மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தடம் மாறாத கொள்கை தருமே நாளும் இடம் மாற்றம்

ஆச்சாரி

Jun 15, 2012

அநேகமாக இது 19 ஆவது முறை, திரு. சகாயம் ஐ.ஏ.எஸ். தூக்கியடிக்கப்படுவது. இம்முறை மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து கோ- ஆப் டெக்ஸ் நிறுவனத்திற்கு.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் கோட்டாட்சியராகத் துவங்கிய அவரது நேர்மைப் பயணம் தடம் புரளாமல் இந்நொடியிலும் தொடர்கிறது.

ஆனால் அதற்கென அவரது வாழ்க்கையின் மதிப்பு மிக்க பெரும் பொழுதுகள் சூறையாடப்பட்டு விட்டன. ஒவ்வொரு மாற்றலின் போதும் அவரது குடும்பமும் வேருடன் பிடுங்கப்பட்டு வேறொரு இடத்தில் நடப்படுகிறது. பிடுங்கி எறிபவர்களுக்குத் தெரியுமா பிடுங்கப்படும் வலி? இழப்பு?

நாளை காலை எந்த ஊருக்கும் தூக்கி வீசப்படலாம் என்ற எண்ணம் அலைக்கழிக்க ஒரு குடும்பம் துயில் கொள்ளப் போகும் சூழலை கற்பனை செய்வதே துக்கம் தரக் கூடியது. நேற்று, தான் தொட்டுப் பார்த்த ரோஜா மொட்டை இன்று காலை மலர்ந்து மணம் வீசும் முன் பிரிந்து செல்லும் குழந்தையின் மன நிலை எப்படி இருக்கும்?

ஆண்டுக்கொருமுறை முறை வீடு மாற்றம். ஒவ்வொரு முறையும் கட்டில் மெத்தை மேசை நாற்காலி முதல் கண்ணாடிக் குவளை வரை கவனமாக சரக்குந்தில் ஏற்றி நூற்றுக்கணக்கான கல் தொலைவுக்குப் பயணித்து அங்கே ஒவ்வொன்றாக இறக்கி எடுத்து அடுக்கி அப்பாடா என்று மூச்சு விடுவதற்குள் இன்னொரு மாற்றல். திருமதி சகாயத்தின் உடலும் மனமும் படும் ரணம் அசாதாரணம்.

திரு. சகாயத்தின் திடீர் மாற்றலால் அ.தி.மு.க.வின் அடிப்படைத் தொண்டன் கூட அரண்டு கிடக்கிறான். தேர்தலுக்கு முந்தைய மதுரை அவன் நினைவில் நிழலாடுகிறது. சந்து பொந்துகளில் மிரட்டும் சண்டியர்கள். அடிக்கும் காற்றில் அசைந்து வந்து வீட்டிற்குள் விழும் வெப்ப மரத்து இலை போல அனாயாசமாக வந்து விழும் காந்தி நோட்டுகள், அவற்றின் பின்னணியில் மிரட்டும் முகங்கள் இவையனைத்தும் ஒதுங்கி ஒடுங்கிக் கிடக்க சுதந்திரமாக மக்கள் வாக்களிக்கும் சூழலை மதுரையில் உருவாக்கித் தந்தவர் திரு. சகாயம் அவர்கள்.

இம்முறை அவர் தொடுத்த நடவடிக்கை அம்பு கிரானைட் குவாரியைச் சென்று தைத்தது. யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த ஆட்சியர் கோலோச்சினாலும் கிரானைட் கொள்ளையர்கள் தாம் நிழல் அரசை இயக்குவார்கள். அரசு அனுமதி பெறாமல் கோடிக்கணக்கான மதிப்புள்ள கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுக் கடத்தப்படும். மக்கள் வரிப் பணத்தில் ஊதியம். கிரானைட் மன்னர்களுக்கு ஊழியம் என்பது மதுரை அரசு அதிகாரிகளின் மயக்கும் மந்திரச் சொற்களாகிவிட்டன.

இயற்கை தந்த வரத்தையும் வளத்தையும் வாரிச் சுருட்டி வாயில் போடும் இந்த பகாசுரர்களின் அசுரப் பற்களுக்குத் தடையாக அமைந்து திரு. சகாயத்தின் நடவடிக்கை. ஏறத்தாழ 16,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசிடம் ஆட்சியர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக பத்திரிகை தகவல் கூறுகிறது. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற நிதியாதாரத்திற்கு அல்லாடும் தமிழக அரசு இவ்வறிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசுக கருவூலத்திற்கு வளம் சேர்க்கும் என் நினைத்தால் அதற்கு நேர்மாறாக மக்கள் நலன் சார்ந்து செயலாற்றிய மாவட்ட ஆட்சியரை மாற்றுகிறது.

இனி மக்கள் தான் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் பல மாநிலங்களில் மலையைப் பிளந்து மண்ணை அகழ்ந்து கோடிகள் சுருட்டும் பன்னாட்டு மூலதனங்கள் தமிழ் மண் மீது கண் வைக்கிறது.

ஏற்கனவே கொல்லி மலைப் பகுதியில் அலுமினியம் வெட்டி எடுத்திட வேதாந்தா குழுமத்தின் ‘மால்கோ’ எடுத்த முயற்சிக்கு ஒரே அறிக்கையில் ஆப்பு வைத்தவர்தான் சகாயம். அன்று அவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர். கொல்லி மலைக்கே கொள்ளி வைக்க நினைத்தவர்கள் மலைத்துப் போய் நின்றனர். இப்போது மதுரை.

திரு. சகாயம் மாற்றப்பட்டதற்கு ஆதீனம் சுவாதீனம் என் அவரவர் பங்குக்கு ஆயிரம் ஊகங்களை உலவ விட்டாலும் உண்மை வேறு. சுரங்கத் தொழில் என்ற பொற்குவியலைத் தேடி பன்னாட்டுப் பருந்துகள் வானில் வட்டமிடுகின்றன. மக்கள் தம் சிறகுகளால் இயற்கையைக் காப்பாற்றிட முயற்சிக்க வேண்டும்.

அம்முயற்சியின் துவக்கம்தான் சகாயத்தை மாற்றிய அநீதிக்கு எதிராக எதிர்வினை ஆற்றுவது. தனியாகவோ குழுக்களாக ஒன்றிணைந்தோ இம்மாற்றல் நடவடிக்கையைத் தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் மதுரையிலேயே தொடர்ந்து அவரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிட அனுமதிக்க வேண்டும் எனவும் கடிதங்கள், மனுக்கள், மின்னஞ்சல்கள், குறுஞ் செய்திகள் மூலமாக அரசுக்குக் கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது.

மீண்டும் நினைவூட்டுகிறேன். இது சகாயத்துக்கு எதிரான நடவடிக்கை அன்று. மக்களுக்கு எதிரானது. எனவே மக்கள் தாம் இதனைத் தடுத்திட வேண்டும்.

Am I monitoring what kind mobile spy phone for www.cellspyapps.org of app they have and you have that control

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தடம் மாறாத கொள்கை தருமே நாளும் இடம் மாற்றம்”
  1. கார்த்திக் says:

    மக்கள் திரைப்பட, கிரிக்கெட் மயக்கத்தில் உள்ளனர். அவர்களுக்கு எங்கே நேரம் இதை அறிவதற்கு.

  2. கிராமத்தான் says:

    தேர்தல் நேரத்தில இனிச்சுது.
    மறு தேர்தல் வரும்போது இவரே பதவியில இருந்தா ஆளுங்கச்சிக்கு பிரச்சனை தான்.

    இந்த விசயத்த எந்த கச்சியும் பேசப்போவதில்ல.

    துப்பறியும் பத்திரிக்கை, உண்மை சொல்லும் தொலகாச்சி – எல்லாத்துக்குமே பங்கு இருக்கு. இதுனால சேதியே வெளிய வரல.

    ஏன்னா எல்லாருக்கு வாக்கரிசி போட்றாங்க.

    “எல்லாருமே திருடங்க தான்”

    திரு. சாகயத்தோட சேந்து அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுறது.

    நம்மளுக்கு நெறய வேல இருக்கு. இல்லேன்னா வாள் முடியாது இந்த நாட்ல.

  3. கண்ணம்மா அங்கப்பன்.. says:

    மிகவும் அற்புதமான நிகழ்கால உண்மையை நெத்தியடியாய் தந்திருக்கிறீர்கள் அன்வர் ஐயா…

    இக்கட்டுரையை தந்த சிறகுவிற்கு எமது கோடான கோடி நன்றிகள்…

  4. க. தில்லைக்குமரன் says:

    வேதனை! நல்லவர்களுக்கு காலம் பதில் கூறும். வெல்லட்டும் சகாயத்தின் முயற்சிகள். நாம் துணைநிற்க வேண்டும். மக்கள் திருந்தாவிட்டால் அவர்களுக்குதான் நட்டம். திரு சகாயமும் அவரது குடும்பத்தினரும் படும் பாட்டைப் பார்க்கும் போது ‘நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாதரை நினைத்துவிட்டால்’ என்று அந்த மகாகவியின் புலம்பல்தான் செவியில் ஒலிக்கிறது.

அதிகம் படித்தது