மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தைப் பீடிக்கும் மின்தடை செயற்கை நாடகமா?

ஆச்சாரி

Dec 21, 2013

ஒரு காலத்தில் ஒளி வெள்ளத்தில் இருந்த தமிழகம் இன்று இருள் வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கிறது. ஆட்சியாளர்கள் மாறி மாறி வந்தாலும் என்றும் மாறாத பிரச்சனையாக மின்தடையானது தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது. வீடு, அலுவலகம், மருத்துவமனை, சிறுதொழில்கள், கல்விக் கூடங்கள் என அனைத்தும் ஒளியிழந்த கூடங்களாய் காட்சியளிக்கின்றன. மின் தடையால் அன்றாடப் பணிகளிலிருந்து அலுவலகப்பணிகள் வரை தடைபட்டு நிற்கின்றன. நன்றாக வந்துகொண்டிருந்த மின்சாரம் திடீரென்று எங்கே போய் விட்டது?, ஆற்காடு வீராசாமி அவர்களின் ஆட்சியில் இரண்டு மணி நேரமாய் தொலைந்து போன மின்சாரம் இன்று 12 மணி நேரமாய் தொலைந்து போன சூட்சுமம் என்ன?, மீண்டும் அனைவரும் ஆதிவாசி வாழ்க்கை வாழ அரசே செய்த ஏற்பாடா இது?, இல்லை இயற்கையின் கோளாறா? என்று இனிக் காண்போம்.

தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்த நிலை நீடித்தால், 2014-ல் மின் பற்றாக்குறை 5 ஆயிரம் மெகாவாட் ஆகவும், 2015 – ல் 7 ஆயிரம் மெகாவாட் ஆகவும் அதிகரிக்க வாய்ப்பை இருக்கிறது என தமிழக மின் பொறியாளர்கள் கணிக்கிறார்கள். வேறு சில அதிகாரிகள் மத்திய அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து கிடைக்க வேண்டிய 2500 மெகாவாட்டில் சுமார் 2000 மெகாவாட் மின் உற்பத்தியில் தமிழக அரசுக்கும் பொறுப்பு இருப்பதால், தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டி எடுத்திருந்தாலே தற்போது ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை வந்திருக்காது என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேலும் இவர்கள் “இந்தியன் ஆயில் கார்ப்பரேசனிலிருந்து கிடைக்க வேண்டிய நாப்தா கிடைக்காததால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். நாப்தா கிடைக்காததால் தமிழக அரசின் மின் திட்டங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. பிள்ளைபெருமாள்நல்லூரில் உள்ள தனியார் மின் நிறுவனம் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை 10 ரூபாய் 92 காசுக்கு அரசு வாங்குகிறது. இந்த விலைக்கு வாங்கக் கூடாதென்று ஒழுங்குமுறை ஆணையமே உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதையும் மீறி அரசு வாங்குகிறது. நாப்தா கிடைக்கவில்லை என்றால் இந்த நிறுவனம் தான் இந்திய ஆயில் நிறுவனத்திடம் கேட்க வேண்டும். இவர்கள் எந்த அக்கறையும் காட்டாத நிலையில், அந்த நிறுவனத்தில் உற்பத்தியாகும் 330 மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைக்கவில்லை. இது குறித்து அந்தத் தனியார் நிறுவனத்திடம் அரசு கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, ஐ.ஓ.சி மீது குற்றம் சாட்டுவது தவறாகும் என்று பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசுதான் மின் உற்பத்திக் குறைவுக்குக் காரணம் என்று அரசு கூறுகிறது. ஆனால் தமிழ்நாடு மின் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் காந்தி “மத்திய மின் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், தமிழக அரசின் மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுகின்றனவா? இல்லையே. குறிப்பாக மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வல்லூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்து 2012-மார்ச் மாதத்தில் முழுமையாக அவை பரிசோதிக்கப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டன.

ஆனால் என்ன காரணத்தினாலோ அவற்றிலிருந்து மின்சாரத்தை இதுவரை உற்பத்தி செய்யாமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். தமிழக அரசின் மின் உற்பத்தித் திட்டங்களை முறையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தாலே மத்திய மின், நிறுவனங்களை நாம் சார்ந்து இருக்கத் தேவை வராது” என்கின்ற அதிர்ச்சியூட்டும் தகவல் நமக்குக் கிடைக்கிறது.

இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்புகளான கொடிசியா, காட்மா, டேக்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்பின் நிர்வாகிகள் கூடிப்பேசி மின்வெட்டுப் பிரச்சனை தீரும் வரை சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான மின்வெட்டை அமல்படுத்த வேண்டும், மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மின்பற்றாக்குறையை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, இலட்சக்கணக்கான சிறுதொழில்களுக்கும், மேற்கு மற்றும் தென்தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் 65% மின்வெட்டு விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மின்வெட்டே இருப்பதில்லை. இந்த மர்மத்திற்கான காரணம் எந்த மின்துறை அதிகாரிகளும் தெரிவிக்கப்படாமல் ரகசியம் காத்து வருகின்றனர்.

ஆட்சியாளர்களின் பொறுப்பின்மை:

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின்வெட்டே இருக்காது என தற்போதைய ஆளுங்கட்சி கூறியதன் பொருள் என்னவென்று மக்களுக்கு இப்பொழுதுதான் புரிகிறது. கடந்த ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி அவர்களின் காலத்தில்தான் மின்வெட்டே ஆரம்பமானது. தமிழ்நாடே ஒளி வெள்ளத்தில் இருந்த காலம் போய் திடீரென்று மின்தடை ஆனது. அந்த தடைபட்ட மின்சாரத்தை எந்த தனியார் நிறுவனத்திற்கு பேரம்பேசி விற்கப்பட்டது என்பது சிதம்பர ரகசியம். ஆற்காடு வீராசாமியாக இருந்தாலும் தற்போது மின்துறை அமைச்சராக இருக்கும் நத்தம் விஸ்வநாதனாக இருந்தாலும் மின்தடை மட்டும் மாறாமலே இருக்கிறது. கடந்த ஆட்சியில் இரண்டு மணி நேர மின்வெட்டானது தற்போது 10 மணி, 12 மணி நேர மின்வெட்டாக அதிகரித்துள்ளதுதான் கொடுமையிலும் கொடுமையானது.

தமிழகத்தின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த விகிதத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. இதற்கு முந்தைய அரசானது, தற்போதைய அரசை நோக்கி விரல் நீட்டுவதும், தற்போதைய அரசானது, முந்தைய அரசை நோக்கி விரல் நீட்டுவதும் என இவ்விருவருக்குள் பழியைப் போடும் படலம் ஊரறிந்த உண்மைக் கதை. ஆனால் இந்த முறை நியாயமான காரணத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது விரல் நீட்டப்பட்டிருப்பது நயவஞ்சகமானது.

கூடங்குளம் அணு உலை இயங்கினால் தான் மின்வெட்டு தீர்ந்து விடும், அதைத் தொடங்க விடாமல் போராடிக் கொண்டிருப்பதால் தான் மின்வெட்டு அதிகரித்துவிட்டது என்று மக்கள் மீதே, மக்கள் கோபம் திருப்பப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மை நிலை என்ன?.

முந்தைய அரசும், தற்போதைய அரசும் கடந்த காலங்களில் புதிதாக எந்த மின் உற்பத்தித் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. ஆனால் இவ்விரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்களை அழைத்து பலவிதமான சலுகைகளைக் கொட்டிக் கொடுத்து தொழில் தொடங்க வைத்திருக்கின்றன. மக்களுக்கும், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் மின்வெட்டைத்தரும் இவர்கள் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், சலுகை விலையில் ஒரு நொடி கூட மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் தற்போதைய மின்வெட்டிற்கு யார் காரணம் என்பது மக்களுக்கே வெளிச்சம்.

பிற மாநிலத்திலிருந்தாவது மின்சாரம் பெற வேண்டும் என்ற கொள்கையால் குஜராத்திலிருந்து மின்சாரம் வாங்குகிறோம் என்றார்கள். மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை என்கிறார்கள். அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விடப் பல மடங்கு அதிக விலையில் வாங்கும் மின்சாரத்தில் பாதிக்கு மேல் மின் கடத்தலினால் ஏற்படும் இழப்பில் போய்விடுகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை நேரடியாக வாங்கிக் கொள்ள ஏதுவாக கம்பித்தடங்கள் நிறுவிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒப்பீட்டளவில் மாநில அரசு தருவதை விட விலை அதிகம் என்பதால், மத்திய அரசிடம் இருந்தே மின்சாரத்தை வாங்கிக் கொள்கின்றன. மக்கள் கடுமையான மின் தட்டுப்பாட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் கூட இதை ஒழுங்குபடுத்தாமலிருப்பது யாருடைய தவறு?.

மின்சாரத்தின் பெயரால் மக்களை வாட்டி வதைக்கும் அத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, கூடங்குளத்தைத் திறந்தால்தான் அத்தனையும் சரியாகிவிடும், அதைத் தடுப்பது போராடும் மக்கள் தான் என்பது அயோக்கியத்தனமான செயலாகும். இந்த அணுஉலையால் நாங்களும், எங்களின் எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவார்கள் என்று கூடங்குள மக்கள் தொடர் போராட்டம் நடத்தப்பட்ட போதும் இதற்கு அரசு மற்றும் அறிவியலாளர்களைக் கொண்டு இது பாதுகாப்பானது தான் என்று பல்லவி பாடவிட்டது இந்த அரசு.

அணுஉலை முழுமையான பாதுகாப்பு கொண்டது என்றால் அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா எதற்காக? ஜப்பானில் புகுசிமா விபத்து ஏற்படுவதற்கு முன்புவரை சர்வதேச அணுசக்தி நிறுவனங்கள் ஜப்பானின் அணு உலைகள் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவைதான் என்று சான்றிதழ் அளித்தது. இதைத் தற்போதைய அரசு மறந்துவிட்டு கூடங்குளம் அணு உலையை எப்படியாவது திறந்துவிட வேண்டுமென்ற முனைப்புக் காட்டி வருவது ஏன்?.

தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது 56000 கோடி கடன் சுமையில் உள்ளது. அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு குறைந்த பட்சம் யூனிட் ஒன்றுக்கு 21 காசுகளிலிருந்து அதிகபட்சம் 2 ரூபாய் வரை ஆகிறது. ஆனால் தனியாரிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 4 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 17 ரூபாய் வரை ஆகிறது. இது முதல் காரணம் என்றால் மின் கடத்துதலில் ஏற்படும் கம்பிவட இழப்பு மட்டும் ஆண்டுக்கு 2000 கோடி.

சுருக்கமாகச் சொன்னால் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கியே போண்டியாகிக் கிடக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம். இவைகளைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மேலும் மேலும் தனியார் மின்சாரமே தீர்வு என்று தனியாரை நாடிக் கொண்டிருக்கிறது அரசு. தனியார்களும் தங்களின் உற்பத்தி இலக்கை கூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். நாளை மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையும் அவர்கள் கைகளுக்குப் போகும் போது நிலைமை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்வதே முடியாததால் இருக்கிறது.

மின்வெட்டின் ரகசியம்:

1.  100 கிராமங்களின் மின்சாரத்தை விழுங்குகிறது சென்னையிலுள்ள ஒரே ஒரு வணிக வளாகம்.

2. கிராமத்தில் உள்ள ஏழை நெசவாளர்களின் மின்விசைத்தறிகளுக்கு தொடர்மின்வேட்டு, ஆனால் நகரத்தில் உள்ள சரவணா டெக்ஸ்டைல்ஸ், ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ், சென்னை சிலக்ஸ், போத்தீஸ், லலிதா ஜுவல்லரி, நாதெள்ள ஜூவல்லரி, ஆர். எம். கே. வி டெக்ஸ்டைல்ஸ் , குமரன் டெக்ஸ்டைல்ஸ், போன்ற பணம் உள்ளவர்களின் கடைகளுக்கும் ஓய்வில்லா  ஒளிவெள்ளத்தை வாரி வழங்குகிறது தமிழ்நாடு மின்சார வாரியம்..

3.தமிழக சிறு தொழில் வளர இங்கு போதிய மின்சாரமில்லை, ஆனால் வந்தேறிகளின் பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தடையில்லா மின்சார விநியோகம்.

4.  ஏழை வீட்டில் மின்வெட்டு, பணக்காரன் வீட்டில் குளுகுளு வசதி.

5.  மின்சாரம் மக்களின் பொதுச்சொத்து. அதைப் பணக்காரர்களுக்குத் தாரைவார்ப்பதுதான் இந்த மின்வெட்டு நாடகம்.

குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்

முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்

மருதம்  – வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்

பாலை – மணலும் மணல் சார்ந்த இடமும்

மொத்தத்தில் இந்த ஐந்து வகை நிலத்தை அடங்கிய தமிழகம் இன்று “இருளும் இருள் சார்ந்த இடமுமாய்” மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள்.

மின் உற்பத்தியில் தமிழ்நாடும் பிற மாநிலங்களும்:

இப்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டு நியாயமானது தானா? தமிழகத்தை விட குறைந்த அளவு மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இவ்வளவு பெரிய மின் தடை இல்லை. 20 கோடி மக்கள் தொகையும் பல்வேறு தொழிற்சாலைகளையும் கொண்டுள்ள உத்திரபிரதேசம் தமிழகத்தை விட குறைவான அளவு மின்சாரம் தான் உற்பத்தி செய்கிறது. இங்கு மின்தடை இல்லை. ஆந்திராவில் மின் உற்பத்தி குறைவுதான் இங்கும் மின்தடை இல்லை. பெரிய தொழிற்சாலைகள் இல்லை என்றாலும் வெறும் 8000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் கேரளாவில் அரை மணி நேரம் தான் மின்வெட்டு. இதற்கு மாறாக நம் தமிழ்நாட்டில் யாரைத் திருப்திப்படுத்த இப்படி மின்தடை ஏற்படுத்துகிறார்களோ தெரியவில்லை.

மின்சாரப் பற்றாக்குறைக்கு மாற்றுவழி:

1. மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க இன்று சூரிய ஒளி பரவலாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. பெரிய அளவிலான மின் உற்பத்திக் கூடங்கள் கூட சூரிய ஒளியில் சாத்தியம் என்பதே இன்றைய தொழில் நுட்பத்தின் வளர்ச்சி. சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாகப் படும்போது தான்  அவை முழு அளவில் மின் ஆற்றலைத் தரும்.

2. சூரிய ஒளிக்கு அடுத்தபடியாக இருப்பது காற்றாலை மின்சார உற்பத்தி. தமிழ்நாட்டில் பல இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தமிழ்நாடு மின்சார வாரியத்தோடு இணைந்து செயல்படுகின்றன. நம் வீடுகளின் மொட்டை மாடியிலேயே சிறிய அடுக்குகள் மூலம் ஒரு நாளில் 24 மணி நேரமும் ஆண்டு முழுவதும் காற்றிலிருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என்பது காற்றாலையின் சாதகமான விடயம்.

மின்சாரத்தை எவ்வாறு சிக்கனப்படுத்துவது?

சேமிப்பு என்பது உழைத்துச் சேமிப்பது மட்டுமல்ல, சிக்கனமும் ஒரு வகையில் சேமிப்புதான். இது பணத்திற்கு மட்டுமல்ல மின்சாரத்திற்கும் பொருந்தும். அனைத்திற்கும் அரசையே குறை கூறுவது ஒரு புறம் இருந்தாலும் இருக்கின்ற குறைவான மின்சாரத்தை நாம் எப்படிச் சேமிக்க வேண்டும் என்ற சிந்தனை பலருக்கும் இருப்பதில்லை. அச்சிந்தனை இருந்தாலும் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுவதில்லை. மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் மின்சாரத்தை எவ்வாறு சேமிப்பது எனக் காண்போம்.

1. நம் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியை ரிமோட் கருவியால் அணைத்துவிட்டாலும் மின்சாரம் வீணாகும். ஆதலால் இதற்கென இருக்கும் பிளக் பாயிண்டில் அணைத்துவிட வேண்டும்.

2. சிலர் இரவில் தூங்குவதற்கு முன் தங்களது அலைபேசிகளை சார்ஜ் போட்டு விட்டுத் தூங்கிவிடுவார்கள். இவ்வாறு இரவு முழுவதும் அலைபேசிகளை சார்ஜ் செய்யாமல் இரண்டு மணி நேரத்தில் எடுத்துவிடவேண்டும்.

3. வீட்டிற்கு ஐ.எஸ்.ஐ சான்று பெற்ற மோட்டார்களையே பயன்படுத்த வேண்டும்.

4. வீடு கட்டும் போதே வீட்டிற்குள் அதிக அளவில் இயற்கையான வெளிச்சம் வரும்படி ஜன்னல்கள் அமைத்தால், பகல் நேரத்தில் மின் விளக்குகளை பயன்படுத்தத் தேவையில்லை.

5.தண்ணீருடன் கூடிய துணி தேய்ப்புப் பெட்டிகளைப் (அயர்ன் பாக்ஸ்) பயன்படுத்தினால் மின்சாரம் குறைவாகத் தேவைப்படும்.

6. வீடுகளில் அல்லது வீட்டுக்கு வெளிப்புறத்தில் மின்சாரத்தை அதிகம் இழுக்கும் குண்டுவிளக்குகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து குறைவான மின்சாரத்தை இழுக்கும் சுருள் பல்புகளை பயன்படுத்த வேண்டும்.

7.வீட்டில் தேவையற்ற இடங்களில் ஒளிரும் மின் விளக்குகளை, மின் விசிறிகளை அவ்வப்போது அணைத்துவிட வேண்டும்.

8. சுவர்களுக்கு வண்ணம் அடிக்கும் போது அடர்த்தி குறைந்த நிறங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

9.துணி துவைக்கும் இயந்திரத்தில் (வாசிங் மிசின்) உலரவைக்கும் கருவிகளைத் தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தலாம். வெயில் அடிக்கும் நாட்களில் வெளியில் துணிகளைக் காயப்போடுவதே சிறந்தது.

10.சூடு அடுப்புகளைப் பயன்படுத்தும் போது தேவைப்படும் போது தண்ணீரை சூடுபடுத்தி உடனே பயன்படுத்துங்கள். தேவையான அளவுக்கு சூடு ஆனதும் உடனே அணைத்து விடுங்கள்.

11. மின்சார சமையல் அடுப்புகளைப் பயன்படுத்தும் போது அடிப்பாகம் அகலமான பாத்திரங்களை பயன்படுத்துவது சிறந்தது. இதனால் மின்சாரம் வீணாவது தவிர்க்கப்படும்.

12. குளிர்சாதன பெட்டியின் குளிர்நிலை 37 டிகிரி முதல் 40 டிகிரிக்குள் செட் செய்தால் மின்சாரம் சிக்கனமாகும்.

13. டீஸ்போசபிள் பேட்டரிகளை விட ரீசார்ஜ் வசதியுள்ள பேட்டரிகளை வீட்டிற்குப் பயன்படுத்தலாம்.

ஒரு யூனிட் மின்சாரத்தைச் சேமிப்பது இரண்டு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குச் சமம். ஆதலால் மின்சாரத் தேவை கருதி அனைவரும் மின்சாரச்சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது. மேலும் மக்களின் இத்துயரைப் போக்க மாற்றுவழி மின்சார உற்பத்தி முறைகளை அரசு பின்பற்றினால் ஓரளவு மின்சாரத் தேவை குறையும் என்பதே நம் அனைவரின் எண்ணமாகும்.

Learners, especially in http://essaynara.com school settings, are often faced with tasks that do not have apparent meaning or logic klausmeier,

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தமிழகத்தைப் பீடிக்கும் மின்தடை செயற்கை நாடகமா?”
  1. Vijay says:

    Good research and good write up

அதிகம் படித்தது