தமிழக சட்ட ஒழுங்கு
ஆச்சாரிDec 15, 2012
சென்னை நகரின் பிரதான குடியிருப்புப் பகுதி அது. சுமார் பதினைந்து பேர் கையில் இரும்பு குழாய்கள், கம்புகளுடன் சர்வசாதாரணமாக அந்த போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்து வருகிறார்கள். மாலை நேரமாதலால், பள்ளி சென்று திரும்பும் மாணவ, மாணவியர், கல்லூரி முடிந்து வீடு செல்வோர் என அந்த சாலை, மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அப்போது, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் வரும் காட்சிபோல, அந்த பதினைந்து பேர் கொண்ட ரவுடிக் கூட்டம் அச்சாலையில் இருக்கும் ஒரு மதுபானக்கடையில் நுழைந்து கண்ணாடி மற்றும் நாற்காலி மேஜைகளை அடித்து நொறுக்குகிறது. அதைத் தட்டிக் கேட்ட ஒரு வாடிக்கையாளரை இரும்பு கம்பிகளாலும், உருட்டுக்கட்டைகளாலும் கொடூரமாக தாக்கிக் கொலை செய்கிறது. பின்பு ஏதோ, வேலை முடிந்து வீட்டுக்கு செல்பவர்களைப் போல, தங்களுக்குள் சிரித்து பேசியவாறு வந்தவழியே அந்த கும்பல் மெதுவாக நடந்து சென்று மறைகிறது. மதுக்கடை (Bar) ஏலப் பிரச்சினையில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலைக்குச் சாட்சியமாய், அச்சாலை நெடுகிலும் நெஞ்சம் உறைந்து போய் பார்க்கும் மக்கள் வெள்ளம்.
என்ன நடக்கிறது தமிழ் நாட்டில்? எங்கள் ஆட்சி வந்தால் சட்ட ஒழுங்கில் முழுக் கவனம் செலுத்தப்படும். ரவுடிகள் அடக்கி ஒடுக்கப்படுவர். கொள்ளையர்கள் மற்ற மாநிலங்களுக்கு ஓடி விடுவர். சாதிக் கலவரங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படும். அப்படி இப்படி என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தமிழக முதல்வர் இப்போது என்ன சாக்கு சொல்லப்போகிறார்?
வருடம்தோறும் தேவர் குருபூஜையின் போது நடக்கும் சாதிக் கலவரங்கள் இப்போதும் நடந்து முடிந்திருக்கின்றன. வழி தவறி தலித் மக்கள் அதிகம் வசிக்கும் ஊருக்குள் சென்றவர்களை கல்லால் அடித்து கொண்டிருக்கின்றனர். தர்மபுரியில் தலித் சமுதாயக் கிராமங்கள் வேற்று சாதிக் கூட்டத்தால் முற்றிலுமாக தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் வடலூரில் 250 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒரு தலித் காலனியில் நள்ளிரவில் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தியதில் எட்டு பேர் படுகாயம் என்று முடிவில்லாத சாதிக்கலவரங்கள் குற்றப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இதுமட்டுமல்ல. சென்றமுறை, இதே அதிமுக ஆட்சியின் போது பேச்சுரிமை கூட மறுக்கப்பட்டு, தீவிரவாதியை போல் சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஏராளம். ஆனால், இந்த முறையோ, சர்வ சாதாரணமாக, எதற்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம், மறியல் செய்யலாம், போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கலாம் என்ற நிலைமையே உள்ளது. மாநில தலைநகரத்தின் முக்கியச் சாலையான அண்ணா சாலை இப்போது போராட்டம் நடத்தவும், மறியல் செய்யவும் ஏதுவான இடமாக அறியப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒரு திரைப்படத்திற்கு எதிர்ப்பா? சீனா திபெத் பிரச்சனையா? எதுவாக இருந்தாலும் அண்ணா சாலையே போராட்டக்களம். போக்குவரத்தை முடக்கினால், போராட்டம் வெற்றி.
ஒரு காலத்தில் தமிழ் நாடு காவல்துறையை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் “ஸ்காட்லான்ட் யார்ட்” காவல் துறைக்கு இணையாக சொல்வார்கள். மேற்கத்திய நாடுகளில் செயல்படும் காவல்துறையினர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, குற்றப் புலனாய்வு செய்வதில் வல்லவர்கள். ஆனால், நமது காவல் துறையோ, முழுவதும் தொழில் நுட்பத்தைச் சாராமல் மூளைத்திறன் அடிப்படையில் குற்றங்களை அணுகி, குற்றவாளிகளைக் கண்டறிவதில் மிகுந்த சாமர்த்தியசாலிகள் என்று இன்டர்போல் அதிகாரிகள் சிலாகித்துச் சொன்னதாக, இண்டர்போலில் உயர்பதவி வகித்த தமிழ் நாட்டைச் சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரி
திரு. இராதா கிருஷ்ணன் கூறுகிறார்.
ஆனால், இப்படி, புகழ்பெற்ற தமிழகக் காவல் துறை, திராவிட கட்சிகளின் ஆட்சியில், அவர்களது கைப்பாவையாக சிக்கிக்கொண்டு தவிக்கிறது. ஆளும் கட்சிக்கு தகுந்த ஒத்துழைப்பு தருபவரே தமிழக காவல்துறை தலைவராக வரமுடியும் என்ற நிலைமை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது..
சாதிக் கலவரங்கள் மற்றும் பதட்டமான பிரச்சனைகளை தீர்ப்பதில் கைதேர்ந்த, திறமை வாய்ந்த பல காவல்துறை அதிகாரிகள், காத்திருப்போர் பட்டியலிலும், அதிகாரமில்லாத சாதாரண பதவிகளிலும் உள்ளனர் என்பது கசப்பான உண்மை.
காவல்துறையினரின் திறமையின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக, வேளச்சேரியில் நடந்த வங்கி கொள்ளையர் கொலையை (Encounter) சொல்லலாம். வீட்டிற்க்குள் இருந்து போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர்களில், ஒருவரையாவது புத்திசாலித்தனமாக, காவல் துறையினர் உயிரோடு பிடித்திருந்தால், அந்த வழக்கு விசாரணையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கும். இப்போது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதால், வழக்கு அனேகமாக முடிக்கப்பட்டு விட்டது என்றே சொல்லலாம்.
உளவுத்துறை என்ற அமைப்பு தமிழ் நாட்டில் செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. மின்வெட்டுப் பிரச்சனையில், மக்கள் எந்த மனநிலையில் உள்ளனர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியின் நிலை என்ன? போன்ற விசயங்களில் கவனம் செலுத்துவதிலேயே உளவுத்துறைக்கு நேரம் போதவில்லை. முதல்வரின் தோழியின் குடும்ப உறவுகளை உளவு பார்ப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்ளும் உளவுத்துறையினர், சாதி, மத மோதல்கள் அடிக்கடி நடைபெறும் மாவட்டங்களில் மக்களின் மனநிலையை ஆராய்ந்து, கலவரம் நடக்காமல் பார்த்துக்கொள்ளவும் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொள்வது நல்லது.
அதிமுக ஆட்சியில் காவல்துறைக்கு “இன்னோவா” போன்ற அதி நவீன சொகுசு கார்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் பவுசாக வந்து காய்கறிக் கடைகளிலும், தெருவோரக் கடைகளிலும் கையூட்டு பெறும் போலீசாரை நினைத்தால், மனதில் வெறுப்பு உண்டாகிறது. சென்னையில், ஒருவர் வீடு கட்ட ஆரம்பித்தாலே போதும், மணல் மற்றும் இரும்பு கம்பிகளை தெருவில் போட்டு இடையூறு செய்வதாக கூறி, சாதாரண போலீஸ்காரர் முதல் இன்ஸ்பெக்டர் வரை வெவ்வேறு வாகனங்களில் வந்து, வாய் இளித்தோ, தலை சொரிந்தோ, பயம் காட்டியோ பணம் வாங்கி செல்வதை தினமும் பார்க்க முடிகிறது. இது தவிர, அந்தந்த பகுதி மாநகராட்சி உறுப்பினர்(counselor)க்கு தனியாக பணம் பட்டுவாடா செய்யப்படவேண்டும்.
கடந்த திமுக ஆட்சியின் போது நடந்து வந்த கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும் இந்த அதிமுக ஆட்சியிலும் எந்த குறையுமில்லை. மாறாக, குற்றங்கள் அதிகரித்துள்ளன. தனிப்பட்ட, முன்விரோதம் காரணமாக நடைபெறும் கொலைகள் அனைத்தையும் தடுக்க யாராலும் முடியாது. அதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், கொள்ளைகள், நாள்தோறும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. முத்தூட் நகை அடகு கடைகள் வரிசையாக கொள்ளையிடப்பட்டது, பிறமாவட்டங்களில் இருந்து சென்னை வந்து தங்க கட்டிகள், நகைகள் வாங்கும் நகைக்கடை நபர்கள் மீது குறிவைத்து தாக்கப்பட்டு, பெரும் பணம் மற்றும் நகைகள் தொடர்ச்சியாக கொள்ளைபோவது வாரம் ஒரு முறை நடக்கும் சம்பிரதாய நிகழ்வாகிவிட்டது. இந்த கொள்ளைகளை சில்லறை திருடர்கள் செய்யமாட்டார்கள். கைதேர்ந்தவர்கள், பழைய குற்றவாளிகள் போன்றோரே இத்தகையச் செயல்களில் ஈடுபடுவர். இவர்களை கண்டறிந்து, கட்டுபடுத்துவது, போலிசாரின் கடமை. ஆனால், இதில், இன்னும் காவல் துறை விழித்துக் கொண்டதாக தெரியவில்லை.
கடந்த வாரத்தில், சென்னை காவல் துறை தலைவர், சென்னை போலீசாருக்கு ஒத்திகை ஒன்றை, அவர்களுக்கு தெரியாமல் நடத்தினார். நான்கு தீவிரவாதிகள் சென்னை நகருக்குள் ஊடுருவி விட்டதாகவும், அவர்கள் சென்னை நகரில் அலைந்து திரிந்து கொண்டு இருப்பதாகவும் உடனே அவர்களை கைது செய்யும் படியும் உத்திரவிட்டார். அவர் கொடுத்த துப்புகளின் அடிப்படையில் தேடுதல் வேட்டை துவங்கியது. என்ன ஆச்சர்யம்? அந்த நான்கு தீவிரவாதிகளையும், சென்னை போலீசார் வெவ்வேறு இடங்களில் நடத்திய தீவிரச் சோதனையில் கைது செய்தனர்.
இத்தனைக்கும், அந்த போலித் தீவிரவாதிகள், வாகனங்கள் எதையும் பயன்படுத்தாமல், கால்நடையாகவே நடந்து திரிந்துள்ளனர். சென்னை போலீசார் கடும் முயற்சி எடுத்து அவர்களை பிடித்துள்ளனர்.
இந்த ஒத்திகைபற்றி ஒரு காவல் துறை உயர் அதிகாரி கூறும்போது, இன்னும் குறைந்த பட்சம் 15000 போலீசார் பணி நியமனம் செய்யப்பட்டால் மட்டுமே, ரோந்து, போக்குவரத்து சோதனை, சட்டம் ஒழுங்கு போன்ற பணிகளில் அவர்களை ஈடுபடுத்தி, பெருமளவு குற்றங்களை குறைக்கமுடியும் என்றார்.
இதிலிருந்து, தெளிவாக தெரிவது யாதெனில், தேவையான எண்ணிக்கையில் போலீசார் இருந்து, அவர்களை அரசியல் தலையீடு இல்லாமல், சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால், நிச்சயம் அவர்களால் பணியை திறம்பட செய்ய முடியும்.
பொதுவாகவே, அதிமுக ஆட்சியில் காவல் துறையினர் சுதந்திரமாகவும், தைரியமாகவும் துடிப்புடன் செயல்படுவர் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இம்முறை, அந்த சந்தர்ப்பத்தை காவல்துறையினருக்கு தமிழக முதல்வர் வழங்கவில்லை போலிருக்கிறது.
ஏனெனில், இப்போது தமிழகத்தில் நடக்கும் ஆட்சி வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை. முதல்வருக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைதான மர்மம் இதுவரை யூகங்களுக்கு தான் இடம் அளித்துள்ளன. இதில் யாருக்கும் தெளிவு இல்லை. எதற்காக கைதுகள் நடைபெறுகின்றன என்பதில் குற்றப் புலனாய்வு இதழ்கள் கூறும் கதைகளையே மக்கள் நம்பத் தலைப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் மட்டும் அல்ல, காவல் துறையினரும் மிகவும் குழம்பி போய் இருக்கின்றனர். நாளை சூழ்நிலை எப்படி மாறுமோ, தங்கள் மேல் என்னென்ன நடவடிக்கை வருமோ என்ற அவர்களது பயம், வேலையில் முழுக் கவனம் செலுத்துவதைச் சிதற வைக்கிறது. காவல் துறை ஆட்சி செய்வோரின் ஏவல் துறையாக மாறி நெடுங்காலம் ஆகிவிட்டாலும், இந்த ஆட்சியில் காவல் துறையினரின் நடவடிக்கைகள் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை.
ஆட்சியாளர்கள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்தே ஒவ்வொரு முறையும் வாக்களிக்கின்றனர். தனது முடிவு தவறு என்றால், அதை மாற்றிக்கொள்ள வாக்காளர்கள் எப்போதும் தவறுவதில்லை. மின்வெட்டு முதல் சட்ட ஒழுங்கு வரை அனைத்தையும் சாதாரண பொது மக்கள் கவனித்தே வந்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்களது எதிர்பார்ப்பு, இவற்றிலிருந்து எப்படி மீள்வது என்பதே. இதை இந்த ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக சட்ட ஒழுங்கு”