மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தம் அடையாளங்களைத் தொலைத்து வாழும் பளியர் இன மக்கள்

ஆச்சாரி

Nov 15, 2013

தமிழகத்தின் அனைத்து மலைகளிலும் ஏதாவதொரு பழங்குடியினர் இன்றும் வசித்து கொண்டிருக்கின்றனர். அப்படி விதவிதமான பல்வேறு வகைகளில், வாழும் பழங்குடியினர்களில் ஒருவரான பளியர்கள் குறித்து ஓர் பதிவு வேண்டும் என்ற நோக்கில் அவர்களுடன் கலந்து பல்வேறு இடங்களில் பயணப்பட்டபோது நான் கண்டு, கேட்ட, பார்த்தவற்றை இக்கட்டுரையின் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளும் எளிய பதிவாக இதைக் கருதுகிறேன்.

‘பளியர்’ என்பவர்கள் யார்? என்ற கேள்வி எழுப்பினால் வெறுமனே பழங்குடியினர் என்ற பட்டியலில் அடைத்துவிடக் கூடியவர்கள் அல்ல அவர்கள்.

ஊட்டியில் உள்ள கிருஷ்ணன் கோவில் என்ற ஊரிலிருந்து துவங்கி, திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள சிறுமலை வரையிலான பல்வேறு மலைத்தொடர்ச்சிகளில் அவர்களின் வாழிடமாய் கொண்டு இன்றும் வசித்து வருகிறார்கள்.

அவர்கள் உடல் தோற்றத்தை வைத்தே அடையாளம் கண்டுவிடக்கூடிய தனித்துவத்துடன் அவர்கள் தோற்றம் இருக்கிறது. இவர்கள், நூற்றாண்டுகளைக் கடந்து வனத்தை தம் வீடாக எண்ணி, வசிப்பதற்கு பாறை, குகைகளைத் தேர்வு செய்து அதில் வசிக்கிறார்கள். மற்ற இனத்தினரைப்போல், ஓரிடத்தில் நிலையான வீட்டை கட்டிக்கொண்டு வாழும் பழக்கம் இன்றும் கூட அவர்கள் விரும்புவதில்லை.

அவர்கள் தேன் எடுத்தலையே பிரதானமாகக் கொண்டிருப்பதால் தேன் தேடி வனம் முழுவதும் பயணப்பட்டு அலைய வேண்டியிருப்பதால் கூட அங்கங்கே தங்கி கொள்கிற வழக்கமும், மலைகளில் கிடைக்கும் கிழங்குகள், காய் கனி இவற்றிற்காகவும் அதன் தன் பருவத்திற்கேற்ப விளையும் இடம் தேடி பெயர்கின்றனர். இவர்கள் வனத்தில் வசித்தாலும், எந்த ஒரு விலங்கினத்திற்காகவும் அஞ்சுவதில்லை. இவர்களும் உணவு தேவைக்காக, எந்த விலங்குகளையும் வேட்டையாடுவதில்லை. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்புவரை, நிலப்பரப்பில் வாழும் மனிதர்களை கண்டதும், மிரட்சியடைந்த பயத்தில் “நாட்டான் வந்துட்டான்… நாட்டான் வந்துட்டான்” என்று அலறியபடி ஓடி ஒளிந்து கொண்டனர்.

வனத்தினில் உள்ள வனதேவதைகளின் பெயர்களை வைத்து இவர்கள் பயணப்படும்போது இடங்களை, அதை வைத்து அடையாளம் காணவும், அதே  நேரத்தில் அவைகளைக் குறிப்பிட்ட காலங்களில் ஒன்று கூடி இவர்கள் வழிபட்டு, சடங்கும் வருடம் தவறாமல் கடைபிடிக்கின்றனர்.

இவர்களின் பேச்சுமொழி தமிழ் மொழியாகும்.  தமிழைத் தவிர வேறு மொழி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் குலதெய்வமாக பளிச்சி அம்மனையும், தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த,  மதிப்புமிக்க தனிச்சிறப்புடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களையும் வழிபடுகின்றனர். எந்தப் பகுதியில் வசித்தாலும் அப்பகுதிகளுக்கென்று வனம் முழுவதும் வனதேவதைகள் இருக்கும்படி வாழ்கிறார்கள்.

குறிஞ்சிமலர்கள் பூக்கின்ற காலமே வசந்த காலமாக இவர்கள் கொண்டாடுகின்றனர். இதற்காகவே காத்திருந்து, குறிஞ்சி பூக்கத் துவங்கியதும் குறிஞ்சிமலர்களை முறத்தில் வைத்து பூஜைசெய்து வழிபடுகின்றனர். பளிச்சியம்மாவுக்கு பூஜைபோட்டு, ஒன்றுகூடி பாட்டுபாடி நடனம் ஆடும் வழக்கமும் உள்ளது. இவர்கள் தேன் எடுக்க தீர்மானித்ததும் உடல் சேர்க்கையைத் தவிர்த்து தூய்மையைப் பேணி, தங்கள் தெய்வங்களை வணங்கி, வெயில் காலங்களில் பாறை முகடுகளை நோக்கித் தேன் எடுக்கும் போது 8 பேர் 10 பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து, தேன் எடுப்பதற்குத் தேவையான கயிறுவடம், சட்டிபானை, இரவு உணவு போன்றவைகளைத் தயார்செய்து சுமந்துகொண்டு இருட்டும் முன் அந்த இடங்களை அடைந்து, நன்கு  இருட்டியதும், ராட்டுகளில் இருந்து தேனைப் பிழிந்து சேகரிக்கிறனர். மேலும் அந்த ராட்டுகளில் இருந்து அரக்கு சேகரித்து விற்பர். ( ராட்டு – தேன் கூடு)

ஒரு சில பகுதிகளில், தேன் சேகரிக்கும் மரத்திற்கு விளக்கேற்றி அம்மரத்தை வணங்கிவிட்டு ஒரு வித பச்சிலைக் கொடிகளை தூபம் போட்டு அதிலிருந்து வரும் புகையினைத் தேன் கூட்டின் மேல் செலுத்துவர். இப்புகையின் தாக்கத்தால் தேனீக்கள் கூட்டிலிருந்து வெளியேறி விடும். பிறகு தேன் கூடுகளைச் சேமிப்பர்.

இவர்கள் இயற்கை வைத்தியத்திலும் மிகுந்த அனுபவசாலிகளாகவும் இருக்கின்றனர். வனத்தில் இருக்கும் அத்தனை மரம்,செடி,கொடிகளில் இருந்து பாறைகளில், வயல்களில் விளையும் சிறுதாவரங்கள் மண்ணில் விளையக்கூடிய கிழங்குகள் வரை அத்தனை பெயர்களையும் அறிந்து வைத்திருக்கின்றனர். வனத்தில் மருத்துவமிக்கவற்றையும் அறிந்து அவற்றை எந்த எந்த நோய்க்கு எப்படி எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் நூற்றாண்டுகள் கடந்த அனுபவ ஞானம் நமக்குப் புலப்படுகிறது.

வெட்டுப்பச்சிலை என்று ஒரு மரத்தை குறிப்பிடுகிறார்கள். அது நம் உடல்மீது படும் ஆயுதங்களினால் ஏற்படும் ஆழமான, குழியான ஆறாத ரணங்களுக்கு, இம்மரத்துப் பச்சிலைகளை பறித்துப் பற்றுபோட்ட ஓரிரு நாளில் அந்த வெட்டுக் காயத்தை ஆற்றிவிடுகின்றனர்.

காட்டுக் கருவணைக் கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டால் மூல நோய், குடல் இறக்கம் நோய் பறந்தோடுகிறது. மிகக்கொடிய விசத்தன்மை உடைய கருணாகத்தாச் செடி வேரின் சாற்றை எடுத்துச் சுண்ணாம்புடன் கலந்து  பாம்பு கடித்த கடிவாய் மீது தடவினால் 5 நிமிடத்தில் விசம் இறங்கிவிடும். பின்பு எந்த வலியும் இல்லாமல் போய்விடும்.

அரிக்காய், கொட்டிக்காய் வேரைத் தண்ணீரில் வேகவைத்து அதன் நீரை பிரசவமாகும் பெண்களுக்கு கொடுப்பார்கள் அது சுகப்பிரசவத்திற்கு வழிவகுத்துவிடும்.

கடுக்காயும் தேனையும் சேர்த்துக் கொடுத்தால் அடிக்கடி ஏற்படும் கருசிதைவை தடுக்கும் என்று அறிந்து வைத்திருக்கிறார்கள்.

உடும்பு எண்ணெயை எலும்பு முறிந்த இடத்தில் தடவிக் கட்டுக்கட்டி விட்டால் எப்பேர்பட்ட எலும்பு முறிவும் குணமாகிவிடுகிறது.

கான்பலா, மரப்பாலை எலும்பு முறிந்த இடத்தில் தடவிக் கட்டுக்கட்டி வைத்தால் உடைந்த எலும்பு ஒண்ணு கூடிவிடுகிறது.

கொடைக்கானலில் தாண்டிக்குடி மலைப்பகுதியில் இன்றும் மலைச்சமவெளியில் கற்பாறைகளால் மூன்றுபுறமும் அடைத்து மேலே ஒரு கல் பலகை போட்டுக் காணக் கிடைக்கும் கல்திட்டைகள் இறந்தவர்களை, இவர்கள் இவ்வாறு போட்டு வைத்திருந்ததை நமக்கு உணர்த்துகிறது. மூலிகைச் சாறால் அவற்றை வெட்டி எடுக்கும் முறையையும் அறிந்து இவர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். மன்னவமனூரில் 90 வயதைக் கடந்த பெரியவர், மரத்தினடியில் தனித்து வாழ்கிறார். இவரை மழைக்கட்டி பளியன் என்பர். இவரிடம் பருவமழை தப்பும்போது முறையிடுவார்கள். அப்படி முறையிட்டு இருப்பிடம் திரும்பும் முன் மழை வந்துவிடும். அப்படி இயற்கையுடன் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்த அடையாளமாக அவர், இன்று சாட்சியாய் எஞ்சியிருக்கிறார்.

அதேவேளையில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தாண்டிக்குடி மலையில் செய்துவரும் வெள்ளாமைகள் விலங்குகளால் அழிவைச் சந்திக்கும். அதற்காக தாண்டிக்குடி மக்கள், தனித்த திறன்மிக்க பளியர்களை அழைத்து காவலிற்கு நியமிக்கும்போது எந்த விலங்கினாலும் வெள்ளாமைச் சேதம் ஏற்படுவதில்லை என்பது இவ்வூர் அறிந்த உண்மை.

இங்குள்ள செட்டியபட்டி – குறிஞ்சி நகரில் இருந்து வாசிமலைக்குப் போகும் மலைப்பாதை, குகை, பாறையில் 800 ஆண்டு பழமையான, விலங்குகளின் 17 விதமான சாம்பல் ஓவியங்கள் இவர்களின் கலைத்திறனைப் பறைசாற்றுவதைப் போல தாண்டிக்குடி பகுதியிலும் இருக்கிறது. குகைப்பாறை ஓவியம் உள்ள இடத்தை இவர்கள் “சிற்பக்கல் புடவு” என்று அழைக்கின்றனர்.

வேலப்பர் கோவில் பகுதியில் வாழும் பளியர்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. இங்கு நேர்த்திக்கடனுக்குக் கிடாவெட்டி கருப்பணசாமி கோவிலில் வழிபடும் போது எஞ்சிய சோற்றை பளியர்களை அழைத்து வழங்குவர். இவர்கள் தங்கள் பசிக்குப் போக எஞ்சிய சோற்றைப் பாறைகளில் கொட்டி அதைக் காயவைத்து, அதை அரிசி போலாக்கி சேமித்து வைப்பார்கள். தேவைப்படும்போது கொதிநீரில் துணியில் கட்டி முக்கி சில நிமிடத்தில் எடுத்துச் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

பழனிச்சாமி என்பவர் தாண்டிக்குடி அருகில் உள்ள தடியன் குடிசை என்னும் பகுதியில் வசிப்பவர். இவர் சித்திரை மாதம் பளியர்கள் வழிபடும் வனதேவதை வழிபாட்டில், பூசாரியாக இருந்து கொண்டிருப்பவர். பழங்காலம் தொட்டு இவரிடம் அரிய விதமான விலங்குத் தோல்களினால் விதவிதமான மரங்களில் பிணைத்து இசைக்கருவிகளாக உருவாக்கி அதைக் காலகாலமாக திருவிழாவின்போது வனத்தில் உள்ள வனதேவதைகளை (சாமி இறக்குதல்) , வறுத்தி அழைப்பர். இவர்களின் இசைக் கருவிகளில் இருந்து எழும்  வினோதமான ஒலிகள் எழுப்பும் இசை, நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும். அதை அவர்கள், மக்களில் யாரிடமாவது கற்றுக்கொள்ளச் சொல்லி பார்த்தும் எவரும் முன் வராததால் என் காலத்தோடு இப்படி ஒரு நடைமுறை அழிந்து விடும் என்று வருத்தம் கொள்கிறார்.

இன்றைய வனச்சட்டத்தின் அடிப்படையில் இவர்களுக்கு காலணிகள் (வீடுகள்) அமைத்து, மலையை ஒட்டிய அடிவாரங்களில் வாழவைத்தாலும் அதை இவர்கள் விரும்புவதில்லை. இவர்கள் சேகரித்த வனப்பொருட்களை விற்க வந்து போவதின் மூலம், நம்முடைய புறத்தாக்கம் அவர்களைப் பாதித்து, இன்று தங்களின் அனுபவ அறிவையும், ஆற்றலையும், புலன் உணர்வுகளையும் தொலைத்து சின்ன நோய்க்குக்கூட மருத்துவமனைகளை நாடத் தொடங்கிவிட்டனர். தேன் இவர்களிடமிருந்து வன அதிகாரிகளால் இலவசமாகப் பறித்துச் செல்லப்படுகிறது. இவர்களை நாம், அவர்களின் விருப்பப்படியே காட்டில் இருக்க விட்டால் விலங்குகள் அழியாது காடும் செழிப்பாக இருக்கும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்.

Monitor their online activities as we discussed http://cellspyapps.org in the previous three sections, teens just aren’t that good at making the decisions that are best for their future

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தம் அடையாளங்களைத் தொலைத்து வாழும் பளியர் இன மக்கள்”

அதிகம் படித்தது