தமிழனை போதைக்கு அடிமையாக்கும் தமிழக அரசின் மதுக்கொள்கை
ஆச்சாரிDec 7, 2013
தமிழனின் பண்டைய ஆதியினம் சோமபானம், சுராபானம் அருந்தும் பழக்கம் பெருவழக்கமாக அன்று இருந்தது. இதில் சோமபானத்தை யாகங்களுக்கும் பயன்படுத்தினர். கௌசிதகி கிருஹ்ய சூத்திரம் “விதவைகள் அல்லாத நான்கு அல்லது எட்டுப் பெண்கள், திருமணத்திற்கு முன்னாள் இரவு மதுவும், உணவும் அருந்திய களிப்புடன் நான்கு முறை நடனமாட வேண்டும்” என்கிறது அன்றைய மனுநூல்.
மகாபாரதம் வனப்பருவத்தில் விராடனின் மனைவி சுதேசனை, தன் பணிப்பெண் மூலம் சைரந்திரியக் கீசகன் அரண்மனையில் இருந்து மது வரவழைத்து அருந்தியதைப் பார்க்கிறோம். இவ்வாறு அன்றைய அரச காலத்தில் போருக்குச் செல்வதற்கு முன்னால், வீரர்களுக்கு வெறியேற்ற சோமபானம், சுராபானம் மற்றும் கள் போன்ற மதுவகைகள் வீரர்களுக்கு ஊற்றப்பட்டு போரிட்ட கதையை வரலாற்றில் அறிய முடிகிறது.
இவ்வாறான மதுவகைகளை அருந்தி வந்த தமிழினத்தை பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்க காலமான 1796-1830-ல் சாராயம் என்னும் மதுவின் ஆதிக்கம் பீடித்தது. அப்போது இந்தியாவுடனான கடல் வர்த்தகத்தில், தென்னிந்திய வர்த்தகர்களான நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் சாராய வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்தனர். இந்த மதுவகைகளின் தாக்கம் தமிழர்களிடையே அதிகமானதால் கள் ஒழிப்பு, மது ஒழிப்பு என்ற குரல் ஓங்கியது. இருந்தாலும் “ஆடியவன் காலும், பாடியவன் வாயும் சும்மா இருக்காது” என்ற பழமொழிக்கிணங்க தமிழர்கள் தெரிந்தும், தெரியாமலும் இந்த மதுவைத் தொடர்ந்து அருந்தி வந்தார்கள் என்றே கூற வேண்டும்.
இந்த வழியில் தமிழர்களைப் பிடித்து இருந்து மது போதைப் பழக்கத்தை ஒரு முதலீடாக எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டில் சந்து,பொந்து,இக்கு, இடுக்கெல்லாம் டாஸ்மாக் (TASMAC- Tamilnadu State Marketing Corporation) மதுக்கடைகளைத் திறந்து அனைவரையும் முழுநேரக் குடிகாரர்களாக்கும் தீவிர முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவது வேதனை தரும் விடயமாக இருக்கிறது. இக்கடையை தமிழக அரசு 1983-ல் தொடங்கி, தமிழ்நாடெங்கும் தற்போது 41 மதுக்கிடங்குகளும், 6500 மதுக்கடைகளும், 36,000 பணியாளர்களைக் கொண்டு பரபரப்பாக இயங்கி வருகிறது. இதற்குத் தற்போது சுங்கவரி மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக நத்தம் ஆர்.விசுவநாதன் அமைச்சராக உள்ளார்.
தமிழக அரசுக்கு செல்வம் கொழிக்கும் பெரும் துறையாக இன்று மதுவிலக்குத் துறை இயங்கி வருகிறது. இந்த அரசு தயாரிக்கும் மது பாட்டில்களில் “மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு” என்று அரசு எச்சரிக்கை விளம்பரம் தென்படுகிறது. நான் கேட்கிறேன் மது வீட்டுக்கு உயிருக்குக் கேடு என்பதை ஒத்துக்கொள்கிறோம், அது எப்படி நாட்டுக்குக் கேடு? அவ்வாறு நாட்டுக்குக் கேடு என்றால் கேடு தரக்கூடிய விடயத்தை ஒரு நாடே ஏன் ஏற்று நடத்த வேண்டும்? இது பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்ற முரண்பாடான செயல் போலல்லவா தெரிகிறது.
மது அருந்துபவர்கள் வயது:
ஒரு காலத்தில் திருமணமாகி குழந்தை பெற்றவர்களும், முதியோர்களுமே இந்த மதுவை அருந்தி வந்தனர். ஏன் பெண்களும் கூட அருந்துவதுண்டு. 1980களில் குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 26 ஆக இருந்தது. 2007-ல் 17 ஆகக் குறைந்து விட்டது. அசோசெம் என்கிற வர்த்தகக் கூட்டமைப்பின் சமூக வளர்ச்சிப் பிரிவு செய்த ஆய்வில், 19-26 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் மத்தியில் குடிப்பழக்கம் 60 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரியவருகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் டீன்ஏஜ் குடிப்பழக்கம் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இன்று சாதாரணமாக நம் தமிழ்நாட்டில் இருக்கின்ற 8,9,10,11,12 ம் வகுப்பு படிக்கும் பெரும்பாலான மாணவர்களே மதுக்கடைகளுக்குச் சென்று பீர் பாட்டில்களை வாங்கி தனது பைக்குள் வைத்துக்கொண்டு மறைவான இடத்திலும், விடுமுறை நாட்களிலும், ஏன் வகுப்பறையிலும் கூடக் குடித்துவரும் அவலமான செய்திகளை தினசரிச் செய்திகளில் படிக்க முடிகிறது. “எதிர்காலம் இளைஞர்கள் கையில்” என்ற நம்பிக்கை வாசகத்தை இனி மாற்றி எழுத வேண்டுமோ எனத் தோன்றத்தான் செய்கிறது.
குடிக்கக் காரணம் என்ன?
பெரும்பாலான தமிழர்கள் இன்று மனவலிமை அற்றவர்களாய் இருப்பதே இதற்குக் காரணம். தனது வாழ்வில் வரும் சிறிய துன்பத்தைக் கூடச் சமாளிக்க முடியாமல் உடைந்துபோய் விடுகின்றனர். 1943-ல் பொது ஆரோக்கியம் பற்றிய பரிந்துரைகள் அளிப்பதற்காக இந்தியாவில் “போரே கமிட்டி” அமைக்கப்பட்டது. இது 1946-ல் ஒரு அறிக்கை அளித்த விபரமானது, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகக் காரணம் வறுமை, வேலையின்மை, பொழுதுபோக்கு, வசதியின்மை, விரக்தி, சமூகப் பழக்கம், நிதிப்பற்றாக்குறை, கடன்சுமை, ஏமாற்றம், பயம், காதல்தோல்வி, பிரிவாற்றாமை, குடும்பச்சிக்கல் எனப் பல காரணங்களைக் கூறியுள்ளது. மேற்கண்ட காரணங்களுக்காக குடித்த தமிழினத்திற்கு இன்று மதுவானது பழகிப்போய் வழக்கமானதாக மாறிவிட்டது. தினக்கூலி வேலை செய்பவர்கள் தினமும் மது அருந்துகின்றனர். வார, மாதச் சம்பளம் வாங்குகின்றவர்கள் வாரத்தின் இறுதி நாளான சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் குடிக்கத்துவங்குகின்றனர். இதில் திருமணம், பிறந்தநாள், காதணி விழா, புதுமனை புகுவிழா என்று வரும் விழாக்களில் இன்று மதுவானது தவிர்க்க முடியாத உணவாக மாறிவிட்டது. உடல்வலிக்கும், மனத்துன்பத்திற்கும் குடிப்பவர்களை விட மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும், பொழுதுபோக்கிற்கும் குடிப்பவர்களே இன்று அதிகம் உள்ளனர்.
ஆட்சியாளர்களின் சாதனை:
டாஸ்மாக் என்பதன் பொருள் தமிழில் “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்” என்பதாகும். ஊரில் இருப்பவர்களின் பணத்தை அந்த வரி, இந்தவரி என அரசு பறிப்பதோடு மட்டுமல்லாது, மேலும் மக்களின் பணத்தைப் பிடுங்கி, பதிலுக்கு ஊற்றிக் கொடுக்கும் தொழிலுக்கு வாணிபக் கழகமாம்.
இப்போதைய ஆட்சியில் 3 ஆயிரம் மதுக்கடைகளுடன் 2,821 கோடி வருவாயில் தொடங்கியது எனில் முந்தைய ஆட்சியில் 6823 கடைகளாக வளர்ந்து 15,000 கோடியை எட்டியது. மேலும் முந்தைய ஆட்சியில் ஆறு ஆலைகள் இருந்தது எனில், தற்போதைய ஆட்சியில் 14 ஆலைகளாக வளர்ந்தது.
தமிழ்நாட்டில் தினசரி மதுக்கடையில் குடிக்கும் குடிநோயாளிகள் 49 லட்சம் எனில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 60 லட்சம் என உயருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் குடிநோய்க்கு ஆட்பட்டவர்கள். இதில் வளர் இளம் பருவத்தினரையும் சேர்த்தால் 2 கோடியை எட்டும். இந்தியாவில் மது வியாபாரத்தில் முதலிடத்தில் இருக்கும் உத்திரப் பிரதேசத்தை முந்துவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சிக்கிறது.
பற்றாக்குறைக்கு மாநகராட்சிகளில் 24 மணி நேர மதுக்கடைச் சேவையை ஐந்து நட்சத்திர விடுதிகளில் அரசே அனுமதி அளித்துள்ளது. மதுக்கடை ஒருபுறம் என்றால் பெட்டிக்கடைகளில் சரம் சரமாகத் தொங்கும். மார்வாடி சேட்டுகளின் தயாரிப்புகளான மாவா, கையினி, குட்கா, பான்மாலை, பான்பராக், ஹான்ஸ், ஹெராயின், அபின், கொக்கைன், பெத்தடின் ஊசி வகைகள் என அனைத்தும் குடி நோய்க்குப் பலியான குடும்பங்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதுடன் அவர்களின் உயிரையும் அணு அணுவாகச் சிதைத்துப் பல நோய்கள் வரக்காரணமாகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,56,000 பேர். வாய்ப்புற்றுநோய், தொண்டை, கழுத்துப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு எனப் பலவகை நோய்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நடைபிணங்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இதிலும் நம் இளைஞர்கள் மேற்கண்ட குடிக்கும், போதைப்பழக்கத்திற்கும் அடிமையாக்கப்பட்டு இன்று பலர் ஆண்மை இழந்து நிற்கின்றனர். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் மன அழுத்தத்திற்கும், ஊராரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் அஞ்சி தலைகுனிந்து வாழும் நிலையில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மதுவும், உயிரிழப்பும்:
குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டாதே! எனப் பல வாசகங்கள் சாலையெங்கும் நம்மை வரவேற்கும். இவ்வாறு குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிவருபவர்களை “மனித வெடிகுண்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளது உயர்நீதிமன்றம். ஒருபக்கம் அரசு மதுக்கடையின் ஆண்டுதோறும் அதிகரிக்கும் வருமானத்திற்கு நிகராக மறுபுறம் குடிபோதை விபத்து மரணங்களும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 15,409 குடிநோயாளிகள் சாலைவிபத்தில் மரணமடைந்துள்ளனர்.
சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. 60 சதவீதம் மரணங்களுக்குக் குடிபோதையே காரணமாக உள்ளது. காயம் அடைந்து உறுப்புக்களை இழந்தோர் இலட்சத்தைத் தாண்டுகிறது. பெரும்பாலும் 20 முதல் 45 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களே பலியாகி, இளம் விதவைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்களையும் கொன்று, அவர்கள் மனைவிகளின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி வரும் பணம் அரசுக்குத் தேவைதானா?
அனைத்து குடிநோயாளிகளும் மீத்தைல் ஆல்கஹாலைக் குடிக்கின்றனர். இதைக் குடித்தால் 5 நிமிடத்தில் பார்வை பறிபோகும். 15 நிமிடத்தில் மூளை செயலிழக்கும். 30 நிமிடங்களில் உயிரே போய்விடும். இதே வேலையைத்தான் ஈத்தைல் ஆல்கஹால் (மது) கொஞ்சம் கொஞ்சமாகச் செய்கிறது. மீத்தைலுக்கு நிமிடங்கள் என்றால் ஈத்தைலுக்கு ஆண்டுகள் அவ்வளவுதான்.
டாஸ்மாக்கின் ஆண்டு வருவாய் |
||
நிதியாண்டு |
வருவாய் (கோடிகளில்) |
% மாற்றம் |
2002-03 | 2,828.09 | - |
2003-04 | 3,639 | 28.67% |
2004-05 | 4,872 | 33.88% |
2005-06 | 6,086.95 | 24.94% |
2006-07 | 7,300 | 19.93% |
2007-08 | 8,822 | 20.85% |
2008-09 | 10,601.5 | 20.17% |
2009-10 | 12,491 | 17.82% |
2010-11 | 14,965 | 19.80% |
2011-12 | 18,081.16 | 20.82% |
2012-13 | 21,680.67 | 19.91% |
இவ்வாறு வருடத்திற்கு பல்லாயிரம் கோடிகளில் உழைப்பாளர்களின் பணத்தை பிடுங்கும் வேலையை தமிழக அரசு மிகச்சரியாக செய்துவருகிறது. அரசுக்கு வரிவருவாயைத் தவிர பார் உரிமங்களை ஆண்டுதோறும் தனியாருக்கு ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் குடிநுகர்வும், அவ்வப்போது நிகழும் மதுவிலையேற்றமும் இச்சீரான வருவாய் வளர்ச்சிக்குக் காரணங்களாக கருதப்படுகின்றன.
சரி அரசுதான் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கிறது என்று பார்த்தால் ஏலத்திற்கு பார் நடத்துகின்ற பெரும் அரசியல் புள்ளிகளும், தொழிலதிபர்களும் அதைவிடக் கொள்ளையர்களாக உள்ளனர். இவர்கள் நடத்தும் பாருக்குள் நீங்கள் நுழைந்தால் போதும். குறைந்த விலையில் நீங்கள் வெளிக்கடையில் கண்ட நொறுக்குத்தீனிகள் எல்லாம் இங்கு 3 மடங்கு விலை உயர்த்தி விற்கப்படுகின்றன. “வெளியில் இருந்து கொண்டுவரும் உணவுப்பண்டங்கள் உள்ளே அனுமதி இல்லை” என்று அதிகாரத் தொனியில் உள்ளே ஒரு விளம்பரப் பலகை தொங்கும். சரி உள்ளே விற்கும் உணவுப் பண்டங்களின் வலைப்பட்டியலைப் பார்ப்போம்.
உணவுப்பண்டங்கள் | விலை |
டம்ளர் | 6 |
தண்ணீர் பாக்கெட் | 6 |
கொய்யா 1 தட்டு (சிறியது) | 30 |
பழவகைகள் 1 தட்டு (சிறியது) | 50 |
ஆம்லேட் | 25 |
ஆப் ஆயில் | 15 |
சுண்டல் | 20 |
குடல் | 80 |
காளான் (அ) காலிபிளவர் | 50 |
வெள்ளரி | 30 |
பப்பாளி | 30 |
இதுதவிர ஆட்டுக்கறி,கோழிக்கறி, மாட்டுக்கறி என்ற இந்த அசைவ உணவுகள் எல்லாம் இவர்களின் வாய்க்கு வந்த விலையில் விற்கப்படுகின்றன. இதனால் வரும் குடிமகன்களின் பணம் எவ்வளவு அபகரிக்கப்படுகிறது என்பது உங்களுக்கே வெளிச்சம். இப்படி விலை உயர்த்தி விற்கிறீர்களே இது நியாயமா? என்றால், பார் நடத்துபவர்கள் கூறுவது, அதிகமான விலைதான் அதுக்கு நாங்க என்ன பண்றது. போட்ட காச எடுக்கணுமில்ல. இங்க இப்படித்தான் சார். இஷ்டமிருந்தா வந்து சாப்பிடுங்க, கஷ்டமா இருந்தா ஏன் உள்ள வாரீங்க? என்றார். “பனை மரம் படுத்துக்கொண்டால் பன்றிக்குட்டி கூட படக்கென்று தாண்டும்” என்ற பழமொழியின் அர்த்தம் அப்போதுதான் புரிகிறது.
இலவசங்களால் ஏமாந்த மக்கள்:
தமிழகத்தை ஆளுகின்ற ஒவ்வொரு திராவிடக் கட்சியும் “ நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச்செய்வோம், இதைச் செய்வோம் என்பதை விட எவை எவைகளை எல்லாம் இலவசங்களாகத் தருவோம் என்று போட்டிபோட்டு பொருட்களின் பட்டியலை வெளியிடுகின்றனர். இதை நம்பி மக்களும் ஓட்டுப்போட்டு ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்தினால் அந்த ஆளும் கட்சியானது ஒரு குடும்ப அட்டைக்குத் தரும் இலவசங்களின் மதிப்பு 15,460 ரூபாய். (தமிழக அரசு வழங்கும் இலவச அரிசி, மத்திய அரசு நிர்ணயித்த அதிகபட்ச விலையானது ரூ.8.30 எனில் 20 கிலோ வீதம் 5 ஆண்டுகளுக்கும் அளிக்கும் அரிசியின் மதிப்பு ரூ.9,960. தொலைக்காட்சிப் பெட்டி ரூ.2,700. மிக்சி ரூ.800. கிரைண்டர் ரூ.1500, மின் விசிறி ரூ.500 ஆக மொத்தம் ரூ.15,460.
குடிப்பழக்கம் உள்ளவர் தமிழகத்தில் பெரும்பான்மையில் தற்போது உள்ளனர். இவர்களில் ஒருவர் ஒவ்வொரு நாளும் ஒரு குவாட்டர் மது அருந்தினால் கூட ஐந்து ஆண்டுகளில் அவர் இழப்பது 1,26,000 ரூபாய் ஆகும். தமிழகத்தை மாறி மாறி ஆண்ட இரு திராவிட கட்சிகளின் சாதனை என்பது உழைக்கும் மக்களை குடிகாரர்களாக்கி, தன்மானமிழந்து இலவசங்களுக்குக் கையேந்தும் பிச்சைக்காரர்களாக்கியதுதான். இந்த நிலையைத்தான் “ ஓராண்டில் நூறாண்டு சாதனை” என வெட்கமின்றி பெருமை பேசிக்கொள்கின்றனர்.
‘அம்மா உணவகம்’, அம்மா குடிநீர், அம்மா சிற்றுந்து, அம்மா மலிவு விலைக்காய்கறிக்கடை, அம்மா காப்பீட்டுத்திட்டம் என எடுத்ததெற்கெல்லாம் அம்மா புராணம் பாடியவர்கள் ஏன் “அம்மா டாஸ்மாக்”, “அம்மா மதுக்கடை” என வைக்கக்கூடாது? இதுவும் அரசு நடத்துவது தானே!.
இது ஒரு புறமிருக்க, மறுபுறம் இந்த அரசு மதுபானக் கடைகளில் நன்கு படித்த இளைஞர்கள் பலர், படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காததால் ஊற்றிக்கொடுக்கும் வேலையையும், பார்களில் பணியாற்றும் எடுபிடிகளாகவும் உருமாறி, குடிப்பவர் கொடுக்கும் டிப்சுக்காக ஏங்கி நிற்கும் அவலம் கொடுமையிலும் கொடுமையானது. எவன் எப்படிப் போனால் என்ன? எவன் குடி எக்கேடுகெட்டால் என்ன? அரசுக்கு வருவாய் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் போக்கு விநோதமாக உள்ளது. பூரண மதுவிலக்கு கொண்ட குஜராத் மாநிலம் போல என்று தமிழ்நாடு மாற்றம் பெறுமோ? என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்தாலும் இதற்கான நடைமுறைச் சாத்தியம் அரசின் கைகளில் தான் உள்ளது. எனவே அடுத்தவர் குடியைக் கெடுத்துப் பணம்பெறும் குறுக்குவழியை விடுத்து வேறுவழியில் இதற்கான வருமானத்தை ஈட்ட அரசு முன்வரவேண்டும். அப்போதுதான் வளமான, நலமான தமிழர்களை உருவாக்க முடியும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
அருமையான கட்டுரை
நல்ல கட்டுரை. ஆனால் அரசங்கம் தற்போது இதை வைத்துதான் அரசங்கத்ததை நடத்துகிறது. தமிழக மக்களை ஒருப்பக்கம் அரசங்கம் இப்படி முட்டாள்களாக ஆக்குகிறது. மறுப்பக்கம் நமது ஊடகங்கள் மக்களை பொழுதுப்போக்கு என்ற பெயரில் முட்டாள்களாக ஆக்குகிறது. மொத்ததில் ஓளிமயாமன எதிர்காலம் கண்ணுக்கு எட்டிய வரையில் தெரியவில்லை.
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!