மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழர்களின் ஊடக எதிர்த் தாக்குதல்

ஆச்சாரி

Jun 1, 2012

உலகம் முழுவதும் ஊடகங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் பெரும் மாற்றமடைந்து இருக்கின்றன. மக்களுக்கு உண்மையை கொண்டு செல்வதற்காக இயங்கிய இவை  இன்று பெரும்பாலும் வியாபார  நோக்கம் ஒன்றை  மட்டுமே குறிக்கோளாகக்  கொண்டதாக மாறி விட்டன. ஊடகங்கள் செயல்படும் முறைகளும், ஊடகங்களின் நோக்கமும், ஊடகங்களால் நேரும் விளைவின்  அளவும் உலகமயமாக்கலின் பின்னர் வெகுவாக மாறி இருக்கின்றன. நடக்கும் நிகழ்வுகளை தங்களது கருத்துக்களோடு ஊடகங்கள் சொன்ன காலம் போய், தங்களது நோக்கத்தை உருவாக்குவதற்காக நிகழ்வுகளை கற்பனையாக ஊடகங்கள் உருவாக்கும் காலம் இது. ஒரு கண்ணில் கொள்கையும், மறு கண்ணில் உண்மையும் கொண்டு  நிகழ்வுகளை கடந்த காலங்களில் ஊடகங்கள் பார்த்தன என்றால் , ஒரு கண்ணை பணத்தைக் கொண்டும், மறு கண்ணை அதிகார வர்க்கத்தைக் கொண்டு மறைத்து கொண்டும் உலகம் முழுக்க அறிந்த உண்மையைக் கூட ஊடகங்கள் பார்க்க மறுக்கும் காலம் இது. செய்தித்தாள் தினசரி படித்தால் அறிவு வளரும் என்ற காலம் போய், சில பத்திரிகைகளும், இதழ்களும் , தொலைக்காட்சிகளும் வீட்டிற்குள்  நுழைந்தாலே , அந்த வீட்டில் உள்ள அனைவரும் சிந்திக்கும் திறனற்று அடிமைச் சிந்தனையுடன் வளருவது உறுதி என்ற நிலை உருவாகி  இருக்கிறது. இப்படி ஊடகத் துறை சீர்கெட்டுக் கெடுக்கும் இந்தக் காலத்திலேயே இந்தத் துறையின் முக்கியத்துவமும் பன்மடங்கு வளர்ந்திருக்கிறது.

கடந்த நூற்றாண்டின் போர்கள் ஆயுத வளங்கள் மூலமும் , படையணிகள் மூலமும் தீர்மானிக்கப்பட்டன என்றால், இந்த நூற்றாண்டின்  போர்கள் ஊடகங்கள் மூலமாகவே தீர்மானிக்கப்படுகின்றன. படையணிகள் போர் புரிந்து பெரும் வெற்றிகளை, ஊடகங்கள் போர் புரியாமலேயே சாதிக்கும். ஒரு நாட்டின் மீது படை எடுக்காமலேயே ஆட்சி செலுத்தாமலேயே அந்த நாட்டின்  சட்ட திட்டங்களை ஊடகங்கள் மாற்ற வைக்கும். ஒரு சமூகம் நூற்றாண்டுகளாக போற்றிப் பாதுகாத்த பண்பாடு கலாச்சார மரபுகளை , எந்தக் காரணமும் இன்றி அதே ஊடகங்கள் வேறு ஒருவரின் லாபத்துக்காக வெறுத்து ஒதுக்க வைக்கும். ஒரு நாட்டின் அடிமைப்பட்ட மக்கள் நடத்தும் சுதந்திரப் போரை,  அந்த மக்களில் ஒரு பிரிவினரே   தீவிரவாதம் என நினைத்து ஒதுங்க வைக்கும். மற்ற நாட்டிற்கு சாதகமான பொருளாதார கொள்கைகளை , தங்களுக்கு இன்றி அமையாதது என நினைக்க வைக்கும்.  இந்த ஊடகங்கள் எவ்வளவு பெரிய பொய்யாக இருந்தாலும் , அதை உலகம் முழுவதும் உண்மை என நம்ப வைக்கும் ஆற்றல் படைத்தவை. இவை  இன்று வல்லரசுகளின் ஊதுகுழலாகவும், பெரு முதலாளிகளின் வியாபாரத்தை பெருக்கும் கருவிகளாகவும் மாறிவிட்டன.

உலக ஊடகங்களின் இந்தப் பொய்ப் பரப்புரைக்கு மிகப் பெரிய உதாரணம் 2003 இல் ஈராக் மீது போர்  தொடுப்பதற்கு முன்பு ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள்  இருக்கின்றன என அமெரிக்கா தலைமையிலான  கூட்டணி என பரப்பிய மிகப் பெரும் கட்டுக்கதை.  ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கிறதா என  பரிசோதனை செய்வதற்கு பொறுப்பான  ஐ.நா குழுவின் தலைவரான  ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஹான்க்ஸ் பிளிக்ஸ் ஈராக்கில் அழிவு ஆயுதங்கள் இல்லை என சொன்ன பின்னரும் இந்த ஊடகங்கள் தங்களது பொய்யைத் தொடர்ந்தன. அமெரிக்காவின் மிகப் பெரிய பத்திரிக்கையான  நியூயார்க் டைம்சில் இந்தக் கருத்தை வலியுறுத்தி கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக ஜூடித் மில்லர் என்ற பெண்மணி தொடர் கட்டுரைகளை கற்பனையாக எழுதி வந்தார். ஈராக் போர் நடந்து முடிந்து  கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்கள் கொல்லப்பட்ட  நிலையில்,  இன்று அவர் எழுதிய அத்தனையும் பச்சைப் பொய் என அமெரிக்காவின் சொந்த உளவு நிறுவனங்களாலேயே நிரூபிக்கப்பட்டு  இருக்கிறது. பத்து லட்சம் மக்கள் பலியாக காரணமாக இருந்த அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை “வேலையிலிருந்து நீக்கம்”.  பத்து லட்சம் மக்களின் சாவுக்கு ஒரு முக்கியமான காரணமான அவர் இன்று வரை  ஒரு சின்ன வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ஜூடித் மில்லர் பத்திரிகைத் துறையில் கொடுக்கப்படும் மிகப் பெரும் விருதான புலிட்சர் விருது வாங்கியவர் என்பது உலகெங்கும் ஊடகத்துறை எப்படி சீர்கெட்டு இருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு சான்று. ஒரு விதத்தில் ஈராக் இல் கொல்லப்பட்ட பத்து லட்சம் மக்களின் சாவிற்கு நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட  பத்திரிகைகள்தான் முதல் பொறுப்பு.

உலக ஊடகங்களின் நிலை இதுவென்றால் தமிழ்  ஊடகங்களின் நிலை இன்னும் படுமோசம். உலகின் ஊடகங்கள் பணத்திற்காக உண்மையை மறைக்கின்றன  என்றால் , தமிழ் ஊடகங்கள் பணத்திற்காக தமிழர்களின் உயிரையும் உரிமைகளையும் பலி கொடுப்பதில் போட்டி போட்டு செயல்படுகின்றன.  தமிழரின் அழிவே முதல் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் சில நாளிதழ்கள் பணத்திற்காக தமிழரின் அழிவை கண்டு கொள்ளாமல் இருக்க பேரம் பேசும் முன்னணி தொலைக்காட்சி  வரை இன்று தமிழர் ஊடகம் எதுவும் தமிழர் நலன் சார்ந்து இல்லை.

தமிழர் நலனுக்காவே ஆரம்பிக்கப்பட்ட சில தமிழ் நாளிதழ்கள்  கூட இன்று தமிழர் வாழ்வை விற்று பிழைக்கும் நிறுவனங்களாக மாறி விட்டன .2009 ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை உலகிற்கு கொண்டு செல்லாமல் மறைத்ததில் தமிழ் ஊடகங்களின் பங்கு மிகப் பெரியது. ஈழத்தில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்தையும், தமிழ்  ஊடகவியலாளர்கள் ஒரு பவுன் தங்கக் காசாக இலங்கை தூதர் அம்சா மூலமாக  மாற்றிக் கொண்டனர். உலகின் மிகப்பெரிய  படுகொலைகளில்  ஒன்று எந்த சத்தமும் இல்லாமல் நடந்ததற்கு ஒரு மிக முக்கியக் காரணம் தமிழ் ஊடகங்களின் இந்தப் பாராமுகம். ராஜபக்சேயை தூக்கிலிட வேண்டும் என இன்று பேசும் இந்த ஊடகங்கள் அங்கு மக்கள் செத்துக் கொண்டிருந்த பொது சத்தமில்லாமல் இருந்தன. இன்று கூடங்குளத்தில் நடக்கும் மக்கள் போராட்டத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதிலும் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் ஒருமித்து செயல்படுகின்றன.  ஒரு சில பத்திரிக்கைகளைத் தவிர. ( நீங்கள் அதன் கொள்கைகள்  அனைத்துடனுடன் உடன்படாவிட்டாலும் சரி ) தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிக்கையும் குறைந்தபட்ச ஊடக நேர்மையுடன் கூட செயல்படுவதில்லை.

ஈழப் போர்  நடந்த காலகட்டத்தில் இணைய ஊடகங்கள் மட்டும் தான் ஓரளவு உண்மையை மக்களிடம் கொண்டு சென்றன. தமிழ் உணர்வாளர்கள் பலருக்கு தமிழரின் உரிமைகள் திரும்ப கிடைக்க வேண்டுமென்றால், தமிழரின் நலனில் அக்கறை கொண்ட ஊடகங்கள் தேவை என்ற உண்மை உறைக்க ஆரம்பித்தது. இவர்களால் தமிழ் விரோத ஊடகங்களைத் தாண்டி மக்களிடம் உண்மையை கொண்டு செல்லும் பல முயற்சிகள் தொடங்கப்பட்டன. இணையம் இதற்கு ஒரு மிகப் பெரும் உதவியாக அமைந்தது. மிகக் குறைந்த வளங்கள், அரசின் அடக்குமுறை இவற்றை மீறி இன உணர்வையும், உண்மையையும் மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சிகள் இன்று ஓரளவு பலனளிக்க ஆரம்பித்து உள்ளன. தமிழக மீனவரின் பிரச்சினை savetnfisherman .org மூலமாக வெளியுலகிற்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் , சவுக்கு போன்ற இணையதளங்கள் தி.மு.க அரசின் ஊழலை வெளிக்கொண்டு வர உதவின. முகநூல் குழுக்கள் உண்மையான செய்திகளை பரிமாறிக் கொள்ளும் இடங்களாக மாறின. பெரிய ஊடகங்கள் புறக்கணித்த தமிழ் தலைவர்களின் உரைகளை தமிழ் உணர்வாளர்கள் பதிவு செய்து இணையத்தின் மூலமாக அனைவருக்கும் எடுத்து சென்றனர். தமிழ் உணர்வாளர்களின் செயல்பாடுகள் முகநூலில் பரிமாறப்பட்டு நம்பிக்கையும் விழிப்புணர்வும் வளர்ந்தன.இணையத்தில் பல செய்தியாளர்கள், கட்டுரையாளர்கள் உருவாயினர்.

இன்று பிரபல தமிழ் ஊடகங்கள் பல இந்த முகநூல் செய்திகளை தங்களது ஊடகங்களில் போடும் அளவிற்கு இவை அங்கீகாரம் பெற்று விட்டன. இந்த கால கட்டத்தில் பல்வேறு செய்தி இணையத் தளங்கள் தமிழ் உணர்வாளர்களால் தொடங்கப்பட்டன. இதில் எத்தனை, நீண்ட கால அடிப்படையில் வெற்றி பெறும் என்ற கேள்வி இருந்தாலும்  இந்தத் தளங்கள் பிரபல ஊடகங்கள் வெளியிடத் தயங்கும் உண்மைகளை மக்கள் மத்தியில் இன்று கொண்டு செல்ல பெரும் உதவி செய்கின்றன. தமிழகத்தின் கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் இந்த இணைய ஊடகங்களின் பங்கு மிகப் பெரிது. இன்று இந்த இணைய தளங்கள் மற்ற ஊடகங்களுக்கும் உண்மையை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

வருங்காலம் இவர்களுக்கு வாய்ப்புக்களையும், சவால்களையும் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இன்று நியூயார்க் டைம்ஸ் , வாஷிங்டன் போஸ்ட் போன்ற உலகப் புகழ் பெற்ற ஊடகங்களின் முக்கியத்துவம் குறைந்து , சாமான்யர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஹுப்பின்ட்டன்போஸ்ட் (huffintonpost ) போன்ற   இணைய ஊடகங்களின் முக்கியத்துவம் வெகுவாக அதிகரித்து இருக்கிறது.  இவை மக்களிடம் உண்மையான செய்திகளை  கொண்டு செல்வதில் இன்று முன்னணியில் இருக்கின்றன. ஜூலியன் அசங்கே ஆரம்பித்த விக்கிலீக்ஸ்  கிட்டத்தட்ட உலக முழுவதும் பேசப்படும் ஊடகமாக மாறி விட்டது.   இவை நமக்கு நம்பிக்கையைத்   தருகின்றன. அதே நேரத்தில் அரசின் அடக்குமுறை, இணையத்தின் மீதான கட்டுப்பாடுகள் ,பொருளாதார பிரச்சினைகள் போன்றவை இந்த ஊடகங்களின் முன்னே உள்ள மிகப் பெரும் சவால்கள். உதாரணமாக  ஜூலியன் அசங்கே  மீது அமெரிக்கா நடத்திய உளவியல் போருக்கு கிட்டத்தட்ட ஒரு நாட்டின் மீது படை எடுப்பதற்கு செலவாகும் வளங்கள் பிரயோகிக்கப்பட்டன. இது இந்த ஊடகங்கள் எந்த அளவு எதிர்ப்புக்களைத் தாண்டி செல்ல வேண்டி இருக்கும் எனத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் ஒரு பெரும் செய்திக் கட்டமைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு ஒவ்வொரு தமிழ் இணையத்திற்கும் இருக்கிறது என்பதை தமிழ் ஊடகங்கள் உணர்ந்து நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். தமிழர்கள் இந்த விடயத்தில் தமிழ் ஊடகங்களுக்கு முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும். ஒவ்வொரு தமிழனும் நமக்கான ஒரு வலுவான ஊடகத்தின் அவசியத்தினை உணர்ந்து அதை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.  நமக்கான  ஊடகம் இல்லையேல்   நமக்கான வாழ்வும் இல்லை.

https://www.pro-essay-writer.com/


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தமிழர்களின் ஊடக எதிர்த் தாக்குதல்”
  1. kondraivendhan says:

    இணையம் சார் மக்களின் தொடர்பில், இனிமேல் தினமலங்கள் மலம் கழிக்க முடியாது. தின மனிகள் மனி அடிக்க முடியாது. இது மெதுவாக ஏற்படும் காலமாற்றத்தின் கட்டாயம்.

  2. Rajkumar Palaniswamy says:

    வாழ்துகள் பிரபு கண்ணன். அருமையான கட்டுரை. தமிழர்கள் அவசியம் இதை பற்றி சிந்திக்க வேண்டும்.

அதிகம் படித்தது