடத்தில் இணைகிறது. அதன் பின்பான முடிவை அழகான கவிதையாகக் கூறுகிறார்.

கடன் கேட்டுப்போன இடத்தில் ஐந்து,ஆறு முறை ராமை அலையவிட்டு அல்லல்படுத்துவதுடன் அறிவுரை கூறும் நண்பனை ராம் எச்சரிக்கும் இடத்தில் ஆகட்டும், டபில்யூவை எளிமையாக குழந்தைக்கு புரியும்படி எழுதக்கற்றுத்தராமல், அதையே இவளது பட்டப்பெயராக காரணமாகும் ஆசிரியரிடமும், பள்ளி முதல்வரிடமும் நியாயம் கேட்டு ராம் போராடும் இடத்தில் ஆகட்டும், மனிதர் நடிப்பில் தேர்ந்திருக்கிறார்.

சிறுமி(சாதனா)செல்லம்மாவும், அப்பாவி மகளாகவும், அப்பாவின் மகளாகவும் வாழ்ந்திருக்கிறார். இப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கே குளத்தில் விழுந்து தங்கமீன் ஆகிவிடுவாரோ என்ற திகிலுடனேயே நம்மைப் படம் பார்க்கும் இவரது பாத்திரம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கும் பாத்திரம் ஆகும். இக்குழந்தைக்கு விருதுகள் கிடைப்பது நிச்சயம்.

“இன்னிக்கு ராத்திரி எங்க வீட்டுல பூரி சுடுறாங்க… அதனால நாளைக்கு வீட்டுல கோவிச்சுக்கிட்டு போகலாம்னு இருக்கேன்” எனும் குழந்தை நித்யஸ்ரீசஞ்சனாவில் தொடங்கி, ஸ்டெல்லா ஆசிரியராக கர்ண கொடூரமாக வரும் லிசி வாரியார், எவிட்டா ஆசிரியர் பத்மபிரியா, ராமின் மனைவியாக செல்லம்மாளின் தாயாக வரும் செல்லி கிசோர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக செல்லம்மாளின் தாத்தாவாக வரும் பூ ராம், இவரது மனைவியாக, செல்லம்மாளின் பாட்டியாக வரும் நடிகை ரோகினி உள்ளிட்ட அனைவரும் அவரவர் ஏற்ற பாத்திரத்திற்கு உயிரூட்டி அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பது தங்கமீன்கள் படத்தின் பெரும்பலம்.

ராமிற்கும் இவர் முதலாளிக்கும் உரையாடல், பின்பு பள்ளியில் வாக்குவாதம், செடி இலைகள், கதவு பூட்டு அதிர்வுகள், கூண்டுக்குள் கிடக்கும் நாயின் பரிதாப முகங்கள், ரயில் சத்தங்கள் வைத்தே பல இடங்களில் கதை சொல்லி இருக்கிறார்.

இறுதியாக செல்லம்மா பள்ளியில் வாசிக்கும் கட்டுரையின் வழியாக இயக்குனர் ராம் தங்க மீன்களுக்குத் தரும் விளக்கம், அதற்கு அவர் வைத்திருக்கும் காட்சி சமூக அக்கறையை பிரச்சாரம் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார் என்பதற்கு நல்ல உதாரணம்.

அர்பிந்துசாரா தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் திறமையான ஒளிப்பதிவாளர். படத்தின் சில காட்சிகள் உலக சினிமா அளவிற்கு இருக்கிறது.

ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு சிறப்பாக உள்ளது. படத்திற்கு இன்னொரு பலம் ராமின் வசனம். ராமின் அதீத பலமே அதுதான் எனச்சொல்லும் அளவிற்கு வசனங்கள் எழுதியிருக்கிறார். “ஆனந்தயாழை மீட்டுகிறாயடி” என்ற பாடல் உட்பட நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் கவிதையும், தத்துவமும் நிறைந்து இருக்கிறது. யுவன்சங்கர்ராஜா கொடுத்திருக்குக்கும் பாடலும், இசையும் படத்திற்கு மேலும் உயிர் ஊட்டுகின்றன.

வயசுக்கு வர்றதுன்னா என்னம்மா? உள்ளிட்ட ஒரு சில வசனக் கோளாறுகள், குறைபாடுகள் இருந்தாலும் உங்களைப் புதுப்பிக்கும் தருணம் இந்த தங்கமீனில் இருப்பதால் திரையரங்கில் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தரமான படமாகும்.

You will work http://writemyessay4me.org/ on innovative, real-life projects in teams and in modern study facilities…

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தங்க மீன்கள் – விமர்சனம்”
  1. Manickam says:

    அருமை நண்பரே மிகச்சரியான விமர்சனம்

அதிகம் படித்தது