தமிழர் நலன் சார்ந்த கருத்தியல் தேவை
ஆச்சாரிFeb 8, 2014
தமிழிற்காகவும், தமிழர் நலனுக்காகவும் துணிந்து களமாட தமிழர்கள் என்றுமே தயங்கியதில்லை. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளையும், தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களையும், தரணிக்கு நயம்பட எடுத்துரைக்கவும் நூல்கள் மூலமாகவும் மற்றும் சமூக வலைதளங்களிலும் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய உணர்வும், உந்துதலும், நேர்த்தியான களப்பணி போன்றவை இருந்தும் தமிழர்களின் நலன் சார்ந்த கருத்துக்கள் இந்திய தேசிய அரங்கிலும், சர்வதேச அரங்கிலும் எடுபடுவதில்லை? மாறாக ஏன் தமிழர் நலனுக்கு எதிரான கருத்துகளும் நடவடிக்கைகளும்தான் இவ்வரங்குகளில் நிறைவேறுகின்றன?.
என்னைப் பொறுத்தவரையில் இந்நிலைக்கு முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவதாக தமிழர் நலன் சார்பாக ஊடகங்கள் தமிழகத்தில் இல்லாதது. இரண்டாவதாக தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் தமிழைத் தவிர பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்திலும்,இந்தியிலும் எடுத்துரைக்க தமிழர் தவறிவிட்டனர். மூன்றாவதாக கருத்தியலை தமிழர்கள் அறவே புறக்கணித்துவிட்டனர். களப்பணியினால் மட்டுமே இலக்கை அடைந்துவிட முடியும் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். கருத்தியலின் முக்கியத்துவத்தை சற்றே காண்போமாக.
கருத்தியல் என்றால் என்ன?:
கொள்கையின் அடிப்படையில் இயக்கங்களும், போராட்டங்களும், கிளர்ச்சிகளும் உருவாகின்றன. ஆனால் அத்தகைய கொள்கைகள் உருவாக வித்தாக இருப்பவைதான் கருத்தியல். கொள்கை பயிர் என்றால், கருத்தியல் விதை. உதாரணத்திற்கு கம்யூனிச கொள்கை உருவாக வித்தானது ஹேகேல், எங்கேல்ஸ் மற்றும் மார்க்சு வித்திட்ட கருத்துகள்தாம். இதில் உருவான கொள்கைகளை வளர்த்தவர்கள் டிராட்சுகி, லெனின் போன்றோர். தமிழகத்திலேயே பிராமணர் அல்லாதோர் இயக்கம், நீதிக்கட்சியின் தாக்கம் மற்றும் தமிழறிஞர்களின் கருத்துகளால் புனையப்பட்டு ஒரு ஒருங்கிணைந்த கருத்தியலாக உருவானது திராவிடம், பின்பு இயக்கமாக மாறி அபார களப்பணியினால் அரியணை ஏரியது. இவ்விரண்டு உதாரணங்களின் மூலமாக கருத்தியலிலிருந்து கொள்கைகளுடைய கெபின்பு கொள்கையின் அடிப்படையில் இயக்கங்களும், அதன் வாயிலாக களப்பணி மார்க்கங்களாக கிளர்ச்சிகள், போராட்டங்கள், புரட்சிகள் போன்றவை நிறைவேறுகின்றன.
களப்பணியின் கரு கருத்தியலே:
இணைத்திருக்கும் வரைபடத்தைக் கண்டால் மேலே இருக்கும் களப்பணிகளுக்கு அடித்தளம் கருத்தியல்தான் என்பது தெள்ளத்தெளிவாகப் புலப்படும். இத்தகைய கருத்தியலை எப்படி உருவாக்குவது என்பதை இத்தொடரில் காண்போமாக.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
சிந்திக்கத் தூண்டும் தொடரைத் துவங்குவதற்கு நன்றி. வரவிருக்கும் கட்டுரைகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.