தமிழகம்: பொருளாதாரமும் வளர்ச்சியும்!
ஆச்சாரிJun 30, 2012
‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு’ –குறள்
இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளாக இரண்டு கருத்துகள் ஒன்று இந்தியாவின் liberalization- அதாவது இந்தியாவின் பொருளாதாரத்தை உலக பன்னாட்டு வணிகத்துடன் இணைப்பது மற்றும் ஏற்றுமதி இறக்குமதிக்கு தங்கு தடையையும் நீக்குவது. மற்றொன்று இந்தியாவை வல்லரசாக்குவது. இந்த இரண்டு கருத்துகளுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு (development) அத்தியாவசியம் என்று ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை மக்கள் மனதில் பசுமரத்தாணி போல அடிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு கருத்துகளின் சர்வதேசப் பின்னணியையும் இதனால் இந்தியாவில் உண்மையாகவே வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பதையும் குறிப்பாக தமிழகத்தில் இந்தக் கருத்துக்களின் தாக்கத்தைப் பற்றி அலசுவதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.
இந்திய அளவில் ஆராயாமல் ஏன் தமிழகத்தை மட்டும் அலசுகிறீர்கள் என்ற கேள்வி எழலாம். இரண்டு காரணங்கள். இந்தியாவிலேயே தமிழகம் மிகவும் முன்னேற்றம் அடைந்த மாநிலம் என்ற புகழை வாங்கியுள்ளது. மேலும் தொன்றுதொட்டே தமிழர்கள் பொருளாதாரத்திற்கும் சமூக வளர்ச்சிக்கும் முதன்மை அளித்து, அறம், பொருள், இன்பம் என்ற மூன்றில் பொருளா தாரத்தையும் சேர்த்துள்ளனர். எனவேதான் தமிழகக் கண்ணோட்டத்தில் ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிடும் எண்ணிக்கைதான் GDP (gross domestic product). பொருளாதார நிபுணர்கள் மிகவும் கூர்மையாக கவனிப்பது inflation என்று சொல்லப்படும் மற்றுமொரு எண்ணிக்கையோடு இது ஒரு நாட்டின் பணத்தின் மதிப்பை நிர்ணயிப்பது. Inflation சதவிகிதம் ஏறினால் அந்த நாட்டின் பணம் வீக்கம் அடைந்து அந்த நாட்டின் வணிகள் நிலையும் மேலும் மோசம் அடைந்துவிடும். இந்த இரண்டு மதிப்பீடுகளை மட்டுமே கண்காணித்து – இதில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை வைத்து பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுகிறது- சர்வதேச பொருளாதார நிபுணர் சமூகம்.
இந்த கோணத்தில் மட்டுமே பார்த்தால் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகவே இந்தியாவும் தமிழகமும் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றே கூறலாம். குறிப்பாக 1992 –ல் இந்தியா ‘liberalization’ என்ற பெயரில்- பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும், வணிகம் செய்யவும் இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதிலிருந்து இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதற்கு ஆதாரம்- சராசரியாக ஆண்டுதோறும் 8% GDP வளர்ச்சி. இந்த வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு பெருமளவு. மராட்டிய மாநிலத்தை அடுத்து அந்நிய முதலீட்டை மிகுதியாகப் பெரும் மாநிலம் தமிழகம்தான். மேலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மென்பொருள் உற்பத்தி, BPO போன்ற துறைகளில் பிரசித்தம் பெற்று மிளிர்கிறது தமிழகம். இந்த வளர்ச்சியினால் தமிழகத்தின் வேலைவாய்ப்பு நிலவரம் முன்னேறி, படித்த இளைஞர்களிடம் வேலையில்லாத் தட்டுப்பாடு குறைக்கப்பட்டுவிட்டது.
70களிலும் 80களிலும் அரசாங்க வேலையையும், மும்பை, கொல்கத்தா போன்ற வெளி நகரங்களில் பிழைப்பைத் தேடிச் சென்ற தமிழக இளைஞர்கள், சென்னை, பெங்களூர் என்று தென்னிந்தியாவிலேயே தழைத்து வெற்றி பெற்றுள்ளனர். கிராமப் பகுதிகள் மற்றும் குறு நகரங்களில் இருந்தும் படித்த இளைஞர்கள் தகவல் தொழில் நுட்பம் மற்றும் BPO துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
உலக வங்கிக்கு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ள Jeffy sochs என்ற பொருளாதார வல்லுநர், இந்தியாவிலேயே மிகவும் எழுச்சிமிக்க மாநிலம் (Dynamic state) என்று தமிழகத்தைக் குறிப்பிட்டுள்ளார். 2008-ல் உலகம் முழுதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் கூட தமிழகத்தின் வீட்டு மனை சந்தை பெரிய அளவில் சரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப் பல்வேறு புகழாரங்களைப் பெற்றுள்ள தமிழகத்தின் அரசியல்வாதிகள், தங்களின் திட்டங்களினாலும் கொள்கையினாலும்தான் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று இறுமாப்பு கொண்டுள்ளனர். இந்த (பொய்) பிரச்சாரம் தமிழகத்தில் மட்டுமின்றி குஜராத், மராட்டியம் போன்ற பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள மாநிலங்களிலும் கேட்பது வாடிக்கையாகிவிட்டது. தமிழக அளவில் திராவிடக் கட்சிகளும். இந்திய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் துதியை தாங்களே பாடிக் கொண்டிருக்கின்றன. இந்தியா வல்லரசு ஆகும் என்ற வாக்கியத்தை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி ஆரம்பித்து தேர்தலில் வென்ற கோமாளித்தனமும் நடந்துள்ளது.
இத்தகைய பின்னணியில் உண்மையான வளர்ச்சி என்பது என்ன? சமூக மேம்பாடின்றி வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமே கண்டுள்ள தமிழகத்தின் இன்றைய நிலை என்ன மற்றும் இனி வரப்போகிற விளைவுகள் என்னவாக இருக்கும் என்று அடுத்த பகுதியில் காண்போம்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
சிறகுகள் இருநதால் தான் பறவைகள் உயரமாக பறக்கும் அது போல இதன் கருத்துக்கள் உள்ளது.
தற்போது இலங்கை தீர்மானத்தில் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
ஆழமான கருத்தை சுருக்கமாக சொல்லி உள்ள கட்டுரை. சிறகு இது போன்ற அருமயான கட்டுரைகளை தொடர்ந்து தர வேண்டும்.
நன்றி அர்விந்த். இந்த தொடரின் இரண்டாம் பகுதியையும் படித்து தங்களின் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.