மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழனுக்குக் காலம் இடும் கட்டளை

ஆச்சாரி

May 17, 2012

“வரலாற்றில் பல உண்மைகள் சிறைபட்டுக் கிடக்கின்றன. முதலில் அவற்றை விடுவியுங்கள். விடுவிக்கப்பட்ட உண்மைகள் உங்களை விடுதலை செய்யும்” என்று ஒரு கூற்று உண்டு.

புத்தரின் துறவின் பின்னணியிலும் இப்படி ஒரு உண்மை ஒளிந்து கிடக்கிறது. ஆதி நாள் தொட்டு நமக்கு போதிக்கப்பட்டு வருகிறபடி, ஒரு கோழையைப் போல நள்ளிரவில் மனைவி மக்களை விட்டு புத்தர் ஓடிப் போய்விடவில்லை. ஒரு போரையும், அதனால் ஏற்படவிருந்த பேரழிவையும் தடுக்க நினைத்து, புத்தர் எடுத்த முடிவுதான் அவரது துறவு.

இந்தியாவின் வடகிழக்கு மூலையில் இருந்தது. சாக்கிய தேசம். கபிலவஸ்து அதன் தலைநகரம். சாக்கிய தேசத்தின் ஆட்சிப் பொறுப்பைச் சில குடும்பங்கள் சுழற்சி முறையில் ஏற்றுவந்தன. புத்தர் பிறந்தபோது இந்த சுழற்சி முறையின்படி, புத்தரின் தந்தை சுத்தோதனரிடம் சாக்கிய தேசத்தின் ஆட்சிப் பொறுப்பு வந்தது. அந்த  வகையில் சுத்தோதனர் மன்னர். புத்தர் இளவரசர். ஒரு இளவரசனுக்குரிய கல்வி, கேள்விகள், போர்ப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு புத்தர் வளர்ந்து இளைஞர் ஆனார். யசோதாவை மணந்து ஒரு ஆண் மகனுக்கும் தந்தையானார்.

அப்போது சாக்கிய தேசத்தில் ஒரு வகைக் குடியாட்சி முறை நிலவி வந்தது. சுழற்சி முறை மன்னராட்சி சாக்கிய தேசத்தில் நிலவிய போதும், தேசத்தின் ஆட்சியதிகாரம் முழுமையும் “சாக்கிய சங்கம்’ என்ற சங்கத்திற்கே உரியது. சாக்கியர் சங்கத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின்படியே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சுருக்கமாகச் சொல்வதானால் சாக்கிய  தேசத்தின் ஆட்சி மன்றக் குழுவே இந்த சாக்கிய சங்கம்தான்.  இந்த சாக்கியர் சங்கத்தில் உறுப்பினராயிருப்பது மிகப் பெரிய கௌரவமாகக் கருதப்பட்டது. இந்த சாக்கியர் சங்கத்தில் இளவரசர் புத்தரும் உறுப்பினரானார்.

சாக்கியர்களின் அண்டையில் இருந்தது கோலியர்களின் நாடு, இந்த இரு நாடுகளின் எல்லையாக இருந்தது ரோகினி ஆறு. இந்த ரோகினி ஆற்றின் நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தத் தகராறு கைகலப்பிலும், சில சமயம் போரிலும் முடிவதுண்டு. சித்தார்த்தருக்கு இருபத்து எட்டு வயதாகி இருந்தபோது, ரோகினி ஆற்று நீர் பிரச்சினை பெரிதாகி சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் பெரும் மோதல் ஏற்பட்டது.

சாக்கியர்களின் சேனாதிபதி போர் வெறி மிக்கவராக இருந்தார். போரின் மூலமாகத்தான் தீர்வு என்பதில் உறுதியாக இருந்த அவர், போருக்கு அனுமதி தர வேண்டி சாக்கியர் சங்கத்தைக் கூட்டினார்.

சங்கத்தில் உறுப்பினராயிருந்த சாக்கிய இளவரசர் சித்தார்த்தர் போருக்கு எதிரான கருத்தை சங்கத்தின் முன்வைத்தார். “நமது சாக்கியர் தரப்பிலும் தவறு உள்ளது. எனவே சாக்கியர் இருவர், கோலியர் சார்பாக இருவர், இரு தரப்பாருக்கும் பொதுவானவர் ஒருவர் என ஒரு ஐவர் குழு அமைத்து, பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். போரைத் தவிர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

சாக்கியர் சேனாதிபதி போருக்கு ஆதரவாக வாதாட, சித்தார்த்தர் சமாதானத்தை முன்மொழிய, இறுதியில் சாக்கியர் சங்கத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுக்குக் கட்டுப்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. சாக்கிய சேனாதிபதியின் போர் வெறித் தூண்டுதலால் கவரப்பட்ட பெரும்பான்மை சங்க உறுப்பினர்கள் போருக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்

சாக்கியர் சங்க விதிகளின்படி பெரும்பான்மை முடிவுக்குச் சிறுபான்மையினரும் கட்டுப்பட வேண்டும். அதன்படி ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிர்ப்பந்தம் சித்தார்த்தருக்கு ஏற்பட்டது. ஆனால், “சமாதானத்திற்கான வழிகள் இன்னும் அடைபடாமல் இருக்கும் நிலையில் நான் ஆயுதம் ஏந்திப் போராட மாட்டேன்” என மறுத்து விட்டார்.

சாக்கியர் சங்க விதிகள் மிகக் கடுமையானவை. சங்க முடிவுகளுக்குக் கட்டுப்படாதவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். இப்போது புத்தர் கீழ்க் கண்ட நான்கு முடிவுகளில் ஒன்றை மேற்கொண்டாக வேண்டும்-

1)சங்க முடிவுக்குக் கட்டுப்பட்டு ஆயுதம் ஏந்திப் போர் புரிய உடன்பட வேண்டும்

2)மறுத்தால் மரண தண்டனைக்கு உட்பட வேண்டும்

3)அல்லது நாடு கடத்தப்பட சம்மதிக்க வேண்டும்

4) அல்லது புத்தரின் குடும்ப உடைமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, சாக்கிய சமூகத்தை விட்டு அவர் குடும்பமே விலக்கி வைக்கப்பட சம்மதிக்க வேண்டும்.

புத்தர் ஆழ்ந்து சிந்தித்தார். சமாதானத்திற்கான வழி இருக்கும்போது சண்டையிட அவருக்கு விருப்பமில்லாததால் போரிடும் சங்க முடிவுக்குக் கட்டுப்பட மறுத்தார்.

அதே நேரத்தில் தன் பொருட்டு தன் குடும்பத்தார் சொத்து, சுகம், அதிகாரம், உரிமைகள் அனைத்தையும் இழக்க விரும்பாததால் நான்காவது முடிவில் அவருக்கு விருப்பமில்லை. எனவே இரண்டாவது மற்றும் மூன்றாவது வழிகளின்படி தனக்கு மரண தண்டனை வழங்கவோ அல்லது தன்னை நாடு கடத்துமாறோ சாக்கியர் சங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

இதிலேயும் ஒரு சிக்கல் எழுந்தது. சாக்கியர் சங்கம் ஒருவருக்கு மரண தண்டனை விதித்தாலோ அல்லது அவரை நாடு கடத்தினாலோ அதற்குக் கோசல நாட்டு மன்னரின் அனுமதி பெற்றாக வேண்டும். கோசல மன்னரோ புத்தரின் குடும்பத்தார் மீது பற்றும் பாசமும் கொண்டவர். அவர் சம்மதம் வழங்குவாரா?

சாக்கிய சேனாதிபதி சித்தார்த்தரைப் பார்த்து, ‘சித்தார்த்தரே நீர் புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறீர். உமக்கு மரண தண்டனை விதிக்கவோ, உம்மை நாடு கடத்தவோ கோசல மன்னர் அனுமதிக்க மாட்டார் என அறிந்தே இவ்வாறு நீர் கோரிக்கை வைக்கிறீர்’ எனக் குற்றம் காட்டினார். புத்தர் எழுந்தார். வரலாற்றில் வைர எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அந்த அறிவிப்பை வெளியிட்டார். “ இதுதான் சிக்கலென்றால் எனது சொந்த விருப்பத்தின் பேரில் நானே துறவியாகி, சாக்கிய தேசத்தை விட்டு நானே வெளியேறுகிறேன். என்னை சாக்கியர் சங்கம் நாடு கடத்தியதாக இருக்க வேண்டாம். அதனால் கோசல மன்னரின் சினத்திற்கும் ஆளாக வேண்டாம்.

அறிவித்தபடியே பட்டப் பகலில், தீட்சை பெற்று, தலையை மழித்து, துறவாடைபூண்டு, தந்தையும், மனைவியும் சுற்றத்தாரும், ஆயிரக்கணக்கான சாக்கிய தேசக் குடிமக்களும் கண்களில் நீர்மல்க, நெஞ்சம் பதைபதைக்கப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சாக்கிய தேசத்தை விட்டு வெளியேறினார். (ஆதாரம்: டாக்டர் அம்பேத்கரின் புத்தமும் அவர் தம்மமும் ஆங்கில நூலின் தமிழாக்கம். பேராசிரியர் பெரியார்தாசன். வெளியீடு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆய்வு மையம்)

இந்த வரலாற்று நிகழ்வை இப்போது குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இலங்கை, அந்த புத்தரின் சமயமாம் பௌத்தத்தை அரச மதமாகக் கொண்ட பௌத்த தேசம். இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் புத்த பிக்குகளின் ஆதிக்கம் வலிமை மிக்கது. சிங்கள அரசுகளைக் கவிழ்க்கவும், பதவியில் நீடிக்கவும் செய்யக் கூடிய வல்லமை படைத்தவர்கள் அவர்கள். புத்தனின் சொல்லைத் தொலைத்து விட்டு, பல்லை மட்டும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அந்தப் பிக்குகள் இனவெறி, போர்வெறி இரண்டின் சரிவிகிதக் கலவைகள்.

அன்றுதொட்டு இன்றுவரை சண்டையின்றி சமாதானமாக இலங்கையில் உள்ள சிங்கள இனமும், தமிழினமும் தங்கள் இனப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் வரும்போதெல்லாம் அந்த வாய்ப்புகளைக் கொட்டிக் கவிழ்க்கிற காரியத்தை இந்தச் சிங்களப் பிக்குகள்தான் செய்து வருகிறார்கள்.

ஈழத் தமிழர்களின் நலன்களுக்காக தந்தை செல்வா அப்போதிருந்த பிரதமர் பண்டார நாயகாவுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். இதே புத்த பிக்குகள் அந்த உடன்படிக்கைக்கு எதிராகக் கொதிதெழுந்தார்கள். சிங்கள மக்களுக்கு வெறியூட்டினார்கள். நாடெங்கும் கலவரம் மூண்டது. பயந்து போன பண்டார நாயகா, தந்தை செல்வாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத புத்த பிக்கு ஒருவராலேயே பண்டார நாயகா சுட்டுக் கொல்லப்பட்டார்.

பின்னாளில், நார்வே நாட்டின் தலையீட்டின் பேரில் மீண்டும் சமாதானத்திற்கான ஒரு வாய்ப்பு கனிந்து வந்தபோது, நார்வே நாட்டுத் தூதரகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த புத்த பிக்குகள், சிங்கள ராணுவத் தளபதிகளுடன் சேர்ந்து கொண்டு அந்த சமாதான முயற்சியையும் முறியடித்தார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கையை ஒரு குடையின் கீழ் ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளன் ஒருமுறை தேரில் வந்தபோது, தேர் புத்த விகாரையின் தூணில் உரசி, அந்தத் தூணில் இருந்து பதினாறு கற்கள் உடைந்து விழுந்து விட்டன. புத்தரின் பெருமையை உணர்ந்திருந்த எல்லாளன், இந் நிகழ்வை புத்தருக்குத் தான் இழைத்த அவமானமாகக் கருதி உயிரையே விட முன்வந்தான். இறுதியாக சான்றோர்கள் செய்த சமாதானத்தை ஏற்றுக்கொண்டு, எல்லாள மன்னன் பதினாயிரம் பொற்காசுகளை செலவிட்டு அந்த பௌத்த விகாரத்தைப் புதிதாகக் கட்டிக் கொடுத்தான். அந்த எல்லாள மன்னனை துட்டகாமினியைக் கொண்டு சூழ்ச்சியாகக் கொல்வித்த புத்த பிக்குகள், இன்று வரை இந்துக் கோயில்களை இடிப்பதையே புத்தனுக்குச் செய்யும் கைங்கர்யமாக கருதி செயலாற்றி வருகிறார்கள்.கிருத்துவ தேவாலயங்களையும் விட்டுவைக்காத புத்தபிக்குகள் இன்று மசூதிகளையும் இடிக்கத் தொடங்கிவிட்டார்கள். அண்மையில் இலங்கையின் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றினை இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட புத்த பிக்குகள் கடப்பாரை, சம்மட்டி கொண்டு இடித்துத் தள்ளிவிட்டனர்.

“அல்லாஹூ அக்பர்” என்ற இறை முழக்கத்தோடு “இஸ்லாம் எங்கள் வழி. இன்பத் தமிழ் எங்கள் மொழி” என்கிற இன முழக்கமும் தமிழகத்து இஸ்லாமியத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளது. இந்த இனமுழக்கம் ஈழத்து இஸ்லாமியத் தமிழர்கள் மத்தியில் எதிரொலித்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் புத்த பிக்குகளால் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையே தம்புள்ளா மசூதி இடிப்புச் சம்பவம்.

சிங்களனைப் பொறுத்தவரையில், பௌத்தம் என்பது மத அடையாளமல்ல தமிழனிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட உதவும் இன்னொரு இன அடையாளம். இலங்கையிலுள்ள இந்துக்கள், கிறித்துவர்கள், முஸ்லிம்கள் இவர்கள் அனைவரையும் தமிழர்களாக, தமிழினமாகவே சிங்களன் கருதுகிறான். சிங்களனின் இந்தக் கருத்தை ஏற்று, இந்து, கிறித்துவர், முஸ்லிம் என்கிற மத அடையாளங்களைப்  பின்தள்ளி தமிழன் என்கிற இன அடையாளத்தை முன்னெடுக்க வேண்டியதும், இன ஒருமைப்பாட்டைப் பேணுவதும் குறிப்பாகத் தமிழகத்தில் சிறப்பாக ஈழத்தில், பொதுவாக உலகம் முழுவதும் வாழுகிற ஒவ்வொரு தமிழனின் கடமையும், தேவையும் ஆகும். இது சிங்களன் வாயிலாகத் தமிழனுக்குக் காலம் இடும் கட்டளை! வரலாறு காட்டும் வழி!

The topic sentence http://firstessaywritinghelp.com must make your intention clear to readers (2) comparison, contrast, and analogy ii 5 the difference between a sign and a symbol is, in brief

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தமிழனுக்குக் காலம் இடும் கட்டளை”
  1. வே.தொல்காப்பியன் says:

    நாம் ஒவ்வொருவரும் படிப்பதிலிருந்து நம் மன இயல்பு, கருத்து / கொள்கைச் சார்புக்கு ஏற்ப எடுத்துக் கொள்கிறோம். எனவே கீழ்க்கண்ட கருத்தும் அதற்கு விதிவிலக்கன்று.

    இக்கட்டுரையைப் படித்ததும் தோன்றிய எண்ணங்கள்:

    1. ஆக, சிங்களர்களும் மன வளர்ச்சி, முதிர்ச்சி பெறாமல் சிக்கல் நல்ல முறையில் நீடித்த நோக்கில் தீர வழியில்லை. அதற்கு நாம் (தமிழர்கள்) நடந்து கொள்ளும் விதம் உதவுகிறதா?

    2. புத்தர் செய்த ஈகம் (தியாகம்) போன்று ஏன் இன்று யாரும் செய்யவில்லை? ஏன் யாரும் இக்காலத்திற்கேற்ப வழிகாட்டவில்லை? இல்லை, அப்படி வழிகாட்டியவர்களை நாம் ஏன் ஆதரிக்கவில்லை? பழந்தமிழர்களின் வீரத்தைப் போல் பழந்தமிழரின் சான்றாண்மையையும் நாம் மீளக் கொண்டு வந்து வாழ்க்கை நடப்பாக்க வேண்டாமா?

  2. mojo says:

    தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலும், ஒப்பாரிவைக்கும் தமிழ்நாட்டு புலி ஆதரவு முஸ்லிம்களும்.. http://www.jaffnamuslim.com/2012/05/blog-post_6515.html

    முஸ்லிம்கள் பற்றிப்பேச தகுதியற்ற புலி ஆதரவு சக்திகள்..! தம்புள்ள பள்ளிவாசல் குறித்து…!! ~http://www.jaffnamuslim.com/2012/05/blog-post_7240.html

அதிகம் படித்தது