தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான துடும்பும்- வாசிக்கும் கலைஞர்கள் நிலையும்
ஆச்சாரிNov 30, 2013
துடும்பு – இதன் பொருள் குட்டிக்கும்பிடு, குடியெழுப்பு, குடுமியைப்பிடி, போன்ற பல அர்த்தங்களைக் கொண்டது. இந்தத் துடும்பு என்ற வார்த்தையின் பேரில் பழம்பெரும் தமிழர்களின் பிரபலமான இசைக்கருவி ஒன்று உள்ளது. இவ்விசைக் கருவியைக் காண்பதற்கு பெரும் போர் முரசு போல இருக்கும். இந்த இசைக்கருவியின் சிறிய வடிவத்தை “தமுக்கு” என மதுரை வட்டார வழக்கில் அழைக்கின்றனர். ஊட்டியிலுள்ள கண்ணார்பாளையம் என்ற கிராமத்தில் இக்கருவியைத் “துடும்பு” என அழைக்கின்றனர். துடும்பை இசைக்கும் போது டும் ,டும் எனப் பெரும் ஒலி எழுவதால் இதைப் பேச்சு வழக்கில் துடும்பு என்ற பெயர் பெற்றது எனக் கூறுவோரும் உண்டு.
தமுக்கு என்பது பெரும்பாலான கிராமங்களில் இடுப்பில் கட்டிக்கொண்டு ஒரு முக்கியச் செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் முன் தண்டோரா போடப் பயன்படும் ஒரு இசைக்கருவியாகும். இந்தத் துடும்பு என்பது பெரிய முரசு போல் இருக்கும் இந்த இசைக்கருவியை இடுப்பில் கட்டிக்கொண்டு, அரசர்கள் வேட்டையாடக் கிளம்புவதற்கு முன் வழியனுப்ப வாசிக்கப்படும் ஒரு இசைக்கருவியாகும். இவ்விசைக் கருவியை வாசிக்கும் பெரும்பாலான மக்கள் மலைவாழ் இடங்களில் குடியிருந்ததால், அம்மலையில் இருந்து மக்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் கொடிய விலங்குகளை விரட்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அரிய இந்த இசைக்கருவியை அடித்தும், ஆடியும் தமிழகத்தில் மட்டுமல்லாது உலக அளவில் பிரபலப்படுத்தி வரும் துடும்பு வாசிக்கும் சாமிநாதன் என்பவர் இத்துடுப்பு பற்றியும், இதைக்கொண்டு அவர் நிகழ்த்தும் கலை விழாக்கள் பற்றியும் கூறுவதை இனிக் கேட்போம்..
ஊர் சிறப்பு:
எனக்குச் சொந்த ஊர் கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் என்ற நகராட்சியிலுள்ள காரமடை என்ற கிராமத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள கண்ணார்பாளையம் என்ற குக்கிராமம். 500 ஓட்டு வீடுகளைக் கொண்ட எங்கள் பகுதியானது ஊட்டி மலைக்கு அடியில் உள்ள எங்கள் பகுதியில் கனகாம்பரம், ஜாதிமுல்லை,மல்லிகை என்று பூக்கள் எடுக்கும் வேலைக்குச் செல்வர் பெண்கள். எங்கள் பகுதி ஆண்கள், கறிவேப்பிலைக்குலை வெட்டி சந்தைக்கு ஏற்றுமதி செய்தல், வாழை, கரும்புக்கு நீர் பாய்ச்சும் வேலை செய்து வருகின்றனர். இன்னும் சில இளைஞர்கள் கோவை உட்பட தமிழ்நாட்டில் உள்ள பிற பகுதிகளுக்குச் சென்று Marble, Tiles ஒட்டுவது, கட்டிட வேலை, Welder, Mechanic போன்ற பணிகள் செய்து பிழைத்து வருகின்றனர்.
விவசாயத் தொழிலையே பிரதானமாகக் கொண்ட எங்கள் ஊரில் நான் விவசாயம் பார்ப்பதோடு இந்தத் துடுப்பு இசை இசைக்கும் பணியையும், ஒரு குழுவாக இருந்து செய்து வருகிறேன். திருமணம், ஊர்த்திருவிழா, மட்டைப்பந்து, அரசு நிகழ்ச்சிகள், தனியார் பள்ளியில் நடக்கும் ஆண்டு விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு இத்துடும்பை வாசித்துப் பிழைத்து வருகிறோம்.
எங்களின் கிராமத்தைக் கடந்துதான் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் போன்ற சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல முடியும். சென்னையில் உள்ள தங்கக் கடற்கரைத் தளம் போல எங்கள் கிராமத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் “பிளாக்தண்டர்” என்ற சுற்றுலாத்தளம் உள்ளது. மதுரைக்கு மல்லி, திருப்பதிக்கு லட்டு, நெல்லைக்கு அல்வா போன்று எங்கள் ஊரின் சிறப்பு முறுக்கு வியாபாரம்.
துடும்பு வரலாறு:
கொங்கு மாவட்டத்திலுள்ள பிரபலமாகப் பேசப்படும் ‘அண்ணன் மார்கதை’ என்ற பொன்னர்-சங்கர் என்பவர்களின் கதை நிகழ்ந்தது இப்பகுதியில்தான். இவர்கள் ஊட்டி மலைவாழ் பகுதியில் வாழ்ந்ததால் வேட்டையாடும் பழக்கம் இவர்களுக்கு இருந்தது. இவர்கள் வேட்டைக்குப் புறப்படத் தயாராக இருக்கும் போது துடும்பு இசைக்கருவி வாசித்து வேட்டைக்கு வழியனுப்பி வைக்கும் பழக்கம் இருந்தது. இவர்கள் வேட்டைக்குச் செல்லும் முன் துடும்பு வாசித்து வழியனுப்பி வைத்தவர், பொன்னர் சங்கர் கதையில் வரும் சாம்புகன் என்பவரே. இவர் துடும்பு வாசித்ததால் இந்த இசைக்கருவியின் பெயரிலேயே துடும்பாஸ், துடும்பர் என்று எங்கள் இன மக்கள் அன்று அழைக்கப்பட்டனர்.
இந்த துடும்பாஸ், துடும்பர் இனத்தின் வழித் தோன்றலாக கடைசியாக இன்று துடும்பு வாசிக்கும் இனமே அருந்ததியர் இன மக்களாகிய நாங்கள் தான். இந்தத் துடும்பை பொன்னர் சங்கர் காலத்திற்குப் பின் வாசித்து வந்த எங்கள் முன்னோர்கள், எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஊட்டி மலையிலிருந்து உணவு தேடி கீழிறங்கி வரும் காட்டு மிருகங்களை விரட்டுவதற்காகத் துடும்பு வாசித்து வந்தனர். எங்களின் பாட்டன், பூட்டன் காலத்தில் இவ்வாறு இருந்தது. தற்போது எங்கள் தலைமுறையில் உள்ள இளைஞர்களாகிய நாங்கள் இதை வெகுஜனமக்களிடம் எடுத்துச்சென்று கொண்டிருக்கிறோம். எங்களின் பூர்வீக இன மக்கள் பிழைப்பு தேடி தமிழகத்திலுள்ள மேட்டுப்பாளையம், ஈரோடு, பொள்ளாச்சி, பழனி, கேரளா, பாண்டிச்சேரி, சென்னை போன்ற பகுதிகளுக்குப் பிரிந்து சென்று பல்வேறு கூலி வேலைகள் செய்து பிழைத்து வருகின்றனர்.
கண்ணார்பாளையமான எங்கள் ஊரில் மதுரைவீரன், பட்டத்தரசி அம்மன் என இருக்கும் இந்த இரு தெய்வங்களே எங்களின் குலசாமி ஆகும். வருடத்தில் 15 நாட்கள் நடக்கும் இச்சாமி திருவிழாவின்போது நாங்கள் துடும்பு இசையை சாமி இறக்குதல் உட்பட பல்வேறு சடங்குகளுக்கு வாசிக்கிறோம்.
துடும்பின் வீச்சு:
1994-ஆம் ஆண்டு காரனோடைத் தேர்த்திருவிழாவானது மிகப்பிரபலமாகக் கொண்டாடப்பட்டது. 7 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் பல்வேறு ஊர்களில் இருக்கும் எங்கள் சாதி,சன மக்கள் வழிபட இந்தத் திருவிழா நாட்களில் தான் வருவர். இத்திருவிழாவிற்கு என் அப்பா அவர்களுடன் இணைந்து சிறுவயதிலேயே துடும்பு வாசித்தபோது, சென்னையைச் சேர்ந்த நா.முத்துச்சாமி அவர்கள் நடத்தும் கூத்துப்பட்டறை என்ற பிரபலமான நாடகக் குழுவில் உள்ள, கூத்துப்பட்டறைக் கலைஞர்களான ஜெயராவ் (தியேட்டர் லேட் நாடகக் குழு இயக்குனர்), குமரவேல், ராஜரகுவர்மா, கர்ணபிரசாத், நடிகர் பசுபதி, கலைராணி (முதல்வன் படத்தல் அர்ஜூனுக்கு அம்மாவாக நடித்தவர்), சந்திரா (நண்பன் படத்தில் நடிகர் ஜீவாவிற்கு அம்மாவாக நடித்தவர்) போன்ற நாடகக்கலைஞர்கள் ஊட்டிக்கு ஒரு நிகழ்ச்சிக்காகப் பயணம் செய்த போது, எங்களின் துடும்பு வாசிப்பைக் கண்டு வியந்து எங்கள் நாடகத்தில் இந்தக் கருவியைப் பயன்படுத்த முன் வந்தனர். முடிந்தால் எங்களோடு சென்னை வந்து கூத்துப்பட்டறைக் கலைஞர்களுக்கு இதைப் பயிற்றுவியுங்கள், நாங்கள் இதை வாசிக்க ஆவலாக இருக்கிறோம் என இவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க என் அப்பாவோடு சிறுவனாக இருக்கும்போது முதன்முதலாகச் சென்னைக்கு வந்தேன்.
1994- சென்னை மக்கள் அறியாத, பார்க்காத இந்த இசைக்கருவியை நாங்கள் தான் அறிமுகப்படுத்தினோம். கூத்துப்பட்டறையில் உள்ள பல கலைஞர்கள் இதைக்கற்றுக் கொண்டு நா.முத்துச்சாமி அவர்களின் நாடகத்தில் இதைப் பயன்படுத்தினர். இந்நாடகத்தைக் கண்ட பல எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் எங்களுக்கு திரைப்பட வாய்ப்பைக் கொடுத்து உலகறியச் செய்தனர்.
சென்னைக்கு அருகே உள்ள செய்யாறு என்ற ஊரில் இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு கூத்துக்கலையை பல தலைமுறையாக கற்றுக்கொடுத்து வரும் கண்ணப்பத்தம்பிரான் என்ற மகாகூத்துக்கலைஞன் வாழ்ந்த புரிசை என்ற கிராமத்தில் எங்களின் துடும்பாட்டம் அரங்கேறியது. அப்போது நான் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனாக இருந்தேன். இருந்தாலும் என் அப்பா சண்முகம் அவர்களோடு மேடையில் துடும்பை சிறப்பாக வாசித்தேன்.
துடும்பிற்குக் கிடைத்த வாய்ப்பு:
இந்தத் துடுப்பு இசையைக் கேட்ட, பார்த்த பல பிரபலங்கள் எங்களை பல்வேறு மேடைகளில் ஏற்றி அழகு பார்த்தனர். சென்னை அண்ணா நகரில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி பள்ளி, சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி, பாண்டிச்சேரி ஜவஹர் நவோதயா வித்யாலயாபள்ளி, தூய நெஞ்சக்கல்லூரி திருப்பத்தூர் போன்ற தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு என் அப்பா இடத்தில் இன்று நான் இருந்து இத்துடும்பை வாசிக்கவும், வாசித்துக் கொண்டே ஆடவும் பயிற்றுவித்து வருகிறேன்.
துடும்பின் கலைப்பயணம்:
“லயா” என்ற ஒரு இசை ஆல்பத்திற்காக யோத்தம் என்பவர் எங்களைத் தயார்ப்படுத்தி, எங்களின் துடும்பு இசையை வாசிக்க வைத்து அந்த ஆல்பத்தில் வெளியிட்டார். இவரோடு கற்றது களவு, கிழக்கு கடற்கரைச் சாலை படத்தின் இசையமைப்பாளர் பால்ஜேக்கப் என்பவரும் எங்களை படத்தில் வாசிக்க வைத்து வாய்ப்புத் தந்தார். இந்த லயா ஆல்பம் நேரடியாக மக்கள் மத்தியில் மேடையேறியது. இம்மேடையில் நாங்கள் வாசித்த துடும்பாட்டத்தைக் கண்டு மேலும் பல நாடுகளுக்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்த இவர்கள் எங்கள் குழுவை அழைத்துச் சென்றனர். இதன் வழியாக டெல்லி, மும்பை, இஸ்ரேல், சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மேடை நிகழ்ச்சி செய்து பெரும்பேர் பெற்று விளங்கினோம்.
இதன் பின் சென்னையில் குழந்தைகளுக்காக நடத்தப்படும் “நளந்தாவே டிரஸ்ட்” என்ற தொண்டு நிறுவனத்தின் நிதிக்காக “ஆர்ட், அரட்டை, ஆர்ப்பாட்டம்” என்ற தலைப்பில் ஒரு இசைநிகழ்ச்சி நடத்தினர். இதில் பிரபல டிரம்ஸ் கலைஞரான சிவமணி என்பவருடன் இணைந்து துடும்பு வாசித்தோம்.
2012-ம் ஆண்டு மகாசிவராத்திரி அன்று பிரபல கடம் வித்வான் விநாயக்ராம் அவர்களின் 3 வது மகனான மகேஸ் விநாயகத்தோடு நாங்களும் இணைந்து “மகா சிவராத்திரி கலைநிகழ்ச்சி” யை மிக விமரிசையாக நடத்தினோம். சோவ் ஸ்பேஸ் பிரைவேட் லிமிடேட் (Show space private limited) என்ற நிறுவனத்துடன் இணைந்து பிரபல அலைபேசி நிறுவனமான நோக்கியா நடத்திய “வெற்றி நிச்சயம்” என்ற கலைநிகழ்சியை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தபோது எங்களின் துடும்பாட்டம் அதில் சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. 2011,12,13 ஆகிய வருடத்தில் சென்னையில் நிகழ்ந்த மட்டைப்பந்து போட்டிக்குச் சென்னை அணியை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் நாங்கள் துடும்பு வாசிக்க வந்தோம். மேலும் கடந்த 5 வருடமாக “சென்னைச் சங்கமம்” என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று வாசித்தோம். கோவையில் நிகழ்ந்த செம்மொழி மாநாட்டிலும் எங்கள் துடும்பாட்டத்தை மேடை ஏற்றினோம்.
துடும்பு இசைக்கருவி விளக்கம்:
இந்தத் துடும்பாட்டத்தில் நான்கு விதமான இசைக்கருவிகளை இணைத்து வாசிக்கிறோம். முதலாவது பெரிய முரசு போல் இருக்கும் இந்த துடும்பிற்குப் பெயர் நகாரி. இதுவே இந்த துடும்பு இசைக் கருவிக்கெல்லாம் பெரும் அதிர்வு கொடுக்கக் கூடிய இசைக்கருவி. இதை இடுப்பில் கட்டி தூக்கி அடிக்க முடியாது. தரையில் வைத்து இதன் இருபுறத்திலும் இரண்டு கால்களை அண்டக்கொடுத்து ஒரே இடத்தில் நின்றும், குனிந்தும் வாசிக்கக் கூடியது. இந்த நகாரி இசைக்கருவியில் 3-ல் 1 பங்காக இருக்கும் சிறிய இசைக்கருவியை ‘உருட்டு’ என்போம். இக்கருவியை இடுப்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டு வாசிப்போம். மூன்றவதாக இருக்கும் இசைக்கருவிக்குப் பெயர் ‘தாசரா’ இக்கருவி ஆகும். இது பெரும் எரிச்சல் தரக்கூடிய ஒரு பக்கவாத்திய இசைக்கருவியாகும். சென்னையில் உள்ளவர்கள் இதைச் சாவுக்கு வாசித்து வருகின்றனர். இந்த மூன்று இசைக்கருவியையும் இணைத்து ஒரே நேரத்தில் இசைக்கும்பொழுது கேட்பவர்கள் உடல் தானாக ஆடத்தொடங்கிவிடும். இந்த 3 இசைக்கருவியோடு இறுதியாக “மொரக்கோஸ்” என்ற பக்கவாத்திய இசைக்கருவியையும் இதனோடு சேர்த்து வாசிப்போம். ஒரு சொம்பினுள் கோலிக்குண்டுகளைப் போட்டு குலுக்கினால் என்ன சப்தம் வருமோ அந்த இசையை வெளிப்படுத்தும் கருவியே மொரக்கோஸ் என்ற இசைக்கருவியாகும்.
துடும்பின் தாள வகை:
எங்களின் முன்னோர்கள் இந்த 4 வகையான இசைக்கருவியை மீட்டு 10 வகையான தாள அடிகளையே இசைத்து வந்தனர். இந்த 10 வகை அடிகளாவன 1.சேவையடி, 2.ஓரடி, 3.மூனடி, 4.அஞ்சடி, 5.ஒத்தையடி, 6.அடதாளம், 7.சவாரி அடி, 8.காவடி அடி, 9.ஏழடி, 10. பனிரெண்டடி. தற்போது நான் இந்தப் பழைய 10 அடிகளைத் துடும்பில் வாசித்ததோடு மட்டுமல்லாது நானே புதிதாக 5 அடிகளைக் கண்டுபிடித்து வாசித்து வருகிறேன்.
இந்தத் துடும்பைத் தூக்கிக்கொண்டு எங்கள் முன்னோர்கள் ஒரே இடத்தில் நின்று இசைத்தனர். ஆனால் நாங்கள் இதற்கு மாறாக இசைக்கருவியை இசைத்துக் கொண்டே ஆடும் வகையை இந்த துடும்பாட்டத்தில் தற்போது புகுத்தியுள்ளோம். இவ்வாறு துடும்பாட்டம் ஆட வேண்டும் என்றால் இதற்கு 20 கலைஞர்கள் துடும்பை இசைக்க வேண்டும், 20 ஆடல் கலைஞர்கள் இசைக்கருவி இல்லாமல் நின்று ஆடவேண்டும். இந்த முறையில் 40 கலைஞர்கள் மேடையில் நின்று நிகழ்ச்சி செய்யும் போது பார்ப்பதற்கே மிகப்பிரமாண்டமாக இருக்கும்.
துடும்பாட்ட கலைஞர்களின் சமூக பிரச்சனை:
●எங்களுக்கு இந்தத் தமிழ்ச் சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர் என்ற முத்திரை ஒரு புறம் இருந்தாலும் மேலும் பல்வேறான சிக்கல்களை நாங்கள் சந்தித்து வருகிறோம். அவைகளாவன . . .
* இந்த இசைக்கருவிகளைத் தூக்கிக்கொண்டு ஒரு இடத்திற்கு நிகழ்ச்சி செய்ய நாங்கள் பேருந்தில் ஏறினால், நடத்துனர் எங்களை அனுமதிக்க மறுக்கின்றனர். ஆதலால் தனி வாகனம் பிடித்தே நாங்கள் பயணப்பட வேண்டி உள்ளது. இதனால் எங்கள் சம்பளத்தில் பெரும்பகுதி தனி வாகனத்திற்கே போய்விடும்.
● 500 வருடம் பாரம்பரியம் உள்ள இந்த இசைக்கலையை வாசித்து வரும் எங்களின் சேரன் துடும்பாட்டக் கலைக்குழுவிலிருந்து இதுவரை எவருக்கும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ‘கலைமாமணி’ விருதை வழங்கியதில்லை. காரணம் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் வாசிக்கும் துடும்பு, பறை கலைஞர்களுக்கு இந்த விருதை இதுவரை வழங்கப்பட்டு எவரும் கௌரவிக்கப்படவில்லை.
● நலிந்த அல்லது வளர்ந்து வரும் நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு அரசால் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையானது எங்களில் இதுவரை எவருக்கும் கிடைத்ததில்லை.
● எங்கள் ஊரில் கவுண்டர் இன மக்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இவர்கள் வீட்டில் நடத்தப்படும் சுப நிகழ்ச்சிகளுக்கு துடும்பு வாசிக்க நாங்கள் போனால் கூலியாக எங்களுக்கு 4 (புல்) பாட்டில் மது கொடுப்பார்கள், பணம் எதுவும் தரமாட்டார்கள். மேலும் இவர்கள் எங்களையும், எங்களின் பாரம்பரிய இந்த துடும்பாட்டத்தையும் மதிப்பதில்லை.
துடும்பு இனி:
● இந்தத்துடும்பை வாசிக்கும் எங்களில் பாடும் ஆறு, பத்தாம் வகுப்பைத் தாண்டியதில்லை. படிக்காத நாங்கள் மட்டுமே வாசிக்கும் இந்தக் கலை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசால் கற்றுக்கொடுக்கப்படவேண்டும். இதன் மூலம் எங்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை இந்த அரசு அமைத்துத் தரவேண்டும். இந்தத் துடும்பு வரலாற்றை அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ளும்படி புத்தக வடிவில் வெளிவர வேண்டும்.
● துடும்பை மட்டுமே நம்பி நாங்கள் மற்ற வேலைக்குப் போவதில்லை. 6 மாதம் எங்களுக்கு நிகழ்ச்சி இல்லை என்றாலும் சும்மாவே இருப்போம். அதனால்தான் எங்கள் நிலை அறிந்து அரசு உதவ முன்வர வேண்டும்.
● இந்தத் துடும்பை வெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் சொந்தங்களும் அறிந்து கொள்வதோடு அவர்களும் கற்றுக்கொண்டால் நம் தமிழரின் பாரம்பரிய இக்கலை உலக அளவில் தெரியவரும்.
● ஆர்வமாக இருப்பவர்களுக்கு இந்தத் துடும்பாட்டத்தை நாங்கள் 1 மாதத்திலே கற்றுக்கொடுத்து விடுவோம்.
இசைக்கருவியின் தோல் விபரம்:
1.நாகரி (பெரிய முரசு) – காளை மாட்டுத்தோல்
2.உருட்டு - பசுமாட்டுத்தோல்
3.தசாரா – ஆட்டுத்தோல்
4.மொரக்கோஸ் – ஒரு சொம்பு – 10 இரும்புக்குண்டுகள் (அ) கோலிக்குண்டுகள்.
வாசிக்கும் (அடிக்கும்) கோல்:
நாகரி, உருட்டு, தசாரா என்ற மூன்று வகை இசைக்கருவிகளையும் அடித்து வாசிக்க பால்மரக் கோல்களையும், பலாமரக் கோல்களையுமே நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த மரக்கோல்களை அடிக்கப்பயன்படுத்தினால் துடும்புதோல் எளிதில் உடையாது, மற்ற மரக்கோல்களைப் பயன்படுத்தினால் துடும்பின் தோல்கள் கிழிந்துவிடும்.
தமிழர்கள் காலம் காலமாய் பல கலைகளை காத்து வருவது போல் அரசும், பொது மக்களும் முயன்றால் தமிழர்களின் பாரம்பரிய இக்கலையையும், இக்கலையை நிகழ்த்தும் எங்களையும் காக்கலாம்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான துடும்பும்- வாசிக்கும் கலைஞர்கள் நிலையும்”