மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தஞ்சைப் பெரியகோவிலும், தேவதாசி மரபும்(பாகம்-1)- கட்டுரை

ஆச்சாரி

May 17, 2013

நம்முடைய கலாச்சார மரபில் தேவதாசி குறித்து உருவாக்கப்பட்டுள்ள மனப்பதிவுகளை முதலில் நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. சங்ககாலம் தொடங்கி நம்முடைய வரலாரெங்கும் குடும்ப அமைப்பைத் தாண்டி பொதுவெளிக்கு வந்த பரத்தையர்,விறலியர், ஆடல் பெண்கள்,தேவதாசியர் ஆகியோரின் வாழ்வியலும், ஒழுக்கமும், ஆண்மை ஒழுக்கவியல் பார்வைகளால் கடும் விவாதத்துக்கும், சிக்கலுக்கும் உள்ளாகி இருப்பதை நாம் பார்க்க முடியும். கல்வி, கலைத்தேர்ச்சி, புலமை ஆகிய வாழ்வியல் செறிவுக்கான தகுதிகள் இருந்த நிலையிலும் அவர்கள் தொடர்ந்து இழிவுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையே நம்முடைய கலாச்சார மரபாக உள்ளது. தமிழ் சமூகத்தின் இத்தகைய மனஇயலை நாம் மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. ஏனென்றால்; இது ஆண் பெண் உறவு நிலைகள் குறித்த சமூகத்தின் நுண்ணுணர்வு சார்ந்த விசயமாக உள்ளது. இன்று தலித்துக்கள், அரவாணிகள் போன்ற விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் குறித்த கவனங்களும் பதிவுகளும் பெருகிவரும் நிலையில் ஆணியச் சமூகத்தின் சுரண்டல் கருவிகளாக ஆக்கப்பட்டிருந்த பாரிதாபத்திற்குறிய தேவதாசிகளின் சுய வாழ்க்கை குறித்த பதிவுகளும், நிலைப்பாடும் அவர்களுடைய வாழ்வியல் பற்றிய மேலான புரிதலுக்கு உதவ முடியும்.

தேவதாசி மரபில் வந்தவரும் கலைத்திறமையும், புலமையும் கொண்டவரான பெங்களூர் நாகரத்தினம்மா தன்னுடைய சுயசரிதையைக் கன்னடத்தில் எழுதி இருக்கிறார். அண்மையில் திருநங்கைத் தோழியரான லிவிங் ஸ்மைல் வித்யா ‘என் பெயர் வித்யா’ என்று எழுதிய சுயசரிதை, சில கல்லூரிகளில் துணைப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சமூகத்தின் ஒழுக்கவியல் கண்ணோட்டத்தைத தேவதாசியர் பார்வையிலிருந்து பரிசீலனை செய்யும்போதே கற்பொழுக்கம் குறித்த ஆணிய இரட்டை அளவுகோல்கள் புலப்படும். களவொழுக்கம், பரத்தமை போன்ற பண்புகள் நம்முடைய தமிழ்க்கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக இருந்தும் கற்பின் மறுபக்கமாக விளங்கிய இந்தப் பிற ஒழுக்கங்களுக்கு வழங்கப்பட்ட தகுதி பரிசீலனைக்குரியதாக உள்ளது. குடும்ப அமைப்புக்கு வெளியே ஆணின் சமூகக், கலாச்சார மற்றும் பாலியல் தேவைகளுக்காக பெண்ணின் இருப்பு கொண்டாடப்பட்ட நிலையில் அதற்கான மதிப்பு வழக்கப்படாமல் அவள் இழித்துரைக்கப்படுவது ஒரு நோய்க்கூறான பார்வையே ஆகும். ஒரு வகையில் கலைகள் கைவரப்பெற்றவர்களையும், குடும்ப நிறுவனத்தைச் சார்ந்திராதவர்களையும் ஆணின் அச்சத்துடன் நோக்கியதை இது காட்டுகிறது.
தமிழக இலக்கிய மரபில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஔவையார், காளிமுத்து முத்துப்பழனி போன்ற பதியை உதறியவர்களே அறிவுவெளியில் சுதந்திரமாய் இயங்கி பெண் குரல்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். காளமேகப்புலவார் காலத்தில் வாழ்ந்த கணிகை காளிமுத்தவின் ‘ வருணகுலாதித்தன் மடல்’ நூலில் பெண்ணுடல் மொழி தைரியமாக முன்வைக்கப்படுகிறது. அதேபோல் தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்மன் அவையில் புலவராகவும் , கணிகையாகவும் இருந்த முத்துப்பழனி எழுதிய ‘ராதா சாந்தவனம்’ என்ற காதல் பிரபந்தத்தை யாரும் புதுப்பிக்க முன்வராத நிலையில் பெங்களூர்  நாகரத்தினம்மா அதைத் தானே புதப்பித்து முன்னுரையும் எழுதினார். ஆனால் அது நாவலாசிரியரும், சீர்திருத்தவாதியுமான வீரேசலிங்கத்தின் எதிர்ப்பால் தடை செய்யப்பட்டது. மரபை மீறிய பெரியாரின் வழிவந்த திருவாரூர் தங்கராசு கூட ‘ரத்தக்கண்ணீர்’ படத்தில் மரபுவழிக் கண்ணோட்டத்துடனேயே வேசையை இழிவு செய்துள்ளார். மூவலூர்  ராமாமிர்தம் அம்மையாரின் ‘தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனா;’ நாவல் இன்னொரு உதாரணம். அண்மையில் நவீனப் பெண் கவிஞர்களின் உடல்மொழி சார்ந்த கவிதைகளைத் திராவிட இயக்கக் கவிஞர்களும், அப்துல் ரஹ்மான் போன்றவர்களும் முற்போக்கு என்று கூறிக்கொள்பவர்களும் வன்முறையுடன் எதிர்கொண்டதை நாம் இங்கு நினைவுகூர வேண்டும். மரபான ஆணியல் ஒழுக்கவாதப் பார்வையிலிருந்து இவர்களும் தப்பவில்லை.
ஆனால் அவைதீக இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றில் ஆடற்கணிகையார்  குறித்த அனுதாபம் உள்ளது. அவா;களுடைய கலைத்திறமை போற்றப்படுகிறது. மாதவி, மணிமேகலை, அம்ரபாலி போன்றவார்கள் பிக்குணிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். நம்முடைய பாணர் மரபிலும் வைதீகம் சாராத ஆடல் பாடல் சார்ந்த இயற்கை நெறிமரபு இருந்தது. விழாக்களும், கொண்டாட்டங்களும் அவைகளுக்கு அடிப்படைகளாக இருந்தன. இந்திரவிழா கொண்டாட்டங்களில் மாதவியும், மணிமேகலையும் ஆடுவது வழக்கமாக இருந்தது. விழாக்களும், கொண்டாட்டங்களும் அவைகளுக்கு அடிப்படைகளாக இருந்தன. இந்திரவிழா கொண்டாட்டங்களில் மாதவியும், மணிமேகலையும் ஆடுவது வழக்கமாக இருந்தது. பேரிலக்கியங்கள் வலியுறுத்திய ஆண்மை கற்புநெறிக் கோட்பாடுகளுக்கு மாறாக, மணிமேகலையும் ஆடுவது வழக்கமாக இருந்தது. பேரிலக்கியங்கள் வலியுறுத்திய ஆண்மை கற்புநெறிக் கோட்பாடுகளுக்கு மாறாக நம்முடைய நாட்டுப்புற இலக்கியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் வாழ்வியல் சார்ந்த நெகிழ்வான பாலியல் நிலைப்பாடுகளை நாம் பார்க்க முடியும். நாட்டார் புராணமான ‘அல்லி’ அரசாணி மாலை’யில் செவ்வியல் சம்பிரதாயத்துக்கு மாற்றான ஒரு ஆணாதிக்க எதிர்ப்புக்குரல் தீவிரமாக ஒலிக்கிறது. மகாபாரத காவித்தின் கதைக்கூறுகள் பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு ஒரு தமிழ் நாட்டுப்புறக் கதையாடல் பின்புலத்தில் பெண்ணின் மாறுபட்ட கட்டுமானம் முன்நிறுத்தப்படுகிறது. சநாதன பாலியல் சமன்பாடு தலைகீழாக்கப்பட்டு ஒரு தன்னிச்சையான சுயத்திறன் மிக்க ஒரு பாலியல் பெண்படிமம் இக்கதைப்பாடலில் முன்வைக்கப்படுகிறது. ஆண்மை பெண்மை தொடர்பான மாறாத கருத்தாக்கங்களை மறுவடிவாக்கம் செய்து அதுவரைப் பிரபலமாக இருந்த ஆண்மைக் கோட்பாடுகளை நாட்டார் கதைப்பாடலான ‘அல்லி அரசாணி மாலை’ துணிச்சலாக கட்டுடைப்பு செய்தது. மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வில்லுப்பாட்டு வடிவில் இது போன்ற பல பெண்மையப் புராணங்கள் வெளிப்பட்டுள்ளன. பேண்ணடிமையை வலியுறத்தும் பல செவ்வியல் பெருங்கதையாடல்களுக்கு மாற்றாக நம்முடைய பல நாட்டுப்புற இலக்கியங்களில் பெண்குரல் என்பது உரிய மதிப்புடனும், கௌவரவத்துடனும் எதிரொலிக்கிறது.
தற்கால நவீன இலக்கியங்களில் தேவதாசிகளை அனுதாபத்துடன் பார்க்கும் போக்கு உள்ளது. தி.ஜானகிராமனின் மோகமுள், ஜி.நாகராஜனின் குறத்திமுடுக்கு மற்றும் நாளை மற்றுமொரு நாளே நாவல்களில் போலி மதிப்பீடுகள் இன்றி அவர்கள் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. கோபிகிருஷ்ணனின் அவலம் சிறுகதையில் ஒரு பாலியல் தொழிலாளியிடம் ஆழ்ந்த பிணைப்பும், பாதுகாப்பும் பெறும் ஒரு ஆணின் மனநிலை சித்தரிக்கப்படுகிறது. பிரெஞ்சு எழுத்தாளா; ஜெனேயின் balcony நாடகத்தில் ஒரு பாசிச அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்ட ஆலொசனை ஒரு பாலியல் தொழிலாளியின் வீட்டிலேயே பாதுகாப்பாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ஆணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த பொதுவெளியில் இப்பெண்களே இடம் பெற்றிருக்கின்றனா;. ஆனால் மனிதாபிமானமற்று போலி ஒழுக்க வரையறைகளுடன் அவர்களுடைய பங்களிப்புகளைப் புறம் தள்ளி இழிவு செய்கிறது நம் சமூகம்.

இப்போது கூட தமிழ் ஊடகங்களும், வணிகப் பத்திரிக்கைகளும் நடிகைகளைப் பற்றிய செய்திகளை வைத்தே வியாபாரம் செய்கின்றன. ஆனால் அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றி இழிவாக விமர்சிக்க அவை தயங்குவதில்லை. தங்கர்பச்சான் நடிகைகளை விபச்சாரிகள் என்று சொல்லியபோது தமிழ்ச் சூழலில் பெரிய எதிர்ப்பு உருவாகவில்லை. ஆனால் குஷ்பு பாதுகாப்பான பாலியல் உறவு பற்றிப் பேசியபோது கலாச்சாரம் கெட்டுவிட்டதாக ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன. சமூக ஒழுக்கம் என்பது குறித்த அக்கறையில்லாமல் பெண்ணின் கற்பு குறித்த அக்கறையில்லாமல் பெண்ணின் கற்பு குறித்த மிகைப்படுத்தப்பட்ட சொல்லாடல்களே கலாச்சாரம் என்பதாக இந்தக் கலாச்சாரக் காவலர்களால் முன்வைக்கப்படுகின்றன. பெண்ணின் சமூகவெளியை மறுத்து அநீதிக்கு எதிராகப் பெண் கிளார்ந்தெழாதபடி அவளைப் பழமைக் கருத்துக்களால் முடக்கும் வேலையையே நம்முடைய ஊடகங்கள் அன்றாடம் செய்து வருகின்றன.
ராஜராஜசோழன் காலத்தில் நிறுவனப்படுத்தப்பட்ட தேவதாசி முறை மற்றும் அதன் வீழ்ச்சியின் பின் விளைவகளாகவே இது போன்ற பெண் இழிவுக் கருத்துக்கள் சமூகத்தில் வேரூன்ற ஆரம்பித்தன. ஆனால் தேவதாசி எதிர்ப்பு என்பது அப்பெண்ணின் ஒழுக்கப் பிறழ்வைத்தான் குறிவைத்துக் தாக்கியதே தவிர அத்தகைய ஒழுக்கக் கேட்டுக்கு ஆதாரமான சமூக பொருளாதார ஏற்பாடுகளை அல்ல. முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறை என்பது விபச்சாரம் என்ற நிலைக்கு தாழ்ந்ததின் காரணம் அவர்களது சமூக வாழ்வியல் கண்ட மாற்றங்கள் தான் என்பதை அங்கீகரித்து அம்மாற்றங்கள் அவளை மேலும் சேதப்படுத்தாமல் இருக்க அவர்கள் ஜீவனத்துக்கு வேண்டியதை அவர்களுக்கு பெற்றுத்தர முனைந்தார். ஆனால் அதில் அதில் அவர் முழுவெற்றி பெறமுடியவில்லை.
கோவில்களில் சோழர்களால் நிலைபெற்ற தேவதாசி முறையை ஆராய்வதற்கு முன்னால் நம்முடைய கலாச்சார வாழ்வில் கோவில்கள் வகித்த இடம் குறித்த உணர்வு அவசியமானது. கோவில்கள் நம்முடைய கலாச்சாரத்தில் வெறும் வழிபாட்டு உணர்வுக்கான இடங்களாக மட்டும் இல்லை. நம்முடைய பல்வேறு அழகியல் உணர்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கான வடிகால்களாக கோவில் சூழல் பயன்பட்டது. சிற்பம் மற்றும் ஓவியக்கலை வெளிப்பாட்டிற்கான இடங்களாகவும் அவை இருந்தன. நம்முடைய வழிபாட்டு மரபின் ஒரு அங்கமாக இசையும், நடனமும் பலகாலங்களாக இருந்து வருகின்றன. நடனப்பெண் வடிவம் என்பது கோவில் கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத அடையாளமாகவே உள்ளது. நீண்ட கோவில் பிரகாரங்கள் இத்தகைய படிமங்களைத் தாங்கி ஒரு பிரத்யேகமான அழகிய பயணத்தை சாத்தியப்படுத்தி இருக்கின்றன. உண்மையில் தேவதாசி மரபின் தோற்றம் குறித்து பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. வேத இலக்கியம் அதிகாலை தெய்வமாகிய உஷையைக் குறிப்பிடும்போது பூ  வேலைப்பாடுகளுடைய ஆடையை அணிந்த ஒரு நாட்டியப் பெண்ணாகவே வர்ணிக்கிறது. ஆகமங்களில் கணிகையர்  என்று அழக்கப்பட்ட தேவதாசிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆகம வழிப்பட்ட கோவில்களின் பெருக்கம் ஏற்பட்ட 5-6ம் நூற்றாண்டிலேயே இம்மரபு உறுதியடைந்த நிலை உள்ளது. சோழர்களுக்கு முந்தைய பல்லவர் ஆட்சிக் காலத்திலேயே கோவில்கள் கலைக்கூடங்களாகத் திகழ்ந்தன. ருத்ரகணிகையர்  என்ற பெயரால் தேவதாசியர் பணியாற்ற அமர்த்தப்பட்டனர் எனத் தேவாரம் கூறுகிறது. ‘ காரிகையர் பண்பாட சேயிழையார் நடமாடுந் திருவையாறே’ என்று சம்பந்தர்  பதிகம் பாடுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோவிலில் நடனமாடிய பரவையார் என்ற நாட்டியப் பெண்ணை எல்லோர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டார். பெரிய கோவில்களில் எல்லாம் அவர்கள் பணியாற்றி இசையையும், நடனத்தையும் வளர்த்தனர். கும்பகோணம், திருவையாறு, திருவொற்றியூர், காஞ்சிபுரம் ஆகிய கோவில்களில் தேவதாசியர்   நடனமாடியதற்கான கல்வெட்டுகள் உள்ளன. பல்லவர்களின் ஓவியக் களஞ்சியமான சித்தன்ன வாசலில் உள்ள நடனமாதர்  ஓவியங்கள் தேவரடியார் பற்றிய வடிவமே.

                                                                                                                                                                       தொடரும் . . . .

Adams’s brief sentences work because the subject justifies them and because they are sufficiently homework help center varied

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தஞ்சைப் பெரியகோவிலும், தேவதாசி மரபும்(பாகம்-1)- கட்டுரை”

அதிகம் படித்தது