மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக கிராமங்களைச் சீரழிக்கும் சிறுநீரக நோய்

ஆச்சாரி

Oct 15, 2013

வணக்கம். சிறகு இணைய இதழ் வாசகர்களை மீண்டும் எனது எழுத்து மூலம் சந்திப்பதில் பெருமைகொள்கிறேன். நாம் பல விசயங்களைப் பற்றி கடந்த இதழ்களில் பேசியிருக்கிறோம். சர்க்கரை நோயிலிருந்து, தமிழர்களுடைய உணவுப்பழக்கத்திலிருந்து பல விசயங்களைப் பேசியிருக்கிறோம். சர்க்கரையால் உண்டாகக்கூடிய சார்புநோயைப் பற்றிக்கூட விரிவாக பேசியிருக்கிறோம். இன்று இந்தக் கட்டுரையில் நாம் சிறுநீரகங்கள் சீரழியும் தன்மை பற்றிக் காணப்போகிறோம்.

சிறுநீரகத்தின் தன்மை:

முதலில் சிறுநீரகம் என்றால் என்ன? என்று பார்க்கும் பொழுது, நமது உடம்பில் உள்ள இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை சிறுநீர் வழியே வெளியேற்றுவதற்கு இயற்கை கொடுத்த, இறைவன் கொடுத்த ஒரு அற்புதமான உறுப்புதான் சிறுநீரகம். இந்தச் சிறுநீரகம் கல்லீரலுக்குக் கீழே முதுகுப்பகுதியில் இரண்டு பக்கமும் ஒன்றொன்றாக உள்ளது. உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை 10 சதவீதம் அளவுக்கு எடுத்துக்கொண்டு இயங்கக்கூடிய ஒப்பற்ற ஒரு உறுப்பு சிறுநீரகம் தான்.  ஒரு நிமிடத்திற்கு 2.4 லிட்டர் இரத்தத்தைச் சுத்திகரித்து, உடம்பில் இருக்கக்கூடிய நீர்சத்தை சமஅளவில் வைக்கக்கூடிய தன்மை நமது சிறுநீரகங்களுக்கு உண்டு.

உடம்பில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கக்கூடிய, உடம்பிற்குத் தேவையான எதிர்ப்புத்திறனை தரக்கூடிய சிவப்பணுக்களை அதிகரிக்கக்கூடிய தன்மை சிறுநீரகங்களுக்குத்தான் உண்டு. அதாவது சிவப்பணுக்களின் உற்பத்தித்திறனை ஊக்குவிப்பதில் சிறுநீரகங்களுக்கு நிறைய பங்கு உண்டு. அதே போல் சிறுநீரகங்களில் உற்பத்தியாகக்கூடிய எரித்தோ பாய்ன்ட்டின் என்று சொல்லக்கூடிய ஹார்மோன் குறையும்பொழுதுதான் இரத்தசோகை போன்ற நோய்கள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இந்தச் சிறுநீரகம் 150 கிராம் எடை, 12 சென்டிமீட்டர் நீளம், 5 சென்டிமீட்டர் அகலம் கொண்டது. இந்த சிறுநீரகம் ஏன் பாதிக்கப்படுகிறது?  இந்தப் பாதிப்பில் இருந்து எப்படி நாம் மீள்வது என்பதைத்தான் நாம் இந்தக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அதிலும் பிரதானமாகப் பார்த்தால் கொடூரமான நோய்களான கேன்சர், எச்.ஐ.வி போன்ற நோய்களை ராஜநோய்கள் என்றே சொல்லலாம். வளர்ந்த நாடுகளில் இந்த நோய்களுக்கான மருந்துகள் அதிகமாக இருக்கிறது. வளர்ந்த நாடுகளில்  பொருளாதார மேம்பாடு இருப்பதால் அந்த நாட்டு அரசு, வளர்ந்த நோய்களுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை அளிக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அதே போல் அங்குள்ள மக்களுடைய அறிவு மேம்பாடு, அறிவு முதிர்ச்சி, தொழில் சார்ந்த அறிவு எல்லாமே மிக அதிகமாகவே இருப்பதால், வருமுன் காப்போம் என்ற கொள்கையைப் பற்றி  ஓரளவிற்கு தெரிந்து வைத்திருப்பதால் வாழ முடிகிறது. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்களால்,  பல்லாண்டுகாலம் மருத்துவச்செலவு செய்து கொண்டு வாழ்க்கையை வாழக்கூடிய சூழல் வளர்ந்த நாடுகளில் இருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது.

இங்கு இருக்கக்கூடிய அரசுகள் மக்களின் அடிப்படைத் தேவைகளையே நிவர்த்தி செய்வதற்குத் திணறிக்கொண்டிருக்கிற காலகட்டத்தில் மக்களுக்கு வரக்கூடிய நோய்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பயிற்சியை வழங்கக்கூடிய அளவிற்குத்தான் இங்கு இருக்கக்கூடிய அரசு இருக்கிறதே ஒழிய, ஒவ்வொரு தனிமனிதனுடைய அடிப்படைத் தேவை, ஆரோக்கியத் தேவையை நிறைவுசெய்வதற்குத் தகுந்தவாறு ஒரு அரசமைப்பு என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எதிர்பார்ப்பது இயலாத ஒரு காரியமாக இருக்கிறது.

ஆகையால் ஒவ்வொரு தனிமனிதனும், தனிமனித விழிப்புணர்வு பெற்றாலே ஒழிய இந்த மாதிரியான கொடுமையான நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது கடினம். வளர்ந்த நாடுகளில் திணிக்கக்கூடிய சில விசயங்களை நாம் சொல்லலாம். அதாவது பண்டைய உணவுமுறைகளை சிதைப்பது, இதைத்தான் பிற நாடுகள் நமது நாட்டின்மீது செய்து வருகிறது. ஆக கவர்ச்சிகரமான சில விளம்பரங்கள், கவர்ச்சிகரமான சில உணவுகள் மூலமாக ஒரு நோயைப் பரப்பக்கூடிய தன்மை தொடர்ந்து இருந்துகொண்டே இருப்பதனால், இந்தியா போன்ற நாடுகளில், அதிலும் குறிப்பாக நம் தமிழத்தில் பார்த்தோமென்றால் இன்று சிறுநீரக வியாதி மிக அதிகமாக இருக்கிறது.

இதற்கான காரணம் கண்டிப்பாக விழிப்புணர்வு குறைவு என்பதைத்தான் நாம் சொல்ல வேண்டும். பெரும்பாலும் சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு 30 சதவீதம் அளவிற்கு சிறுநீரக வியாதி வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதே போல் இரத்த அழுத்தம் இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு 10 சதவீதம் அளவிற்கு சிறுநீரகநோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.  தமிழ்நாட்டில் சில கிராமங்களில் நானே நேரடியாகச் சென்று பார்க்கும் பொழுது அங்கு இருக்கக்கூடிய மக்கள் எந்த அளவிற்கு ஆரோக்கிய குறைபாட்டுடன் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.

சிறுதானியம்:

அன்றைய காலகட்டத்தில் சிறுதானியங்கள், கிராமங்களில் நன்றாக வேரூன்றி இருந்த தன்மை இருந்தது. வரகரிசி, திணையரிசி, குதிரை வாலி, சாமை அரிசி, ராகி களி, கம்பு தோசை, கம்பு அடை, சோள தோசை, சோள அடை, இவைகளை அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததனால் அவர்களுக்கு தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம் எல்லாமே உணவுகள் மூலம் கிராமத்தில் உள்ளவர்கள் பெற்றுவந்தார்கள். ஆக கடின உழைப்போடு இந்த உணவுகளும் சேர்ந்து அவர்களுடைய உடலமைப்பை ஒழுங்காக வைத்திருந்த காலகட்டம் இருந்தது.

மது:

பண்டிகைக்கு மட்டுமே மது அருந்திய கலாச்சாரம் கிராமங்களில் அன்று இருந்தது. ஆனால் அது இன்று கிடையாது. எங்கு பார்த்தாலும் கிடைக்கக்கூடியது மது, போதையை உண்டாக்கக்கூடிய பாக்கு. ஒரு காலகட்டத்தில் வெற்றிலையும், பாக்கும் போட்ட தமிழ்ச் சமூகம், இன்று பான்பராக் போன்ற போதை வஸ்துக்களை, பீடாக்களை சேர்த்துப்போடும் பொழுது கண்டிப்பாக சிறுநீரகம் சார்ந்த நோய்கள் வெகுவாக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் பாட்டி வைத்தியம், கை வைத்தியம், சித்த மருத்துவம் என்று கிராமங்களில், வேரூன்றி இருந்த காலமெல்லாம் வெகுவாக மலையேறி ஒரு சாதாரன தலைவலி, காய்ச்சல் என்றால் கூட ஒரு கசாயம் வைப்பதற்குக்கூட கிராமங்களில் ஆட்கள் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

பக்கத்திலே இருக்கக்கூடிய நகரங்களில், சிறுநகரங்களில் மருத்துவர்களிடம் சென்று உடனே சிகிச்சை மேற்கொள்வது அல்லது தலை வலிக்கிறது என்று தனக்குத்தானே மருந்துக்கடைகளிலும் மருந்துகளை வாங்கி அதன் வீரியம் தெரியாமலே தொடர்ந்து சாப்பிடுவது, எந்த அளவுக்கு அந்த மருந்தில் வீரியம், குணப்படுத்தும் தன்மை இருக்கிறது, எந்த அளவிற்கு மற்ற வியாதிகள் வரக்கூடிய தன்மை (கான்ட்ரா இன்டிகேசன்) இருக்கிறது இதெல்லாம் கண்டுகொள்ளாமலே மருந்துகள் வாங்குவதால் நிறைய சிக்கல்களை கிராமங்களில் எதிர்கொள்ளவதை நாம் பார்க்கமுடிகிறது.

அந்த நிலையை மாற்றவேண்டிய தன்மை என்பது அரசுகள் தான் பண்ணவேண்டும். அரசு என்பது நல்ல ஒரு விழிப்புணர்வை தரக்கூடிய அமைப்பாக இருக்கவேண்டும். ஆனால் இன்று கிராமங்களில் கூட மதுக்கடைகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களுக்குத் தேவையான ஒரு விழிப்புணர்வு இல்லாத நிலை இருக்கிறது. ஒருவருக்கு ஒரு சாதாரண மகிழ்ச்சியான நிகழ்வு நடந்தது, என்றாலும் கூட அங்கே மது தாண்டவமாடுகிறது. அதேபோல் ஒரு துக்க வீடு என்றாலும் கூட அங்கே மதுவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கின்றது.

அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு திண்ணை. அந்த திண்ணையிலே நாட்டுக்கோழி வளர்க்கக்கூடிய தன்மை எல்லாமே இருந்தது. இன்று கிராமங்களில் சென்று பார்த்தீர்கள் என்றால் நாட்டுக்கோழி என்பது காணாமலே போய்விட்டது. இன்று மதுவும், பிராய்லர் கோழியும் இல்லாத கிராமங்களே கிடையாது. கிராமத்திலே நகர்புறம் சார்ந்த வாழ்வியல் சூழல் உண்டாகி விட்டதால் நிறைய சிறுநீரக வியாதி அங்கே வந்துகொண்டிருக்கிறது. தனக்கு வந்தது சிறுநீரக வியாதிதான் என்று தெரியாமல் கூட அதற்குக்கூட மருந்துகடைகளில் சென்று மருந்துகளை வாங்கி அவர்கள் சாப்பிடும்பொழுது நமக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

ஒரு கிராமத்திலே நான் நேரடியாகப் பார்த்த அனுபவம் ஒன்று என்னவென்றால், 600 வீடுகள் இருக்கக்கூடிய கிராமத்திலே கிட்டத்தட்ட 50 நபர்கள்  சிறுநீரக வியாதியினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு உப்புநோய் வந்துவிட்டது அதனால் நான் மருந்து வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன் என்று சாதாரணமாகச் சொல்லக்கூடிய ஒரு தன்மை கிராமங்களில் பார்க்க முடிகிறது. சிறுநீரகம் என்பது சாதாரண விசயமல்ல, ஒரு உடம்பில் இதயத்தின் பணி எவ்வளவு முக்கியமோ, அதே பணி சிறுநீரகத்திற்கு உண்டு. உடம்பை நிலைக்கச் செய்யக்கூடிய தன்மை சிறுநீரகத்திற்கு மிக முக்கியமான பணியாக இருக்கிறதால் அந்தச் சிறுநீரகம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்பதை கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு அரசு தீவிர விழிப்புணர்வு பயிற்சியைக் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அது இல்லை என்றால் கண்டிப்பாக இளம்வயதிலேயே (40லிருந்து 50 வயதிற்குள்ளேயே) சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மீட்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் குடும்ப அமைப்பு சிதிலமடைவது, சம்பாதிக்கக்கூடிய நபர் இறந்துபோவது இவ்வாறெல்லாம் சூழல் உண்டாகிற பொழுது கண்டிப்பாக ஒரு தேக்கநிலை, சுணக்கம் என்பது கண்டிப்பாக இருக்கும். அதனால்  சிறுநீரக செயலிழப்பை முழுமையாக தடுக்க வேண்டும்.

சிறுநீரக நோய் அறிகுறி:

இந்நோயின் அறிகுறி எவ்வாறு தெரிகிறது என்றால், பாதத்தில் ஒரு வீக்கம், கிராமங்களில் சாதாரணமான ஒரு வீக்கத்தை சுழுக்கு, இரத்தக்கட்டு என்று சொல்லக்கூடிய தன்மையைத்தான் நாம் அங்கு பார்க்க முடிகிறது. ஆனால் அதற்கான பரிசோதனை செய்து பார்த்தால்தான் அவர்களுடைய சிறுநீரகம் எந்த அளவிற்குச் செயல்படுகிறது?, எந்த அளவிற்கு செயல்படவில்லை? என்பதைச் சொல்லமுடியும்.

பாத வீக்கம், மூச்சுவாங்குகிறது என்று ஒரு சில கிராமங்களில் சாதாரணமாக இருப்பார்கள். மூச்சுவாங்குவது சிறுநீரக வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். அதேபோல் சிறுநீரகம் கடுத்துப்போகக்கூடிய தன்மையும் சிறுநீரக வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். அடிக்கடி வரக்கூடிய சிறுநீரகம், இதுவும் சிறுநீரகவியாதியின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரக செயலிழப்பு என்பது நிரந்தர சிறுநீரக செயலிழப்பு, தற்காலிக சிறுநீரக செயலிழப்பு என்று இரண்டு வகை இருக்கிறது. இன்னும் சில நேரங்களில் சிறுநீரகத்தில் உண்டாகக்கூடிய கல் கூட அந்த மாதிரியான பிரச்சனை உண்டாக்கக்கூடிய சிறுநீரக செயலிழப்புக்குப் போகக்கூடிய தன்மை வந்துவிடும். எனவே விழிப்போடும், விழிப்புணர்வோடும் இருக்கவேண்டும். உணவுகளை முழுமையாகத் தேர்ந்தெடுத்து எடுக்கும்பொழுதுதான் கண்டிப்பாக சிறுநீரக வியாதியிலிருந்து நம்மை முழுமையாக பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

சிறுநீரக வியாதியானது வீக்கமோ, அடிக்கடி சிறுநீரகம் போகக்கூடிய தன்மை இதெல்லாம் இருக்கிறது என்றால் ஒவ்வொரு தனிமனிதனும் தனிவிழிப்புணர்வு அடிப்படையில் சில பரிசோதனை செய்து பார்க்கவேண்டும். இரத்தத்தில் இருக்கக்கூடிய யூரியா அளவு எவ்வளவு இருக்கிறது, இரத்தத்தில் கிரியாட்டின் என்று சொல்லக்கூடிய பொருள் எவ்வளவு இருக்கிறது, அதேபோல் சிறிநீரக பாதிப்பு ஏதாவது இருக்கிறதா? என்று சிறுநீரை 24 மணிநேரம் பரிசோதனை எடுத்து அதனடிப்படையில் ஏதாவது நோய்கள் இருக்கிறதா? என்று பார்த்து சிறுநீரகத்தை முழுமைப்படுத்த வேண்டிய ஒவ்வொரு பொறுப்பை நாமே பார்த்துக்கொள்ளவேண்டும்.

இதில் ஒரு விசேசம் என்ன என்றால், நம்முடைய உணவுப்பழக்கவழக்கமே நம் சிறுநீரகத்தைக் கெடுக்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது. கிராமங்களில் கூட இட்லி, தோசை இல்லாத வீட்டை நாம் பார்க்கமுடியாது. அதாவது அமில உணவுகள் அதிகமாகச் சாப்பிட்டால் கண்டிப்பாக சிறுநீரக வியாதி வரும். அமில உணவுகள் என்றால் புளித்த மாவில் செய்யக்கூடிய இட்லி, தோசை, இடியாப்பம் இந்த மாதிரி உணவுகள் எல்லாமே அமில உணவுகளாக வரும். எனவே அமில உணவுகளை குறைத்துக்கொண்டு ஓரளவிற்கு பழ உணவுகள், கீரை இந்த மாதிரியான உணவுகளை எடுக்கும்பொழுது சிறுநீரகத்தை நன்றாக வலுப்படுத்தமுடியும்.

நெருஞ்சி:

நம் தமிழ்மரபில் சித்தமருத்துவத்தில் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால், நெறியைப்படைத்தான் நெரிஞ்சல் படைத்தான் என்று கூறுகிறார் அதாவது ஒரு மனிதன் தனக்கு இளமை இருக்கும்பொழுது கண்டபடியெல்லாம் ஆடி, போதையில் தள்ளாடி மற்றும் வேறு சில பழக்கவழக்கங்களில் தள்ளாடி, காமத்தில் அதிகமாக உழன்று, அதாவது நம் பாரம்பரிய வாழ்க்கையில் உள்ள ஒழுக்கங்களை எல்லாம் மறந்து, நம்  பண்பாடே இல்லாமல் வாழ்ந்து கடைசியில் நோயுடன் இருக்கும்பொழுது அந்த மனிதனை முழுமையாகச் சரிசெய்யக்கூடிய தன்மை நெருஞ்சிக்கு உண்டு என்று திருமூலர் சொல்லுவார். அதனால் தான் நெறியைப் படைத்தான் நெருஞ்சிலைப் படைத்தான் என்கிறார்.

இந்த நெருஞ்சியின் தன்மை என்னவென்றால் முழுக்க முழுக்க சிறுநீரகத்தை வலுப்படுத்தக்கூடிய தன்மை இந்த நெருஞ்சிலுக்கு உண்டு. ஆக சிறுநீரக வியாதியால் அவதிப்படுகிறவர்கள், சிறுநீரில் கல் இருப்பவர்கள், சிறுநீரகத்தில் யூரியா அளவு அதிகமாக இருப்பது, கிரையாட்டின் அளவு அதிகமாக இருப்பது இவற்றுக்கெல்லாம் கண்டிப்பாக நெரிஞ்சில்லை சாப்பிட்டாலே சரியாகிவிடும். ஆக நெறி பிரண்டு போனவர்களை மறுபடியும் நெறிமுறைப்படுத்தக்கூடிய தன்மை நெருஞ்சிலுக்கு உண்டு. நெருஞ்சிலைப் பாலில் நன்றாக வேகவைத்து, காயவைத்துப், பொடிசெய்து காலையில் ஒரு சிட்டிகை 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தோம் என்றால் சிறுநீரக வியாதி முழுமையாகச் சரியாகக்கூடிய வாய்ப்பு உண்டு.

சிறுபீளை :

அதே போல் சிறுபீழை, இதைக் கிராமங்களில் சிறுகன்பீளை என்று கூறுவார்கள். பொங்கல் தினத்தன்று சிறுபீளைப்பூ மற்றும் மாவிலையுடன் காப்புக்கட்டக்கூடிய பழக்கம் உண்டு. அந்த சிறுபீழை வேரெடுத்து அதை நன்றாக கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிடும்பொழுது, கண்டிப்பாக சிறுநீரக வியாதிகள் சரியாகும். அதேபோல் புணர்னவா என்று சொல்லக்கூடிய சாரணைவேர். இவ்வேர் மற்றும் சோம்பு, மஞ்சள் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்துச் சாப்பிடும்பொழுது கண்டிப்பாகச் சிறுநீரக வியாதி சரியாகும். இன்னும் சிலநேரங்களில் ஆயுர்வேத மருந்துகளிலே சந்தனம் கலந்து செய்யக்கூடிய சில மருந்துகள் , சித்த மருந்துகளிலே சந்தனம் கலந்து செய்யக்கூடிய சில மருந்துகள் எல்லாமே மிகச்சிறந்த பலன் தரக்கூடிய அற்புதமான மருந்துகள்.

மருதம்பட்டை

ஆகையால் சிறுநீரக கோளாறு வந்துவிட்டது என்ற கவலை இல்லாமல் ஒரு விழிப்புணர்வோடு யோசித்துப்பார்க்கும் பொழுது மறுபடியும் அந்த நோயிலிருந்து மீளக்கூடிய தன்மை நமக்கு  கண்டிப்பாக வரும். அதே நேரத்தில் மருதம்பட்டை என்பது சிறுநீரகத்தை வலுப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான பட்டை. நல்ல துவர்ப்புத் தன்மை உள்ளது. ஆக இந்த மருதம்பட்டையை ஒன்று, இரண்டாக இடித்து கொதிக்கவைத்து கசாயமிட்டு கூடவே சிறிது சர்க்கரை சேர்த்துத் தினசரி இரண்டு வேளை டீ,காபிக்கு மாற்றாகத் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தால் சிறுநீரகம் முழுமையாக சரியாகும்.

ஒரு சிலருக்கு இரண்டு சிறுநீரகங்களை சுற்றிலும் நன்றாக நீர் கோர்த்திருக்கும். அதை ஹைட்ரோ நெப்ரோசிஸ் என்று சொல்வார்கள். அதாவது நீரால் சூழப்பட்ட ஒரு சிறுநீரக வியாதி. அப்படி இருப்பவர்களுக்கு முதுகு பகுதியில் கடுமையான வலி இருக்கும்,வேதனை இருக்கும். சிறுநீர் கழிக்கும்பொழுது வலி வரலாம், சில நேரங்களில் வாந்தி இருக்கலாம், சில நேரங்களில் காய்ச்சல் வரலாம். இந்த மாதிரியான சிக்கல்கள் இருக்கும்பொழுது கண்டிப்பாக மருதம்பட்டை சாப்பிடும்பொழுது முழுமையான பலன் கிடைக்கும்.

உணவுக் கட்டுப்பாடு:

இதுமட்டுமல்லாமல் சில உணவுக்கட்டுப்பாடையும் தொடர்ந்து சிறுநீரக வியாதி உள்ளவர்கள்  கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும். பிரதானமாகப் பார்க்கும்பொழுது நாம் சொன்ன அமிலஉணவுகளை முடிந்தவரை குறைக்கலாம். முடியாத பட்சத்தில் இரண்டு இட்லி, சிறிதளவு இடியாப்பம் இந்தமாதிரி எடுத்துக்கொள்ளலாம், ரவா உப்புமா மாதிரி சாப்பிடலாம், களி எடுத்துக்கொள்ளலாம், ரொட்டியை சுட்டு சாப்பிடுவது, நொய்யரிசி கஞ்சி செய்து சாப்பிடுவது, காய்கறிகளை அரைப்பதத்தில் வேகவைத்துச் சாப்பிடுவது, பழங்களில் ஆப்பில், அண்ணாசி, கொய்யா, பப்பாளி, பேரிக்காய் இதெல்லாம் நீங்கள் தொடர்ந்து சாப்பிடலாம்.

ஏன் என்றால் நான்சொன்ன இந்த பழங்களில் பொட்டாசியம் சத்து குறைவாக இருக்கிறது. அதிக பொட்டாசியம் இருக்கக்கூடிய உணவுகளைக் கண்டிப்பாகக் குறைக்கவேண்டும். அதிக அளவு உப்புச்சத்து இருக்கக்கூடிய உணவுகளை முழுமையாகக் குறைக்கவேண்டும். தினசரி ஒருவேளை சிறிது பழ உணவுகளைச் சாப்பிடும்பொழுது சிறுநீரக வியாதி இல்லாமல் பாதுகாத்துக்கொள்ளமுடியும். சிறுநீரக வியாதியுடன் தொடர்புடைய நோய் யூரினரி டிராக் பாதிப்பு.  இந்த நோய் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு, உணவின் அளவை குறைவாக எடுத்துக்கொண்டு உழைப்பின் அளவை அதிகமாக கொடுப்பவர்களுக்கெல்லாம் இந்த பாதிப்பு வரும்.

கற்றாழை:

கிராமங்களில் பார்த்தீர்கள் என்றால் கற்றாழையை அரிசி கழுவிய தண்ணீரில்  பனைவெல்லம் போட்டு சாப்பிடக்கூடிய சூழல் நிறைய கிராமங்களில் உண்டு. அதெல்லாம் தொடர்ந்து எடுக்கவேண்டும். பண்டைய உணவு முறைகளில் இருந்து மாறாமல் அந்த உணவு முறைகளை அவ்வாறே பின்பற்றிக்கொண்டு நல்ல உடல் உழைப்பையும் கொடுத்துக்கொண்டு கிராமப்புறங்களில் இயற்கையுடன் இயைந்த ஒரு வாழ்க்கைச் சூழல் அமைந்துள்ளது. நகர்புறம் சார்ந்த ஒரு வாழ்க்கைச்சூழலை கிராமங்களில் கொண்டுவரும்பொழுது கண்டிப்பாக பல்வேறு வியாதிகள் வருகிறது. அதேபோல் கொடுமையான வியாதி எது?, சாதாரண வியாதி எது? இதெல்லாம் யோசித்துப்பார்க்கக்கூடிய ஒரு மனோபக்குவம், கல்வி அறிவு, சூழல் எல்லாமே கிராமங்களிலும் வரவேண்டும். ஏன் என்றால் விவசாயம் சார்ந்த நாட்டில்தான் நாம் இருக்கிறோம். ஆகையால் கிராமங்களில் மறுபடியும் விவசாயம் தழைக்கவேண்டும், ஆரோக்கியமும் தழைக்கவேண்டும். ஒவ்வொரு வீடுகளையும் பார்க்கும்பொழுது பல்வேறு நோயாளிகளை நாம் பார்க்க முடிகிறது. சாதாரணமாகப் பல நபர்கள் உட்காரக்கூடிய இடங்களில் கூட உனக்குச் சர்க்கரை எவ்வளவு இருக்கிறது? எனக்கு இவ்வளவு இருக்கிறது. உனக்கு இரத்தஅழுத்தம் எவ்வளவு இருக்கிறது? எனக்கு இவ்வளவு இருக்கிறது என்று நகர்ப்புற நோய்களை பேசிக்களிக்கக்கூடிய தன்மை கிராமங்களில் வந்திருப்பதால், உழைப்பை கிராமங்களில் இருந்து கொண்டுவந்துதான் நாட்டுக்கான நன்மையாக மாற்றமுடியும்.

உழவர்:

உழைக்கின்ற இனமே நோயாகிப்போய்விட்டது என்றால் கண்டிப்பாக நாம் வளரும் நாடாகக்கூட வரமுடியாது. அந்த அளவிற்கு நோயால் ஏழ்மையான நாடாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே அதெல்லாம் இல்லாத தன்னிலை மேம்பாடு, தனிமனித மேம்பாடு நமக்கு நாமே பண்ணிக்கொள்வதுதான் நாம் நாட்டுக்கு நாம் செய்கின்ற நல்ல ஒரு விசயமாக இருக்கும். ஏனென்றால் நோய் இல்லாத ஒரு சமுதாயம் அமையும் பொழுதுதான் அதற்கு அடுத்தநிலை ஆரோக்கியமான அரசியலுக்கு அதுதான் அஸ்திவாரமாக இருக்கும்.

நோய் உள்ளவர்கள் ஆழும்பொழுது கண்டிப்பாக பசி, பிணி, சாக்காடு எல்லாமே வந்துகொண்டுதான் இருக்கும். அந்தத் தன்மை இல்லாத அளவிற்கு நம்முடைய உணர்வு உறுப்புகள், ராஜ உறுப்புகள் என்று சொல்லக்கூடிய மூளை, இதயம், கல்லீரல், சிறுநீரகம் இவைகளை நன்றாக வலுப்படுத்தி ஒரு வளமான வாழ்க்கையை கண்டிப்பாக வாழ்வோம். உங்களுடைய சிறுநீரகத்தைக் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது. அதனால் நமக்கு நாமே தடுப்புமுறைகளை உபயோகப்படுத்தி சித்தர்கள் கூறிய மருந்துகள் எல்லாவற்றையும் முழுமையாகப் பயன்படுத்தி உணவு சார்ந்த நல்ல ஒரு விழிப்புணர்வைப் பெற்று வரும் காலங்களில் சிறுநீரகம் சிதையாத ஒரு தமிழகத்தை உருவாக்குவோம் வாருங்கள்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,

15 வது செக்டார், கே.கே.நகர்,

சென்னை – 78

அலை பேசி: 98840 76667

Case, d and marshall, j between deep and write my paper for cheap surface procedural approaches to learning in engineering education contexts, studies in higher education,

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக கிராமங்களைச் சீரழிக்கும் சிறுநீரக நோய்”

அதிகம் படித்தது