மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு

ஆச்சாரி

Aug 1, 2012

தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். அந்தத் தனிப்பண்பு என்ன என்று நீண்டநாள் சிந்தித்துப் பார்த்ததுண்டு. கடைசியில், என் சிந்தனையில், அது ஓர் எதிர்மறைப் பண்பாகத்தான் இருக்கிறது. “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்று ஒரு சொலவடை வழங்கிவருகிறது. வந்தாரை வாழவைப்பது மட்டுமல்ல, வந்தவர்கள் கலாச்சாரத்தையும் தங்களதாக ஏற்றுக்கொண்டு தங்கள் சொந்தக் கலாச்சாரத்தைக் கோட்டைவிடுவதுதான் தமிழனின் தனிப்பண்பு. 

வடமொழிக்கும் அதன் இலக்கிய இலக்கணத்துக்கும் தத்துவ வளத்திற்கும் தமிழ் எவ்வளவோ தொண்டு செய்திருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. இந்தியாவின் தலைசிறந்த தத்துவஞானிகளில் இருவர் தமிழகத்தில் தோன்றியவர்கள் (ஆதி சங்கரரும் இராமாநுஜரும்-ஆதிசங்கரர் தோன்றிய காலடி இன்று கேரளா என்று கூறப் பட்டாலும் அந்தக் காலத்தில் சேரநாடுதான்.) கும்பகோணத்திலும் காஞ்சிபுரத்திலும் இருந்த வடமொழி அறிஞர்கள் (இவர்கள் எல்லாரும் பிறப்பினால் தமிழர்கள்தான்) தமிழில் இருந்த வளமான நூல்களை எல்லாம் (அன்று சமஸ்கிருதம் இந்தியாவின் பொதுமொழி என்று கருதப்பட்டதால்) சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொடுத் தார்கள், சொந்தமாகவும் எழுதினார்கள். சாணக்கியர், பரதர் முதற்கொண்டு பல ஞானி களும் தமிழகத்தில் தோன்றியவர்கள்தான். இந்த அளவுக்கு வடமொழிக்குத் தொண்டு செய்த இனத்தைப் பார்த்துத்தான் இன்று சிலர், இனவெறி கொண்ட மக்கள் என்கிறார்கள்.  

சமசுகிருதத்துக்கு மட்டுமல்ல, விஜயநகர ஆட்சியில் இருந்ததால் கன்னடம், தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் தமிழர்கள் எவ்வளவோ தொண்டுசெய்திருக்கிறார்கள். தமிழுக்குக்கூட அவர்கள் பாடுபட்டதில்லை. மாஸ்தி வேங்கடேசரும், உள்ளூரும் தமிழர்களே அல்லவா? இப்படிப்பட்ட மக்களைப் பார்த்துத்தான் இனவெறி கொண்ட மக்கள் என்கிறார்கள் சிலர். நம் தமிழகத்து ஆர்.கே. நாராயனணையும், ஏ.கே. இராமாநுஜனையும்கூட கன்னடப் பிரதேசத்தில் வாழ்ந்ததால் அவர்கள் எழுத்தாளர்கள் என்று முறையற்ற சொந்தம் கொண்டாடுகிறார்கள் அவர்கள்.

இந்த ஏமாளித் தமிழக மக்களைப் பார்த்துத்தான் மொழிவெறி, இனவெறி பிடித்தவர்கள் என்கிறார்கள் சிலர்.  

எல்லா இன மக்களும் அவரவர் சொந்த மொழியில்தான் பெயர்வைப்பார்கள், பேசுவார்கள், பாடுவார்கள், கவிதை கதை முதலிய இலக்கியங்களை வளர்ப்பார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? எந்த ஆங்கிலேயனைப் பார்த்தாவது நீ ஜேம்ஸ் என்று பெயர் வைத்துக்கொள்ளாதே, வாஞ்சிநாதன் என்றுதான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியுமா? ஆங்கிலப் பாட்டைவிட்டு நீ இந்தியில் அல்லது ரஷ்யனில்தான் பாடவேண்டும் என்று சொல்ல முடியுமா?

ஆனால் தமிழில் பெயர் வைத்துக்கொண்டால் மட்டும், தமிழில் பேசினால் மட்டும், தமிழில் பாடு என்று கேட்டால் மட்டும் அது குறுகிய மொழி வெறியாம். இப்படிப் பட்டவர்களைப் பக்கத்திலுள்ள பெங்களூருக்கோ மைசூருக்கோ அனுப்பினால் போதும், நீ உன் மொழியில் (அங்கே கன்னடம்) பேசாதே, பாடாதே, பெயர் வைத்துக் கொள்ளாதே என்றால் போதும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விடுவார்கள்.

ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வில்லை. இதுதான் தமிழனின் தனிப் பண்பு போலும்.

அபர்ணா என்ற சொல்லுக்கு ஆடையற்றவள் என்று ஒருவர் பொருள் சொன்னால் உடனே அது பார்வதி என்ற தெய்வத்தின் பெயராயிற்றே எப்படிச் சொல்லலாம் என்று குதிக்கிறார் ஒருவர். தெய்வம் எந்த ஆடை அணிந்திருந்தது என்று அவர் போய்ப் பார்த்துவிட்டுவந்து சொல்லட்டும். தெய்வத்தை அவள் அவன் என்று கூடச் சொல்லக் கூடாது தத்‘-அது என்றே சொல்லவேண்டும் என்பதுதான் நமது வேதாந்த மரபு. “ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ” என்று இறைவனின் உருவமற்ற, நாமமற்ற, பண்புகளற்ற (நிர்க்குணத்) தன்மையைப் பாடினார் மாணிக்கவாசகர்.

அதெல்லாம் போகட்டும்; அபர்ணா கதைக்கு வருவோம். பர்ண என்றால் இலை. இலைகளால் வேயப்பட்ட குடிலைப் பர்ணசாலை என்றார்கள் (இதுவும் இலை அணிந்த வீடுதான், இலை தின்னும் சாலை அல்ல). பர்ணா-இலை உள்ளவள், இலை ஆனவள், இலையை அணிந்தவள். அபர்ணா என்றால் இலை ஆகாதவள், இலையை அணியாதவள். (இலையை உண்ணாதவள் என்று வலிந்து பொருள் சொல்கிறார்கள் இங்கே.) பழங்காலத்தில் பெண்கள் தழையாடை, இலையாடை அணிவது மரபு. இது வடநாடு முதல் தென்னாடு வரை உள்ள பழக்கம்தான். குறிஞ்சிப்பாட்டில்கூட, தலைவியும் அவள் தோழியும் சுனையில் நீராடிவிட்டு, ஆங்காங்கு கிடைத்த இலை தழைகளைக் கொய்து உடுத்திக் கொண்டார்கள் என்று ஒரு நீண்ட பகுதி வருகிறது. இவர்கள் எல்லாம் பர்ணாக்கள். அதாவது இலை அணிந்தவர்கள். அபர்ணா என்றால் இலைகூட அணியாதவள், அதனால் நிர்வாணி என்று பொருள் கொள்வதில் என்ன தவறு?

அபர்ணா என்ற பெயர் பார்வதியைக் குறிக்கும் என்பதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். பார்வதி சிவனை மணப்பதற்கு இமவான் மகளாகப் பிறந்து மன்மதன்-ரதியை அனுப்பிப் பார்த்தாள். கதை நடக்கவில்லை. தட்சன் மகளாகப் பிறந்து தாட்சாயணி ஆகியும் எரிந்துபோனாள். அதனால் கடைசியாக உணவு ஏதுமின்றி (அதாவது இலைகூட உண்ணாமல்) தவம் செய்ததால் அபர்ணா என்று பெயர் பெற்றாளாம் பார்வதி. ஒரு கனிகூட உண்ணாமல் என்றால் நாம் ஒப்புக்கொள்ளலாம். ஒரு இலைகூட (அதாவது கீரை என்று அர்த்தம் கொள்ளவேண்டுமாம்) உண்ணாமல் இருந்ததால் பார்வதி அபர்ணா ஆனாளாம்.

தமிழகத்தில் பலபேரும் பெயரின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டா பெயர் வைக்கிறார்கள்? ஏதோ வழிவழியாக வருகிறது, அவ்வளவுதான். நல்ல தேனாக இனிக்கும் தமிழ்ப் பெயர்களை வைக்கலாமே, இப்படிச் சுற்றலில் விடும் (ambiguous) வடமொழிப் பெயர்களை ஏன் வைக்கவேண்டும் என்று ஒருவர் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? தமிழ்நாட்டிலேயே தமிழ்ப் பெயர்களை வைக்கப்போவதில்லை என்றால், வேறு எந்த நாட்டில் போய் வைத்துக் கொள்ளச் சொல்வது?

Implied topic sentences some http://homework-writer.com well-organized paragraphs do not contain a topic sentence at all

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

6 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு”
  1. kondraivendhan says:

    //அபர்ணா என்றால் இலை ஆகாதவள், இலையை அணியாதவள். (இலையை உண்ணாதவள் என்று வலிந்து பொருள் சொல்கிறார்கள் இங்கே.) பழங்காலத்தில் பெண்கள் தழையாடை, இலையாடை அணிவது மரபு.//
    ஆகவே வேதாந்த விவாதங்களை குழாயடிச் சண்டை என்று வலிந்து சித்தரிக்க வேண்டாம். யார் மனமும் புன்படுதல் கூடாது.

  2. arun says:

    இது தமிழ்நாட்டில் மட்டுல் அல்ல, உலகெங்கிலும் பொருந்தும்.// கிணற்றுத் தவளை என்பதைக் காட்டி விட்டீர்கள்.
    உலகில் பல நாடுகளில் பெற்றொர்கள் தாங்கள் விரும்பும் பெயரை வைத்து விட முடியாது. அந்த நாட்டு மொழிக்கும் பண்பாட்டுக்கும் உரியதாக இருக்க வேன்டும். உதாரணம் டென்மார்க்.

    யாரும் முனகவில்லை. அவரின் கருத்தை சொல்கிறார்.

  3. செந்தில் says:

    உங்களின் பெயரே வட மொழிப் பெயர் தான் பூரணசந்திரன் என்பது முழு நிலவன் ஆவது எக்காலம்?

  4. முத்துக்குமார் says:

    அபர்ணா என்னும் பெயர் கடவுளின் (பார்வதியின்) பெயராகவும் அறியப்படுகிறது என்ற ஒற்றை வரியில் முடிக்க வேண்டியதை இப்படி குழாயடி சண்டையாக்கியிருக்க வேண்டியதில்லை.

    • கார்த்திக் says:

      ஒரு கட்டுரையே எழுதினாலும் புரியாத சில கோமாளிகளுக்கு ஒற்றை வரியில் எழுதினால் எப்படி புரியும். உங்கள் ஒற்றை வரி புரிதல் நல்ல உதாரணம்.

  5. வன்பாக்கம் விஜயராகவன் says:

    “தமிழகத்தில் பலபேரும் பெயரின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டா பெயர் வைக்கிறார்கள்? ஏதோ வழிவழியாக வருகிறது,”

    இது தமிழ்நாட்டில் மட்டுல் அல்ல, உலகெங்கிலும் பொருந்தும். பெற்றோர்கள் பொதுவாக தனக்கு பிடித்த பெயரை அல்லது ப்ரெஸ்டிஜ் பெயரை அல்லது குடும்ப மரபு பெயரை குழந்தைக்கு வைக்கின்றனர் . ப்

    இதற்கெல்லாம் முனகுவது தேவையற்றது. தமிழ்நாட்டிலேயெ பல ஜேம்ஸ்கள் இருக்கின்றனர் , அதற்கெல்லாம் ஆக்ஷேபணை சொல்வது மற்றவர்களை காரணம் இல்லாமல் கிண்டல் செய்வதாகும். தமிழ்நாட்டிலேயெ பல ஸ்டாலின்களும், லெனின்களும் இருக்கின்றனர். இரண்டும் வெளிநாட்டு அரசியல் வாதிகளின் புனைப்பெயர்கள் – நிஜப்பெயர்கள் கூட அல்ல. ஆனால் அது பெற்றோர்களின் விருப்பம் , அந்த நபர்களும் வாய்ப்பிருந்தும் பிற்காலத்தில் அந்த பெயர்களை மாற்றவில்லை.

    விஜயராகவன்.

அதிகம் படித்தது