மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழர்களுக்குத் தேவை ஒரு உண(ர்)வுப் புரட்சி

ஆச்சாரி

Dec 21, 2013

“உணவே மருந்து மருந்தே உணவே” என்ற கொள்கையை வகுத்தவர்கள் நமது சித்தர்கள் . “உணவின்றி அமையாது உடம்பு” என்ற உண்மையை உரைத்தவர்கள் சித்தர்கள். “அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்” என அறைகூவல் விடுத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் தமிழ் மரபு முறைப்படி வாழ்ந்தவர்கள். சித்தர்களின் ஞான தீட்சையால் நடைபயின்றது சித்த மருத்துவம்.

உலகில் எத்தனையோ இனங்கள், மொழிகள் தோன்றி வளர்ந்திருந்தாலும், அவரவர்களுக்கென பிரத்தியேக, அல்லது சொந்தமான மருந்துவமுறைகளைக் காண்பதரிது. ஆனால் உலகையே ஆளும் வல்லமை கொண்ட தமிழனுக்கு “சித்த மருத்துவம்’ என்ற சிறப்பான ஆயுதம் உண்டு என்பதை எவரும் மறந்துவிடவேண்டாம்.

இலை, வேர், பட்டை, பூ, காய், கனி, போன்ற தாவர வர்க்கங்களையும், முத்து, சிப்பி, நண்டுகல், பவளம், ஆமைஓடு, சிருங்கி என்னும் மான்கொம்பு போன்ற ஜீவ வர்கங்களையும், தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, போன்ற தாது வர்க்கங்களையும் , மானுட உடம்புக்கு ஏற்றவகையில் மருந்துகளாய் மாற்றும் வல்லமை கொண்டவர்கள் நம் சித்தர்கள்.

இன்றைய விஞ்ஞானம் இப்பொழுதான் “NANOTECHNOLOGY”- என்னும் துறையில் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் எம் சித்தர்கள் அப்பொழுதே “NANOTECHNOLOGY”-யை தங்களது மருந்துகள் செய்யும்  வல்லமையில் பயன்படுத்தியவர்கள். “NANOTECHNOLOGY”- சொல்லும் “நுண் துகள் தத்துவத்தை பற்பல  செந்தூரங்களில் பயன்படுத்தியவர்கள் எம் சித்தர்கள்.

“NANOTECHNOLOGY”- யின் முதல் மாநாடு இந்திய அளவில் நடந்த பொழுது அதில் கலந்து கொண்ட nano- விஞ்ஞானிகள் ஒரு மிகச் சிறந்த கருத்தை வெளியிட்டார்கள்.

“தங்கத்தை மிக நுண்ணிய துகள்களாகப் பகுத்து, அதை மருந்தாக மாற்றி நாள்பட்ட உயிர்கொல்லி நோய்களுக்குக் கொடுக்கும் போது, அது மிகச் சிறப்பாய் செயல்பட்டு, நோய் குணமாக உதவுகின்றது” என்று அந்த கருத்தரங்கிலேயே குறிப்பிடுகிறார்கள்.

“அதனால்தான் நம் பண்டைய தமிழ் மரபு சித்தர்கள் தங்கத்தை பஸ்பமாக்கி நோய்களுக்குக் கொடுத்து குணமாக்கி வந்துள்ளனர் போலும்” என்றும் மேலும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதிலிருந்து சித்தர்களின் நுண்கதைத் தத்துவம் நமக்கு புரியும் என்று நம்புகிறேன்.

ஆயுர்வேத மருத்துவ முறையை விட, சித்த மருத்துவத்தில்தான் தாது, ஜீவ வர்க்கங்களை மருந்துகளாக்கும் அறிவியல் உள்ளது என்பது இன்றைய சித்த மருத்துவர்களுக்கெல்லாம் பெருமையான விடயமாகும். ஆயுர்வேத மருத்துவ முறையில் இல்லாத “பாஷாண மருத்துவம்” நம் சித்தர்களுக்கே சொந்தமான விடயம்.

தமிழ்ச் சித்தர்களில் ஒருவரான போகர் பழனியில் அருள்மிகு தண்டாயுத பாணி சிலையை நவபாஷாணத்திலேயே நிறுவியவர். நவபாஷணம் என்பது, வீரம், பூரம், துருசு, மிருதார்சிங்கு, பாதரசம், லிங்கம், கெளரிப்பாஷாணம், மனோசிலை ஆகிய மூலிகைகளால் ஆனது. நவபாஷாணத்தால் சிலைவடித்து, நவபாஷணம் உமிழும் அணுக்கதிர் வீச்சு, அப்பகுதி வாழ்மக்களை ஆரோக்கியமாக வாழச்செய்தது. நவபாஷாணம் சிலை உள்ள பகுதிகளில் நல்ல மழையும், வளமும் உண்டாயிற்று. போகர் வடித்து நவபாஷாண சிலைக்கு பாலபிஷேகம், நெய், விபூதி, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து , அந்த அபிஷேகத்தைப் பிரசாதமாகச் சாப்பிடும்பொழுது சாதாரண நோய்கள் முதல் கடுமையான நோய்கள் வரை குணமானதை அனைவரும் அறிவர்.

அதேபோல் Alchemy எனப்படும் இரசவாதக்கலையைக் கொண்டு, ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாய் மாற்றும் வல்லமையைக் கொண்டவர்கள் சித்தர்கள். இரும்பைத் தங்கமாக்கும், கலையைக் கொண்டவர்கள் சித்தர்கள். நம் சித்தர் பெருமக்கள் மரபு வழியில் வந்த சமீபத்தில் வாழ்ந்து ஜீவஜோதியாய் ஆன வள்ளலார் இராமலிங்க அடிகளார் இரும்பைத் தங்கமாக்கிய பேர் பெற்றவர்.

இந்திய மருத்துவமுறை என்பது சித்தமருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளை உள்ளடங்கியது. இந்திய மருத்துவ முறைகளிலேயே மிகச்சிறந்தது சித்த மருத்துவம் எனலாம்.

மற்ற மருத்துவ முறைகளெல்லாம் தாவர, ஜீவ, வர்க்க மருந்துகளிலேயே முடிந்துவிடும் நிலையிலேயே உள்ளது. ஆனால் சித்த மருத்துவம் மட்டும்தான் தாது வர்க்கங்களையும் பாஷாண மருத்துவ முறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது மறுக்க முடியாத உண்மை.

ஆயுர்வேத மருத்துவ முறைகளில் தாதுவர்க்கங்கள் பற்பமாக்கப்பட்டாலும், சித்த மருத்துவ அடிப்படையில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு இணையேதும் இல்லையென்று சொல்லலாம்.

எண்ணற்ற பெருமைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும், சித்த மருத்துவம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளரமுடியாமல் தத்தளிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

உலோகங்கள் அடிப்படையில் தயார் செய்யப்படும் சித்த மருந்துகள் நமது உடம்பில் சிறுநீரக நோயை தோற்றுவிப்பதாய் நவீன மருத்துவர்களில் சிலர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அது உண்மையல்ல ஒரு குறிப்பிட்ட உலோகத்தை அப்படியே தூள் செய்து நோயாளிகளுக்கு கொடுப்பதாய் அவர்கள் தவறாக எண்ணுகிறார்கள்.

சித்த மருத்துவத்திற்கென தனி வேதியியல் அதாவது சித்த வேதியியல் சித்தர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கைதேர்ந்த மருத்துவர்களால் செய்யப்படும் மருந்துகள் பூரண நலம் தருமே ஒழிய பக்க விளைவுகள் எதையும் தராது.

ஒரு குறிப்பிட்ட உலோகத்தை வரையறுக்கப்பட்ட மூலிகைச் சாறுகளினால் அரைத்து நுண் துகள்களாக மாற்றி, உலோகத்தின் தன்மையினை மூலிகைச்சாற்றுக்கு ஏற்றி, புடமிட்டு, பஸ்பமாகவோ அல்லது செந்தூரமாகவோ ஆக்கி குறிப்பிட்ட அளவு தக்க அனுபானத்துடன் தரும் பொழுது நோய்கள் அதிசயத்தக்க அளவில் குணமாகும். எனவே இனி பற்ப, செந்தூரங்கள் பற்றிய தவறான மதிப்பீடு மற்ற மருத்துவமுறை மருத்துவர்களுக்கு வேண்டாம்.

மேற்கத்திய மருத்துவர்கள் நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தை இழிவு படுத்துவதையே குறிக்கோளாய் கொண்டுள்ளனர். சமீபத்தில் கூட திரு.பி.ஏ.கிருஷ்ணன்  என்கிற பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிற ஒருவர் நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் பயனற்றது என்ற பாணியில் “ தி- இந்து” நாளிதழில் கட்டுரை எழுதியிருந்தார். அவரின் கருத்துகள் சிறுபிள்ளைத்தனமானது.  அவர் கருத்துகளை மறுத்து எமது சித்த மருத்துவ வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்து பாடுபட்டு வரும் சித்த மருத்துவர் திரு.கு.சிவராமன் அவர்கள், அதே நாளிதழில் தனது மறுப்புரையை எழுதி சித்த மருத்துவத்தின் மேன்மையை உலகறியச் செய்தார்.

சென்ற ஆண்டு தமிழகத்தை வெகுவாக டெங்கு காய்ச்சல் வெகுவாக ஆட்கொண்டதையும் அதனால் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்வையும் நாம் அனைவரும் அறிவோம். அத்தருணத்தில் நவீன மருத்துவம் டெங்குவைக் கட்டுப்படுத்த திணறிக் கொண்டிருந்ததையும் நாம் அறிவோம். கடைசியில் சித்தர்கள் அருளிய “நிலவேம்பு குடிநீர்” அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்,தமிழக அரசின் அனுமதியுடன் வழங்கப்பட்டு தமிழக அரசாலேயே விளம்பரப்படுத்தப்பட்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டதையும் நாம் அனைவரும் அறிவோம். எனவே தேவையில்லாமல் பாரம்பரிய மருத்துவ முறைகளை குறைகூறுவதை நிறுத்திக்கொண்டு, தங்கள் துறை சார்ந்த ஆய்வுகளை முழுமையாக நடத்துவார்கள் என்று நம்புவோம்.

பல்லாயிரக்கணக்கான மூல நூல்களையும், ஓலைச்சுவடிகளையும் தரமான துறை ஆய்வுகளையும் உள்ளடக்கியது நம் சித்த மருத்துவம். நமது இந்திய அரசு 200’க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளை இந்திய முழுவதும் நிறுவி ஆயுர்வேத மருத்துவத்துறையை வளர்ப்பது போல் சித்த மருத்துவ கல்லூரியையும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நிறுவி ஆயுர்வேதத்துக்கு இணையாகச் சித்த மருத்துவத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதே சித்தர் மரபுவழி வந்த தமிழ் உள்ளங்களின் நியாயமான ஆசையாகும்.

 “SIDDHA is a part of Ayurveda” எனக் கூறி சித்த மருத்துவத்தை முடக்கும் செயலை மத்திய அரசு செய்யாது என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்.  சித்த மருத்துவம் பல்வேறு இணை   துறைகளை உள்ளடக்கிய மருத்துமாகும். சித்த மருத்துவத்தில் காணப்படும், வர்ம மருத்துவம், சித்த உணவியல், சித்த உளவியல், போன்ற துறைகளை சித்த மருத்துவ வல்லுனர்கள் உருவாக்கி முன் வர வேண்டும்.

இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு நோய்களுக்கும் காரணமாயிருப்பது நமது உணவு முறைகளேயாகும். மேற்கத்திய மோகத்தில் நமது பண்டைய உணவு முறைகளை முற்றிலும் மறந்து விட்டோம். பன்னாட்டு நிறுவனங்களின் துரித உணவுகள், PRESERVATIVE  கலந்து விற்கப்படும் உணவுகள், டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் உணவுகள், உப்புச்சுவை அதிகம் உள்ள உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள், பாஸ்டா, பீஸா, பர்கர், பேல்பூரி, பூரி, பரோட்டா, போன்ற உணவுகள் நம் தமிழகத்தை நோயாளிகளின் கூடாரமாய் மாற்றிக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மாவுச்சத்து அதிகம் உள்ள அரிசி உணவுகளை நாம் அதிகம் உண்பதால், நாம் நீரிழிவு நோய்க்கு வெகுவிரைவிலேயே ஆட்பட்டு விடுகிறோம். உலகத்திலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட முதன்மை நாடாய் இந்தியாவும், இந்தியாவில் முதன்மை மாநிலமாய் தமிழகமும், தமிழகத்தில் முதன்மை நகரமாய் நம் சென்னையும் அங்கம் வகிப்பதை யாரும் மறக்க வேண்டாம்.

ஒரு அறிஞன் சொல்கிறான் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அவர்களின் வழிவழியாய் வரும் உணவு பழக்கத்தை அழித்தால் போதும் என்கிறான். எவ்வளவு நிதர்சனமான உண்மை . உணவு என்பது உடலுக்கு வன்மை தருவதாய் அமைய வேண்டும் மாறாய் உடலை மழுங்கச் செய்து, உணர்வை மழுங்கச் செய்வதாய் இருக்கக் கூடாது.

நம் பண்டைய தமிழர்களின் உணவுப்பொருள் வகைகளான களி, கஞ்சி, அடை, பிட்டு, வற்றல் முறைகள், கீரை கடைசல், சிறுதானிய வகைகளான வரகு, தினை, குதிரை வாலி, சாமை, கம்பு, சோளம் போன்றவற்றின் பயன்பாடு வெகுவாக மறுபடியும் வரவேண்டும்.நமது உணவின் சாரத்திலிருந்துதான் நல்ல உணர்வினைப் பெற முடியும். நல்லுணவுகளால் உணர்வை வளர்த்து, சித்த மருத்துவத்தை முதன்மை மருத்துவமாய் இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்கும் கொண்டு செல்வோம். வாருங்கள் சித்தர் வழிவந்த மருத்துவர்களே ! இப்பொழுது நமக்குத் தேவை ஒரு உண(ர்)வுப் புரட்சி.

Users www.celltrackingapps.com/ are shown with a photo of potential matches in their area, and then can anonymously rate that person by swiping their picture off the screen in a different direction

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தமிழர்களுக்குத் தேவை ஒரு உண(ர்)வுப் புரட்சி”
  1. K.MANIVANNAN says:

    VERY GOOD&IMPORTANT

அதிகம் படித்தது