தமிழனின் தலைவிதியை நிர்ணயிக்கும் – தனி மனித வழிபாடு
ஆச்சாரிDec 14, 2013
தமிழகத்தின் நடைமுறைச் சூழலில் எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு மனிதரை, ஏதோ ஒரு வழியில் அகத்தினாலும், புறத்தினாலும் தனி மனித வழிபாட்டை தார்மீகப் பொறுப்பேற்று தனித்தும், குழுவாகவும் இணைந்தும் செயல்பட்டு வருகின்றனர். ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க . . . மாமன்னன் வாழ்க, நின் கொற்றம் வாழ்க என வாழ்த்திய அரச காலம் முதல் இன்று தங்கத்தலைவர் வாழ்க, தானைத்தலைவர் வாழ்க என்று அரசியலிலும், எங்களின் மக்கள் திலகம், சூப்பர்ஸ்டார், உலக நாயகன், சுப்ரீம் ஸ்டார், காதல் மன்னன், தல, இளைய தளபதி என்று திரைத்துறையிலும், எங்களின் குருவே, ஆன்மாவே, சித்தரே என்று ஆன்மீகத் துறையிலும், அதிரடி ஆட்டக்காரர், ரன் குவிக்கும் இயந்திரம் என விளையாட்டுத் துறை வரை தனி மனித வழிபாடு எங்கும் வியாபித்து இருக்கிறது.
இந்த வழிபாட்டை நடத்துகிறவர்களுக்கு விசிறிகள், ரசிகர்கள், தொண்டர்கள், அடியார்கள், கூலிகள், எனப்பல பெயர்கள் உண்டு. இந்த இழிநிலை பிழைப்பு தேவைதானா? சரி ஏன் இவர்கள் இவ்வாறு தனி மனித வழிபாடு நடத்துகிறார்கள்? அவ்வாறு வழிபட வேண்டியதன் அவசியம் என்ன? இந்த தனி மனித வழிபாட்டுக் கலாச்சாரம் எப்போது தோன்றியது? எனப் பல கேள்விகள் மனதிற்குள் ஓடும். வாருங்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பின்வருவனவற்றில் விடை காண்போம்.
வழிபாடு- தோற்றமும் வளர்ச்சியும்:
மனித மனம் ஒரு பலமற்ற கொடியைப் போன்றது. அதனால் தனித்து நிற்கவோ, தன்னியல்பாகச் செயல்படவோ இயலாது. மானசீகமான ஏதாவது ஒன்றைப் (அது தெய்வமாகவோ அல்லது தலைவராகவோ இருக்கலாம்) பற்றிக்கொண்டு படர்ந்து எழுவதே அதன் இயல்பாகும். இத்தகைய மனித மன நிலையின் விளைவுகளே மந்திரம், சடங்கு நம்பிக்கை, வழிபாடு போன்ற புனைவுகள் எனலாம். இவை தம்முள் ஒன்றிணைந்து, உருப்பெற்று வழிபாட்டு மரபாக நாட்டுப்புறச் சமயமாகத் தோற்றம் பெற்று வளர்ந்துள்ளன.
‘வழிபடு’ என்பதிலிருந்து பிறந்தது வழிபாடு என்னும் சொல். வழிபடு என்பதற்கு வணங்குதல், வழியில் செல்லுதல், பின்பற்றுதல், நெறிப்படுத்துதல் என அகராதிகள் பொருள் தருகின்றன. தெய்வங்களை மகிழ்விப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளும், பூசை முறைகளுமே வழிபாடு எனப்படுகிறது.
வழிபாடும் வளர்ச்சியும்:
இயற்கையோடு இணைந்து தொடங்கிய மனித வாழ்வு பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வந்திருப்பதைப் போல், நம்பிக்கை அடிப்படையில் தோன்றிய வழிபாடும் வளர்ந்தே வந்துள்ளது. இயற்கை வழிபாடு தொடங்கி இறை வழிபாடு, தனிமனித வழிபாடு என்றுப் பல்கிப் பெருகி வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு கூறாக இன்று வழிபாடு நின்று நிலைத்துள்ளது.
மனிதனின் அச்ச உணர்வும், குற்ற மனப்பான்மையுமே வழிபாடு தோன்றக் காரணம் எனலாம். இயற்கையானது இடி, மழை, புயலின் வாயிலாக மனிதனுக்கு அச்சமூட்டியது. இதற்கெல்லாம், தான் செய்த குற்றமே, பாவமே காரணம் என்று நம்பிய மனிதன் அவற்றை வணங்கத் தொடங்கினான். அது அவனுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் ஊட்டியது. இதனால் இந்த இயற்கை வழிபாடே மனித இனத்தில், முதல் வழிபாட்டின் தொடக்கமாக அமைந்தது.
இயற்கை சக்திகளை வணங்கியதோடு மட்டுமல்லாது அரசமரம், வேப்பமரம், வேங்கை மரம் என தலைவிருட்சமாகக் கொண்டு இம்மரங்களையும் வணங்கினான். மேலும் போலி உருவ வழிபாடுகளான பறவைகள், விலங்குகள், வேட்டைக் கருவிகள், இசைக்கருவிகள், வேளாண்மைக் கருவிகள், சிலுவை, முன்னோர் பயன்படுத்திய பொருட்கள் என இவற்றையெல்லாம் ஒரு சிலை வடிவத்திலோ அல்லது புகைப்பட வடிவத்திலோ கொண்டு வழிபடத்துவங்கினான். சரி இவைகளைத்தான் மனிதன் வணங்கி வந்திருக்கிறான் என்றால், பின்னாளில் வாழ்ந்து மறைந்த தனது முன்னோர்களையும், தனது, தாய் தந்தைகளைப் போற்றும் வகையில் இவர்களைத் தெய்வமாக நினைத்து வழிபடத்துவங்கினான். இதனால் முன்னோர்கள் ஆவி வடிவத்தில் கூடவே இருந்து வாழ்க்கைக்கு உதவி செய்வதாகவும், துன்பம் வரும்போது உறுதுணையாக இருந்து காப்பதாகவும் நம்பினான்.
இதன் விளைவால் நடுகல் வழிபாடு, சமாதி வழிபாடு, பத்தினிக்கல் வழிபாடு தோன்றியது. இந்த வழிபாடு நம் நாட்டிலும் மட்டுமல்லாது எகிப்து, சீனா, உரோம் போன்ற நாடுகளிலும் இருப்பதாக அறியப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட இயற்கை வழிபாடு, மரவழிபாடு, போலி உருவ வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகிய நான்கும் தொடக்க கால வழிபாடுகளாக இருந்தன.
இந்த வழியில் வழிபட்டு வந்த மனித இனம் தற்கால சூழலில் இன்னும் ஒரு படி மேலே போய் நிகழ்காலத்தில் வாழ்கின்ற மனிதர்களையே கடவுளாக நினைத்து வழிபட்டு வரும் நிலைகளைக் காண முடிகிறது. அவற்றில் கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் சச்சின் தெண்டுல்கர், டோனி, திரைப்படத்துறையில் இருக்கும் தியாகராஜ பாகவதர், சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், கமலஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் குஷ்பூ, சிம்ரன், நயன்தாரா போன்றவர்களும், அரசியலில் அம்மா, கலைஞர், மருத்துவர் ராமதாசு, திருமாவளவன், கேப்டன், சரத்குமார் போன்றவர்களும் இன்னும் பதவி பலம், பணபலம் படைத்த அரசு உயர் அதிகரிகளும், தனியார் நிறுவன உயர் அதிகாரிகளும் இதில் அடக்கம்.
ஏன் இவர்களை வழிபட மனது இந்தப்பாடு படுகிறது? வழிபட என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால் நமக்கு சில விடயங்கள் புலப்படும்.
வழிபடக்காரணம்:
- தன்னை விட அழகாக இருத்தல் (நடிகர்கள்)
- தன்னை விட அதிக செல்வத்தைக் கொண்டிருத்தல்.(நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், ஆன்மீகவாதிகள்)
- தன்னை விட அதிக உடல் பலம் கொண்டிருத்தல்.( விளையாட்டு வீரர்கள், ரவுடிகள் )
- தன்னை விட உயர் பதவி வகித்தல்.( அரசியல்வாதிகள், அரசு அல்லது தனியார் துறையில் உயர் பதவி வகிப்பவர்கள்)
- அனைவருக்கும் அறிவுரை கூறும் அளவிற்கு ஞானம் பெற்றிருத்தல். (ஆன்மீகவாதிகள்)
மேற்கண்ட துறைகளில் பல்வேறு நபர்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சிலரையே நம் மனதிற்கு நெருக்கமாக, தனக்குப் பிடித்தவராக இருப்பார்கள். இவர்களைப் பிடிக்கும் என்பது சாதாரணமானது. ஆனால் அதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் அவர்களுக்காய் எதையும் செய்யத் துணிவதும், சதா நேரமும் அவர்கள் துதி பாபாடியே இருப்பதும் தான் சமூகத்தில் தனி மனிதக் கோளாறாக வடிவம் பெற்று, தன்னைச் சார்ந்து இருப்போரையும் பெரும் அவதிக்குள்ளாக்குகிறது.
மனிதர்களை, மனிதர்கள் ஏன் வணங்குகிறார்கள்:
தனி மனித வழிபாடு என்பது ஒரு உலகப் பொதுமறை. ஆனால் இம்முறை தமிழகத்தில் இருப்பது மிக அசாதாரணமானது. ஒரு தனி மனிதனை மற்றவர்கள் மதிப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன. அதிகாரம், பதவி, பணம் மற்றும் திறமை. மற்றவர்களின் உள்ளத்தைக் கொள்ளையடிக்கும் திறமை இருப்பவர்கள் பெருவாரியான மக்களின் அபிமானத்தைப் பெற்றுவிடுகின்றனர். தமிழகத்தில் அவ்வாறு வெகுஜன ரசிகர்களைக் கொண்டவர்கள் பெரும்பாலும் திரை உலகம், அரசியல், விளையாட்டுத் துறையினைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
பணம் பதவி படைத்த முதலாளிகளின் கால்களில் தொழிலாளிகள் விழுந்து வணங்குவது அவர்களால் தம் வாழ்வில் ஒரு ஏற்றம் வந்துவிடாதா? (நம் அ.தி.மு.க அமைச்சர்கள், தலைவி அவர்கள் கால்களில் விழுவது போல்) என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே கைகூப்பியோ, காலில் விழுந்தோ, சிரம் தாழ்த்தியோ வணங்குவதாகும். பணக்காரர்களால் தனக்கு ஒரு நன்மை கிடைக்கிறது என்றால் வழிபடுவதில் தவறில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இந்தத் தனிமனித வழிபாடு அதிகம் இருப்பது அரசியல், திரைப்படம், விளையாட்டுத் துறையே. இவற்றில் எந்த அளவிற்கு தனிமனித வழிபாடு இருக்கிறதென்று பார்ப்போம்.
நம் அரசியல்:
அரசியல் தலைவர்கள் செய்த தன்னலம் கருதாத சமூகத் தொண்டுகளைக்கண்டு தானே மனமுவந்து அத்தலைவர்களை ஏற்றுக்கொண்ட மக்களே நம் முன்னோர்கள். அது இயல்பானது இயற்கையானது. ஆனால் தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் தன்னை புகழ்ந்து பேசுவதற்கும், தனக்குக் கை தட்டுவதற்கும் தனக்கு கோசம் போடவும், கொடி பிடிக்கவும் பொதுமக்களைப் பணம் கொடுத்துத் தனக்குச் சாதகமாக இயக்கி வருகின்றனர் இக்கால அரசியல் தலைவர்கள். அவ்வாறு வருகின்ற பொதுமக்களுக்குப் பணம், பொருள், பதவி, உணவு, மது என்று தன்னால் முடிந்ததை அந்தந்தக் கட்சிகளின் தலைமைக் குழுவினர்கள் தவறாது செய்து வருகின்றனர்.
இதில் சில தொண்டர்கள் தனது சாதியைச் சேர்ந்த தலைவனைத்தான், தான் ஆதரித்து வளர்த்துவிட வேண்டும் என்ற சுயநல நோக்கோடு வந்து, கட்சிப் பணியாற்றும் நிலைமையும் இங்குள்ளது.
உலக அரசியல் வரலாற்றில் ஓட்டுக்காக இலவசங்களை வாரி வழங்கும் செயல்கள், தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் அதிகம் நிகழவில்லை. இந்த இலவசங்களையும், பணத்தையும், பொருட்களையும் வாங்கிக்கொண்டு, மக்களும் ஓட்டுக்கு விலை போகிறார்கள். இந்த இலவசங்கள் எல்லாம் 5 வருடத்திற்குக் கொள்ளையடிக்க மக்களுக்கு கட்சிகள் அளிக்கும் லஞ்சமே என்பதைத் தவிர இதை நலத்திட்டங்கள் என்று எப்படிக்கூறுவது?.
ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் தேர்தலின் போது ஓட்டுக்கள் வேண்டி மக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு, பின் ஆட்சிக்கட்டில் அமர்ந்தது மக்களிடமே 5 வருடம் லஞ்சம் வாங்கி ஆட்சி நடத்தும் அரசியல் தந்திரத்தை மக்கள் என்று அறிந்து திருந்தப்போகிறார்களோ தெரியவில்லை. அப்படி எவரேனும் இலவசங்களையோ, ஓட்டுக்குக் கொடுக்கும் பணத்தையோ வாங்காமலிருந்தால் அவரை, பிழைக்கத் தெரியாதவன் என்ற முத்திரையை பொதுமக்கள் குத்திவிடத் தயாராக இருக்கின்றனர்.
தர்ணா போராட்டம், மாநாடு, உண்ணாவிரதம், பேரணி, பொதுக்கூட்டம் போன்றவற்றிற்கு எதையும் அறியாமல் கலந்து கொண்டு வரும் மாட்டு மந்தைகளைப் போல் மக்கள் ஆகிவிட்டனர். காசு கொடுத்த கட்சித் தலைவனை கடவுளாக்கி வணங்கும் அவலம் தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் அதிகம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. தான் எவ்வளவு பிற்போக்குத்தனமான செயல்களில் ஈடுபடுகிறோம் என்று மக்கள் விழிக்காதவரை அரசியல் தலைவர்களின் காடுகளில் ஓட்டுமழை பெய்வதை எவரும் தடுக்க முடியாது.
திராவிடக் கட்சியின் செயல்பாடு:
தமிழகத்தை இதுவரை மாறி மாறி திராவிடக் கட்சிகளே ஆண்டு வந்துள்ளன. இதில் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற குறிப்பிடத்தக்க தலைவர்களே தமிழ் நாட்டினை ஆண்டு வந்த கதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த தலைவர்களுக்குள் ஆட்சியைப் பிடிக்க தொண்டர்களைப் படுத்தியபாடு பெரும்பாடாகும். அவர் சரியில்லை, நாங்கள் தான் சிறந்தவர்கள், எங்கள் ஆட்சியே பொற்காலம், முன்னேற்றத்திற்கான திட்டங்கள் எங்கள் ஆட்சி காலத்தில் தான் அதிகம் வகுக்கப்பட்டது, இது ஊழல் ஆட்சி, அப்படி இப்படி என்று மக்களிடம் பேசி தன் வயப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தன் கட்சிக்குள் வாராதவர்களைப் பணம் கொடுத்துத் தன் பக்கம் இழுக்கும் அவலமும் இங்குதான் நிகழ்கிறது.
இந்தத் திராவிட இயக்கங்கள் செய்த அரசியலைப் பார்க்கும் போது அவர்கள் உண்மையில் திராவிட உணர்வு கொண்டவர்களாகவே தெரியவில்லை. ஆனால் அந்த உணர்வுகள் தூண்டப்பட்டு இவர்கள் வெற்றி பெற்றார்கள். தனி மனித உரசல்களின் காரணமாகவே இந்த இயக்கம் இரண்டானது. ஏன் தொண்டர்களே தங்களுக்குள் முட்டிக்கொண்டார்கள். பரம்பரைச் சொத்தில் பிள்ளைகள் பங்கு பெறுவது போல் இவர்கள் பங்கு போட்டனர். அதன் பின்னர் இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் அதனைத் தங்கள் கைக்குள் அடக்கிக் கொண்டனர்.
அரசியல் ரீதியாகவும், திரைப்பட ரீதியாகவும் மக்கள் நல்ல தலைமைப் பண்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறவர்களையே விரும்பி இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் வெற்றி தோல்விகளை சம்பந்தமே இல்லாமல் தன்னுடைய வெற்றி தோல்வியாக நினைக்கிறார்கள் தொண்டர்கள். இது தான் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்குமான உணவுச் சங்கிலி. இதன் காரணமாகவே கலைஞர் வாழ்க, அம்மா வாழ்க என்ற கோசங்கள் எழுந்தன.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது மொத்த தமிழகமும் ஒரு விதமான நெருக்கடி மன நிலையில் இருந்தது. தங்களுடைய இனத்திற்கு ஆபத்து வந்துவிட்ட நேரத்தில் காப்பாற்ற வந்தவர்களாகவே இந்தத் திராவிட இயக்க தலைவர்களைக் கருதினர். அந்த உணர்வில் வந்த இயக்கத்தின் பலத்தினைத்தான் இந்தத் தலைவர்கள் பங்கு போட்டுக் கொண்டனர். அதற்கு மக்கள் மனதில் இருந்த பிம்பம் உதவியாக இருந்தது. இந்தத் திராவிடத் தலைவர்களின் வெற்றி, இந்த மக்களுக்கு ஒரு கனவு சுகத்தை, அதிகாரம் தனது கைக்கு வந்தது போல ஒரு உணர்வினைக் கொடுக்கிறது. அந்த உணர்வையே முதலீடாகக் கொண்டு ஒவ்வொரு தொண்டனும் இன்றுவரை தன் கட்சித்தலைவனை தம்மைக் காக்க வந்த தெய்வமாகக்கருதி வழிபட்டு வருகிறான்.
சாமியார்கள் நிலை:
எதற்கும் பயந்தவர்களாக, வரும் துன்பத்திலிருந்து தன்னை விடுவிக்கத் தெரியாதவர்களாக, அனைத்திற்கும் ஆறுதல் தேடும் மனங்களைக் கொண்ட தமிழர்கள் கடைசியில் வந்து சேருவது இறைவழிபாட்டில் மட்டுமே. இதில் தற்போது ஒரு படி மேலே சென்று, குறி சொல்பவன், கைரேகை பார்ப்பவன், ஜாதகம் கணிப்பவன், கிளி ஜோசியம் பார்ப்பவன், கணிப்பொறியில் ஜாதகம் கூறுபவன், ராசிபலன் கூறுபவன், வெறும் கையில் திருநீரு வரவழைக்கும் வித்தை கற்றவன், சுருக்கமாகச் சொன்னால் காவி உடை அணிந்து தாடி வளர்த்துத் திரியும் மனிதர்களிடமே அதிகம் தஞ்சம் புகுந்து தனக்கு வந்த சோதனைகளைத் தீர்க்க வழி தேடுகின்றனர்.
நமக்கு வரும் துன்பங்கள் காலப்போக்கில் தானே சரியாகிவிடும். காரணம் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது இயற்கை. இந்த உண்மை அறியாதவர்கள், சாமியார்களிடம் சென்று தனது பிரச்சனைகளைக் கூற, இவர்களும் வந்துவிட்டார்களே என்று தனக்குத் தெரிந்த, தெரியாத பரிகாரங்களைக் கூற, வந்தவரும், பரிகாரம் செய்ய இறுதியில் சில காலத்திற்குப் பின் வந்தவரின் பிரச்சனை தானாகவே தீர்ந்து விடுவதால் அந்த சாமியாரிடம் சென்றேன் என் பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று சாமியார் நிறுவனத்திற்கு விளம்பரதாரராக வந்தவர் மாறிவிடுகிறார். காலப்போக்கில் அந்தச் சாமியாரின் புகைப்படமானது மக்களின் பூஜை அறையில் இடம் பெறும். இப்படி நம்மைப் போல் இருக்கும் ஒரு மனிதரை வழிபட, மக்கள் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டனர். இதன் பலன்களை அறுவடை செய்து சுகமாக வாழ்பவர் சாமியார்களே.
கடவுள் இருக்கிறார் என்று கூறுபவனை நம்பு, கடவுளே இல்லை என்பவனைக் கூட நம்பு ஆனால் நான் தான் கடவுள் என்று கூறுபவனை நம்பாதே என்று தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு. இதனை அறிந்தால் ஏன் மக்கள் சாமியார் என்னும் நம்மைப் போல் இருக்கும் ஒரு தனி மனிதனை வழிபடப்போகிறார்கள்?.
திரைக்கலைஞர்கள் வழிபாடு:
பெரும்பாலான தமிழர்களுக்குக் கலையை ரசிக்கும் நல்ல மனோபாவம் இவர்களின் ரத்தத்திலேயே ஊறிக்கிடக்கிறது என்பது பெருமைப்பட வேண்டிய விடயம் தான். ஆனால் நம்மை போன்று அனுதினமும் செயல்படும் ஒரு கலைஞனுக்கு (மனிதன்) தமிழகத்தில் கொடுக்கும் மதிப்பு, மரியாதை என்பது மிக அதிகம் என்றே கூறலாம்.
திரைப்பட மோகத்தால் அன்று இருந்த மனிதர்கள் பாகவதர் போல் முடிவளர்ப்பதும், எம்.ஜி.ஆரைப் போல் உடை அணிவதும் என்று தங்களைத் தாங்களே மாற்றிக்கொண்டு வாழ்ந்தனர். இன்னும் சிலர் அவர்களின் பெயரையோ, உருவத்தையோ உடலில் பச்சைக் குத்திக் கொண்டனர். இவ்வாறு இருந்த ரசிப்புத் தன்மை இன்று வெறியாக உருவெடுத்துள்ளது.
திரைப்பட நடிகர், நடிகைகளின் பெயர்களைத் தங்கள் குழந்தைக்குச் சூடி மகிழ்கின்றனர். நடிகர்களுக்காய் விரலை வெட்டிக்கொள்ளுதல், சண்டைகள் போட்டு உயிரை மாய்த்துக் கொள்ளுதல், கோயில் கட்டுதல், ரசிகர் மன்றம் என்ற பெயரில் நடிகர்களின் படத்திற்கு பாலூற்றி அடாவடி செய்தல், அந்த நடிகர்களின் மீது வைக்கப்படும் நியாயமான விமர்சனங்களைக் கூட ஏற்றுக் கொள்ளாத தன்மை, கூலிக்கார ரசிகனின் பணத்தைக் குறிப்பிட்ட நடிகரின் கட்-அவுட் வைக்கச் செலவிடுதல், தன் அபிமான நடிகர் தேர்தல் நேரத்தில் யாருக்கு ஆதரவாக இருக்கிறாரோ அவருக்குத்தான் என் ஓட்டு என்று பேசும் அவல நிலை, தனக்குப் பிடித்த நடிகரை “வருங்கால முதல்வரே” “எதிர்கால இந்தியாவே” என போஸ்டர் அடித்து ஒட்டிப் பெருமைக் கொள்ளும் கேலிக்கூத்துகள் எனத் தனி மனிதன் ஒருவனைப் போற்றிப் புகழ்ந்து புளகாங்கிதம் அடையும் இழிநிலையில் இன்றைய ரசிகர் கூட்டம் திசைமாறித் திரிகிறது. அவர் ஒரு நடிகர், அவர் வேலை நடிப்பது, அதைச் சரியாகச் செய்கிறார். நீ ஒரு ரசிகன் ரசித்துவிட்டு உன் வேலைவெட்டி, குடும்பத்தைக் கவனிப்பதை விடுத்து இந்த மாதிரி இழிநிலை வேலைகளில் ஈடுபடுவதென்பது வருந்தக்கூடிய செயலாகும்.
இதை எல்லாம் விடப் பெரும் கொடுமையானது, கடந்த 45 ஆண்டுகளாக திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே நம்மை ஆளும் உரிமையை அளித்திருக்கும் அறிவீனச்செயல் தமிழ்நாட்டில் மட்டும் தான் நிகழ்ந்திருக்கிறது. திரைப்படத்தில் பல தொழிலாளர்களின் முதுகில் சவாரி செய்து, சரியாகத் தமிழ் கூடப் பேசத் தெரியாத நடிகர்கள் திரையில் நல்லவனாக நடிப்பதைப் பார்த்து நிஜ வாழ்விலும் அவர் அப்படித்தான் இருப்பார் என நினைத்து ஓட்டுபோட்டு முதல்வராக்கும் அறியாமை கொண்ட ரசிகர்களை இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் காண முடியும். அவ்வளவு ஏன், பத்து பதினைந்து வருடம் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களைக் கூட நடிகர்களைப் பற்றிய வாக்குவாதத்தில் எதிரிகளாக்கி விடுகிறார்கள் இந்தப் பொல்லாத ரசிகர்கள்.
உலகில் எங்காவது ஒரு நடிகைக்காக கோயில் கட்டியதுண்டா? (நடிகை குஷ்புவிற்கு கோயில் கட்டியது), ஒரு நடிகை (நடிகை சிம்ரன் தங்கை மோனல் இறந்தது) இறந்த செய்தி கேட்டதும் நான்கு ரசிகர்கள் தற்கொலை செய்ததுண்டா?, தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் பதாகைகள் வைத்ததுண்டா?, பசிக்குப் பால் இல்லாத குழந்தைகள் அதிகமிருக்க, குடம் குடமாய் பால் ஊற்றியதுண்டா?, சரி இது தவறு என்று பத்திரிக்கைகளாவது சுட்டிக் காட்டியதுண்டா?, இதுபோல கோமாளித்தனமான செயல்களை படம் போட்டு பக்கத்தை நிரம்பும் வேலையைத்தானே எழுத்து ஊடகங்கள் செய்து வருகின்றன.
தனிமனித வழிபாடு:
மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்திலும் இருக்கும் ஒரு பொது அம்சம் மித மிஞ்சிய தனிமனித வழிபாடு என்னும் உளவியல் அவலம் இருக்கிறது. அரசியல், ஆன்மீகம், திரை, விளையாட்டு என எந்தத் துறையில் ஒருவர் பிரபலமாக இருக்கிறாரோ அவருக்கு நம்மவர்கள் கொடுக்கும் பட்டங்களும், வார்த்தைகளும் இருக்கிறதே இது கொடுமையிலும் கொடுமை. அந்த வாசகங்களில் உங்கள் பார்வைக்குச் சில. . .
ரஜினிக்கு: எங்கள் விழியீர்ப்பு விசையே, எங்களின் அதிகாரமையமே, ஊர் கூடித் தேர் இழுக்கலாம், ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடினால் ஊரையே இழுக்கலாம், ஆண்டவனால் அனுப்பப்பட்ட அதிசயப்பிறவியே, தலைவா வா, தலைமை ஏற்கவா.
விஜய்க்கு: மக்களைப் படைத்தவர் கடவுள், கடவுளைப் படைத்தவர் விஜய், சிங்கம் இல்லாத காடா.., எங்கள் தளபதி இல்லாத நாடா. – இவண் – விஜயின் முரட்டு பக்தர்கள்.
கமல்: நடிப்பின் கடவுளே, ஆஸ்கர் நாயகனே, உலக நாயகனே, கடலைத்தாண்ட முடியுமா?, கமலைச் சீண்ட முடியுமா? கில்லாடி சினிமாவில் யாருடா, மல்லாடி பார்ப்போமா வாங்கடா.
கலைஞருக்கு: ஓய்வறியா சூரியனே, ஈழத்தின் விடிவெள்ளியே, வாழும் வள்ளுவரே, தமிழ்தாய் பெற்றெடுத்த தலைமகனே, தமிழ் கடவுளே.
அம்மாவுக்கு: பகைமுடித்துப் பழிகளை வென்று இந்தியத் தலைமையை ஏற்பீர் தாயே, எதிர்கால இந்தியாவே, ஏழைகளின் ஏந்தலே, இந்த தரணியே போற்றிட உலகத் தலைவியாய் உயர்வது நிச்சயம், இந்தியத் தாயே, தமிழன்னையே.
ப.சிதம்பரத்திற்கு: வாழும் வல்லபாய் பட்டேலே, போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் உங்களின் சேவை இந்தியத் திருநாட்டிற்குத் தேவை.
மோடிக்கு: உங்களத்தான் நம்புதிந்த பூமி, இனி இந்தியாவுக்கே நல்ல வழி காமி, இந்தியத் தாயை மீட்க தர்மம் காக்க வந்த கடவுளே…
மு.க.அழகிரிக்கு: தொண்டனுக்குத் துணை நிற்கும் தூயவரே, தொண்டனின் நலவாரியமே, தொண்டனின் ஏற்றமே, தொண்டனின் இதயமே, தொண்டனின் மறுவாழ்வே, துரோகிகளை இனம் கண்டு பகை வெல்லும் தி.மு.க. வின் துப்பாக்கியே.
பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு: நேற்றைய ஜெனரேட்டரே, இன்றைய இன்வெட்டரே, நாளைய கூடங்குளமே, அகிலத்தையே ஆட்டவந்த ஆட்டோபாமே – இவண் – பல்பு பாலாஜி, சோலார் சோலை, விடிபல்பு விக்னேஷ், ப்யூஸ் கட்டை முகேஷ்.
மேற்கண்டவை எல்லாம் தமிழ் நாடெங்கும் இருக்கும் பேனர்களில், போஸ்டர்களில் கண்ட வசனங்கள். இவைகளைப் படிக்கின்ற பொழுது நிச்சயம் உங்களுக்கு சிரிப்பு வந்திருக்கும். மறுபுறம் இப்படிப்பட்ட அறிவிலிகளும் இருக்கின்றார்களே என்ற கோபமும் வருவது இயல்பு.
நம் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வேளைச் சாப்பாடோ, மதுவோ குடிக்க டீயோ, தண்ணீரோ வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒருத்தரை என்ன வேண்டுமானாலும் சொல்வேன் என்கிற போக்கு, மொழியையும் அல்லவா அழித்துவிடும். இப்படித்தான் ஏற்கனவே தமிழின் மிக அழகான பல சொற்கள் பொருள் இழந்து விட்டன.
ஒரு குறிப்பிட்ட ஆளுக்காக மட்டுமே ஒரு கட்சியைச் சார்ந்திருத்தல் அல்லது ஒரு குறிப்பிட்ட ஆளுக்காக மட்டுமே ஒரு திரைப்படத்தைப் பார்த்தல் போன்றவை எல்லாம் நம் தனி மனித வழிபாட்டின் அடையாளங்களே. திறமையைப் போற்றுதல் வேறு, அதைக் கொண்டிருப்பவரை எல்லாவற்றிலும் சிறந்தவராகச் சித்தரித்தல் வேறு. இந்தத் தனி மனித வழிபாடு அரசியலில் ஒருவரின் மொழி ஆளுமையைக் கண்டும் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளும் நிலையும் இங்கே நிலவுகிறது.
தன் சாதிக்காக, தமிழுக்காக, பொதுப்பிரச்சனைக்காக ஒருவர் குரல் கொடுத்தால் அவரை அப்படியே கண்மூடித்தனமாக நம்பி அவர் பின்னால் செல்பவர்கள் பலருண்டு. அவர் பின்னால் கூட்டம் கூட்டமாய் குவிவார்கள். அவரின் தகுதிக்கு மீறி புகழ்வார்கள். திடீரென சுயநலப் போக்கால் அவரை நடுவீதியில் விட்டுவிட்டு வேறொருவன் பின்னால் ஓடி விடுவார்கள்.
இதில் இரண்டு வித தொண்டர்கள் உண்டு. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவர் பின் காலம் காலமாய் சுற்றி வீணாவது ஒரு பிரிவினர். இப்படி எல்லாம் புகழ்ந்து பேசினால் தலைவன் ஏமாந்து தனக்கு வேண்டியவற்றை அள்ளிக் கொடுப்பான் என நினைத்து காற்றுள்ள போது மட்டும் (பதவியில் இருக்கும் போது மட்டும்) தூற்றிக் கொள்ளும் பிரிவினர் இரண்டாவது வகையினர்.
தமிழக மக்கள் பிம்பங்களுக்கு மயங்குகிறவர்கள் என்பது தான் இந்த அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வெற்றிக்குக் காரணம். மக்கள் விரும்புகிற பிம்பங்களை கொடுக்கிற வரை இவர்களின் வெற்றி தொடரும். இதுதான் தனிப்பட்ட நபர்கள் வழிபாடு செய்வதற்கு மூல காரணம். தனிநபர் வழிபாடு அரசியல் ரீதியாக செயல்படுமா? என்றால் எடுபடும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் எம்.ஜி.ஆருக்கு அமைந்தது போல (கருணாநிதி), ஜெயலலிதாவிற்கு (எம்.ஜி.ஆர் மரணம் ) அமைந்தது போல.
இந்தக் கொடிய சமூக நோயை நாம் அழிக்க கடும் முயற்சிகளை எடுக்க வேண்டும். எடுக்காமல் இருப்பது சமூகத் தற்கொலைக்கு ஒப்பானதாகும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழனின் தலைவிதியை நிர்ணயிக்கும் – தனி மனித வழிபாடு”