மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக மாணவச்செல்வங்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஆச்சாரி

Mar 15, 2014

அன்பிற்குரிய மாணவச்செல்வங்களுக்கு, வணக்கம்!

இன்றைய தமிழர்கள் சமூகஅளவில் சந்தித்துக்கொண்டிருக்கும் அவலங்களை கண்டு வெகுண்டு எழுந்து போராடி செயற்கரும் செயல்களையும் தியாகங்களையும் செய்யும் நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாகவும் வளமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்.

 

அமெரிக்கா ஒரு சுயநலம் கொண்ட  நாடு என்பது நம் தமிழகத்தில் தவழும் குழந்தைக்கு கூட தெரியும். அமெரிக்காவுடன் நட்புடன் இருக்கும் நாடுகள் கூட அந்த நாட்டின் மக்கள் அமெரிக்காவின் அரசியல் மற்றும் வெளியுறவு கொள்கைகளை பார்த்து ஒரு தன்னலம் மட்டுமே கருதும்  நாடு என்ற கருத்தையே கொண்டுள்ளனர். இது உலகம் தழுவிய கருத்து. ஆனால்  அமெரிக்க இப்பொழுது கொண்டுவந்த தீர்மானம் நெருக்கடியில் உள்ள நமக்கு சிறிய வெளிச்சம் என்று தான் கூறமுடியும். இந்த தீர்மானத்தை எந்த தமிழ் அமைப்பும் அப்படியே ஏற்கவில்லை. இது குறைப்பாடு உள்ள தீர்மானம் என்பதில் அனைவருக்கும் மாற்று கருத்தும் இல்லை. இந்த தீர்மானத்தை அனைவரும் எதிர்க்கின்றனர். நமக்குள் உள்ள கருத்து வேறுபாடு எதிர்ப்பதில் இல்லை. அதை எதிர்க்கும் வழிமுறையில் தான் உள்ளது. அதன் படி இந்த தீர்மானத்தை எப்படி நாம் எதிர்த்திருந்தால் நலம் என்பதை கூற விரும்புகிறேன்.

1. இந்த தீர்மானத்தை அமெரிக்க வெளியிட்டவுடன் மாணவர்கள்ஒன்று கூடி மிகபெரிய திரளாக சென்று தமிழக முதல்வரிடம் இந்த தீர்மானத்தை வலிமைஅடைய செய்யவேண்டும் என்று ஒரு கோரிக்கையை கொடுத்திருக்கலாம். மற்றும் அவரை அமெரிக்க தூதரகத்தில் நேரிடையாக சென்று இந்த கோரிக்கையை வைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கலாம். தமிழக அரசியல் சூழ்நிலையையும் இன்றைய இளைஞர்களின் நாடிகளையும் நன்கு அறிந்த முதல்வர் கண்டிப்பாக இதற்கு இசைந்திருப்பார். அதுவும் தேர்தல் நெருங்கும் இந்த வேலை முதல்வர் இதை தயங்காமல் செய்திருப்பார்.

2. இத்துடன் தமிழக முதல்வரை ஒபாமாவுக்கு நேரிடையாக கடிதம் எழுதவும் அழுத்தம் கொடுத்திருக்கலாம். 6 கோடி மக்கள் கொண்ட தமிழகத்தின் முதல்வர் கொடுக்கும் கோரிக்கை கண்டிப்பாக ஒபாமாவிடம் செல்ல வாய்ப்புகள் உள்ளது.

3. மாணவர்களும் பெருந்திரளாக முதல்வருக்கு ஆதரவாக அமெரிக்க தூதரகத்தில் சென்று தங்கள் மனுவை கொடுத்திருக்கலாம்.

4. இதே மனுவை இந்திய அரசிடமும் கொடுக்க சொல்லி முதல்வரை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கவேண்டும்.

5. இந்த கோரிக்கையில் குறிப்பிட்ட சில நாட்குளுக்குள் அமெரிக்க அரசு தங்கள் பதிலை கொடுக்குமாறும் கோரிக்கை வைத்திருக்கவேண்டும்.

6 குறிப்பிட்ட அந்த தினத்தில் அமெரிக்க அரசு செவி சாய்க்காத பட்சத்தில் மாணவர்கள் அந்த போராட்டத்தை சற்று அழுத்தம் கொடுத்து சென்னை அமெரிக்க தூதரகத்தின் முன் பெரிய போரட்டத்தை செய்து நெருக்கடியை கொடுக்கலாம்.

7. மேலே சொன்ன எவையும் வேலை செய்யாத பட்சத்தில் அமெரிக்க அரசின் தீர்மானத்தை எதிர்த்து போராடுவதில் நிச்சயம் தவறில்லை.

மேலே சொல்லிய அனைத்தும் நடக்க வழியில்லை எனவே போராட்டம்தான் தீர்வு என்பவர்களுக்கு. அக்காலங்களில் மாமன்னர்கள் போருக்கு வேறு நாட்டின் மீது படை எடுக்கும் பொழுது அவர்கள் சிற்றரசாக இருப்பினும் அவர்கள் உயிர் பலி ஆவதை தடுக்க அவர்களிடம் முதலில் நல்லெண்ண தூது (diplomacy) விடுவார்கள். இதை மறுப்பவரிடம் மட்டுமே போர் செயவ்வார்கள். போர் நடக்கும் சூழலிலும் தங்கள் வெற்றி பெரும் சூழல் அதிகம் இருப்பினும் எதரியிடம் மீண்டும் நல்லெண்ண தூது சென்று போர் செய்யாமல் அடிபணிய வைப்பதே போர் தர்மமாக இருந்தது. இது இன்றைய போராட்டத்திருக்கும் பொருந்தும். போராட்டத்தில் நல்லெண்ண தூது என்பது மிகவும் முக்கியம். ஒரு போராட்டம் துவங்கும் முன் கோரிக்கை அனுப்புவதும், பின்பு  நல்லெண்ண தூது அனுப்புவதும், பின்பு ஒரு அடையாள போராட்டம் பேரணி நடுத்துவதும், இவை யாவும் வேலை செய்யாத சூழலில் கடுமையான போராட்டத்தில் குதிப்பதும் தான் போராட்ட தர்மம். இப்படி படிப்படியான வழியில் போராட்ட இலக்கணத்தை வகுத்து செல்வதே அறிவார்ந்த செயல். இதற்காக அரசியல் அறிவியலையோ (Political Science) சர்வதேச அரசியலோ நாம் படிக்கத் தேவை இல்லை. நம் தமிழ் நாட்டில் வாழ்ந்த அறிஞர் அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் வரலாற்றை புரட்டினாலே போதும்.

இங்கு என்ன நடந்தது? சில மாணவர்கள் அமெரிக்க தூதுவரிடம் சென்று மனு கொடுத்தது வரவேற்கதக்கது. ஆனால் அவர்களுக்கு 48 மணி நேரம் கொடுத்து பதில் அளிக்கவேண்டும் என்று கூறுவதில் நியாயம் இல்லை. இன்றைய சூழலில் ஆயிரம் தமிழர்கள் போராடி சைதாபேட்டையில் போலீஸ் ஏட்டாக உள்ளவரைக்கூட மிரட்டமுடியாத சூழலில் உள்ளோம். இப்படி இருக்க மீசையை முறுக்கிக் கொண்டு அமெரிக்காவை மிரட்ட நினைப்பது எந்தவகையில் பயனை கொடுக்கும் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

மூவர் தூக்கு வழக்கில் நாம் சட்டரீதியாக, சமூகரீதியாக, அரசியல் ரீதியாக, போராட்ட களத்தில் மட்டுமே போராடியதாக நினைத்துவிடாதீர்கள். இந்த போராட்டத்தின் வெற்றியில் நிறைய நல்லெண்ண தூது (diplomacy) அடங்கியுள்ளது. முன்னால் அரசு அலுவலர்களான ரகோத்தமன், கார்த்திகேயன், நீதிபதி தாமஸ் போன்றவர்கள் கைதிகளுக்கு சாதகமாக கருத்து வெளியிட்டதில் இருந்து நமக்கு ஆதரவாக செயல்பட்ட சில ஊடகங்கள் வரை இதற்காக வேலை செய்த மறைக்கப்பட்ட முகங்கள் நிறைய உள்ளன.

இன்று தமிழகத்தில் நல்ல அரசியல் தலைமை இல்லை, நல்ல அறிவார்ந்து செயல்படும் சமூக தலைவர்களும் நம்மிடம் இல்லை. இங்கு மாணவ செல்வங்களாகிய உங்களின் போராட்டம் தான் சுரங்கத்தின்  முடிவில் தெரியும் ஒரு சிறிய வெளிச்சமாக பார்க்கிறோம். நீங்கள் தான் இந்த தமிழகத்தின் எதிர்காலம். உங்களுக்கென்று ஒரு அறிவார்ந்த தலைவர் வரும் வரையில் எங்களின் சில அறிவுறைகளை பரிசீலித்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு பேரன்போடும் தாழ்மையோடும் கேட்டுக்கொள்கிறோம்.

Being in the know can help parents put a stop to worrisome behaviors before it phonetrackingapps.com becomes a safety risk to your child

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக மாணவச்செல்வங்களுக்கு ஒரு வேண்டுகோள்”

அதிகம் படித்தது