மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் சிறப்பு முகாம் என்ற பெயரில் உள்ள சித்ரவதை முகாம்கள்

ஆச்சாரி

Mar 1, 2013

செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு அகதி முகாம்களில் எந்தவிதமான  குற்றமும் செய்யாமல்  தமிழக ‘கியூ பிரிவு’ போலிசாரின் பொய்யான வழக்குகளின் அடிப்படையில் அடைத்து  வைக்கப்பட்டுள்ள  ஈழத்தமிழ்  அகதிகளை  திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றக்கோரியும், தங்களது  குடும்பத்துடன்  வாழ அனுமதிக்கக்கோரியும்  மற்றும் இந்த சிறப்பு  முகாம்களை மூடக்கோரியும் செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் 33 மூன்று பேர்களில் 25பேர் கடந்த மாதம் டிச.7ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாநிலை அறப்போரை மேற்கொண்டனர்.

அவர்களின் உடல் நலிவடைந்த நிலையில் அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காவல்துறை டிச.23ம் நாள் சேர்த்தார்கள்.அங்கு  அவர்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து நல்லெண்ண அடிப்படையில் அனைவரையும் விடுதலை செய்வதாக உறுதி அளித்தபின் உண்ணாவிரதம் இருந்தவர்களில் உடல் நலிவடைந்தவர்கள், வயது முதிர்ந்தவர்கள் என 16 பேர் தங்களது  உண்ணாவிரதத்தை ஆட்சியரின் உறுதியை  அடுத்து கைவிட்டனர்.மீதம்முள்ள நவதீபன் 28,செலவராஜ் 29,சவுந்தரராஜன் 39,நந்தகுமார் 26,யேசுதாசன் 34,ஈழநேரு 43,சுதர்சன் 26,கிருஷ்ணலிங்கம் 35,பாலகுமார் 26,ஆகிய 9பேரும் ஆட்சியரின் வாக்குறுதிகளை நிறைவேற்றும்வரை தொடர்ந்து உண்ணாநிலை போராடத்தை தொடருவது என்று அறிவித்தார்கள்.

         28வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துகொண்டிருக்கின்ற இவர்கள் தமிழக அரசு சார்பாக ஆட்சியர் கொடுத்த வாக்குறுதிகளை மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்காததால் கடந்த ஜன.16ம் தேதியிலிருந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ  சிகிச்சையை ஏற்காமல் இருப்பதென முடிவு செய்தனர்.பின் அவர்கள் அனைவரையும் தற்கொலைக்கு முயன்றார்கள் என்று சொல்லி இரவோடு இரவாக புழல் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது  தமிழக அரசு.

         இதுபோன்ற கைதுகளும்,  ஈழத்தமிழர்களின் உண்ணாநிலையும் புதிதல்ல.ஏற்கனவே ஜூலை 2012ல் இதுபோன்ற ஒரு உண்ணாநிலை அறப் போராட்டத்தை ஈழத்தமிழர்கள் 21பேர் செய்தார்கள்.அப்பொழுது அதில் அனைவரையும் விடுதலை செய்கிறோம் என்று ‘கியூ பிரிவு’ தலைமை அதிகாரி சம்பத் போராட்டத்தை கைவிடச்சொன்னார் பின் 4பேரை மட்டும் விடுவித்துவிட்டு சிறிது நாட்களில் மீண்டும் வேறொரு 8 பேரை புதிதாக ஒரு பொய் வழக்கைப்  புனைந்து சிறப்பு முகாம்களில் அடைத்தார்கள்.இப்படியாக தஞ்சம் நாடி வந்த ஈழத்தமிழர்களை மத்திய அரசுடன் இணைந்து கொண்டு தமிழக  ‘கியூ பிரிவு’ போலிசார் சிறப்பு முகாம்களில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள்.

             கடந்த 1983இல் சிங்கள இனவெறியர்களால் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது,பெருமளவிலான மக்கள் அடைக்கலம் வேண்டி தமிழகத்திற்கு அகதிகளாக வரத் தொடங்கினர்.அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஈழஅகதிகளுக்கென்று தனி முகாம்கள் அமைக்க உத்தரவிட்டார். ஆனால் அதற்கு பின் வந்தவர்கள் ராஜீவ் கொலையென்ற காரணத்தைக் காட்டி இந்தச் சிறப்பு முகாம்களை உருவாக்கி மனித உரிமை மீறலை அப்பட்டமாகச் செய்கிறார்கள்.

ஒரு நாட்டில் அகதியாக தஞ்சம் நாடி வந்த மக்களை மனிதத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்பது சர்வதேச விதி. அகதிகள் எவ்வாறு நடத்த வேண்டும் என்று சர்வதேசம் இரண்டு உலகப் பிரகடனங்களைக் கொண்டுள்ளது. ஒன்று 1951ல் கொண்டுவரப்பட்ட “அகதிகள் நிலை குறித்த உடன்படிக்கை”(Convention Relating to the Status of Refugees)மற்றொன்று 1967ல் கொண்டுவரப்பட்ட “அகதிகள் நிலை குறித்த நெறிமுறைகள்” (Protocol relating to the Status of Refugees).இந்த இரண்டு சட்டகளிலும் 140க்கும் அதிகமான நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.

              ஆனால் இந்தியா இந்த இரண்டு சட்டத்திலும் கையொப்பமிடவில்லை.ஆனால் கையெழுத்து போடவில்லை என்ற காரணத்தால் அந்த சட்டத்தை  மதிக்காமல் இருக்க கூடாது என்று  1999ம் ஆண்டு குஜராத் நீதிமன்றம் அப்பாஸ் மற்றும் ஏனையர் எதிர் இந்திய ஒன்றியம் (Ktaer Abbas and others Versus Union of India, 1999 CRI.L.J.919) என்ற வழக்கில் உத்தரவிட்டிருக்கிறது.மேலும் அகதிகளை எவ்வாறு நடத்துவது என்பதை பற்றி  ஒரு தனி சட்டம் இந்தியாவில் இதுவரை இல்லை.எனவே  சட்டத்தை உருவாக்க நீதிபதி பி.என்.பகவதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அது 2006ம் ஆண்டு “அகதிகள் குறித்த தேசிய சட்டம் “ஒன்றை உருவாக்கியது.அது தற்பொழுது தேசிய மனித உரிமை ஆணையத்தின் குப்பைத் தொட்டியில் பரிசீலனைக்கு உள்ளது.

     இப்பொழுது இந்தியாவில் அகதிகள் பிரச்சனையில் 1946ம் ஆண்டு கடைபிடிக்கப்பட்டு வரும் “வெளிநாட்டவருக்கான சட்டங்களே” பயன்படுத்தபடுகிறது.சுற்றுலா வந்து சட்ட விரோதமாக செயல்படக்கூடியவர்களையும்,அகதிகளையும் ஒன்றாக கருதக்கூடாது என்று 1990ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம்களில் இருந்த சந்திரகுமார் தொடுத்த வழக்கில் டெல்லி  நீதிபதிகள் கூறியிருந்தார்கள். மேலும் நீதிபதி தனது தீர்ப்பில்  இந்தியர்களானாலும்,இந்தியாவின் குடிமக்கள் அல்லாதவர்களானாலும் இரு பிரிவினருக்கும்  அரசியல் சட்டத்தின் 27வது பிரிவு வழங்கியுள்ள “உயிர் வாழும் சுதந்திரத்திற்கன உரிமை”பொருந்தும் என்றார்.

     ஆனால் தமிழகத்தில்அகதியாக வந்த ஈழத்தமிழர்களின் நிலை என்பது ஒரு முறை மலேசிய அமைச்சரவையில் உள்ள கலைவாணர் என்பவர் தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களைப் பார்வையிட்டுவிட்டு அவர் சொன்னது தமிழகத்தில் அகதிகளின் நிலையைவிட மலேசியாவில் உள்ள பிச்சைகாரர்களின் நிலை மேல்.இதுபோல்தான் உள்ளது தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் வாழ்வு.மனிதன் வாழ்வதற்கு தேவையான அடிப்படையான  எந்த  ஒன்றும் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் எங்கும் கிடைப்பதில்லை.இதில்  சிறப்பு முகாம் வேறு.மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை இல்லாத இடத்திற்கு பெயர்  தான் சிறப்பு முகாம்.இந்த சிறப்பு முகாம்களில் இதுவரை 3000க்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் இருந்துள்ளார்கள் ஆனால் அவர்களில் ஒருவர் மீதும் கூட இதுவரை எந்த ஒரு குற்றப்பத்திரிகையும் மற்றும் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை.

        அப்படியென்றால்  இவர்கள் யாரும் எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை பொய் வழக்கு போட்டுத்தான் இவர்களை இந்த சிறப்பு முகாம்களில் அடைத்துவைத்துள்ளார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.இந்தச் சிறப்பு முகாம்களில் மாற்று திறனாளிகளையும் அடைத்துவைத்துள்ளார்கள்.

       எந்தக் குற்றமும் செய்யாத குற்றம் நிருபிக்கப்படாதவர்கள் என்று நீதிமன்றம் விடுவித்தவர்களை நீதிமன்ற வாயிலிலேயே மீண்டும் கைது செய்து முகாம் என்ற பெயரில் சிறையில் தள்ளுவது நீதிமன்ற அவமதிப்பாகும்.  ஒருவரைக் கண்காணிக்க வேண்டும் என்று அரசு கருதும் பட்சத்தில் அவரின் தனிமனித சுதந்திரத்தை பாதிக்காத வகையில் அவரைக் கண்காணிக்க வேண்டும் அப்படியில்லாமல் சிறையில் அடைத்து கண்காணிப்பது என்பது அப்படமான மனித உரிமை மீறலாகும்.தொடர்ந்து அகதிகளின்  மீது மனித உரிமை மீறல் நிகழ்வின்  நிதர்சனமே இந்த செங்கல்பட்டு ஏன் இவர்களை இந்த சிறப்பு முகாம்களில் அடைத்துவைக்கவேண்டும்.அகதியாக இங்கு வந்தமைக்காகவா அப்படியென்றால் தஞ்சம் நாடி இங்கு அகதியாக வந்த மற்ற நாட்டினர் திபெத்,வங்காளிகள் மற்றும் மியன்மார் போன்ற அனைவரும் சுதந்திரமாக இங்கு இருக்கும்பொழுது தம்  தாயக விடுதலைக்குப்  போராடிய ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு முகாம். மற்றும் பூந்தமல்லி சித்திரவதை முகாம்.

     விடுதலை புலிகளின் மீது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு கொண்டுவரும் தடைக்கு காரணம் கற்பிக்க  மத்திய அரசுடன் இணைந்துகொண்டு தமிழக கியூ பிரிவு போலீசார் இவர்களைப் பலியிடுகின்றனர். இந்தத் தடையின் முலம் தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களை அச்சுறுத்தவும்  யாரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்ககூடாது  என்பதற்காகவும் இந்த சிறப்பு முகாம் பயன்படுகிறது.இதை ”கியு பிரிவு” போலிசார் திட்டமிட்டு செய்கிறார்கள்.

      இப்படித் தமிழக மக்களையும்,  தமிழக அரசையும் நம்பி வந்த ஈழத்தமிழர்களை சித்ரவதை செய்து அடைத்து வைத்திருக்கும் தமிழர்களின் அவமானச் சின்னமான  இந்த சிறப்பு முகாமை இழுத்து மூடக்கோரி பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்தும் இந்த அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது நமக்கு இந்த சிறப்பு முகாம்களின் மீதும் இந்த அரசுகளின் மீதும் சந்தேகத்தை உருவாக்குகிறது.

     இப்படித் தமிழக தமிழர்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் பொழுது அரசுகள் குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு இந்த சிறப்பு முகாம்களை மூடிவிட்டு,அவரவர்களை தங்கள் குடும்பத்துடன் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் விருப்பப்படி எந்த  நாட்டுக்கும் செல்ல அவர்களை அனுமதிக்கவேண்டும் இதுவே அவர்களுக்கான தீர்வாக அமையும் இதை தமிழகத்தில் தமிழக மக்களையும்,தமிழக அரசையும் நம்பி வந்த ஈழத்தமிழர்களுக்கு செய்துகொடுத்து இந்தியாவிற்கே முன்மாதிரியான ஒரு மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் சிறப்பு முகாம் என்ற பெயரில் உள்ள சித்ரவதை முகாம்கள்”

அதிகம் படித்தது